2010/08/01

அரணம் பொருள்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 51 ராகம்: சாரங்கா


அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர்தங்கள்
முரண் அன்றழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன்னடியார்
மரணம் பிறவி இரண்டுமெய்தார் இந்த வையகத்தே.

கொற்றம், செல்வம், கோட்டை என அழியக்கூடியவற்றை பெரிதென எண்ணி அழியாச்செல்வமான அருளில்லாமல் திரிந்த முப்புர அசுரர்களின் அறியாமையை அழித்த உயர்ந்த கடவுளரான சிவபெருமானும் திருமாலுமே தஞ்சம் கேட்டு வணங்குகிற தலைவியின் (அபிராமியின்) அடியார்களுக்கு, மரணம் பிறவி இரண்டுமில்லை.

கடவுளரே பணிந்து வணங்கும் அபிராமியை வணங்கினால் பிறவாநிலை கிடைக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார் பட்டர். பிறவி எடுத்தவர் அனைவருமே பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு அந்தச் சுழற்சியில் தறிகெட்டு நெறிகெட்டு அருள் மறக்கவும் இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. இவற்றிலிருந்து விடுபட்டுக் கரையேற ஒரு பிடிப்பு மட்டுமல்ல, மீண்டும் அத்திசையில் செல்லாதிருக்கச் சிறந்த பாதுகாப்பும் தேவை; அந்தப் பாதுகாப்பு அபிராமியின் பாதங்கள் மட்டுமே என்பதை உட்கருத்தாக உரைத்திருக்கிறார்.

புராணத்தில் முப்புர அசுரர்கள் சிவ பக்தர்களாகவும் ஒழுக்க நெறி வழுவாதவராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கடுந்தவம் பல புரிந்து, கடவுள் தோன்றியதும், அவர்கள் கேட்ட வரம் மிகச் சாதாரணமானது - மரணம் வரக்கூடாது என்பதே. அது இயலாதென்று தெரிந்ததும் இன்னும் சாதாரணச் செல்வங்களான பொன், வெள்ளி, பித்தளையால் செய்யப்பட்ட மனம் போன போக்கில் போகும் நகரங்களை வரமாகப் பெற்றார்கள். நல்லொழுக்கம் கொண்ட அசுரர்கள் பொருளுக்காகத் தவமிருக்காமல் அருளுக்காகத் தவமிருந்திருக்கலாமே என்று நினைக்கும் பொழுது அவர்களின் முரண் - அறியாமை - வெளிப்படுகிறது. இறைவனுடைய அருள் என்பதே அழியக் கூடியது தான்; பிறவி என்று ஒன்று இருக்கும் வரை. மற்ற அசுரர்களைப் போல் கொடுமை செய்யாவிட்டாலும், பொருளுக்காக ஏங்கி உண்மையான தவப்பலனை இழந்த அறியாமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். பிறவி என்று ஒன்று இருக்கும் வரை பிறவியை ஒட்டிய வாழ்வு, தாழ்வு, பாவம், புண்ணியம், மரண பயம் என்ற அறியாமைச் சுழலில் அமுங்கிக் கிடப்போம் - அதனால் அபிராமியைச் சரணடைந்தால் பிறவாமை எனும் விடுதலை கிடைக்கும் என்கிறார் பட்டர்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)