2010/08/05

மின்னாயிரம் ஒரு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 55 ராகம்: சாரங்கா


மின்னா யிரமொரு மெய்வடிவாகி விளங்குகின்ற
தன்னா ளகமகிழ் ஆனந்த வல்லி அருமறைக்கு
முன்னாய் நடுவெங்குமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னா தொழியினு முன்னினும் வேண்டுவ தொன்றிலையே.

முதல்-இடை-கடை என வேதங்களின் அரிய உட்பொருளானவளும், ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்தாற் போல் நெஞ்சைப் பறிக்கும் ஒளியுடையவளும், தன்னை வணங்கும் அடியவருக்குப் பெரும் மகிழ்ச்சி தரக்கூடியவளுமான ஆனந்தக் கொடியவளை நினைக்காமலே காலத்தைக் கழித்தாலும் அவளுக்குக் குறையேதுமில்லை (நினைத்து வழிபடாதவருக்கே குறை).

அபிராமியை வணங்காததனால் அவளுடைய அழகுக்கும் பொலிவுக்கும் குறைவேற்படப் போவதில்லை என்ற பட்டரின் கருத்து சுவையானது.

ஒரு செயலைத் தொடங்கி நடத்தும் பொழுது, இடைவேளையில் விரும்பிய பலன் கிடைக்காது போல் தோன்றினால் அயர்ச்சியும் தளர்ச்சியும் வருவது இயற்கை. தன் இலக்கிலும் செயலிலும் நம்பிக்கையுள்ளவர்கள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து செல்வார்கள். அபிராமி நிலவைக் கொண்டு வருவாள் அல்லது தன்னை ஏற்றுப் பிறவாமை தருவாள் என்ற நம்பிக்கையில் அந்தாதி பாடத் தொடங்கினார்; ஐம்பதுக்கு மேல் பாடிவிட்டார்; நிலவையும் காணோம், அபிராமியையும் காணோம். அவர் கண்ணோட்டத்தில் ஒரு பலனையும் காணோம்; இனி எத்தனை பாடினால் அபிராமி வருவாள் என்பது தெரியாது. நம்பிக்கையை விட்டுத் தலைமறைவாகி விடலாமா என்று பட்டர் ஒரு கணம் கூட நினைக்கவில்லை. தொடர்ந்து பாடுவேன் என்பதைக் குறிப்பால் சொல்கிறார் - அதனால் தான் அபிராமி தன்னை ஒரு பொருட்டாக நினையாவிட்டாலும் தான் தொடர்ந்து அவளை எண்ணி வணங்கி உருகிப்பாடுவதாகச் சொல்கிறார்.

இன்னொரு கண்ணோட்டத்திலும் பார்க்கலாம். தன்னை மதிப்பவரையும் மதியாதவரையும் இரு தரப்பினரையுமே ஒரு பொருட்டாக மதிக்காவிட்டால் பிறகு அபிராமியை வணங்கி என்ன பயன்? நன்றாக இருக்கிறதே கதை? தவமிருந்தும் பாட்டு பாடியும் உருகி உருகி வணங்கியும் ஒரு குழு இருக்க, ஒன்றுமே செய்யாமல் வணங்காமல் இன்னொரு குழு இருக்க, இரண்டுமே கடவுளைப் பொருத்தவரையில் ஒன்று தான் என்றால் அடிப்படையிலேயே தகராறு வரும் போலிருக்கிறதே? இதன் பின்னணிக் கருத்து என்னவென்று பார்ப்போம். கடவுளை அடைவதற்கு பற்றுதலை விடவேண்டும் என்கிறோம்; நாம் அடைய நினைக்கும் கடவுளும் பற்று இல்லாதவராக இருந்தால் தானே ஒரு நல்ல உதாரணமாக விளங்க முடியும்? 'என்னை மட்டும் காப்பாத்தம்மா' என்பது பற்றுதல் வணக்கம்; 'எல்லோரையும் காப்பாத்தம்மா' என்பதும் பற்றுதல் வணக்கம் தான். 'உன் அருளே எனக்குத் தேவையில்லை; விலகு' என்பது வணக்கமில்லாத பற்றுதல். எல்லாவற்றையும் ஏற்று கோரிக்கைகளை நிறைவேற்றினால் இறைவனுக்கும் பற்று உண்டு என்றாகிவிடுமே? அதனால் தான் இறைவன் அருள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நம்பிக்கையிழக்காமல் பக்தியுடன் வணங்க வேண்டும் என்கிறோம். 'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்ற குறள் நினைவுக்கு வருகிறது.

தன்னை வணங்குவோரையும் அல்லாதாரையும் ஒரு பொருட்டாக மதியாத அபிராமி பற்றற்றவள் என்பதை பட்டர் இங்கே குறிப்பிடுகிறார். வணங்குவதால் அபிராமிக்கு மேன்மை கூடவோ குறையவோ போவதில்லை; மேன்மை எய்துவது அடியார்கள் தான் என்பது பாடலின் சாரம். 'அவள் என்னை பொருட்டாக நினைத்து என் கோரிக்கையை ஏற்று நிலவைக் கொண்டு வருகிறாளோ இல்லையோ, நான் அவளை மதித்து நம்பிக்கையோடு தொடர்ந்து போற்றுவேன்' என்பது உட்பொருள்.

மின்னல் வடிவானவள் என்று சக்தி பெரும்பாலான புராணங்களிலும் இறையிலக்கியங்களிலும் போற்றப்படுகிறாள். ஒரு மின்னல் கண்ணைப் பறிக்கலாம்; ஐந்து மின்னல்கள் சேர்ந்து வந்தால் கண் தாங்கலாம். ஆயிரம் மின்னல்கள் சேர்ந்து வந்தால் கண்ணும் போகும்; நெஞ்சும் (உயிரும்) போகும். அதனால் நெஞ்சைப் பறிக்குமென்று பொருள் சொன்னேன். கௌரவரது அவையில் கண்ணன் விசுவரூபம் எடுத்தபோது ஒளி தாங்கமுடியாமல் எல்லாருடைய நெஞ்சத் துடிப்பும் அடங்கி விட்டதாம் - வேறொரு பரிணாமத்தில் தான் ஒளியைப் பார்க்க முடிந்தது என்கிறது புராணம். திருதிராஷ்டிரனுக்குத் தற்காலிகப் பார்வை கிடைத்தது அந்தப் பரிமாணத்தில் தான். கடவுளர் தோன்றும்பொழுது ஒளிப்பிழம்பாகக் காட்சியளிப்பார்கள் என்பது மதம் கடந்த எண்ணம், கருத்து, வர்ணனை.

விளக்கம் சொல்லும் பொழுது அபிராமியைக் கொடியவள் என்றேன். பட்டர் தமிழைப் படிக்கப்படிக்க எனக்கும் அரைகுறை சொல்லாட்சி வந்துவிட்டது. கொடி+அவள் என்று பிரித்து, 'ஆனந்தக் கொடி அவள்' என்று படிக்கவும்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)