2010/08/07

அய்யன் அளந்தபடி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 57 ராகம்: காபி


அய்ய னளந்தபடி இருநாழி கொண்டண் டமெல்லாம்
உய்ய வறஞ்செயு முன்னையும் போற்றியொ ருவர்தம்பால்
செய்யப் பசுந்தமிழ்ப் பாமாலையுங் கொண்டுசென்று பொய்யும்
மெய்யு மியம்ப வைத்தாயிதுவோ உந்தன் மெய்யருளே?

என் தந்தை சிவபெருமான் கொடுத்த இரண்டு படி நெல்லை ஏற்று உலகமெல்லாம் பிழைக்கும்படி செய்த (அபிராமியே) உன்னைப் போற்றி வணங்கும், வாடாதத் தமிழ்ப் பாமாலை சூட்டும் என்னை, உண்மையும் பொய்யும் கலந்து பேசவைத்ததும் உன் அருள் செயலே (என்றறிவேன்).

பசுந்தமிழ்ப் பாமாலைக்காகப் பலமுறை படிக்க வேண்டிய பாடல்.

சிவன் கொடுத்த இரண்டு படி (இரு நாழி என்பதன் சரியான அளவு தெரியவில்லை; மன்னிக்கவும்) அரிசியை வைத்து உலகமெல்லாம் பசிப்பஞ்சமின்றி வாழ வகை செய்தவள் காமாட்சி என்கிறது புராணக்கதை. காஞ்சி காமாட்சி (ஏகாம்பரநாதர்) கோவில்களில் இந்தக் கதையை விவரமாகச் சொல்வார்கள். (காஞ்சியில் முதலில் அமுலாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 'ரூபாய்க்கு மூன்று படி அரிசி' திட்டத்திற்கும் இந்தப் பின்னணிக் கதைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று நினைக்கிறேன். அந்தாதி பாடினால் ஏழைக்குச் சோறு கிடைக்குமா என்ற பின்னூட்டமும் நினைவுக்கு வருகிறது; ம்ம்ம்).

'பொய் சொல்ல வைத்தாய், இதுவே மெய்யருள்' என்கிறார், ஏன்? தன் எண்ணம் இயக்கம் எல்லாமே அபிராமியின் செயல் என்று அடிக்கடி சொல்பவர், தான் தவறாகப் பௌர்ணமி என்று சொன்னதன் காரணம் அபிராமியே என்று அவளைப் பழிப்பது புரிகிறது. இதுவே மெய்யருள் என்றால்? கொஞ்சம் சிந்திப்போம். ஒருவேளை பட்டர் அமாவாசை என்று சரியாகச் சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? பட்டரின் தலை பிழைத்திருக்கும் என்றாலும், மிகப் பெரிய இழப்பு பட்டருக்குத் தான். அபிராமியின் அருளையும் அண்மையையும் அடையும் வாய்ப்பை இழக்க நேர்ந்திருக்கும். (பட்டரின் பசுந்தமிழ்ப் பாமாலை நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும் என்பதும் பெரிய இழப்பு). தம் பக்தர்களைச் சோதிப்பது கடவுளரின் வாடிக்கையென்றாலும், தன்னுடன் இணைத்துப் பேரின்ப வழியில் கொண்டு போகுமுன் ஒரு உச்சக்கட்ட சோதனை வைப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் தத்துவத்தை நிறையப் புராணக் கதைகளில் படிக்கலாம். நிலாச் சம்பவம் பட்டருக்கான உச்சக்கட்டச் சோதனை. அபிராமியின் அண்மையை அடையும் நேரம் வந்து விட்டது என்பது பட்டருக்குப் புரிந்திருக்கிறது. ஒரு பொய் சொல்ல வைத்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள அபிராமி செய்த நாடகம் என்று நம்பியதால் 'பொய்யும் இயம்ப வைத்தாய், இதுவே உந்தன் மெய்யருள்' என்றார்.

பட்டரின் நுட்பத்தை நானும் கையாண்டு பார்த்தேன். அபிராமி அந்தாதி பற்றி எழுதுவதை அம்மாவிடம் சொன்ன போது, "இது போல நல்ல விஷயமா எழுது. கண்டபடி எழுதாதே" என்றார். "எல்லாம் அவள் செயல்; இதையும் அதையும் எதையும் எழுதச் செய்தவள் அபிராமி என்று பார்க்கவேண்டியது தான்" என்றேன் பதிலுக்கு. பலிக்கவில்லை.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)