2010/09/21

அந்தம்

நூறு நாளில் அபிராமி அந்தாதி: நிறைவு

இந்திரா வெங்கடசுப்ரமணியன் குரலில் அபிராமி அந்தாதி முழுமையும் கேட்க:


காணிக்கை
அபிராமி அந்தாதிப் பாடல்களை முப்பது வருடங்களுக்கு மேலாக என் அம்மா பாடிக் கேட்டிருந்தாலும், ஒலிப்பதிவு செய்தது என்னவோ சமீபத்தில் தான். அசல் அபிராமவல்லி மட்டுமே துணை என்று கோவிந்தபுரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அம்மா, அபிராமி அந்தாதி பாடல்களை அண்மையிலிருப்போருக்குக் கற்றுத் தருகிறார். அவர்கள் தினமும் கேட்டுப் பாடிப் பழக உதவியாக இருக்குமே என்று என்னை இந்த உருப்படியான காரியம் செய்யச் சொன்னார். இசைத்தட்டாக ஒலிப்பதிவு செய்து கொடுத்தப் பாடல்களை, இணையத்தில் வெளியிடச் சொன்னவள் என் சகோதரி.

கோவிந்தபுரத்தில் பகல் முழுதும் பறவைகளும் கோவில் பூசையும் பிற ஒலிகளும் கேட்டுக்கொண்டே இருப்பதால், தெருவடங்கிய இரவு நேரத்தில் ஒலிப்பதிவு செய்தேன். தேவையான ஒலிப்பதிவுக் கருவிகள் எதுவுமில்லாமல் கணினியில் ஒலிப்பதிவு செய்த சிரமம் பாடலில் தெரியாமல் இருப்பது என் அம்மாவின் குரல் வளத்தினால். அபிராமியின் அருளினால் என்கிறார் அம்மா. தினம் சில பாடல்கள் என்று தொடர்ந்து ஒரு வாரம் போல் பொறுமையாகப் பாடிக் கொடுத்தார் அம்மா. அவருக்கு இணையாக, சில பாடல்களில் என் பாட்டியின் மெல்லிய குரலைப் பின்னணியில் கேட்கலாம். (எங்கள் அம்மாவைப் பெற்ற அபிராமி - சித்தி என்போம்). அசல் அபிராமியை விட அன்பும் கருணையும் கொண்டவர்கள் எங்கள் குடும்ப அபிராமிகள் என்று நினைக்கிறேன்.

இந்தப் பதிவுத் தொகுப்பு என் அம்மாவுக்கும், சித்திக்கும் காணிக்கை.

நன்றி
தொடர்ந்து படித்து வந்த உங்களுக்கு நன்றி. 'அபிராமி அந்தாதியைப் பொருளுடன் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது' என்று நேரிலும் மின்னஞ்சலிலும் மனமுவந்து பாராட்டியவர்களுக்கு நன்றி. இன்ட்லி திரட்டி வழியாகத் தொடர்ந்தவர்களுக்கு நன்றி. அவசரத்தாலும் என்னுடைய அறியாமையாலும் ஏற்பட்டப் பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்த வைத்தவர்களுக்கு நன்றி.

மேலும் படிக்க:
• திருமதி. தேவகி முத்தையா எழுதியிருக்கும் அபிராமி அந்தாதி விளக்கவுரை
• கண்ணதாசன் எழுதிய அபிராமி அந்தாதிப் பொருளுரை
• இணையத்தில் நண்பர் குமரன் பதிவுசெய்திருக்கும் அபிராமி அந்தாதிப் பொருளுரை - அவருடைய பதிவில் சேர்த்திருக்கும் படங்கள் அற்புதம்
• வீரைக் கவிராயரின் சௌந்தர்யலகரி தமிழாக்கம்
• இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டிருக்கும் கிளைக்கதைகளை சிவபுராணம், கந்தபுராணம், பாகவதம் மற்றும் ராமாயண நூல்களில் விவரமாகப் படிக்கலாம்

2010/09/20

ஆத்தாளை எங்கள்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்பயன் | ராகம்:சுருட்டி


ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புமங்கைச்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒருதீங்கில்லையே.

மாதுளம்பூ போல் சிவந்த நிறமும், மூன்று கண்களும், கைகளில் ஐந்து வகை மலரம்புகளும் பாசக்கயிறும் அங்குசமும் கரும்பு வில்லும் கொண்டு உலகங்களை படைத்து, அழிவுகாலம் வரை உயிர்களையெல்லாம் காத்தருளும் நம்முடைய தாயான அபிராமியை வணங்குவோருக்குத் தீவினை எதுவும் இல்லை.

'கரும்புமங்கை சேர்த்தாளை' என்பதை 'கரும்பும் அங்கை சேர்த்தாளை' என்று பிரிக்க வேண்டும். 'கரும்பு வில்லைக் கைகளில் ஏந்தியவள்' என்று பொருள்.

'நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய்' என்று பாடிய பட்டர், தொடர்ந்து 'என்ன பேறு பெற்றேன்!' என்றார். அபிராமியை அறியும் பேறு பெற்றவர்களுக்குத் தீவினை அகலும் என்பதை இங்கே நூல்பயனாகக் குறிப்பிடுகிறார். அந்தாதியின் நிறைவுப்பாடலில் 'நெஞ்சில் எப்போதும் உதிக்கின்ற' அபிராமியின் தோற்றத்தை மீண்டும் எடுத்துச் சொல்லி, 'இவள் அபிராம வல்லி, இவளே அருட்கொடி, இவள் எங்கள் தாய், தாயை வணங்குவோருக்கு ஒரு தீங்கும் வராது' என்று வலியுறுத்துகிறார்.

தாயை வணங்குவோம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/19

குழையைத் தழுவிய...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:100 | ராகம்:மத்யமாவதி


குழையைத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கரும்பு வில்லும்
விழையப் பொருதிறல் வேரியம்பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சிலெப்போதும் உதிக்கின்றவே!

ஒளி வீசும் புன்னகையும் மானை விட அழகியக் கண்களும் கொண்ட, கொடி போன்ற அழகியே (அபிராமி)! தேனை விட இனிமையான, மணம் வீசும், மலர்களால் நெருக்கித் தொடுக்கப்பட்ட அம்புகளையும் கரும்பு வில்லையும் ஏந்தியக் கைகளைத் தாங்கி நிற்கும், மூங்கிலை விடத் திடமான உன் வளைந்த தோள்களில், நீ அணிந்திருக்கும் கொன்றை மலர்மாலை உன் காதுகளையும் மார்பையும் தொட்டுத் தழுவுகிறது; இந்தக் காட்சியே என் மனதுள் நிலையாகத் தோன்றுகிறது.

குழை என்றால் காது. கழை என்றால் மூங்கில். விழைய என்றால் நெருங்கிய, நெருக்கமான என்று பொருள். திறல் என்றால் போர் - இங்கே அம்பு எனும் போர்க்கருவியைக் குறிக்கிறது. வேரி என்றால் தேன். உழை என்றால் மான். தமிழ் மொழியின் சிறப்பு 'ழ'கரம் என்பார்கள். அருமையான தமிழந்தாதி தந்திருக்கும் பட்டர், நூலின் நிறைவுப்பாடலில் 'ழ'கர எதுகையைப் பயன்படுத்தியது தற்செயலோ திட்டமோ எப்படியாயினும் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கிறது.

'உதிக்கின்ற செங்கதிர்' என்று தொடங்கிய நூலை 'எப்போதும் உதிக்கின்றவே' என்று முடித்து, முழுமையான அந்தாதிப் பாமாலையைத் தொடுத்து வழங்கியிருக்கிறார் பட்டர். அபிராமி தன் நெஞ்சில் என்றுமே நிலைத்திருக்கிறாள் என்கிறார்.

அபிராமியின் அழகுக் கோலத்துடன், பட்டருக்குப் பிறவாமை கிட்ட உதவி செய்த அருந்தமிழும் என்றும் நிலைத்திருக்கட்டும்.


பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல்பயன் | ஆத்தாளை எங்கள்...

2010/09/18

குயிலாய் இருக்கும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 99 ராகம்: மத்யமாவதி


குயிலா யிருக்குங் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலா யிருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த
வெயிலா யிருக்கும் விசும்பிற் கமலத்தின் மீதன்னமாம்
கயிலா யருக்கன்று இமவானளித்த கனங்குழையே.

கடம்ப வனமாகிய மதுரையில் குயிலாகவும், அழகிய இமயமலையில் மயிலாகவும், வானில் ஒளி வீசும் ஞாயிறு போலவும் தாமரை மேல் அமர்ந்திருக்கும் அன்னம் போலவும் இருக்கும் (ஒளி வீசும் அபிராமியான), பொற்குண்டலங்கள் அணிந்த உன்னையே அன்று இமயத்தரசன் கைலாச நாதனான சிவனுக்கு மணமகளாக அளித்தான் (என்று அறிந்துகொண்டேன்).

குயிலும் அவளே குரலும் அவளே என்கிறார் பட்டர்.

'என்ன பட்டரே, அபிராமியை வடிவம் கொண்டு அழைப்பது நகைப்புக்குரியதென்று சொல்லி விட்டு இப்பொழுது ஒரு படி மேலே போய், இப்படிக் குயில் மயில் ஞாயிறு அன்னம் என்று தோன்றியபடியெல்லாம் சொல்கிறீரே, எதுவும் பொருத்தமாகவே இல்லையே?' என்று பட்டரைக் கேட்க முடியாது. காரணம், முன் பாடலொன்றில் 'மெய் புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து சுரும்பிற் களித்து மொழி தடுமாறிப் பித்தராவர்' என்றிருக்கிறார். அபிராமியின் அண்மை அவரைப் பித்தனாக்கி விட்டது என்று தொலைநோக்குடன் முன்னெச்சரிக்கை கொடுத்து விட்டார். மொழி தடுமாறியவர் சொல்வதையெல்லாம் இனி நாம் தான் பொருள் மாற்றிக் கொள்ள வேண்டுமா? இதென்ன, புது வம்பு?

என்ன சொல்கிறார் பட்டர்? குயில், மயில், வெயில், அன்னம் இவையெல்லாம் ஆகிவந்தவை என்பதை பட்டர் தமிழை இது வரை படித்தவர்கள் உடனே புரிந்து கொண்டிருப்பார்கள். இன்னும் கொஞ்சம் உரித்துப் பார்ப்போம். கடம்ப அடவி இங்கே மதுரையைக் குறிக்கிறது. கடம்ப அடவிக்குயில் மதுரை மீனாட்சியைக் குறிக்கிறது. இமயாசல மயில் கைலாசப் பார்வதியைக் குறிக்கிறது. விசும்பில் உதித்த வெயில் சிதம்பரச் சிவகாமியைக் குறிக்கிறது. விசும்பு என்றால் வானம். பஞ்சபூதங்களில் சிதம்பரம் வானத்தைக் குறிப்பதை அறிவோம். வானில் உதித்த ஒளி, சிவனுக்குத் தோன்றிய சக்தி என்ற பொருளில் வருகிறது. கமலத்து அன்னம் திருவாரூர் கமலாம்பாளைக் குறிக்கிறது.

[உபரி: திருவாரூர் கோவிலின் பிரம்மாண்டத்தை என் சிறுவயதில் பார்த்து, பயந்து ரசித்திருக்கிறேன். தாமரைக்குளத்தின் பின்னணியில் பார்வதி-விஷ்ணுவின் சச்சரவும் சாபமும் கலந்தப் புராணக்கதை ஒன்று உண்டு. ஹம்சத்வனி ராகத்தின் வரலாற்றுக்கும் தாமரைக்குள அன்னத்திற்கும் தொடர்பு உள்ளதாகச் சொல்லபடுகிறது. திருவாரூர் கோவிலின் பிள்ளையார் 'வாதாபி கணபதி' என்று பொருத்தமாக அழைக்கப்படும் ஒற்றுமையை எண்ணி வியந்திருக்கிறேன்.]

பட்டர் பாட்டுக்குத் திரும்புவோம். குயிலும் மயிலும் வெயிலும் ஒயிலும் முறையே மதுரை, கைலாசம், சிதம்பரம், திருவாரூர் ஆலயங்களின் சக்தி வடிவங்களைக் குறிக்கின்றன. கடவூரில் தோன்றித் தனக்குக் காட்சியளித்தவள் பிற ஆலயங்களில் இருக்கும் சக்தியே என்று தன் பாடல் வழியாகப் பட்டர் உறுதிப்படுத்துவதாக நினைக்கிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/17

தைவந்து நின்னடி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 98 ராகம்: பாகேசுவரி


தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்ததெங்கே
மெய்வந்த நெஞ்சினல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகலறியா மடப்பூங்குயிலே.

அழகும் இளமையும் கொண்ட பூங்குயிலே! (அபிராமி!), உண்மையான அன்பு செலுத்தும் அடியார்கள் மனதை விட்டுப் பொய்யான அன்புடன் உன்னை வணங்கும் பகட்டுத் தந்திரக்காரர்களின் மனதில் ஒரு நாளும் குடிபுகாதவளான உன்னுடைய தாமரைப் பாதங்களில் மலர்மாலை வைத்த சிவனின் கைகளில் அக்கினியைக் காணவில்லை, தலையில் கங்கையுமில்லை; எங்கே ஒளிந்தன?

முன் பாடல்களில் அபிராமியை வணங்கும் அனைத்து தேவர்களைப் பற்றி விவரித்தவர், இந்தப் பாடலில் அபிராமியை வணங்கும் முறையைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

'தை' என்ற சொல்லுக்கு 'தைக்கத்தகுந்த' என்று ஒரு பொருளுண்டு. 'தை வந்து நின்னடி சூடிய' எனும் அடியின் முழுப்பொருளையும் அறிகையில், 'தை வந்து' என்பது இங்கே 'மலர் மாலை' என்ற பொருளில் வருவது தெளிவாகிறது. சங்கரன் இங்கே சிவனைக் குறிக்கிறது. 'கை வந்த தீ', தாருகாவனத்து அக்கினி அசுரனை அடக்கித் தீயைப் பூச்செண்டு போல் கையில் எடுத்துக்கொண்டதைக் குறிக்கிறது. 'தலை வந்த ஆறு', தன் வேகத்தை யாராலுமே தாங்க முடியாது என்ற வீராப்புடனிருந்த ஆகாய கங்கையை அடக்கியதைக் குறிக்கிறது. இரண்டுமே சுவையான புராணக் கதைகள். கரத்தல் என்றால் ஒளித்தல், மறைத்தல். (உபரி: ஒளித்துண்ணும் குணம் கொண்ட 'காகம்' என்ற பெயர், 'கரதம்' என்ற சொல்லின் மருவிய வழக்கு). விரகு என்றால் தந்திரம், சாமர்த்தியம், பகட்டு. மடம் என்றால் அழகு, இளமை என்றும் பொருள்.

உண்மையான அன்புடன் வணங்க வேண்டும் என்று பட்டர் சொல்வது புரிகிறது. அதற்கும், சிவன் கையில் தீ காணாமல் போனதற்கும் என்ன தொடர்பு? பொருத்தமாகத் தோன்றவில்லையே? கொஞ்சம் சிந்தித்தால் புரியும்.

அபிராமியைக் கடவுளர் யாவரும் வரிசையாக வணங்குவதைப் பார்த்து விவரிக்கும் பட்டர் கண்ணோட்டத்தில் தொடர்வோம். முதலில் மூத்த கடவுள்கள், தேவர்கள், முனிவர்கள் என்றவர் அடுத்த பாடலில் கந்தன், கணேசன் என்று பெயர் சொல்லி விவரிக்கிறார். எல்லாக் கடவுளரும் அடக்கதோடு அவளை வணங்குவதைக் கவனிக்கிறார். முதல் தேவர் யாவருக்கும் மூத்தவள் அல்லவா அபிராமி? அவளை வணங்கும் பொழுது எந்த விதப் பகட்டும் இல்லாமல் தமியேனாக வணங்க வேண்டும், ஆடம்பரம் தவிர்த்து அடக்கத்தோடு வணங்க வேண்டும் என்று தெளிகிறார். தன் மனதில் அபிராமி குடிபுகுந்த காரணம் இப்போது அவருக்குப் புரிகிறது. 'மெய்யான அன்புடன் அவளை வணங்கினால் அவளுடைய அண்மை கிடைக்கும்' என்பதை எப்படித் தமிழருக்கு விளக்குவது? இதற்கு என்ன உதாரணம் சொல்வது என்று நினைக்கிறார். சிவனைப் பார்க்கிறார். எந்த வித அலங்காரமும் இல்லாமல் எளியவனாக அபிராமி திருவடிகளில், தைத்த மலர் மாலை அணிவித்து வணங்குவதைப் பார்க்கிறார். 'சரி தான், சிவனுக்கே இந்த நிலையா? தன் உடலின் வலதுபாகத்தைக் கொடுத்து இணையாக ஏற்றுக்கொண்ட சிவனுக்கே இந்த நிலையை உருவாக்கியிருக்கிறாளே அபிராமி?' என்று வியந்து அதையே உதாரணமாகச் சொல்கிறார். கங்கையின் செருக்கையும் அக்கினியின் திமிரையும் அடக்கியவர் என்ற அந்தஸ்தில் அவற்றோடு அபிராமியின் முன்னே தோன்றினால், 'எங்கே தன்னைப் பகட்டுக்காரன், சாமர்த்தியசாலி என்று நினைத்து அபிராமி தன் மனதிலிருந்து விலகி விடுவாளோ' என்று அஞ்சிய சிவன் எல்லாவற்றையும் விலக்கி சாதாரணனாக அபிராமியை வணங்குவதை எடுத்துச் சொல்கிறார்.

சிவனின் கையில் இருக்கும் தீ, மனிதருடைய மூச்சுக்காற்றைக் குறிக்கிறது என்ற பொருளில் வரும் 'முத்தீ கொளுவி முழங்கொலி வேள்வியுள் அத்தியுரியர னாவதறிகிலர்' என்ற திருமந்திரப் பாடலும் நினைவுக்கு வருகிறது. மனிதரின் மூச்சுக்காற்றை (உயிரை) நினைத்த மாத்திரத்தில் அடக்கும் திறன் படைத்த அழிக்குங்கடவுளான சிவனே அபிராமியை அடக்கமாக வணங்கி வழிபடும் பொழுது நமக்கென்ன பகட்டு வேண்டியிருக்கிறது என்று பட்டர் திருமூலர் பாணியில் நினைத்திருக்கலாம்.

சம கடவுளென போற்றப்படும் சிவனே அடக்கமாக இருக்கும் பொழுது, சாதாரணரான நாம் பகட்டும் ஆடம்பரமும் நீக்கி அபிராமியை உண்மையான மனதுடன் வழிபட வேண்டும் என்பதே பட்டர் பாடலின் சாரம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/16

ஆதித்தன் அம்புலி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 97 ராகம்: பாகேசுவரி


ஆதித் தன்னம்புலி அங்கி குபேரன் அமரர்தங்கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடைக் கந்தன் கணபதிக் காமன்முதல்
சாதித் தபுண்ணிய ரெண்ணிலர் போற்றுவர் தையலையே.

சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்கள் தலைவனான இந்திரன், தாமரை மேலிருக்கும் பிரமன், புரமெரித்த சிவன், முரனழித்த விஷ்ணு, பொதிகை மலை முனிவனான அகத்தியன், தீயவரைப் போரிட்டழிக்கும் முருகன், வினாயகன், மன்மதன் மற்றும் இவர்களைப் போல் வெற்றியும் அந்தஸ்தும் பெற்ற எண்ணிலடங்கார் (அனைவரும்) அபிராமி எனும் அழகியையே வணங்குகின்றனர்.

அபிராமியை எல்லாத் தேவர்களும் வணங்குகிறார்கள் என்று அடிக்கடி சொன்னவர் மீண்டும் வலியுறுத்துகிறார்.

அங்கி என்றால் தீ. சிவன் புரம் எரித்ததால் புராரி. முரன் எனும் அசுரனைத் திருமால் அழித்தக் கதையைப் பாகவதத்தில் படிக்கலாம். முரனை அழித்ததால் முராரியானார். காதி என்றால் தீமை, பாவம். இங்கே தீயவருக்கு ஆகி வந்தது.

பட்டரின் கண்ணோட்டத்தில் பார்ப்போம். அபிராமியை நேரில் கண்டார். முன் சொன்னது போல், அபிராமியின் பல்வேறு வடிவங்களைக் கண்டார். அதே வரிசையில்,தேவர்கள் தொழுவதாக முன்னர் சொன்னதை வலியுறுத்துகிறார். சொன்னதையே திருப்பிச் சொல்கிறார் என்றாலும், மற்றவர்-நம் போன்றவர்- மகிழ்ச்சிக்காக, வானவரும் தானவரும் முதல்தேவர் மூவரும் யாவரும் அபிராமியைப் போற்றி வணங்குவதைப் பார்த்து விவரிக்கிறார் என்றே பொருள் கொள்ள வேண்டும். நிலவைக் கொடுத்த அபிராமி, நல்ல கதியைக் கொடுக்கத் தயாராயிருக்கிறாள். பட்டரும் 'இதோ வருகிறேன் தாயே, இன்னும் சில பாடல்களில் நான் கண்ட காட்சி காணட்டும் இந்தத் தமிழுலகம்' என்று, தான் முன்னர் பாடியவாறே அபிராமி தோன்றினாள் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். நம்பினார் கெடுவதில்லை என்பதை நினைவூட்டுகிறார்.

அகத்தியனுக்குப் பொதியன் என்று பெயர். பொதியமுனி என்பதற்கு, 'அகத்தியர் போன்ற பெரும் முனிவர்கள்' என்று அகத்தியன் பெயர் ஆகி வந்ததாகவும் பொருள் கொள்ளலாம். தேவர், கடவுளர் என்று பன்மையில் பார்த்த பட்டர், முனிவர்களையும் கண்டிருக்க வேண்டும். அகத்தியனைத் தமிழ்முனிவன் என்று பிற இறையிலக்கியங்களும் போற்றுகின்றன. எனினும், இந்தப் பாடலில் அகத்தியனைத் தனித்துச் சுட்டிக் காட்டியது, ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்குக் காட்டும் ஆதரவு என்று நினைக்கிறேன். ஒரு தமிழன் இன்னொரு தமிழனின் வெற்றியைப் பார்த்து அடையும் பெருமிதம் என்று நினைக்கிறேன். பட்டர் காலத்தில் ஒரு தமிழனை இன்னொரு தமிழன் மதித்துப் போற்றும் வழக்கம் இருந்திருப்பது புரிகிறது.

புராரி என்றால் திரிபுரம் எரித்த சிவனென்று குறிப்பிட்டேன். இதைப்பற்றி முன்பே எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன்; மறந்துவிட்டது. ஒரு வகையில் இந்தப் பாடலுக்கும் அடுத்து வரும் பாடலுக்கும் ஏற்றதாக அமைந்திருப்பதால், இங்கே எழுதுவது பொருத்தமென்று நினைக்கிறேன்.

புரமெரித்த விவரம் திரிபுர அசுரர்களை அழித்தப் புராணக்கதையில் இருக்கிறது. திருமூலர் திரிபுர அழிவு பற்றி ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். படுசுவையானது.
        அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
        முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்
        முப்புர மாவது மும்மல காரியம்
        அப்புரம் எய்தமை யாரறி வாரே

முப்புர அசுரர்களை அழித்தான் என்று சொல்கிறவர்கள் எல்லாரும் மூடர்கள் என்கிறது திருமந்திரம். இங்கே முப்புரம் என்பது மும்மலம் என்கிறார் திருமூலர். மும்மலம் என்பது ஆணவம், வினை, அறியாமை எனும் மூன்று அழுக்குகளையும் குறிக்கிறது. முப்புர அசுரரைத் தேடிப் போகவேண்டாம், கண்ணாடியில் பார்த்தால் போதும் என்கிறார் திருமூலர். சைவ சித்தாந்தமும் அதையே சொல்கிறது. ஆணவமும், தீவினையாற்றலும், அறியாமையும் உடைய மனிதர்கள், மூன்று அசுரர்களுக்கு ஒப்பாவர் என்கிறாரோ? 'அப்புரம் எய்தமை யாரறிவாரே', அதாவது, உண்மையாக இவை அழிந்தது யாருக்குத் தெரியும் என்கிறார். அழித்தவனுக்குத் தான் தெரியும், அதாவது, இந்த அசுரர்களை அழிக்கும் சிவனும் மனிதனுக்குள்ளேயே தான் இருக்கிறான் என்கிறாரோ?

பட்டர் முன் பாடலொன்றில் 'அபிராமிக்குப் பலவகைப் பெயர்களும் வடிவங்களும் கொடுத்து வணங்குவது நகைப்புக்குரியது, உண்மையான அபிராமிக்கு வடிவமெதுதுவும் கிடையாது, அவரவர் மனதில் ஏற்படுத்திக்கொள்வது தான் உண்மையான அபிராமி' என்றார். திருமூலரும் 'அசுரனை அழிக்க வெளியிலிருந்து சிவன் வரத் தேவையில்லை - இவை அசுரர்கள், அதாவது அசுர குணங்கள், என்பதை அறிந்து கொள்வதே இவற்றை அழிப்பதற்கு முதல் படியாகும்' என்கிறார்.

இறையிலக்கியங்களில் 'உள் கிடப்பதால் கடவுள்' என்ற பொருளில், மனிதர் தம்மையறியும் நிலையையே ஞானசாதனமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். பட்டர் பாடலும் அந்த வகையினது. இந்த உட்பொருள் அடுத்த பாடலில் இன்னும் சிறப்பாக அமைந்திருப்பதாக நினைக்கிறேன்.

பொறுமையாகப் படித்தமைக்கு நன்றி.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/15

கோமள வல்லியை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 96 ராகம்: பாகேசுவரி


கோமள வல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை ஏத மிலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமள வுந்தொழுவா ரெழுபா ருக்குமா திபரே.

இவ்வாறென விவரிக்க இயலாத அளவில் விளங்கும் பசுமை நிறத்தவள், அனைத்துக் கலைகளும் அறிந்தவள், அழகான மயில் போன்றவள், குறையில்லாத வடிவுடையவள், தாமரைக் கொடி போன்றவள், தாமரையுள் வசிக்கும் யாமளையை (அபிராமியை) தன்னால் இயன்ற அளவுக்கு வணங்கி வழிபடுவோர் ஏழு உலகுக்கும் தலைவராவார்கள்.

ஏதம் என்றால் குறை, பிழை. யாமளை என்றால் பாதுகாப்பு வழங்கும் தலைவி என்று முன்னர் பார்த்தோம். 'சாமள' நிறம் பச்சை அல்லது கருமையைக் குறிக்கும். 'ஆமளவு' என்பது 'ஆகும் அளவு' என்பதன் திரிபு. 'எழுபாருக்கும்' என்பதை ஏழு+பாருக்கும் என்று பிரிக்க வேண்டும்.

அபிராமியை வணங்குவோருக்கு ஏழுலகு ஆளும் பேறு கிடைக்கும் என்கிறார். பற்றற்ற நிலையும் பிறவாமையும் வேண்டுவோர் ஏழு உலகையும் ஆளும் மாட்சியை விரும்புவார்களா? 'எனக்கு உள்ளவெல்லாம் உனதென்று அளித்து விட்டேன்' என்று துறந்தவர்கள் ஆட்சிப் பொறுப்பை விரும்புவார்களா? பட்டர் என்ன சொல்கிறார்? ஏழுலகுக்கும் அதிபராக இருப்பவர்களுக்கு என்ன மதிப்பும் சலுகையும் கிடைக்கும்? சென்ற இடமெல்லாம் சிறப்பும், வணக்கமும், போற்றுதலும் கிடைக்கும். ஏழுலகுக்கும் அதிபரானவர்கள், கடவுளைப் போன்றவர்கள். 'அபிராமியை அடைந்தவர்களை அனைவரும் வணங்குவர்' என்பதே பட்டர் சொன்ன 'எழுபாருக்கும் அதிபர்' என்பதன் உட்பொருள்.

'ஆமளவும் தொழுவார்' என்பதற்கு, தன்னால் இயன்ற வரை தொழுகிறவர் என்று பொருள் கொள்ளலாம். 'ஏதோ என்னால் முடிந்த ஒரு கும்பிடு' என்பது ஒரு வகைத் தொழுகை. 'எண்ணம் மூச்சு எல்லாம் நீ' என்றுக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பித்தராய் வழிபடுவது இன்னொரு வகைத் தொழுகை. இயன்ற அளவு என்பது மாறுதலுக்குட்பட்டது. இன்றைக்கு இயன்ற அளவு நாளைக்கு அதிகமாகித் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகலாம். அபிராமியின் மேல் வைத்த அபிமானத்தைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதே வரிகளின் சாரம். 'தம்மால் ஆமளவு' என்பது இங்கே 'உடல் பொருள் ஆவி என்று துறக்கத்தக்க அனைத்தையும் துறந்து' என்ற பொருளில் வருகிறது. கடவுளின் அண்மை கைகூப்புவதால் வருவதில்லை என்பது பட்டர் சொல்லின் உட்பொருள் என்று நினைக்கிறேன். ஆழ்ந்த நம்பிக்கையே இதன் அடிப்படை. 'பல்லவமல்லது பற்றொன்றிலேன்' என்ற பட்டர் வரிகள் நினைவிருக்கலாம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/14

நன்றே வரினும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 95 ராகம்: பாகேசுவரி


நன்றே வரினும் தீதே விளைகினும் நானறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கேபரம் எனக்கு உள்ளயெல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன் அழியாதகுணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே.

என்றைக்கும் அழிவில்லாத நிலையுள்ளவளே, அருட்கடலே, இமையவனுக்குப் பிறந்த தாமரையே (அபிராமி), என் உடைமைகள் யாவும் எனதன்று உனதென்று என்றோ துறந்து விட்டேன்; (எனை ஆட்கொண்டதால்) இனி நன்மை தீமை எனப் பகுக்கும் அறிவைத் துறந்து, பற்றற்ற நிலை அடைந்தேன்.

பரம் என்றால் துறப்பது. பற்றற்றவர் என்பதால் பரம்பொருள் கடவுளின் பெயர்க்காரணம் ஆனது. குன்று திடமானது; நிலையானது. அபிராமிக்கு அழிவில்லை என்ற பொருளில் வருகிறது. கடல் ஆழமானது, அகண்டது, கைக்கும் கண்ணுக்கும் எட்டாதது. அபிராமியின் அருள் கைகளாலும் கண்களாலும் அள்ள அள்ள வற்றாத அகண்ட கடல் எனும் பொருளில் வருகிறது. இமவான் மலையரசன். வலியவன். கோமளம் என்றால் தாமரை. மெலியது. வலியவனுக்குப் பிறந்த மெல்லியள் என்பதில் அடங்கியிருக்கும் சுவையான முரண், அடியவரைப் பொறுத்துக் கொடியவரை ஒறுக்கும் தன்மையவள் என்ற பொருளில் வருகிறது.

'எனக்கு உள்ளவெல்லாம்' என்பது ஆழமான எண்ணம். நம் உடைமைகள் என்று கணக்கெடுத்தால் எங்கே தொடங்குவோம்? பணம், வீடு, நிலம், மக்கள் என்று வெளிச் செல்வங்களைத் தான் முதலிக் கணக்கெடுப்போம். 'கொண்டு வந்ததென்ன இங்கே கொண்டுபோக?' என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் உடைமைகளுக்கான விளக்கமே மாறி விடுகிறது. நாம் விடும் மூச்சு தான் நமது. நம் உடல், உயிர் மட்டுமே நமது. இந்தக் கூடும் ஆவியும் நமதென்ற கண்ணோட்டம் வரும்பொழுது சேர்ந்தவை எல்லாம் சோர்ந்தவை எனும் பக்குவம் வந்துவிடுகிறது. பட்டர் 'எனக்கு உள்ளவெல்லாம்' என்றது தன் உடலையும் உயிரையும். அவையும் அபிராமியின் சொந்தம் என்று துறந்துவிட்டால், அவை பொருட்டு அவர் செய்யும் வினைகளும் அபிராமிக்குத் தானே சொந்தம்?

'நன்றே வருகினும் தீதே விளைகினும்' என்பதற்கு 'நன்மை தீமை வந்தாலும்' என்று பொருள் கொள்ளலாம். 'என்னுடையதெல்லாம் உனதென்று வழங்கி விட்டேன் அபிராமி; இனி எனக்கு நன்மை வந்தாலும் தீமை உண்டானாலும் ஒரு பொருட்டும் இல்லை' என்று பொருள் கொள்ளலாம்.

பட்டர் இதற்கு முன் 'அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய்... கரையேற்றுகை நின்திரு உளமே' என்றும் 'இனியான் பிறக்கின் நின்குறை' என்றும் பாடியது நினைவிருக்கும். இந்தப் பாடலைப் பாடும் பொழுது அபிராமியைக் கண்டு பித்தரானதையும் அறிவோம். அந்தக் கட்டத்தில், 'நன்றே வருகினும் தீதே விளைகினும்' என்றது, 'நன்மை தீமை வருவது இருக்கட்டும்; அவை யாதென அறியும் அறிவைக் கூட இழந்து விட்டேன்' என்ற பற்றற்ற நிலையடைந்த பரவசத்தில் பாடுவதாகவே நினைக்கிறேன்.

'அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்
குன்றே அனையாய் எனையாட் கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறெனக் குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே'
            என்ற திருவாசகப் பாடலின் வரிக்கு வரி கருத்துப் பொருத்தம் நினைவுக்கு வருகிறது.

இந்தப் பாடல் தொடங்கி நான்கு பாடல்கள் பாகேசுவரி ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/13

விரும்பித் தொழுமடியார்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 94 ராகம்: ஆரபி


விரும்பித் தொழுமடியார் விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழிதடுமாறி முன்சொன்ன எல்லாம்
தரும்பித் தராவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.

அபிராமியை மனதில் வரித்து விரும்பி வணங்குவோர், கண்ணில் நீர்மல்கி, உளளம் முழுதும் பரவசமாகித் தோன்றிய மகிழ்ச்சிப் பெருக்கின் இனிமையில் தேனுண்ணும் வண்டைப் போல் தன்னை மறந்துக் களித்து, எண்ணமும் மொழியும் ஒன்றாய்ச் சேராத பித்தர் போல் நடந்து கொள்வார்கள்; எனினும் அவள் வழி நல்வழியே.

சுரும்பு என்றால் வண்டு. தேனுண்ணும் வண்டு மாமலரைக் கண்டால் எப்படி இருக்கும்? பட்டர் அபிராமியைக் கண்டது போலிருக்கும்.

எளிமையான பாடல். அபிராமி அடியவர்கள் முன்னுக்குப் பின் முரணாகவும், உன்மத்தர் போலவும், பித்தராகவும், பரவசப்பட்டும் இருப்பார்கள் என்று அடையாளம் காட்டுகிறார். அப்படித் தோன்றினாலும் அவ்வடியார்கள் பற்றியிருப்பது அபிராமியின் பாதங்களாகையினால், அவர்கள் அபிராமியின் வழியிலேயே போவார்கள் என்றும் சொல்கிறார்.

ஒரு எளிமையான, சிறப்பான உட்பொருளும் இருக்கிறது. 'ஐயா, நான் தவறாகத் திதி சொன்னதால் என்னைப் பித்தனென்று சொல்லிப் பிணமாக்கவும் முடிவு செய்தீர். என்னைப் பித்தனாக்கியது சாதாரண இவ்வுலகப் பற்றா? இல்லையே? பற்றற்றவள் பற்று. அதனால் என் வழி நல்வழி தான் என்பது நிரூபிக்கப்பட்டது பார்த்தீர்களா?' என்று பட்டர் தன்னை ஒறுத்தவர்களைக் கேட்பது போலிருக்கிறது. 'இனியாவது அபிராமி அடியார்களை அடையாளம் கண்டு அவர்கள் செல்லும் வழியில் சேருங்கள்' என்று அவர் சொல்வது உட்பொருள்.

இந்தப் பாடலைப் பாடும் பொழுது பட்டர் எத்தனை பரவசத்துடன் இருந்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடியிருக்கிறார்.

என் அம்மா குரலில் இந்தப் பாடலை நான் கேட்கும் போதெல்லாம் பரவசப்பட்டிருக்கிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/12

நகையே இஃதிந்த...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 93 ராகம்: ஆரபி


நகையே இஃதிந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை மானேமுதுகண் முடிவில்லந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும்நாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

இவ்வுலகங்களையெல்லாம் படைத்த தலைவி (அபிராமி) அரும்பும் மலர் போல் குவிந்த முலைகளும், மான் போல் பெரிய கண்ககளும் கொண்டவள் என்பது கேலிக்குரியது; தொடக்கமும் முடிவுமற்றவளான இவளை மலைமகள் என்பதும் வீண்பேச்சு; (அறிவுக்கப்பாற்பட்ட) இவள் தன்மையை நாம் (அறிய) விரும்புவதே மேன்மையானது.

'இந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு முகிழ் முகையே முலை மானே முதுகண் (என்பதும்) நகையே; மலைமகள் என்பதும் வம்பே; இது பிறவியும் முடிவு இல் அந்த வகையே; இவள் தன் தகைமையை நாம் நாடி விரும்புவதே மிகையே' எனப்பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

பிறவி என்பது தொடக்கத்தைக் குறிக்கிறது. முகை என்றால் அரும்பு. முகிழ்முலை என்றால் குவிந்த முலை என்று பொருள். முது என்றால் பெரும் என்று பொருள். முது கண் இங்கே பெரிய கண்கள் என்ற பொருளில் வருகிறது. வம்பு என்றால் வீண் பேச்சு, பொருளற்ற வழக்கு என்று பொருள். மிகை என்றால் மேன்மை. தகைமை என்றால் தன்மை, உண்மை எனலாம்.

அபிராமியைப் பலவாறு வர்ணிப்பது கேலிக்குரியது என்கிறாரே? குங்கும முலை, மெல்லிய நுண்ணிடை, தவளத்திருநகை, கரும்பு வில், கமலப்பாதம் என்று மனம் போனபடி வர்ணித்து விட்டு அவரே இந்தப் பாடலில் அப்படிச் சொல்வது கேலிக்குரியது என்பானேன்? அபிராமி தோன்றவில்லையா? அல்லது தோன்றியவளுக்கு வானந்தமான வடிவு, புதுப்பூங்குவளைக் கண், முருத்தன்ன மூரல், பண்ணளிக்கும் சொல், செப்புரை செய்யும் புணர்முலை, வருந்திய வஞ்சி மருங்குல், விட அரவின் பை, பரிபுரச் சீறடி என பட்டர் பாடியபடி எதுவுமில்லையா? தன் எண்ணப்படியே அபிராமி தோன்றியதாக முன் பாடல்களில் சொல்லியிருக்கிறாரே? இந்தப் பாடலில் ஏன் முரண்படுகிறார்?

அந்தாதிப் பாடல்களிலேயே என்னை அதிகம் சிந்திக்க வைத்த பாடல் இது. நூறு பாடல்களில் இதுவே சிறந்த பாடல் என்பது என் கருத்து. 'பட்டர் பொய் சொன்னார்; அபிராமியும் தோன்றவில்லை, நிலவும் தோன்றவில்லை' என்று ஒரு வகையில் பொருள் கொள்ளலாம். தவறில்லை. எனினும் அதில் சுவையில்லை, சிந்தனைக்கு ஏதுமில்லாத வெளிப்படையாகிறது. 'பட்டர் பொய் சொல்லவில்லை, அபிராமியும் தோன்றி, நிலவும் தோன்றி எல்லாம் நடந்த பின் பட்டர் மனம் மாறி எல்லாம் கேலிக்குரியது என்றார்' எனும் முரண்பாடு சுவையான சிந்தனையாகிறது. எப்படிப் பார்த்தாலும், ஏறக்குறைய நூறு பாடல்கள் வரை அபிராமியின் அழகை வர்ணித்தவர் அது நகைப்புக்குரியது என்று சொல்வதை நினைக்கும் பொழுது ஒன்று புரிகிறது. பட்டருக்கு ஏதோ ஒரு முதிர்ச்சி அல்லது தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

'கடவுளை ஒரு வடிவில் கொண்டு நிறுத்துவது நம் விருப்பத்துக்காக, ஒரு அமைதிக்காக; கடவுளுக்கு வடிவமில்லை என்பதே உண்மை' என்று பட்டர் தெளிந்து சொல்வதாக உணர்கிறேன். கடவுள் தத்துவத்தின் உண்மையை அறிய விரும்புவதே மேன்மையான செயல் எனும்பொழுது, அறிந்து விட்டால் அந்நிலையை எப்படி விவரிப்பது? அறிவுக்கப்பாற்பட்ட அந்நிலையை பட்டர் தொட்டுக் காட்டியிருப்பதாக நினைக்கிறேன்.

'உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை' என்ற தத்துவத்தை நம்முன் காட்டிச் சீண்டியிருக்கிறார். 'முலையழகி, மலையழகி என்று வர்ணித்தாலும் சரி; உருவமில்லாதவள் என்றாலும் சரி; கண்ணுக்குப் புலப்பட்டவள் என்றாலும் சரி; புலப்படாதவள் என்றாலும் சரி; அவரவர் அறிவுக்கேற்றபடி அபிராமியெனும் கடவுளின் தன்மையை அறிந்து கொள்வதே சிறப்பு' என்று பட்டர் சொல்லியிருப்பது நம்பிக்கையுடையோர், நம்பிக்கையில்லாதோர் இரண்டு கட்சிக்கும் பிடித்த கொடி போல் ஒரு கணம் தோன்றுகிறது. பத்தாயிரம் வடிவங்கள், அதற்கு பத்தாயிரம் விழாக்கள் என்று நாம் கடைபிடிக்கும் சடங்குகளைச் சாடுகிறார் என்று நினைக்கிறேன். 'தொடக்கம் முடிவு எதுவுமே எனக்குத் தெரியவில்லை; இதில் முக்கண்ணும் மூரலும் எங்கே தேடுவது? துடியிடையை எங்கே தேடுவது? பொற்பாதம் எங்கே பார்ப்பது? எல்லாமே அறிவின்மை' என்று அவர் முடித்திருப்பது மிகுந்த மனமுதிர்ச்சியைக் காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

இன்னொரு கண்ணோட்டம். அபிராமி எனும் கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட தோற்றம் எதுவும் இல்லை. பிறமதங்களும் ஆதி கடவுளுக்கு எந்தத் தோற்றமும் இல்லை என்றே சொல்கின்றன. தோற்றமில்லாமல் நம்மை எதிர்கொண்டால் குழப்பமும் அச்சமும் அவநம்பிக்கையும் ஏற்படலாம் என்பதால் அவரவருக்கு விருப்பமான தோற்றத்தை நம் மனதுள் ஏற்படுத்திக்கொள்கிறோம் அல்லவா? (ஏற்படுத்துவதும் கடவுள் தான் என்கிறது மதம்) அந்த வகையில், பட்டர் பாடியபடி முதலில் அபிராமி காட்சியளித்து, பின்னர் அவருடைய அச்சத்தை மெள்ளத் திரைவிலக்கி கடவுளின் உண்மை நிலையைக் காட்டியிருக்கலாம். அந்தத் தெளிவில் பட்டர் இப்படிப் பாடியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

வரையறுக்க முடியாத வடிவம் என்று கடவுளைப் பற்றி இந்து மத இலக்கியங்களும், பிற மத இலக்கியங்களும் ஒருமித்தக் கருத்தைச் சொல்கின்றன. ஒளிக்குத் தன்னிலை வடிவம் கிடையாது என்பதால், மத இலக்கியங்கள் ஒளியைக் கடவுளுக்கு அடையாளமாகக் காட்டியிருக்கின்றன. ஒளியில்லாமல் உலகில் எதுவுமே இயங்கச் சாத்தியமில்லை என்பதால் ஒளியைக் கடவுளாகச் சித்தரித்து, அது தொடர்ந்திருக்கலாம். இங்கே ஒளி என்று சொல்லாமல் 'பிறவி முடிவு இல் வகை' என்று பட்டர் சொல்லியிருப்பது சிந்தனைக்குச் சோதனையாக இருக்கிறது. பட்டரை நம்புகிறேன். அவர் கடவுளைக் கண்டதாக நம்பிப் பாடியிருப்பதை நிச்சயம் நம்புகிறேன். 'உருவமும் இல்லை, ஒளியும் இல்லை. அப்படியென்றால் கடவுள் என்பது யார்? என்ன?' என்று சிந்திக்க வைத்த பாடல். 'மேன்மை தேவையென்றால் தகைமையை நாடு' என்ற அறிவுரையை அவரவர் ஏற்புக்கு விட்டுச் சென்றிருப்பதை மிகவும் ரசிக்கிறேன்.

இறையிலக்கியம் தந்தவர்களுள் ஒரு வகையில் பட்டர் தனித்திருக்கிறார் எனலாம். லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி மற்றும் திருவாசகம், பிரபந்த நூல்களில் கூட இறைவனை இந்த உருவில் இந்த வடிவில் இந்த முறையில் தொழுது பிறவாமை அடையலாம் என்றே சொல்லியிருக்கிறார்கள். 'கடவுளை விவரிக்க முயற்சிப்பது பேதமை; அணுகவும் அடையவும் முயற்சிப்பதே மேன்மை' என்ற புதுநிலையை, பொதுநிலையை, எடுத்தது பட்டர் மட்டுமே என்று நினைக்கிறேன். நிலவை எறிந்து தன் முன்னே தோன்றினாள் என்று பட்டர் பாடியதை நம்பவும் நம்பாமலும் இரண்டு வகைக் கூட்டம் இருக்கும் என்ற அறிவும் பட்டருக்கு இருந்திருக்கும் என நினைக்கிறேன். 'காணொணா திருக்கோலம்' கண்ட களிப்பிலும் உலக இயல்பை மறவாமல் உய்ய ஒரு வழியைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். திருநாவுக்கரசர் 'இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொண்ணாதே' என்றார். பட்டர் அதற்கு ஒரு படி மேலே சென்றிருக்கிறார். 'இப்படியள் இந்நிறத்தள் இவ்வண்ணத்தள் என்று சொல்வதும் வம்பு; இவளிறைவி என்பதை அறிய விரும்பும் சிறு முயற்சியும் மேன்மை தரும்' என்று அபிராமி நம்பிக்கை விதைகளை இலவசமாக வழங்கிப் போயிருக்கிறார். 'இந்த நிறம் இந்த வடிவம்' என்று வரையறுப்பதனால் தானே பேதங்கள் வருகின்றன? மதங்களுக்கும் மதகுருக்களுக்கும் இங்கே ஒரு பாடம் புதைந்திருக்கிறதோ?

அருமையான பாடலைத் தந்த பட்டருக்கு ஒரு வணக்கம். அதை இனிமையாகப் பாடியிருக்கும் அம்மாவுக்கு ஒரு வணக்கம். இதுவரைப் பொறுமையாகப் படித்த உங்களுக்கு ஒரு வணக்கம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/11

பதத்தே உருகிநின்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 92 ராகம்: ஆரபி


பதத்தே உருகிநின் பாதத்திலே மனம்பற்றி உந்தன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனியான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் அவர்போன வழியுஞ் செல்லேன்
முதல்தே வர்மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.

மூத்த கடவுளர் மூவருடன் ஏனையவரும் போற்றும் மலர் பூப்பது போல் புன்னகையை உடையவளே (அபிராமி) உன் பல்வேறு பெயர்களை மனமுருகிச் சொல்லி வழிபட்டு உனக்குப் பணிவிடை செய்யும் என்னை அடிமை கொண்டாய்; இனி பிறிதொரு மதத்தையோ அவர்கள் கடைபிடிக்கும் வழிகளையோ நான் பின்பற்ற மாட்டேன்.

நிலவு தோன்றலுக்கு முன், நிலவு தோன்றலுக்குப் பின் என்று பட்டர் பாடல்களைப் பகுத்தால், நி.தோ முன் பாடிய பாடல்களின் கருத்துக்கள் சிலவற்றை நி.தோ பின்னும் பாடியிருக்கிறார். காரணம், தான் சொன்னது சொன்னபடி நடந்தது என்பதை வலியுறுத்த மட்டுமல்ல, மற்றவரும் அப்படி அபிராமியின் அருளை அடைய முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கவும் பாடினார் என்று நினைக்கிறேன்.

அபிராமியின் பெயர்களைச் சொல்லி வழிபட்டதன் பலன் கிடைத்து விட்டதால் அதை வலியுறுத்திச் சொல்கிறார். இனியொரு மதம் வேண்டேன் என்று அவர் சொல்வதன் காரணம் தான் இன்னொரு மதத்தையோ முறையையோ நினைக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் மட்டுமல்ல, அபிராமியை வணங்குவதால் சொன்னபடி அருளும் பிறவாமையும் கிடைக்கும் என்பதை வலியுறுத்தவே முன்பே சொன்ன கருத்தை மீண்டும் இந்தப் பாடலில் வலியுறுத்துகிறார்.

பதத்தே என்றால் அபிராமியின் பல பெயர்கள். முதல் தேவர் மூவர் இங்கே பிரம்மா விஷ்ணு சிவனைக் குறிக்கிறது.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/10

மெல்லிய நுண்ணிடை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 91 ராகம்: ஆரபி


மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன்னனையாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழுமடியாரைத் தொழுமவர்க்கும்
பல்லிய மார்த்தெழ வெண்பகடூறும் பதந்தருமே.

விரிந்த சடையுடைய சிவபெருமான் தழுவிய பொன்னைப் போல் சிவந்த மென்மையான முலைகளையும், ஒளி வீசி மறையும் மின்னலைப் போல் மிக நுண்ணிய இடை கொண்டவளுமான அபிராமியை வணங்க வேண்டிய முறைப்படித் தொழும் அடியார்களுக்கு மங்கல இசைக்கருவிகள் முழங்க வெண்யானைகள் நடமாடும் தேவலோகத்தில் இடம் கிடைக்கும்.

ஏற்கனவே பலமுறை சொன்ன கருத்தை மீண்டும் சொல்கிறார் பட்டர். சிலருக்கு ஒரு முறை சொன்னால் விளங்கும். சிலருக்கு எத்தனை முறை சொன்னாலும் விளங்காது. விளங்காதவர்களுக்கு எப்படி விளங்க வைப்பது? திரும்பத் திரும்பச் சொல்லுவதால். படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம், அதனால் தினமும் படிக்க வேண்டும் என்று பலமுறை சொல்லலாம். அதே செய்தியை, தினமும் படித்தால் நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து வசதியோடு வாழலாம் என்றும் சொல்லலாம். செய்தி ஒன்று தான். படிக்க வேண்டும் என்பதே. பட்டர் உபயோகிப்பதும் அதே முறையை. அபிராமியை வணங்க வேண்டும் என்பது செய்தி. வணங்கினால் பிறவாமை கிடைக்கும் என்பது பலன். அதையே பட்டும் பொன்னும் புரள, இசைக்கருவிகள் முழங்க, வெள்ளை யானைகள் நடமாடும் சொர்க்கலோகத்தில் வசிக்கலாம் என்றும் சொல்லலாம். பிறவாமையைச் சுலபமாகப் புரிந்து கொள்ளாத அறிவு, சொகுசான தேவலோக வாழ்வைச் சுலபமாகப் புரிந்து கொள்கிறது அல்லவா? அதனால் அபிராமியை வணங்கினால் தேவலோகம் கிடைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறார்.

புல்லிய என்றால் இணைந்த, புணர்ந்த, தழுவிய என்று பொருள். இங்கே சிவன் தழுவிய மார்பை உடையவள் என்ற பொருளில் வருகிறது. சிவனோடு இணைந்த மார்பினை, அதாவது, அர்த்தநாரி வடிவினை உடையவள் என்றும் பொருள் கொள்ளலாம். பல்லியம் என்றால் மங்கள இசை, இசைக்கருவிகள் என்று பொருள். பகடு என்றால் யானை. பதம் என்றால் பதவி, இடம். 'ப' வரிசையில் ஒரே பாடலில் எத்தனை அருஞ்சொல்!

இந்தப் பாடல் தொடங்கி நான்கு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த ஆரபி ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/09

வருந்தா வகை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 90 ராகம்: ரஞ்சனி


வருந்தா வகை என்மனத் தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தா தொரு பொருளிலை விண்மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியளே.

கடலையும் அமுதாக்கி தேவர்களுக்கு வழங்கும் மென்மையான மனமுடையவள் (அபிராமி), என் மனமென்னும் தாமரையைத் தனக்குப் பழக்கமான இருப்பிடம போல் எண்ணிக் குடிபுகுந்திருப்பதால் இனி எனக்கு வேண்டியது வேறு எதுவும் இல்லை.

'விண்மேவும் புலவர்' இங்கே தேவர்களைக் குறிக்கிறது. வேலை என்றால் கடல். 'வேலை மருந்தானது' இங்கே பாற்கடல் கடைந்த அமுதத்தைக் குறிக்கிறது.

வேலை மருந்தாக்கியதை உவமையாகச் சொல்லியிருப்பது சுவையானது. பாற்கடலின் சிறப்பு எப்படி வெளிப்பட்டது? அதிலிருந்த அமுதத்தினால். அமுதம் இல்லையென்றால் பாற்கடல் சாதாரணக் கடல் தான். 'எந்தச் சிறப்பும் இல்லாத பாழ்கடலான என் மனதில் அமுதம் போல் அபிராமி குடியிருக்கிறாள் - அதனால் என் மனதுக்கும் சிறப்பு வந்துவிட்டது' என்று பட்டர் புளங்காகிதம் அடைகிறார். அதன் வெளிப்பாடே இந்தப் பாடல்.

அபிராமியை அடைக்கலம் என்று எண்ணியவர், எண்ணி உருகியவர், உருகித் துதித்தவர் இனி எதுவுமே தேவையில்லை என்கிறார். தன் மனதில் அபிராமி குடியேறிவிட்டாள் என்ற மகிழ்ச்சியில் திளைக்கிறார். கடவுளே மனதில் குடியிருக்கும் பொழுது மனம் வேறு என்ன நினைக்க வாய்ப்பிருக்கிறது?

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/08

சிறக்கும் கமலத்திருவே...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 89 ராகம்: ரஞ்சனி


சிறக்கும் கமலத்திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியமற்ற
உறக்கம் தரவந்து உடம்போடு உயிர் உறவற்று அறிவு
மறக்கும் பொழுது என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.

உன் திருவடிகளில் தலை வைத்துப் பணிவோருக்குப் பேருலகம் தந்தருளும், தாமரை போல் உயர்ந்த அழகியே (அபிராமி), என் உடலும் உயிரும் பிரியும் மயக்க நேரத்தில், இனி மயக்கமில்லாத உறக்கத்தை (எனக்கு) வழங்குவதற்காக நீ உன் துணைவருடன் என் முன் தோன்ற வேண்டும் என விரும்புகிறேன்.

'நின் சேவடி சென்னி வைக்கத் துறக்கம் தரும் சிறக்கும் கமலத் திருவே! உடம்போடு உயிர் உறவற்று அறிவு மறக்கும் பொழுது துரியமற்ற உறக்கம் தர வந்து நின் துணைவரும் நீயும் என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

துறக்கம் என்றால் தேவருலகம், வீடு, பேருலகம் என்று பொருள். பட்டருக்குத் தேவருலகம் ஒரு பொருட்டேயில்லை. அபிராமியின் காலடிகளில் தன் தலையை வைத்த அன்றைக்கே தேவருலகம் கிடைத்துவிட்டது என்று நம்பினார். அதனால் 'காலடியில் தலை வைத்தவருக்கெல்லாம் பேருலகம் வழங்கும் பார்வதி' என்றார். பட்டருக்கு வேறு என்ன தேவை? அபிராமியை நேரில் கண்டவுடன் பட்டர் கேட்ட வரம் யாது?

உயிருடன் இருக்கும் பொழுது அபிராமியையே எப்பொழுதும் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார் பட்டர். உயிர் பிரியும் கணத்தில் மயங்கி விட்டால்? அந்தக் கணத்தில் அபிராமியை நினையாதிருந்து விட்டால்? அப்படி ஒரு அச்சம் தோன்றியிருக்கிறது பட்டருக்கு. அதனால், 'தாயே, என் உடலுடன் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கையில் உன்னை நினைக்க வேண்டும் என்று என் அறிவு சொல்கிறது; உன்னை நினைத்து வணங்கச் சொல்வதே என் அறிவுக்கு வேலை, எனினும், உடலும் உயிரும் பிரியும் பொழுது, அறிவு தன் செயலை மறக்கும் அந்த ஒரு கணத்தில் நான் உன்னை நினையாதிருந்து விட்டால் என்னை ஒதுக்கி விடாதே' என்கிறார். உடலும் உயிரும் சேரும் நிலையிருந்தால் தானே இந்த மயக்கம்? அத்தகைய மயக்கமே இல்லாத உறக்கம் உண்டா? தன்னை முழுதும் அறியும் யோக நிலைக்கு துரியம் என்று பெயர். அந்த நிலையும் இல்லாத நிலை எந்த நிலை? பிறவா நிலை. அதைத் தான் கேட்கிறார் பட்டர். துரியமற்ற உறக்கம் பிறவாமையைக் குறிக்கிறது. 'கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன? உன் மேல் நான் கொண்ட பக்தி தான்' என்று பாடுகிறார் பட்டர். உடலைப் பிரியும் அந்தக் கணத்தில், அறிவு அடங்கும் அந்த நேரத்தில், தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற வரத்தைக் கேட்கிறார் பட்டர். அபிராமியையும் அவர் துணைவரையும் (சாட்சி வேண்டாமா?) வருந்தி அழைக்கிறார்.

உடலை விட்டு உயிர் பிரியும் அந்த மயக்க நிலையை எண்ணிப் பார்க்கும் பொழுது சிலிர்க்கிறது. நம்பிக்கையற்றவரையும் கொஞ்சம் சிந்திக்க வைக்கும் பாடல் இது என்று நினைக்கிறேன். கடைசித் தருணத்திலும் பட்டர் அபிராமியை நினைக்க வேண்டும் என்றார். நான் என்ன நினைப்பேன் என்று அடிக்கடி வியந்திருக்கிறேன்.

உருக வைக்கும் பாடல்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/07

பரமென்று உனை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 88 ராகம்: ரஞ்சனி


பரமென்று உனை அடைந்தேன் தமியேனுமுன் பத்தருக்குள்
தரமன்று இவன் என்று தள்ளத்தகாது தரியலர்தம்
புரமன்று எரியப் பொருப்புவில் வாங்கியபோதில் அயன்
சிரமொன்று செற்றகையான் இடப்பாகம் சிறந்தவளே.

பகைவர்களான அசுரர்களின் திருபுர நகரங்களை எரிக்க மலையை வில்லாக ஏந்திய, தாமரை மேல் அமர்ந்த பிரம்மனின் தலைகளுள் ஒன்றைக் கொய்த, கைகளுக்கு சொந்தக்காரனான சிவனுடைய இடப்பாகத்தில் இருக்கும் உயர்ந்தவளே (அபிராமி), உன்னையே அடைக்கலம் என்று நம்பி வந்த எளியவனான என்னை உன் அடியவனாகத் தகுதி இல்லாதவன் என்று ஒதுக்கி விடாதே.

அந்தாதி பாடி அபிராமியை வரவழைத்து விட்டார். நிலவும் வந்துவிட்டது. தான் வர்ணித்தபடியே அபிராமி தனியாகவும் அர்த்தனாரியாகச் சிவனுடனும் தோன்றிய காட்சிகளைக் கண்டாகி விட்டது. எங்கேயும் ஒளிப்பிழம்பாகி நின்ற அபிராமியுடன் சேரக் கிடைத்த வாய்ப்பையும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டார். எமனை உதை வாங்கச் செய்த ஒரு உபரித் திருப்தியும் கூடக் கிடைத்தாகி விட்டது. பட்டருக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை அபிராமி மனம் மாறி தன்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால்? அல்லது தன் பக்தியில் குறை கண்டு ஒதுக்கி விட்டால்? அபிராமியையே கதி என்று நம்பியவரின் கைக்கெட்டிய பிறவாமை தட்டி விட்டால்? பட்டரின் தன்னம்பிக்கையில் குறையில்லை. அபிராமியின் கண்ணோட்டத்தில் மாறுபட்டால்? சாதாரண கிரிகெட் போட்டியில் கடைசி ஓவரில் நாலு பந்துகள் பாக்கி, ஒரே ஒரு ரன் அடித்து வெற்றி கிடைக்கும் போலிருக்கும் பொழுது, சச்சின் அவுட்டாகி விடுவாரோ என்று அச்சம் தோன்றுவதில்லையா? நினைத்ததெல்லாம் நடக்கும் பொழுது கடைசி நிமிடத்தில் எல்லாம் காணாமல் போய்விடுமோ என்ற பயம் நமக்கு உண்டாவதில்லையா? அது போல் பட்டருக்கும் கடைசி நிமிடத்தில் அபிராமி ஏதாவது சொல்லிவிடப் போகிறாளே என்ற பயம் வந்து விட்டதோ என்னவோ, 'தாயே, என்னைத் தள்ளி விடாதே' என்ற கோரிக்கையை முன் வைக்கிறார். அபிராமி தானே இங்கே அம்பயர்?

தரியலர் என்றால் பகைவர். இங்கே திரிபுர அசுரர்களைக் குறிக்கிறது. தமியன் என்றால் எளியவன், சிறியவன் என்று பொருள். 'தமியன் நான்' என்பது தமியேன் ஆனது. போது என்றால் மலர், தாமரை. அயன் என்றால் பிரம்மன். பிரம்மனின் ஐந்து தலைகள் நான்கானது புராணக்கதை. செற்ற என்றால் அழித்த, கொன்ற என்ற பொருள். தென்னிலங்கை செற்றான், அவனைச் செற்றான், இவனைச் செற்றான் என்று திருமாலின் அசுர வதங்களை அடிக்கடி திவ்வியப்பிரபந்தப் பாடல்களில் விவரிக்கக் காணலாம். இங்கே 'செற்ற கையான்' என்பது சிவபெருமானைக் குறிக்கிறது.

திரிபுர அசுரர்களையும் பிரம்மாவையும் ஒரே தட்டில் வைத்தது ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. சிவபுராணக் கதைகளில் இதற்கான விளக்கம் புதைந்திருக்கிறது; விவரமாக எழுதி உங்கள் நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. மேலோட்டமாகக் கோடிட்டு என் கருத்தை மட்டும் சொல்கிறேன்.

சிவனின் வதங்களிலேயே மிகவும் சிக்கலானது, சந்தேகத்துக்குரியது, திரிபுரவதம் தான். தேவ-அசுர அரசியல் காரணமாக நிகழ்ந்த போர் என்று தோன்றுகிறது. மூன்று அசுரர்களும் தேவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்த விவரங்கள் எதுவும் இல்லை. மாறாக, சிவனை பொழுது தவறாமல் வழிபட்டு வந்த விவரங்கள் இருக்கின்றன. சிவன் மேல் பக்தியோடும், தேவர்களோடு போர் புரியாமலும், தங்கள் பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த திரிபுர அசுரர்களை அழித்தார் சிவன். பிரம்மனோ கடவுள். சலனங்களுக்கப்பாற்பட்ட முதிர்ந்த மனத்தோடு இருக்க வேண்டிய தேவன். பார்வதியின் பணிவுக்கு ஆசைப்பட்டு மயங்கி சிவனாக, கண நேரமானாலும் வணக்கத்துக்கு முறையான உரிமையுடைய இன்னொருவராக, ஏமாற்றினார். பக்தி எனும் நன்னடத்தை கொண்டாலும் அசுரர்கள் எண்ணத்தால் தீயவர்கள்; தீய எண்ணம் கொண்டதால் தேவனான பிரம்மனும் அசுரனே என்ற கருத்தில் அசுரவதத்தையும் பிரம்ம சிரச்சேதத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்தார் பட்டர். இது என் கருத்து.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/06

மொழிக்கும் நினைவுக்கும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 87 ராகம்: ரஞ்சனி


மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதநின் திருமூர்த்தி எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படியொரு பாகம் கொண்டாளும் பராபரையே.

நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துத் தன்னுடைய தவ வலிமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய சிவனை அந்த உலகமே நகைக்கும் விதமாக அவருடைய தவத்தைக் கலைத்தது மட்டுமல்லாது அவருடைய உடலிலும் பாதியை எடுத்துக்கொண்ட இறைவியே, சொல்லில் அடங்காத, நினைத்துப் பார்க்கவும் இயலாத உன் அழகு என்னுடைய நல்வினைப்பயனால் என் கண்களுக்கு அரிய காட்சியானது.

'விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதம்' பற்றிச் சிவராத்திரியின் கதை வழியாக முன்னர் பார்த்தோம். சிவனின் தவத்தைக் கலைக்க தேவர்கள் கூட்டு சேர்ந்து தாஜா செய்து அனுப்பிய மன்மதனைச் சிவன் பொசுக்கியதும், பார்வதி மன்மதனின் மலரம்புகளையும் கரும்புவில்லையும் எடுத்துக்கொண்டு தானே சிவனை எதிர் கொண்டதும், பார்வதியின் அழகைக் கண்டதும் தான் செய்த தவமெல்லாம் இவளைக் காணவேயன்றோ என்று சிவன் ஒரேயடியாக நிலைமாறி பார்வதியின் பின்னே போனதும் சுவையான சிருங்காரக் கதை. சிவபுராணத்தில் விவரமாகப் படிக்கலாம். மன்மதனை எரித்து வித்தை காட்டிய சிவனின் வீரம் அபிராமியின் அழகினால் சொத்தையானது என்று பட்டர் சொல்கிறார். சிவனின் தவத்தைக் குலைத்து, தனித் தவமே இனிச் செய்ய இயலாதபடி அவர் உடலில் பாதியை எடுத்துக்கொண்டு ஆளும் அபிராமியின் அழகைச் சொல்லால் விவரிக்க முடியாது, ஏனென்றால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அழகு என்கிறார். நினைத்துப் பார்த்தால் தானே சொல்லில் வடிப்பது? அப்படிப்பட்ட அழகி தன் கண்களுக்குக் காட்சியானது வினைப்பயன் என்கிறார். பராபரை என்றால் கடவுள், இறைவி.

எளிமையான பாடலாக இருந்தாலும், பட்டர் பாடலைச் சரியாக முடிக்காமல் விட்டது போல் தோன்றவில்லை? 'வெளி நின்றதால்' என்று தொக்கி நிற்பது போல் ஒலிக்கிறது பாடல். பட்டர் அறிவுக்கு எட்டாத அபிராமியின் அழகைப் போல், ஒரு வேளை என் அறிவுக்கு எட்டாத பட்டரின் பொருளழகாகவும் இருக்கலாம் என்று நினைத்தபோது விவரம் புரிந்தது. இங்கே நின்றதால் என்பதை 'நின்றது+ஆல்' எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். 'என் விழிக்கும் வினைக்கும் வெளி நின்றது, ஆல்' எனப் பிரியும் பொழுது, தொக்கி நிற்பதும் சொக்க வைக்கும் தமிழ் என்று புரியும். ஆல் என்பதற்கு ஆமாம் என்று பொருள். 'என் விழிக்கும் வினைக்கும் வெளி நின்றது, உண்மை தான்' என்ற பொருளில் பாடியிருக்கிறார் பட்டர்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/05

மால் அயன்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 86 ராகம்: ரஞ்சனி


மாலையன் தேட மறை தேட வானவர் தேடநின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலைவெங் காலனென்மேல் விடும்போது வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே.

பாலும் தேனும் சர்க்கரைப்பாகும் கலந்தது போல் குளிர்ந்த இனியமொழி கொண்டவளே (அபிராமி), சினங்கொண்ட எமன் என் மேல் சூலத்தை எறியும் பொழுது திருமாலும் பிரம்மனும் வேதங்களும் தேவர்களும் தேடித் தொழும் உன் பாதங்களையும் வளையணிந்த கைகளையும் கொண்டு என்னை அண்டாமல் தடுத்து நிறுத்தினாய்.

அபிராமி நிலவைக் கொண்டு வந்த காரணத்தால், தான் எமன் வசம் சேராமல் பிழைத்தமைக்கு நன்றியுடன் பாடுகிறார் பட்டர். எமன் வசம் சேர்ந்தவர்கள் பாவ புண்ணிய விகிதப்படி நரகமோ சொர்க்கமோ அனுபவித்தாலும், மீண்டும் பிறவியை அடைவார்கள் என்ற புராணக் கருத்துக்களை முன்பே பார்த்தோம். இங்கே பட்டர் உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் பாடவில்லை. எமனுலகம் சேராமல் அபிராமியுடன் சேரக் கிடைத்த வாய்ப்பை எண்ணி நன்றியுடன் பாடுவதாகக் கொள்ள வேண்டும். அபிராமியுடன் சேருவதால் பட்டருக்குப் பிறவாமை கிடைப்பதாகப் பொருள்.

வானவரும் தானவரும் அபிராமியின் காலடியே கதியாகக் கிடப்பதை முன்பே பல பாடல்களில் சொல்லியிருக்கிறார் பட்டர். சூடகம் என்றால் கையணி, கைவளை என்று பொருள். தேவர்கள் அடிபணிந்து வணங்கும் காலையும் வளையணிந்த கைகளையும் கொண்டு எமனைத் தடுத்து நிறுத்தியதாகச் சொல்வதேன்? மார்க்கண்டேயன் வரலாற்றை அறிந்தவர்கள் சிவன் எமனைக் காலால் உதைத்த கதையை அறிவார்கள். மார்க்கண்டேயனுக்கு அருள் கிடைத்த அதே ஊரில் அதே கோவிலில் தனக்கும் எமனிடமிருந்த கிடைத்த விடுதலையை அப்படிப் பாடுகிறார் பட்டர். மார்க்கண்டேயன் பொருட்டு சிவனால் எமனுக்கு கிடைத்த உதை, இப்பொழுது தன் பொருட்டு அபிராமியால் கிடைக்கட்டும் என்பது பட்டரின் அவா. எமனை எட்டி உதைப்பதே பெரும்பாலான முனிவர்களின் குறிக்கோளாக இருந்ததைப் பல சிவ-சக்தி நூல்களில் படிக்கலாம். இந்த முறை எமனைக் கால்பந்து ஆட அபிராமியை அழைத்திருக்கிறார் பட்டர். வளை அணிந்த கைகளில் அபிராமி பாசமும் அங்குசமும் ஏந்தியிருப்பதையும் முன்பே பாடியிருக்கிறார். எமன் வழக்கமாகப் பாசக் கயிறும் அங்குசமும் ஏந்தி வருவதாக நம்பிக்கை. இங்கே 'வளையணிந்த கையினால்' என்பதற்கு அபிராமி தன்னுடைய பாசக்கயிறையும் அங்குசத்தையும் எமனுக்கு எதிராகப் பயன்படுத்தியதாகப் பொருள். கதித்தல் என்றால் சினங்கொள்ளுதல், விரைவாகச் செல்லுதல் என்று பொருள். கப்பு என்றால் பிளவு பட்ட என்று பொருள். இங்கே சூலம் அல்லது அங்குசத்தைக் குறிக்கிறது.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் ரஞ்சனி ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/04

பார்க்குந் திசைதொறும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 85 ராகம்: ஹடானா


பார்க்குந் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலரைந்தும் கரும்பும் என்னல்லல் எல்லாம்
தீர்க்குந் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங் குமமுலையும் முலைமேல் முத்துமாலையுமே.

என்னுடைய துன்பங்களை எல்லாம் தீர்க்கவல்ல திரிபுரசுந்தரி, நான் பார்க்கும் திசையெல்லாம் நிறைந்திருக்கிறாள்; சிறிய இடையும், சிவந்த முலைகளைக் கட்டிய கச்சையும், கச்சை மேல் முத்து மாலையும், (கைகளில்) பாசக்கயிறும் அங்குசமும் வண்டுகள் மொய்க்கும் குளிர்ந்த அழகான ஐந்து வகை மலரம்புகளும், கரும்பு வில்லும் கொண்டிருக்கிறாள்.

இந்தப் பாடலில் அபிராமியின் தோற்றம், தான் முன்பு பாடியதைப் போலவே இருப்பதாகச் சொல்கிறார் பட்டர். பாசம், அங்குசம், கரும்புவில், மலரம்பு, குங்கும முலை, முலைமேல் முத்துமாலை, சிற்றிடை என்று அவர் அபிராமியை எண்ணிப் பாடியது நினைவிருக்கும். தான் எண்ணியதைப் போலவே அபிராமி தோன்றியிருப்பது அவருக்குப் பெரும் நிறைவைத் தந்திருக்கிறது. தான் சொன்னது போலவே அன்றைக்கு நிலவு வந்தது மட்டுமல்ல, அபிராமியும் தான் வர்ணித்தது போலவே தோன்றியிருப்பது அரசன் மற்றும் அவையினர் நடுவே பட்டரின் நிலையை பன்மடங்கு உயர்த்துகிறது அல்லவா? அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவள் அபிராமி என்று பட்டர் பாடியருப்பதும் பொருத்தமாக இருக்கிறது.

அருஞ்சொல் எதுவுமில்லாத எளிய பாடல்.

ஐவகை மலரம்புகள் (முன்பே விவரித்திருந்தால் மன்னிக்கவும்) முறையே சிவப்புத் தாமரை, அசோகம், மாம்பூ, மல்லிகை, நீலத்தாமரை மலர்களால் தொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அரவிந்தம், அசோகம், சூதம், நவமல்லிகா , நீலோத்பலம் என்கிறது சிவபுராணக் கதை. சூதம் என்ற வடமொழிச் சொல் மாம்பூவைக் குறிக்கும். நவமல்லிகா என்பது புது மல்லிகை, அன்றைக்கு மலர்ந்த மல்லிகை என்று நினைக்கிறேன். ஒருவேளை நவமல்லிகா என்று தனிப்பூ இருக்கலாம். நீலோத்பலம் சரியாகத் தெரியவில்லை. நீலத்தாமரை என்கிறார்கள் சிலர். இல்லை என்கிறார்கள் சிலர். ஒரே ஒரு முறை கலிபோர்னியாவில் நீலத்தாமரை மலரைப் பார்த்து அசந்திருக்கிறேன். மல்லிகை அளவுக்கு மணமில்லை என்றாலும், அதிசயமான அழகு என்பேன். தாமரைப்பூ போலவே (அல்லி?) இருக்கிறது. இன்னொரு நீலத்தாமரை, வாழைப்பூ போல் இருக்கிறது - தாய்லந்தில் பார்த்திருக்கிறேன். மயங்க வைக்கும் நறுமணம். ஐந்து வகை மலரம்புகளுக்கும் தனித்தனி வசிய குணங்கள் இருப்பதாகச் சொல்கிறது சிவபுராணம். அது வேறு கதை.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/03

உடையாளை ஒல்கு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 84 ராகம்: ஹடானா


உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதி செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ் சடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கென்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே.

(அபிராமி) சிவந்த பட்டு உடையணிந்தவள், ஒளி வீசும் பிறை நிலாவைத் தலையில் சூடியவள், நூல் போல் மெலிந்த இடை கொண்டவள், எங்கள் தலைவனாகிய சிவபெருமானின் பக்கமிருக்கும் சக்தியானவள், நம்பிக்கையற்ற தீயவரின் உள்ளத்தில் குடியேறாதவள்; எனக்குப் பிறவாமை அளித்த இவளை அடையாளம் கண்டு, உங்களுக்கும் இனிப் பிறவாமை கிடைக்கும்படி வழி செய்து கொள்ளுங்கள்.

அபிராமியைக் கண்ட ஆனந்தத்தில், அவளை நமக்கு அடையாளம் சொல்கிறார் பட்டர். தான் கண்ட காட்சி, தான் பெற்ற இன்பம் - நாமும் பெற விரும்புகிறார்.

அபிராமி அந்தாதி பாடல்களில் பட்டர் வரிக்கு வரி சிலேடை உபயோகித்திருப்பது இந்தப் பாடலில் தான் என்று நினைக்கிறேன். உடையாள் என்றால் கடவுள்; செம்பட்டு உடையாள் என்பது சிவந்த பட்டாடையை உடுத்தியவள் என்ற பொருளில் வருகிறது. ஒல்கும் என்றால் மேலணிம், சூடும் என்று பொருள். ஒளிர் மதி சடையாள் என்பது பிறை நிலாவைச் சூடியவள் என்ற பொருளில் வருகிறது; நெஞ்சடையாள் என்பது நெஞ்சு+அடையாள் எனப் பிரிந்து, நெஞ்சத்தில் சேராதவள் என்ற பொருளில் வருகிறது. நுண்ணூல் இடையாள் என்பது மிக மெல்லிய நூல் போன்ற இடை கொண்டவள் என்ற பொருளில் வருகிறது; பெம்மான் இடையாள் என்பதை இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். இடை என்பதற்கு பக்கம், பாகம் என்ற பொருளில் சிவபெருமானின் பக்கமிருப்பவள், இடதுபாகத்தில் இருப்பவள் என்று பொருள். இடை என்பதற்கு வலிமை, சக்தி என்றும் பொருள். சிவபெருமானின் சக்தியானவள் என்ற பொருளில் வருகிறது.

பெம்மான் இடையாளை என்று பாடியிருப்பதால், அபிராமி சிவனுடன் சேர்ந்து அர்த்தநாரி வடிவத்தில் அவருக்குக் காட்சியளித்திருப்பதாகப் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

உருகிப் பாடியிருக்கிறார் அம்மா. அடிக்கடி கேட்ட சுவையான பாடல்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/02

விரவும் புதுமலர்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 83 ராகம்: ஹடானா


விரவும் புதுமலரிட்டு நின்பாத விரைக் கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லாரிமை யோரெவரும்
பரவும் பதமும் அயிரா வதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக்காவும் உடையவரே.

(அபிராமியே) புதிதாக மலர்ந்த தேன் அடங்கியப் பூக்களை உன் தாமரைப் பாதங்களில் இட்டு அல்லும் பகலும் வணங்குவோர், தேவர்களுக்குரித்தான பதவியும், செல்வாக்கும், செழிப்பும், பேரறிவும், வலிமையும், செல்வங்களும் கிடைக்கப் பெறுவர்.

'விரை விரவும் புதுமலர் நின்பாதக் கமலம் இட்டு இரவும் பகலும் இறைஞ்ச வல்லார்...' எனப்பிரித்துத் தொடர வேண்டும். விரை என்றால் தேன். விரவுதல் என்றால் அடங்குதல், கலத்தல், பரவுதல். விரை விரவும்: தேனடங்கிய. பாதக் கமலம் என்பது அபிராமியின் தாமரை போன்ற சிவந்த மென்மையான பாதங்களைக் குறிக்கிறது. இமையோர்: உறக்கம் துறந்த இயல்புடையவராதலால் தேவர்களை இமையோர் என்பர். பரவும் என்றால் போற்றும், புகழும், விரும்பும் என்று பொருள். பதம் என்ற சொல்லுக்கு இருக்கும் எத்தனையோ பொருள்களில் பதவி ஒன்று. அயிராவதம் என்பது தேவலோக யானை. இந்திரனின் வாகனம் என்பார்கள். பகீரதி என்பது தேவலோக நதி. பகீரதியைப் பூமிக்குக் கொண்டு வந்ததால் கங்கையானது. பகீரதியை ஆகாய கங்கை என்றும் சொல்வார்கள். உரவு என்றால் அறிவு, ஞானம். குலிசம் என்றால் வலிமை, மேன்மை, வஜ்ஜிராயுதம் (குலிசன்=இந்திரன்) என்று பொருள். கற்பகக் கா தேவலோகத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் பொற்சோலை.

அபிராமியை புதுமலரிட்டு அல்லும் பகலும் வணங்குவோர் தேவலோகத்தில் இந்திர பதவி, ஐராவத யானை, ஆகாய கங்கை, வலிமையான ஆயுதமான வஜ்ஜிராயுதம், மற்றும் கற்பகச் சோலையைப் பெறுவர் என்றும் பொருள் கொள்ளலாம். எனினும், இவற்றுக்கு அப்படி நேர்பொருள் கொள்வது பொருத்தமாக இல்லை என்று நினைக்கிறேன். அபிராமியின் அருளுடன் தேவலோகம் போகிற பட்டர் என்ன செய்வார் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. கற்பக மரங்களையும், யானையையும், வஜ்ஜிராயுதத்தையும், ஆகாய கங்கை நதியையும் வைத்துக் கொண்டு என்ன செய்வார்? "அம்மா தாயே அபிராமி, பிறவாமை கேட்டு வந்தால் இங்கே இவற்றைச் சுமந்து கொண்டு திரிய வேண்டுமா? அனுபவிக்கக் கூட முடியாதே? நான் நோஞ்சான், என்னிடம் வஜ்ஜிராயுதத்தைக் கொடுத்தால் என்ன செய்வேன்? ஒரு பேச்சுக்கு சொன்னால் அப்படியே எடுத்துக் கொடுத்து விடுவதா? உன் பாதங்களில் பூவைத் தூவிப் பாட்டு பாடும் எளியவனுக்கு இதனால் என்ன பயன்?" என்று நிச்சயம் கேட்பார். தேவலோகப் பதவி மேன்மையைக் குறிக்கிறது. ஐராவத யானை செல்வாக்கைக் குறிக்கிறது. ஆகாய கங்கை செழிப்பைக் குறிக்கிறது. குலிசம் (வஜ்ஜிராயுதம் என்றே வைத்துக் கொண்டாலும்) வலிமையைக் குறிக்கிறது. கற்பகக்கா செல்வங்களைக் குறிக்கிறது. அபிராமியின் அருளும் மாறாத கருணையும் கிடைக்கப் பெறுவதுடன் தேவலோகப் பெருமைகளையும் அடைவர் என்பதே பட்டர் பாடலின் சாரம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/09/01

அளியார் கமலத்தில்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 82 ராகம்: ஹடானா


அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடினெங்ஙனே மறப்பேனின் விரகினையே?

தாமரை மலர் போன்ற குளிர்ச்சியான தெய்வப்பெண்ணே! இவ்வுலகும் அண்டங்களும் எல்லாமே உன்னுடைய அழகின் ஒளியாக விளங்குவதை எண்ணும் பொழுது வானையும் தாண்டிக் கரைமீறும் அளவுக்கு என் உடலும் மனமும் களிப்புற வைக்கும் உன் திறனை எப்படி மறக்க முடியும்?

நிலவையும் அபிராமியையும் கண்ட மகிழ்ச்சியில் தொடர்ந்து பாடுகிறார் பட்டர். அண்டம் முழுதும் நிறைந்திருப்பது அபிராமியின் ஒளி என்பதை உணர வைத்து மகிழச் செய்வதும் அபிராமி தான் என்பது பாடலின் சாரம்.

அளியார் என்பதை அளி+ஆர் என்று பிரிக்க வேண்டும். 'அளி ஆர் கமலத்தில்' என்பதற்கு குளிர்ந்த தாமரை போன்றவளே என்று பொருள் சொல்லியிருக்கிறேன். பட்டர் பாடுவது அபிராமியின் அருளைப் பற்றி. குளிர்ச்சி அருளுக்கு ஆகி வருவதால் அப்படிப் பொருள் சொல்லியிருக்கிறேன். அளி என்பதற்கு வண்டு என்றும் பொருள். அந்த வகையில் 'வண்டுகள் மொய்க்கும் தாமரை' என்றும் பொருள் சொல்லலாம். வண்டுகள் மொய்க்கும் தாமரை மேல் அமர்ந்தவளே/தாமரையைப் போன்றவளே உன் அருளை எண்ணிக் களித்தேன் என்றும் பொருள் கொள்ளலாம். (வண்டு மொய்க்கும் தாமரை போல் அடியார்கள் மொய்க்கும் அபிராமி என்று பொருள்). கரணம் என்பதற்கு உடல், மனம், தந்திரம் என்று பல பொருளுண்டு. விரகு என்றால் திறமை என்று பொருள்.

'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி...கோனாகி யானெனதென்றவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே' எனும் திருச்சதகப் பாடலில் மாணிக்கவாசகர் சொல்லியிருக்கும் ஏறக்குறைய இதே கருத்து நினைவுக்கு வருகிறது.

எளிமையான பாடல், இனிமையான ராகம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/31

அணங்கே அணங்குகள்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 81 ராகம்: ஹடானா


அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கே னொருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கே னெனதுன தென்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கே னறிவொன்றிலேன் என்கண் நீவைத்த பேரளியே.

பேதையான என் மேல் கருணை கொண்ட தெய்வமே! இனி நான் கபட நெஞ்சம் கொண்டவர்கள் சொற்படி நடக்க வேண்டிய அவசியமில்லை; தான் பெற்றதையெல்லாம் உனக்கே சமர்பிக்கும் உள்ளம் உடையவர்களோடு வேற்றுமை காண அவசியம் இல்லை; உன்னைத் தவிர வேறெவரையும் போற்றத் தேவை இல்லை; மற்ற தெய்வங்களும் உனக்குப் பணிந்தவர்களென்பதால் அவர்களை வணங்கத் தேவையுமில்லை.

தன் குரலுக்கு செவி சாய்த்து அருள் புரிந்த அபிராமியை நன்றியுடன் பாடுகிறார் பட்டர். 'நீ இருக்கும் பொழுது இனி எதுவும் எவரும் தேவையில்லை' என்கிறார். நம்மை மதித்து நமக்கு உதவி புரிவோரை உயரே வைத்துப் பார்ப்பது இயற்கை தானே?

அணங்கு என்பது பெண்பால். உயர்ந்தவள், தெய்வம், பேய் என்றெல்லாம் பொருளுண்டு. இங்கே தெய்வம் என்ற பொதுப்பாலில் வருகிறது. பேரளி: பேர்+அளி. பெரும் கருணை, இரக்கம் என்ற பொருளில் வருகிறது. வஞ்சகர் என்ற சொல்லுக்கு சிறுமைத்தனம் கொண்டவர், கபடம் உள்ளவர் என்று பொருள். தவறான திதியைச் சொன்ன காரணத்துக்கு தலையை வெட்டுவேன் என்று சொன்ன அரசனை சிறுமையானவன் என்று சொல்கிறார். வஞ்சகரோடு இணங்கேன் - அரசனுக்கு இணங்கி நடக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்.

நாம் பாடுபட்டுச் சேர்த்த செல்வம் அனைத்தும் இன்னொருவருக்குச் சொந்தம் என்ற கண்ணோட்டம் மிகவும் முதிர்ந்த மனத்தின் அடையாளம். அந்த நிலையில் பந்தம் அறுந்து விடுகிறது. எல்லாமே அபிராமி செயல் என்று பார்க்கும் பொழுது பிறவாமைச் சுழலுக்கான முக்கிய காரணத்தை - நான், எனது என்ற சுய நலம், சுற்றம், பந்தங்களை - வேரோடு அறுக்க முடிகிறது. அதைத்தான் பட்டர் குறிப்பிடுகிறார். தனக்கு அத்தகைய அறிவு கிடையாது என்று நம்புவதால் அப்படி பந்தங்களை அறுத்த அறிவுள்ளவரோடு சேர்ந்திருப்பதாகச் சொல்கிறார். நமக்கு அறிவில்லாத பொழுது அறிவுள்ளவரோடு சேர்ந்து பழகுவது நன்மை தானே? அறிவுள்ளவரை அறிவில்லாதோர் அறிவது எப்படி? அதற்கு அபிராமியின் கருணை வேண்டும் என்கிறார் பட்டர். பேதையான தனக்கு அறிவுள்ளவரின் துணை கிடைக்க அபிராமி இரக்கம் கொண்டு உதவி செய்தாள் என்று நன்றியுடன் பாடுகிறார்.

ராமாயணக் கிளைக்கதை ஒன்று. பட்டாபிஷேகம் முடிந்தது. தனக்கு வழங்கப்பட்ட மற்றும் கேட்டுப் பெற்ற நாடு, நிலம், சிற்றரசுப் பதவி, செல்வம் என்று பரிசுகளையும் சலுகைகளையும் வாங்கிக் கொண்டு ராமனுக்கு உதவி செய்த அனைவரும் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்கள். "உனக்கு என்ன வேண்டும்?" என்று லட்சுமணனிடம் கேட்கிறான் ராமன். சீதையையும் ராமனையும் சேர்த்து வணங்கிய லட்சுமணன், "அண்ணா, நீ மட்டும் என் உள்ளம் முழுதும் வெற்றிடமே இல்லாமல் நிரம்பியிருக்க வேண்டும்" என்று கேட்கிறான். "சரி" என்கிறான் ராமன். பிறகு தனித்திருக்கும் பொழுது, "ராமா, என்னோடு சேர்ந்து சீதாராமனாக தன் உள்ளத்தில் இருக்க வேண்டும் என்று லட்சுமணன் விரும்பாததைக் கூடப் புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால் வெற்றிடமே இல்லாமல் நீ மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்றானே? ஏன்? ஊர்மிளையைக் கூட இடமில்லாமல் செய்து விட்டானே?" என்று சீதை ராமனிடம் கேட்கிறாள். "எல்லாமே நான் தான் என்று லட்சுமணன் நம்புகிறான். ஆசை பாசம் இவையெல்லாம் கரையான் போல. நல்ல உள்ளங்களையும் அரித்து விடும். உள்ளத்தில் வேறு எந்த எண்ணத்திற்கும் இடம் தராவிட்டால் - என்னையே நினைத்திருந்தால் - சூது, ஆசை, பாசம், பொறாமை என்ற எதுவும் அவன் உள்ளத்தில் இடம்பெறாது இல்லையா? என்னைத் தவிர என்னுடன் நீயோ மற்றெவரோ எதுவோ இருந்தால், அவனுக்கு சபலங்கள் எதுவும் ஏற்படாவிட்டாலும், நமக்குள் ஏற்படும் பிணக்கு சஞ்சலங்களினால் அவன் உள்ளத்தில் விரிசல் ஏற்பட்டு மற்ற துயரங்களுக்கு இடம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியதால், என்னை மட்டும் அவன் உள்ளத்தில் குடியிருக்கச் சொல்கிறான்" என்று ராமன் பதில் சொல்கிறான். கணப்பொழுதானாலும் மான் மேல் ஆசை வைத்த காரணத்தினால் சீதைக்கு நிகழ்ந்ததை எடுத்துச் சொல்கிறான். சுக்ரீவ வாலி சகோதரர்களுக்கு அவர்கள் நெஞ்சில் இருந்த ஆசா பாசங்களினால் நேர்ந்த துன்பங்களை எடுத்துச் சொல்கிறான். ராவண விபீஷண சகோதரர்களுக்கு நேர்ந்த துன்பங்களை எடுத்துச் சொல்கிறான் (கூடப்பிறந்தவர், சுற்றம் என்று அத்தனையையும் இழந்து விபீஷணன் சந்தோசமாக பதவியில் இருந்திருப்பான் என்கிறீர்களா?). தசரதனில் தொடங்கி இப்படி ஒவ்வொருவராக உதாரணம் காட்டிச் சொன்ன ராமன், "இளவரசனான லட்சுமணன் காலப்போக்கில் வேறு சபலங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறான். என்னை விட முதிர்ந்த மனது அவனுக்கு" என்று சொல்லி முடித்த பின், சீதையிடம் "என் உள்ளத்திலும் நீ அது போல் வியாபித்து இருக்க வேண்டும்" என்று கேட்கிறான். சீதை புன்னகைக்கிறாள். பொருள் பொதிந்த புன்னகை. சக்தி-பண்டாசுரப் போர் பற்றியப் புராணக்கதையை முன்பு குறிப்பிட்டிருக்கிறேன். பண்டாசுரன் 'ராவணன் என்ற ஆயுதத்தை' எறிய, சக்தி 'ராமன் என்ற ஆயுதத்தால்' அதை வீழ்த்தியதாகப் புராணக்கதை. சீதை சக்தியின் வடிவம் என்று ராமன் நம்பினான். ராமனுக்கும் முதிர்ந்த மனது தான்.

அபிராமியை நம்பி, 'எனது உனது என்றிருப்பார் பற்றறுப்பார்' என்பது பட்டர் பாடலின் சாரம்.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் ஹடானா ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/30

கூட்டியவா என்னை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 80 ராகம்: பைரவி


கூட்டியவா என்னைத் தன்னடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என்கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடமாடகத் தாமரை ஆரணங்கே.

தாமரை மலர் போன்ற அழகியே, உன் உண்மையான உருவைக் கண்ட என் கண்ணும் நெஞ்சும் பெரும் மகிழ்ச்சியடைகிறது. என் தீவினைகளை ஒழித்து உன்னுடைய அடியார்களில் ஒருவனாக அழைத்து ஏற்றுக்கொள்ளும் பொருட்டு என் முன்னே தோன்றுவதற்கென்றே நீ நடத்திய நாடகமா இது?

தன்னுடைய பக்தர்களைச் சோதிப்பது கடவுளரின் பொழுதுபோக்கு. இதெற்கென்றே நூற்றுக்கணக்கில் புராணக்கதைகள் இருக்கின்றன. சோதனையின் ஆழம் பலனின் பெருமையைப் பொருத்து அமையும். பிறவாமை வேண்டி அபிராமியை வணங்கிய பட்டருக்கு உயிரிழக்கும் சோதனையை வழங்கியிருப்பது பொருத்தமாகப் படுகிறது பட்டருக்கு.

'அரசனிடம் அமாவாசைக்குப் பதிலாகப் பௌர்ணமி என்று சொல்ல வைத்தது அபிராமி; பிழையைத் திருத்த நிலவைக் கொண்டு வா என்று அரசனை ஆணையிட வைத்தது அபிராமி; அவசரப்பட்டு விட்டோமே என்று கையைப் பிசைந்து நின்றவருக்கு வேறு வழி எதையும் எண்ணவைக்காமல் அபிராமியைப் பற்றியே பாட வைத்தது அபிராமி; சரியான நேரத்தில் நிலவை உருவாக்கி தன்னை வெளிக்காட்டியது அபிராமி; காட்சியளித்தோடு தன் அண்மையில் சேர்த்தது அபிராமி' என்று அனைத்தையும் அபிராமியின் செயலாகவே பார்க்கிறார் பட்டர். தன்னை ஆட்டிவைத்தமைக்காக ஆனந்தப்பட்டுச் சிறந்த இயக்குனருக்கான ஆரணங்கு விருதை அபிராமிக்கு வழங்குகிறார் பட்டர்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/29

விழிக்கே அருளுண்டு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 79 ராகம்: பைரவி


விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்க,
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்துங்கயவர் தம்மோடென்ன கூட்டினியே?

அருளைத் தவிர வேறொன்றில்லாத விழிகளையுடைய அபிராமியை வழிபடும் முறைகளை அறிந்தபின் அந்த வழியில் செல்லாமல், பாவச் செயல் புரிந்து நரகத்துக்கு வழி தேடுவோருடன் சேரும் வீண் பிறவி எதற்கு? (தேவையில்லை)

'பிறவாமை தரும் அபிராமியை அடையும் வழியறிந்த பின், பிறவிச் சுழலில் சிக்கும் வழிகள் எனக்குத் தேவையில்லை' என்று சுருக்கமாகப் பாடியிருக்கிறார் பட்டர்.

இந்தப் பாடலின் பின்னணி: 'உன்னை நம்பி நானே உள்ளமிழந்தேனே' என்று உருகி உருகிப் பாடிய பட்டரின் அருந்தமிழுக்கு மயங்கிய அபிராமி, தன் காதணியை எடுத்து வானில் சுழற்றி எறிந்தாளாம். வைரத்தரளக் குழை கொப்பான அபிராமியின் காதணி வானில் முழு நிலவையும் மிஞ்சும் அளவுக்கு ஒளி வீசி நின்றதாம். அந்தப் பரவசத்தில் பட்டர், 'அன்னையைப் பார்த்தபின் இன்னும் என்ன நெஞ்சமே?' என்று பாடியிருக்கிறார்.

பழி என்றால் பாவம், வீண், பலனற்ற என்று பொருள். 'பழிக்கே சுழன்று' என்பது வீணானப் பிறவிச் சுழற்சியைக் குறிக்கிறது. வேதம் என்றால் அறிவு. 'வேதம் சொன்ன வழி' என்பது இங்கே அபிராமியை வணங்க வேண்டும் என்ற அறிவைக் குறிக்கிறது. வேத முறைப்படி வணங்கச் சொல்லவில்லை பட்டர். அருளைத் தவிர வேறொன்றுமே இல்லையாம் அபிராமியின் விழிகளில். வேத முறையோ பேத முறையோ, அபிராமியை வணங்க வேண்டும் என்ற அறிவு இருந்தால் போதும். எப்படி வணங்கினாலும் யார் வணங்கினாலும் அவளுடைய கொழுங்கடைப் பயனுண்டு என்பதே பாடலின் சாரம்.

அபிராமி அருள் புரிந்து விட்டாளே? நிலவு தோன்றிவிட்டதே? பட்டர் இந்தப் பாடலோடு ஏன் நிறுத்தவில்லை என்று தோன்றுகிறது. பிறவாமைக்கான பாயின்ட் டு பாயின்ட் நேர்வழி வண்டியுடன் அபிராமி காத்திருக்கும் பொழுது பட்டர் தொடர்ந்து பாடியதேன்? அபிராமியைக் கண்ட ஆனந்தத்தில் இன்னும் ஒன்றிரண்டு பாட்டு பாடியிருந்தாலும் பரவாயில்லை, 'கொஞ்சம் இரம்மா, இன்னும் இருபது பாட்டு பாக்கியிருக்கிறது' என்று பாடியிருக்கிறாரே? கடவுளைக் கண்டவுடன் 'சட்டி சுட்டதடா' என்று உயிர் துறந்த முனிவர்களின் கதையை முன்பு பார்த்தோம். பட்டர் தொடர்ந்து பாடியது தமிழுக்கும் நமக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. குறை சொல்வானேன்?

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/28

செப்பும் கனகக்கலசமும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 78 ராகம்: பைரவி


செப்பும் கனகக் கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணி தரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.

தங்கமும் செம்பும் சேர்த்தக் கலசம் போன்ற நறுமணச்சாந்து பூசிய முலைகள், முத்தும் வைரமும் கலந்து செய்த காதணிகள், குளிர்ச்சியான அருள் விழிகள், பவள இதழ்கள், நிலவு முகம், (இவையனைத்தும்) உடைய கொடி போன்ற அபிராமியின் அழகை என் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் துணையாகக் கொண்டேன்.

'அருள் விழியே அபிராமி, உன் அழகை இரு கண்களில் எழுதி வந்தேன்' என்று பாடியிருக்கிறார் பட்டர்.

'அணி தரளக் கொப்பும் வயிரக் குழையும்' என்பதை 'வைரத்தரளக் குழை கொப்பு அணியும்' என்று பிரிக்க வேண்டும். தரளம் என்றால் முத்து. குழை என்றால் காது. கொப்பு என்றால் காதணி, தோடு, தாடங்கம். முத்து வெண்மையான நிறமுடையது; வைரம் கண்ணைக் கூசவைக்கும் ஒளியுடையது. இரண்டும் கலந்த காதணி இங்கே முழு நிலவுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சூரிய சந்திரனை காதணியாகக் கொண்டவள் என்று முன்பே பாடியிருக்கிறார். நிலவு குளிர்ச்சியைத் தரக்கூடியது. அருள் பொங்கும் கண்களைக் கொண்ட நிலவு முகம் என்று பாடுகிறார். இந்தப் பாடல் முழுக்க நிலவை நினைவுபடுத்திப் பாடுவது போலிருக்கிறது. 'அபிராமியே நிலவு; அபிராமி எனும் இந்த நிலவை நான் பார்த்தால், அது எனக்கென வந்தது போலிருக்கும்' என்று பாடியிருக்கிறார். கொழுமை என்றால் குளுமை. இங்கே அருளைக் குறிக்கிறது. கொழுங்கடை என்பது இங்கே கடைவிழியின் குளுமையான அருள் வீச்சைக் குறிக்கிறது. துப்பு என்றால் பவளம். இங்கே உதடுகளைக் குறிக்கிறது. (துப்பு என்ற சொல்லுக்கு பல அரும் பொருளுண்டு. சொற்சிலம்பாட்டம் ஆடியிருக்கும் வள்ளுவரின் குறள் நினைவுக்கு வருகிறது)

'பாட்டுக்கு பாட்டு நிலவை நினைவுபடுத்தி வருகிறேன், இனிமேல் தாளாது' என்று பாடுகிறாரா? காரணம் இருக்கிறது. நிலவை நினைவுபடுத்தியது இது தான் கடைசி முறை. அடுத்த பாடலில் நிலவு வந்து விடுகிறது.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/27

பயிரவி பஞ்சமி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 77 ராகம்: பைரவி


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.

பைரவன் சிவனின் துணைவியானதால் பைரவி, பிரம்மா விஷ்ணு சிவன் முருகன் இந்திரன் எனும் ஐந்து கடவுளர்களின் சக்தி வடிவான அழகியென்பதால் பஞ்சமி, கைகளில் பாசக்கயிறும் அங்குசமும் தாங்குவதால் பாசாங்குசை, ஐவகை மலரம்புகளை ஏந்தியதால் பஞ்சபாணி, தீயோரின் உயிரைக்குடிப்பதால் சண்டி, காலன் (காலபைரவன்) எனப்படும் சிவனின் சக்தியானதால் காளி, ஒளிமிக்க வைர இடையணி அணிவதால் வயிரவி, சூரிய சந்திர மண்டலங்களை ஆபரணங்களாகக் கொண்டதால் மண்டலி, பலவித மாலைகள் அணிவதால் மாலினி, சூலமேந்தி உலகைக் காப்பதால் சூலி, வராக அவதாரத்தின் சக்தியென்பதால் வராகி... என்று குறையில்லாத வகையில் நான்கு வேதங்களிலும் போற்றப்படும் (அபிராமியின்) பெயர்களைச் சொல்லி வழிபடுவோம்.

அபிராமிக்கு ஒரு சிறிய அர்ச்சனை செய்திருக்கிறார் பட்டர் இந்த எளிமையான பாடலின் வழியாக.

தேவி மகாத்மியம் என்று ஒரு சம்ஸ்க்ருத இறையிலக்கியம். சக்தியின் திருவிளையாடல்களைப் பற்றியப் புராணக்கதைகள் தழுவிய வழிபாட்டிலக்கியம். பட்டரின் ஊர்க்காரரான மார்க்கண்டேயரால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. பட்டர் துதித்திருக்கும் பெயர்களுக்கான காரணங்களை தேவி மகாத்மியம் படித்து அறிந்து கொள்ளலாம். ஒன்றிரண்டை எடுத்துக்காட்டாக எழுதுகிறேன். பஞ்சமி என்பதற்கு பஞ்சபூதங்களின் தலைவி என்று பலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும் தேவி மகாத்மிய விளக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது. ரக்தபீஜன் எனும் அசுரனைக் கொல்ல ஐந்து கடவுள்களின் சக்தியையும் ஒருமைப்படுத்த வேண்டியிருந்ததாம். சிவனிடமிருந்து சக்தி, விஷ்ணுவிடமிருந்து வைஷ்ணவி அல்லது வராகி, பிரம்மாவிடமிருந்து பிரம்மி, கார்த்திகேயன் எனும் முருகனிடமிருந்து கார்த்திகேயி அல்லது கௌமாரி, இந்திரனிடமிருந்து இந்திரா எனும் இந்த ஐந்து பெண் சக்திகளும் கூட்டாகச் சேர்ந்து ரக்தபீஜ அசுரனை அழித்ததாகப் புராணக் கதை. இந்த ஐந்து சக்திகளும் சேர்ந்ததால் பஞ்சமி. (பஞ்சமம் என்ற சொல்லுக்கு அழகு என்றும் பொருளுண்டு. எளிமையாக அழகி என்று பொருள் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்). ஆண் கடவுளர் எவராலும் வெல்லமுடியாத சண்ட அசுரனை வென்றதால் சண்டி என்று பெயர் வந்ததாக இன்னொரு தேவி மகாத்மியக் கதை. தேவி மகாத்மியத்தில் மற்ற பெயர்களுக்கானக் கதைகளைப் படித்து விட்டு மறுகாரியம் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

பயிரவி என்பது பைரவி எனும் சொல்லை எதுகை தொட்டுப் பிரித்த விளைவு. கலா என்பது கலை என்ற சொல்லின் திரிபு. கலை என்றால் பிறை என்று பொருளுண்டு. வயிர் என்றால் சினம் என்று பொருளுண்டு. ஒளிரும் கலா+வயிர்+அவி என்பது இங்கே 'ஒளி மிகுந்த பிறை நிலாவைச் சூடிய அருள் வடிவானவளே (சினமற்றவளே)' என்ற பொருளில் வருவதாகவும் கொள்ளலாம். இடையில் வைர மேகலை அணிந்தவள் தேவி என்று சௌந்தர்யலஹரியிலும் லலிதா சஹஸ்ரநாமத்திலும் வருகிறது. சூரியனையும் சந்திரனையும் தன் மார்பகங்களாகக் கொண்ட மண்டலி என்று சௌந்தர்யலஹரியில் சொல்லப்பட்டிருக்கிறது. பலவித மாலைகள் அணிவதால் மாலினி என்று பொருள் சொன்னேன். பாக மாலினி ஜ்வால மாலினி அந்த மாலினி இந்த மாலினி என்று போட்டா போட்டியாக சௌந்தர்யலஹரியிலும் லலிதா சஹஸ்ரநாமத்திலும் நிறைய சொல்லியிருக்கிறார்கள். எண்ணங்களை மாலையாக அணிந்தவள் என்ற அற்புதமான கற்பனையை சௌந்தர்யலஹரியில் படிக்கலாம். தலையோட்டை மாலையாக அணிந்த மாலினி என்று சற்றே அச்சம் காட்டுகிறது தேவி மகாத்மியம்.

செயிர் என்றால் குறை, குற்றம், ஊனம் என்று பொருள். செயிர்+அவி+நான்மறை என்பது இங்கே குறைவில்லாத (நிறைவான) வேதங்கள் என்ற பொருளில் வருகிறது. அபிராமியின் இத்தனை பெயர்களும் வேதங்களில் சொல்லப்படுகின்றன என்கிறார் பட்டர். எனக்குக் கொஞ்சம் கூட வேத அறிவு கிடையாது. தவறாக எண்ண வேண்டாம், சண்டி மற்றும் சூலி எனும் பெயர்கள் வேதங்களில் வரவில்லை என்று படித்திருக்கிறேன். ஒரு சுவையான பின்னணி இருக்கிறது. வேதங்களை ஓதியதும் பரப்பியதும் ஆரிய, அந்தணர்கள். சண்டி, சூலி எனும் பெயர்கள் அந்தணரல்லாதவரின் கடவுள்களென்று கருதப்பட்டதால் வேதங்களில் இந்தப் பெயர்கள் இடம் பெறவில்லையாம். பொதுவாக நகர நாட்டு எல்லைகளில் காவல் தேவதைகளாக அந்தணரல்லாத, ஆரியரல்லாதவர்களால் வழிபட்டு வந்த உபசக்தி வடிவங்கள் என்று கருதப்பட்டனவாம். வேதங்களில் வருகின்றனவோ அல்லவோ, அது அந்தணர்கள் ஆரியர்கள் கதையென்று விடுவோம். சக்தியே சொல்லி, விஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படும் ஹயக்ரீவர் வழி மொழிந்ததாகச் சொல்லப்படும் லலிதா சஹஸ்ரநாமத்தில் சண்டி உண்டு. சக்தியின் இன்னொரு பாதியான, அந்தணர்களின் முதன்மைக் கடவுளாகக் கருதப்படும் சிவனே ஆதிசங்கரருக்கு மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சௌந்தர்யலஹரியில் சண்டி இல்லை. ம்ம்.. சுவையான பின்னணி என்றேனே? நதி எங்கே போகிறது?

இந்தப் பாடலுக்கேற்ற அழகான சித்திரத்துடன் விளக்கம் சேர்த்திருக்கும் வித்தகர் குமரனின் இடுகை இங்கே.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/26

குறித்தேன் மனத்தில்....

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 76 ராகம்: பைரவி


குறித்தேன் மனத்தில் நின்கோல மெல்லாம் நின்குறிப் பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டி
வெறித்தே னவிழ் கொன்றைவேணிப் பிரானொரு கூற்றை மெய்யில்
பறித்தே குடி புகுதும் பஞ்சபாண பைரவியே.

ஐவகை மலரம்புகளை ஏந்திய சக்தியே, வண்டுகள் துளைக்கும் அளவுக்கு மயக்கும் தேனைக் கொண்ட கொன்றை மலர் மாலையை முடியில் அணிந்த சிவனுடைய உடலின் ஒரு பகுதியை உன்னுடன் சேர்த்துக் கொண்ட உனது அழகிய வடிவங்களை எண்ணிக் கொண்டிருந்தேன்; உன் திருவுளப்படியே எமன் என்னைத் தேடி வரும் வழியைத் தடை செய்து விட்டேன்.

'பஞ்ச பாண பைரவியே, வண்டு கிண்டி வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப்பிரான் மெய்யில் ஒரு கூற்றை பறித்தே குடி புகுதும் நின் கோலமெல்லாம் மனத்தில் குறித்தேன்; நின் குறிப்பறிந்து மறலி வருகின்ற நேர்வழி மறித்தேன்' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

குறிப்பு என்றால் விருப்பம் என்று பொருளுண்டு. 'குறிப்பறிந்து' என்பது இங்கே அபிராமியின் விருப்பப்படி, 'பட்டருக்கு உதவும் திருவுளப்படி' என்ற பொருளில் வருகிறது. மறலி என்றால் எமன். மறல் என்றால் மரணம். மரணத்தைக் கொண்டு வருபவன் மறலி. கிண்டி என்பதற்கு துளைத்த என்று பொருள். வெறி என்றால் மயக்கம் என்று பொருளுண்டு. வேணி என்றால் சடை என்று பொருளுண்டு. கூறு என்றால் பிரிவு, பகுதி. இங்கே 'சிவனுடைய உடலில் ஒரு பாதியை' என்ற பொருளில் வருகிறது. பைரவி என்றால் வலிமையுடையவள், சக்தியுடையவள் என்று பொருள். அபிராமி தனக்கு உதவி செய்ய முன்வந்து விட்டாள் என்று பட்டர் உணர்ந்தது போல் பாடியிருக்கிறார்.

பயிரவி என்று நேர்சொல் இருப்பதாக என் சிற்றறிவுக்கு தெரியவில்லை. பயிரவி என்பது இங்கே பைரவியைக் குறிக்கிறது. அந்தாதித் தொடை காரணமாகவும் அடுத்த பாடலின் எதுகை காரணமாகவும் பைரவி, பட்டர் பாட்டில் பயிரவி ஆனாளென்று நினைக்கிறேன். பைரவி என்பது பைரவனின் பெண்பால் - வலிமையுடையவள் என்று பொருள். வயிரவி என்பதன் மருவாகக் கொள்ளலாம். வயிரவி என்பது வயிரவனின் பெண்பால். வயிரவன் என்றால் தலைவன், சிவன் என்று பொருள். வயிரவி என்பதற்கு ஒளிவீசுகிறவள் (வயிரம்:வைரம்) என்றும் பொருள்.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் பைரவி ராகத்தில் அமைந்துள்ளன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/25

தங்குவர் கற்பகத்தாருவின்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 75 ராகம்: சுத்த தன்யாசி


தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயரின்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தவுந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

உயர்ந்த மலைகளையும் பொங்கியெழும் பெருங்கடல்களையும் பதினான்கு உலகங்களையும் தன் வயிற்றில் பெற்றெடுத்த நறுமணம் செறிந்த பூக்களை அணிந்த கூந்தலையுடையவளின் மேனியழகை மனதில் நிறுத்தியவர்கள் மட்டுமே, இவ்வுலகில் பிறவி எனும் தீமையை ஒழித்து, பெற்றெடுக்கும் தாயில்லாத நிலையில் கற்பகமர நிழலில் தங்குவார்கள்.

'மால் வரையும் பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் உந்தி பூத்த கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே, வழுவாம் மண்ணில் பிறவியை மங்குவர்; தாயரின்றி கற்பகத் தாருவின் நீழலில் தங்குவர்' எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.

மால் என்றால் நெடிய, உயர்ந்த என்று பொருள் (விஷ்ணுவைத் தமிழில் திருமாலென அழைப்பதேன் தெரியுமா?). வரை என்றால் மலை. உவர், ஆழி இரண்டுமே கடலைக் குறிக்கும் (ஒரு பொருட்பன்மொழி). உந்தி என்றால் வயிறு. 'உந்தி பூத்த' என்பது பெற்றெடுத்த என்ற பொருளில் வருகிறது. கொங்கு என்றால் நறுமணம். இவர் என்றால் செறிந்த, மிகுந்த என்று பொருள். 'குறித்த' என்றால் எண்ணிய என்று பொருள். வழு என்றால் குற்றம், பாவம், தீமை என்று பொருள். மங்குதல் என்றால் தேய்தல், அழிதல் என்று பொருள். 'பிறவி மங்குவர்' என்பது 'பிறவி ஒழிப்பர்' என்ற பொருளில் வருகிறது. தாரு என்றால் மரம். கற்பக மரம் தேவருலகத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். (தென்னை பனை மரங்களுக்கும் கற்பகம் என்று பெயர்; தேவலோகத் தென்னை மரமாக இருக்கலாம்). நீழல் என்றால் நிழல். 'தாயரின்றி' என்பது தாயில்லாத நிலையை, அதாவது, பெற்றெடுக்க வேண்டிய அவசியம் இல்லாத பிறவாமை நிலையைக் குறிக்கிறது. அபிராமியின் அழகை எண்ணியவருக்குப் பிறவியில்லை எனும் கருத்தை, அருமையான தமிழ்ச்சொற்கள் பலவற்றைப் பயன்படுத்திப் பாடியிருக்கிறார் பட்டர். பிறவாமை நிலையை, 'தாயரினிறி' என்று பட்டர் சொல்லியிருப்பது சுவை.

கற்பகத்தாருவின் நிழலில் கட்டில் போட்டமர்ந்து தேவ மகளிர் ஆடிப்பாடுவதைக் கண்டு பிறவிக்களைப்பாறலாம் என்றார் முந்தைய பாடலில்; 'இவ்வளவு தானா? கடைசியில் தேவமகளிர் ஆடும் டப்பாங்குத்தைப் பார்க்கத்தான் அபிராமியைக் கொண்டாடினோமா?' என்று நினைக்கும் பொழுது, இந்தப் பாடலில் தெளிவு படுத்துகிறார். அபிராமியின் திருவடிகளைப் பற்றுவதே பிறவியின் குறிக்கோள் என்று அறிந்தவருக்கு தேவமகளிரின் ஆட்டம் பாட்டம், கற்பக மர நிழல் கிடைக்கும்; அப்படி அறிந்து கொண்டதுடன் நிற்காமல் அனைத்தையும் படைத்தவள் என்ற தகுதியோடு அபிராமியை மனதில் நிறுத்தியவருக்கு மட்டுமே கற்பகமர நிழல், களியாட்டம் இவற்றுடன் பிறவாமையும் கிடைக்கும் என்கிறார் பட்டர் (குறித்தவர் என்பதற்கு இலக்காகக் கொண்டவர் என்றும் பொருள்). அபிராமியை அடைக்கலம் என்று அறிவதுடன் நிற்காமல் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அவளை வணங்கவும் வேண்டும் என்பது பட்டரின் உட்பொருள்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/24

நயனங்கள் மூன்றுடை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 74 ராகம்: சுத்த தன்யாசி


நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயனென்று கொண்டவர் பாவையராடவும் பாடவும் பொற்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

முக்கண்ணனாகிய சிவனும், நாராயணனும், பிரம்மனும், வேதங்களும் புகழ்ந்து வணங்கும் அபிராமியின் திருவடிகளைப் பற்றுவதே பிறவிக் காரணமென்று அறிந்தவர்கள், தேவ மகளிர் ஆடிப்பாடி மகிழ்விக்கும் பொற்சோலையின் பொன் கட்டிலில் அமையப்பெறுவர்.

பரவும் என்றால் வணங்கும், புகழும் என்று பொருள். தமனியம் என்றால் பொன். கா என்றால் தோட்டம், சோலை என்று பொருள். பொற்சோலை, கற்பகச்சோலை என்று பொருள் கொள்ளலாம். அபிராமியின் பாதங்களைப் பற்றி வணங்குவதே பிறவியின் நோக்கம் என்று அறிந்து கொண்டவர்கள், தேவருலகம் அடைவர் என்கிறார் பட்டர். இதற்கு முன்பே, 'வானுலகம் தந்து தான் போயிருக்கும்' என்று பாடியிருக்கிறார்.

நசிகேதன் கதை தெரியுமா? தந்தையின் முட்டாள்தனத்தினால் எமனுலகம் சென்ற சிறுவன், எமன் கண்ணில் விரல் விட்டு ஆட்டி உபதேசம் பெற்ற கதை. நசிகேதனை அமைதிப்படுத்த எமன் வழங்கும் சலுகைகளில் ஒன்று, தேவர் குலப்பெண்கள் ஆடிப் பாடி மகிழ்விக்கும் பொற்சோலை வாசம். நசிகேதன் தேவையில்லையென்கிறான். பிறவாமை ரகசியத்தை அறிய வேண்டுகிறான். கிடைப்பதனால் எதையும் ஏற்க வேண்டுமென்பதில்லை, உண்மையான அன்பைத் தவிர. பட்டர் கூட முன் பாடலொன்றில் 'பிரம்மலோக' வசதிகள் தேவையில்லை என்று பாடியிருப்பது நினைவிருக்கலாம். தேவருலகம், கற்பகச் சோலை, பொற்சயனம் இவையெல்லாம் பட்டர் பாடல்களில் தொடர்ந்து வருகின்றன. இவற்றையெல்லாம் பெறும் வாய்ப்பு அபிராமி அன்பர்களுக்குக் கிடைக்கும் என்றாலும் அவற்றை ஒதுக்கி, 'பிறவாமை அடையும் வழியை அறிவது மட்டுமே பிறவியின் நோக்கமாகும்' என்ற உட்பொருளிலேயே தொடர்ந்து பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)