2010/08/16

வல்லபம் ஒன்றறியேன்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 66 ராகம்: சஹானா


வல்லப மொன்றறியேன் சிறியேன் நின்மலரடிச் செம்
பல்லவ மல்லது பற்றொன்றிலேன் பசும்பொற் பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல்லவ மாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே.

பொன்மலையை வில்லாக வளைத்த சிவனுடன் இணைந்து அமர்ந்திருப்பவளே! (அது போல்) அரிய செயல் எதுவும் புரியும் திறமையற்ற எளியவன் நான்; உன் சிவந்த பாதங்களைக் கொடி போல் பற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழி அறியாதவன். குறையிருந்தாலும் என் மொழிகள் உன் பெருமையைப் பாடும் வணக்கங்களாகும்.

முந்தைய பாடலில் 'மற்ற தெய்வங்கள் வாழ்வதற்குத் துணை செய்தாலும் பிறவாமையை வழங்கும் திறனற்ற வீணான தெய்வங்கள்' என்று அதிரடி போட்ட பட்டர், அபிராமியிடம் தன் எளிமையை எடுத்துச் சொல்லி, பிற தெய்வங்களை நம்பாமல் அபிராமியையே எண்ணி வழிபடுவதில் குறையிருந்தாலும் அதைப் பொறுத்தருள வேண்டும் என்கிறார். 'குறையுள்ள மொழியானாலும் அது உன்னை மட்டுமே நம்பிப் பாடும் வணக்கங்களாகும்' என்கிறார் பட்டர். 'நான் பாடுவது தான் தோத்திரம், நீ ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்' என்கிறாரோ? தைரியம் தான்.

வல்லபம் என்றால் வலிமை, திறமை. பல்லவம் என்பதற்கு இளந்தளிர், கொடி, தாழ்ந்த என்று பல பொருளுண்டு. 'செம் பல்லவம்' என்பது சிவந்த பாதங்கள் என்ற பொருளில் வருகிறது; சிவனுடன் வீற்றிருக்கும் பொழுது தாழ்ந்திருக்கும் அபிராமியின் பாதங்கள் என்று பொருள் கொண்டிருக்கிறேன்.

பாதங்களைக் கொடி போல் பற்றிக் கொள்வதாக பட்டர் பாடுவது சுவை. முன்பு அடியார்களைக் கொடி போல் அபிராமி பற்றிக் கொள்வதாகப் பாடியது நினைவிருக்கலாம். வினையேன் என்ற சொல் தன்னிச்சையாக எதுவும் செய்யாமல் வினைப் பலனாற் செயற்படும் நிலையைக் குறிக்கிறது. அபிராமியைப் பாடுவதும் வினைப்பயன்; அரசனிடம் அகப்பட்டுக் கொண்டதும் வினைப்பயன். திறமையில்லாத எளியவன், ஆட்டுவித்தால் ஆடுபவன், என்று தன் திக்கற்ற சாமானிய நிலையை அபிராமியிடம் எடுத்துச் சொல்கிறார்.

'எந்த வகையான சிறப்பும் திறமையும் அற்ற சாதாரணன், அபிராமியைத் தவிர வேறு எந்தவித பற்றுமில்லாதவன்' என்று, ஆதரவற்ற தன் நிலையைச் சொல்லி அழுகிறார் பட்டர். 'வல்லபம் ஒன்றறியேன், சிறியேன்' என்று என் அம்மா பாடும்பொழுதெல்லாம் நெஞ்சம் கலங்கும். ஊரிலேன் காணியில்லை என்ற பிரபந்தப் பாடலின் 'கதறுகின்றேன், ஆருளர் களைகண்?' வரிகள் நினைவுக்கு வரும். பதின்ம வயதில் நெகிழச் செய்தது, இன்றைக்கும் கனக்கிறது.

'நாமங்கள் தோத்திரமே' என்பது சுவை. அழகாக அந்தாதி பாடாமல் 'அபிராமி' என்று ஆயிரக்கணக்கில் பட்டர் சொல்லியிருக்கலாம். லலிதா சஹஸ்ரநாமத்தில் பாருங்கள், ஒரே கருத்தைத் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார்கள். தாமரையில் அமர்ந்தவளே என்பதை மட்டும் நூற்றுக்கணக்கில் சொல்லியிருக்கிறார்கள். எல்லாமே தோத்திரம் தான்.

கேவலமான வாழ்க்கை வாழ்ந்த ஒருவன், நாராயணன் என்ற பெயர் கொண்ட தன் மகனை 'அந்த நாராயணா, இந்த நாராயணா' என்று திட்டி, நையப் புடைத்த காரணத்தால் பெரும்பேறடைந்த கதையைப் பாகவதத்தில் படிக்கலாம். இறைவன் பெயரே தோத்திரம் என்ற நம்பிக்கையினால் பிள்ளைகளுக்கு இறைபெயர் சூட்டும் பழக்கம் உண்டானது. (என் அத்தை திருமதி தர்மாவிடம், தன் மகனுக்கு நாராயணன் என்று பெயர் வைத்திருப்பதால் அவருக்கு சொர்க்கம் உத்தரவாதம் என்று அடிக்கடி சொல்வேன். 'இந்த நாராயணனை உதைக்கணும்' என்று அவர் திட்டினாலும் அது தோத்திரமாகும் என்றும், 'ஏதுடா நாராயணா, உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா?' என்று அவர் கேட்கும் பொழுதெல்லாம் சொர்க்கத்தில் இடம் பிடிக்கிறார் என்றும், கிண்டலாகச் சொல்வேன். கண்டபடி திட்டக்கூடாது என்பதற்காகவும் கடவுள் பெயரை வைப்பதாகச் சொல்வதுண்டு. நண்பர் ராகவனைத் திட்டும் பொழுது மட்டும் வேறு பெயரை உபயோகித்துத் திட்டுவார் அவருடைய அப்பா.) கடவுள் பெயரைச் சொல்லிப் புண்ணியம் சேர்க்க இத்தகைய எளிய வழிகளும் பயன்படுகின்றன என்பதைப் புராணக்கதைகள் சொல்கின்றன. இந்தக் கதைகளை உதாரணமாக எடுத்துக் காட்டி, புதுப்பெயர் வைக்கிறேன் பேர்வழி என்று ஏடாகூடமாகச் செய்து அந்த இலவசப் புண்ணியச் சேர்க்கையையும் இழக்கிறார்கள் என்று பிரபல ஐந்தெழுத்து இறையிலக்கியவாதி பிரபல மூன்றெழுத்துப் பத்திரிகையில் புலம்பியிருப்பதை, க்கும்.. எழுதியிருப்பதை, படித்திருக்கலாம்.

இங்கே தன் அந்தாதியில் குறையிருந்தாலும் (சொல்+அவம்) அது அபிராமி தோத்திரம் என்று பட்டர் பாடுவது, அவரது அசைக்க முடியாத நம்பிக்கையை மட்டுமல்ல, தன்னடக்கத்தையும் காட்டுகிறது என்று எண்ணுகிறேன்.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள், சஹானா ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)