2010/08/19

தனம் தரும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 69 ராகம்: சஹானா


தனந்தரும் கல்வி தருமொரு நாளுந் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன வெல்லாந் தருமன்ப ரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமிக் கடைக்கண்களே.

செல்வம், கல்வி, சோர்வடையாத மனம், அழகான வடிவம், தீமை எண்ணாத உறவு நட்பு, இன்னும் பல நன்மைகளைத் தரும் பூங்குழலி அபிராமியின் கடைக்கண் பார்வை, அவள் அன்பர்களுக்கோ நிலையான பெருமையையும் தரும்.

அபிராமியை மாத்திரை போதும் மனதில் வையாதவர் பாத்திரமேந்தி பிச்சையெடுப்பர் என்று முதல் பாடலிலும், அபிராமியின் பாதங்களைச் சேர்ந்தவர்கள் அடையாத செல்வமே இல்லை என்று அடுத்த பாடலிலும் சொன்னவர், அபிராமியை வணங்கினால் பல வகை செல்வங்கள் கிடைக்கும் என்று இந்தப் பாடலில் விவரமாகச் சொல்கிறார்.

தனம், கல்வி, தளர்வறியா மனம், அழகு, நேர்மையான உறவினர், நண்பர் எல்லாம் சரி, 'சோறு எங்கே?' என்று கேட்பவருக்கு என்ன சொல்கிறார்? 'நல்லன எல்லாம் தரும்' என்பதில் அடங்கியிருப்பதாகச் சொல்கிறார்.

"என்னய்யா இது? அபிராமியை வழிபட்டால் இத்தனை நேரமும் பிறவாமை கிடைக்கும் என்று சொல்லிவிட்டு, இப்போது சாதாரண பணங்காசு, கல்வி, பிள்ளைகள் என்று இந்த உலகத்து நன்மைகள் கிடைப்பதாகச் சொல்கிறீர்களே? மீண்டும் இவற்றிலே சுழலுவோமே? பிறகு பிறவாமைக்கு என்ன வழி? அவ்வளவு தானா? பிறவாமை கிடையாதா?" என்று பட்டரைக் கேட்க தோன்றுகிறது.

பட்டர் பாடலைக் காவனிப்போம். என்ன சொல்கிறார்? அபிராமியை மட்டுமே எண்ணி வழிபடும் அன்பர்களுக்கோ இன்னும் கிடைக்கும் என்கிறார். கனம் தரும் என்கிறார் கடைசி வரியில். அது என்ன? கனம் தருவாளா? பருமனாக்குவாள் அபிராமி என்கிறாரா? கனம் என்ற சொல்லுக்கு நிறைவு, பெருமை, நிலை என்று பொருளுண்டு. அபிராமி அடியாருக்கு மட்டும் கனம் தருவாள், அதாவது நிலையான பெருமையை, பெரும்பேற்றைத் தருவாள் என்கிறார். இந்தச் செல்வங்களை அனுபவிப்பதால் மனம் பேதலிக்காமல் நிலையடையச் செய்வாள் அபிராமி என்றும் பொருள் கொள்ளலாம். 'கடைக்கண் பார்வைக்கே இத்தகைய செல்வங்கள் கிடைத்தால், பாதங்களைத் தழுவும் அண்மைக்கு இன்னும் எத்தகைய செல்வங்களை வழங்குவாள் அபிராமி என்று நினைத்துப் பாருங்கள்' என்று பட்டர், பக்தர்களுக்குச் சவால் விடுவதாகவும் பொருள் கொள்ளலாம்.

சுவையான பாடல்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)