2010/08/13

தேறும்படி சில...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 63 ராகம்: ஆபேரி


தேறும் படிசில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறிகுறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளா யிருப்ப தறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.

நற்கதி அடையக் கடைபிடிக்க வேண்டிய வழிகளைச் சொல்லும் ஆறு மதங்களும் தலைவியெனப் போற்றும் இவளை (அபிராமியை) வழிபடாமல் வேறு மதங்களைத் தழுவி நற்கதி அடைய எண்ணுவது, மலையை கோடரியால் வெட்டி நகர்த்த முயற்சிப்பது போன்றதாகும்.

'குன்றில் தறி கொட்டும் வீணர்' என்பது சுவையான உவமை. தறி என்பதற்கு கோடரி என்று பொருளுண்டு. அபிராமியை வழிபடாமல் மற்ற மதங்களைப் பின்பற்றி நற்கதியடைவது மலையை நகர்த்துவதற்கு ஒப்பாகும் என்கிற பட்டர், இங்கே மன்னரைச் சாடுகிறார் என்று நினைக்கிறேன். சரபோஜி அரசனும், பட்டரைக் கோள் சொல்லி சிக்க வைத்த மற்றவரும் என்ன மதத்தைச் சார்ந்தவர்கள் என்று விவரங்கள் ஏதும் தெரியவில்லை.

ஆறு மதங்கள் யாவையென்பதில் வட மற்றும் தென்னாட்டு இறையிலக்கியங்களிடையே வேறுபாடு காணப்படுகிறது. சூரியன், சிவன், விஷ்ணு, முருகன், கணபதி, சக்தி எனும் கடவுள்களை மையமாகக் கொண்ட மதங்கள் ஆறு எனத் தென்னாட்டு இறையிலக்கியங்களில் வருகின்றன. புத்தனை மையமாகக் கொண்ட மதம் வைணவத்தின் ஒரு பகுதி என்று சில தென்னாட்டு நூல்கள் சொல்கின்றன. வடநாட்டு இறையிலக்கியங்களும், தென்னாட்டு சைவ இறையிலக்கியங்களும் சமண மதத்தைத் தனி மதமாக அங்கீகரிக்கின்றன. முருகனை மையமாக வைத்த மதத்தை அதிகம் காணோம். எப்படி இருந்தாலும், இந்த மதங்கள் தத்தம் கடவுளர் தான் மேன்மையானவர்கள் என்றே சொல்கின்றன. சூரியனே முதலும் முடிவும்; எல்லாக் கடவுளரையும் சூரியன் தான் படைத்தான் என்பது சௌர மதச்சாரம் (வடமொழி வழிபாடான ஆதித்ய ஹ்ருதயம் இதைத்தான் சொல்கிறது). அதே போல் சிவனை விட்டால் வேறு கதியே இல்லை என்கிறது சைவம். சக்தி கூட சும்மா கௌரவக் கடவுள் என்பது போல் சிவனடியார்கள் பாடியிருக்கிறார்கள். வைணவ இலக்கியங்களும் திருமாலைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் நினைத்தால் கூட பாவம் என்பது போல் எழுதப்பட்டிருக்கின்றன. கணபதியை மையமாக வைத்து எழுதப்பட்ட இலக்கியங்களுள் நான் படித்த ஒரே ஒரு இறையிலக்கியத்தில் (வினாயக புராணம்), வினாயகர் தான் எல்லாக் கடவுளுக்கும் முதல்வன் என்று எழுதியிருக்கிறார்கள். ஆறு சமயங்களும் சக்தியைத் தலைவியாக ஏற்றுக் கொண்ட விவரத்தை என் சிற்றறிவிற்கு எட்டிய வரை எந்தப் புராணத்திலும் காண முடியவில்லை. எனினும், சக்தி உபாசகரெனத் தோன்றும் பட்டர் இங்கே சக்தியை சர்வ மதத் தலைவி என்று அழைப்பது அவரைப் பொருத்தவரை ஏற்புடையதாகத் தோன்றுகிறது.

இன்னொரு கருத்தும் தோன்றுகிறது. இங்கே 'ஆறும்' என்பது எண்ணிக்கையைக் குறிக்காமல் 'ஒழுகும்' என்ற பொருளில் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். 'நற்கதி அடைய வழி சொல்லும் மதத்தினர் ஒழுகும் (வழிபடும்) தலைவியானவளை அறியாமல், பிற மதம் உண்டென்று எண்ணும் வீணர்' என்ற பொருளும் பொருந்துகிறது. சமயம் என்பது இங்கே மதம், நெறி என்ற பொருளில் எடுத்தாள வேண்டும்.

இன்னொரு உட்பொருளும் இருப்பதாக உணர்கிறேன். பட்டருக்கும் பாசாங்குசைக்கும் இடையே நடக்கும் உரையாடலில், பட்டர் சொல்கிறார்: "அம்மா அபிராமி, நான் என்ன வீணரைப் போல் மற்ற மதத்தையா நினைக்கிறேன்? உன்னைத் தானே நினைத்து வழிபடுகிறேன்? அப்படியிருக்கையில் என் பிறவித்துன்பங்களைத் தவிடு பொடியாக்காமல் சின்னக் கோடரியால் மலையை வெட்டுவது போல் சிறிது சிறிதாகத் தணிக்கிறாயே? அது மற்ற மதக்காரர்களுக்குக் கிடைக்கும் கதியல்லவா? எனக்குமா? நீ தான் அன்றைக்கே என்னைத் தடுத்தாண்டு கொண்டு விட்டாயே? உன்னை வழிபடுவதால் பிறவிப் பிணிமலை தவிடுபொடியாக வேண்டாமோ?"

அந்தாதியின் இலக்கணப்படி ஒரு பாடலின் கடைசிச் சீரின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் எடுத்து அடுத்த பாடலின் முதற்சீராய் அமைத்துப் பாடலாம். இது வரை தனிச்சொல்லாக எடுத்துப் பாடிய பட்டர், இந்த ஒரு பாடலில் மட்டும் முந்தைய பாடலின் சொல்லை விட்டு சொல்லின் கடைசி எழுத்தைக் கையாண்டிருக்கிறார்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)