2010/07/31

நாயகி நான்முகி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 50 ராகம்: நாயகி


நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று
ஆயகி ஆதியுடையாள் சரணமரண் நமக்கே.

உலக நாயகி, பிரம்மா-விஷ்ணு-சிவன் எனும் முக்கடவுளரின் சக்தி, கைகளில் ஐந்து வகை மலரம்புகள் கொண்ட தலைவி, கருணையுள்ள சங்கரி, பாதுகாப்பளிக்கும் யாமளை, நாகதேவி, கங்கை, பன்றிமுக விஷ்ணுவின் சக்தி, கைகளில் சூலம் ஏந்திய காளி, இனிய யாழிசைக்கும் மாதங்கி, என்று பல அவதாரங்களாக விளங்கும் எல்லாவற்றுக்கும் முதலும் முடிவுமானவளைப் பணிவதே எமக்கு உகந்த பாதுகாப்பு.

அசல் உலக நாயகி அபிராமி தான் என்கிறார் பட்டர். ஹயக்ரீவர் சொன்ன லலிதா சஹஸ்ரநாமம் போல இது பட்டர் சொன்ன பார்வதி பனிரெண்டு நாமம். ஒரு குட்டி அர்ச்சனை செய்து விட்டார். விவரம் உட்பொருள் என்று அதிகமாக நம்மைச் சீண்டாத எளிய பாடல்.

மாதங்கி என்பவள் மதங்க முனிவரின் பெண்ணாக சக்தி எடுத்த அவதாரம். மதங்க முனிவரின் பின்னே ஒரு மனதைக்கவரும் கதை இருக்கிறது. யாழ்ப்பாணம் எனும் அழகிய தமிழ் நகரத்தின் பின்னணியை மதங்க முனிவரின் கதையில் தெரிந்து கொள்ளலாம். மதுரையைப் போல் யாழ்நகரமும் எத்தனையோ காலமாக தமிழ்ப்பண் பாடியிருக்கிறது. இறையிலக்கியமானாலும் வரலாற்றுப் பின்னணி. இன்றைய யாழ்நகரத்துக்கும் மாதங்கியார் துணை. (மாதங்கி, யார் துணை?)

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/30

குரம்பை அடுத்து...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 49 ராகம்: நாயகி


குரம்பை யடுத்துக் குடிபுக்க ஆவிவெங் கூற்றுக்கிட்ட
வரம்பை யடுத்து மறுகுமப்போது வளைக்கை யமைத்து
அரம்பை யடுத்த அரிவையர் சூழவந்தஞ் சலென்பாய்
நரம்பை யடுத்த இசைவடிவாய் நின்றநாயகியே.

இசை வடிவான தலைவியே! இந்த உடலெனும் கூட்டில் தங்கியிருக்க வேண்டி காலனிட்ட காலம் முடிந்ததும், என் உயிரை அடுத்தக் கூட்டிற்கு எடுத்து செல்ல சினங்கொண்ட எமன் வரும்பொழுது கலங்கும் என்னை, உன்னை வணங்கிப் போற்றும் தேவமகளிருடன் வந்து உன் வளைக்கரத்தால் அஞ்சாதே என்று தடுத்துக் காத்தருள வேண்டும்.

பிறவாமை வேண்டும் என்ற பட்டரின் கோரிக்கை தொடர்கிறது. உயிர் என்பது குறிப்பிட்ட கால அளவுக்குப் பின் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்குத் தாவுமென்பது இந்துமத அடிப்படைத் தத்துவங்களில் ஒன்று. எமன் அழைத்துச் செல்ல வந்தால் உடலைப் பிரிந்த உயிர் (ஆன்மா) பாவங்களுக்கான தண்டனையைப் பெறும்; அல்லது, செய்த புண்ணியங்களின் அளவுக்கேற்ப சொர்க்கத்தில் சில நாள் இருந்து விட்டு மீண்டும் உடலுக்கே திரும்புமென்று புராணங்கள் சொல்கின்றன. சொர்க்கமோ நரகமோ, எமன் அழைக்க வந்தால் பிறவி தான். விஷ்ணு, சிவன், சக்தி போன்றோரோ சிவகணங்களோ அழைக்க வந்தால் தான் பிறவாமை. அதனால் பட்டர் பார்வதியை வரச் சொல்கிறார். அதுவும் புடை சூழ வரச் சொல்கிறார். சிவனுடன் சண்டை போட்டபடி வரச்சொன்னால் அருள் கிடைக்குமோ கிடைக்காதோ என்பதால், மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய வகையில் வரச் சொல்கிறார் பட்டர். தன்னை வணங்கும் தேவ மகளிருடன் வரும் தலைவி மகிழ்ச்சியான மனநிலையுடன் இருப்பாள் என்பது பட்டரின் தந்திரத் தொலைநோக்கு. சும்மா பாடுவாரா சுப்பிரமணியர்?

வரம்பு என்றால் அளவு. மறுகும் என்றால் கலங்கும். அரம்பை என்றால் தேவ மகளிர், ரம்பை என்று பொருள். அரிவை என்றால் அழகிய பெண். நரம்பு என்றால் யாழ், வீணை என்று பொருளுண்டு.

அபிராமியே இசை வடிவானவள் என்கிறார். கூடு விட்டு ஆவி போனால் கூடவே வரவேண்டும் என்ற பட்டரின் விண்ணப்பத்துக்கும் இசை வடிவான நாயகிக்கும் ஏதாவது உட்பொருள் இணைப்பு உண்டா? குரல் இருக்கிறது. குழல் இருக்கிறது. வீணை இருக்கிறது. மேளம் இருக்கிறது. ஆனால் அவற்றுக்குள் ஒளிந்திருக்கும் விதவிதமான இசையைக் காண முடிவதில்லை. நரம்புகளைத் தட்டினால் எங்கிருந்தோ ஒலிக்கிறது இசை. மேளத்தைத் தட்டினால் எங்கிருந்தோ வருகிறது நாதம். குரலைக் கூட்டினால் எங்கிருந்தோ ஒலிக்கிறது பாடல். இசை என்பது புலனுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது (அலை?). அதை ஒரு கருவியெனும் கூட்டுக்குள்ளே அடைத்ததும் ஒலிக்கிறது. உயிரும் அப்படித்தான். உடலென்னும் கூட்டுக்குள் வந்ததும் வினையெனும் இசையைத் தொடங்குகிறது. ரசிக்க முடிந்த இசை, சகிக்க முடியாத இசை எனும் இசை வகை போலவே வினை வகையும் அமைகின்றன. இசையை ரசிப்போம், வினையைத் தவிர்ப்போம் என்று பட்டர் விரும்பியதால் ஆவி பிரியும் பொழுது அபிராமியை வரச் சொல்கிறார். புலனுக்கப்பாற்பட்ட இசையைப் போல் அபிராமியுடன் கலந்து இனிப் பிறவாதிருக்க விழைகிறார். வினையையும் இசையையும், (வீணை) நரம்பையடுத்த இசை வடிவானவளையும், இந்தப் பாடலில் இணைத்திருப்பது கருத்துக்குப் பொருத்தம் என்று நினைக்கிறேன். ராகம் தன்னை மூடி வைத்த வீணை அபிராமியின் சின்னம் என்று பாடியிருக்கும் பட்டரின் உட்பொருள் ரசிக்கக்கூடிய கற்பனை.

'ரம்பை போன்ற தேவமகளிர் வழிபடும்', 'இசை வடிவானவள் (நாத ரூபிணி)', 'இசைக்கும் நடனத்துக்கும் தலைவி' என்றெல்லாம் லலிதா சஹஸ்ரநாமத்தில் அபிராமி வர்ணிக்கப்படுகிறாள்.

சக்தி இசைவடிவானவள் என்பதை விளக்கும் ஒரு நயமான சுவையான கற்பனை சௌந்தர்யலஹரியில் வருகிறது. சிவனும் சக்தியும் இளைப்பாற சரசுவதி வீணை வாசிக்கிறாளாம். இடையில் சக்தி ஏதோ சொல்ல வர, சரசுவதி அவசரமாக வீணையைத் துணிவீசி மூடிவிடுகிறாளாம். ஏன்? சக்தியின் மொழியைக் கேட்டு வீணையின் நரம்புகள் வெட்கப்பட்டு ஒடிந்துவிடுமே என்று அவள் அஞ்சினாளாம். ஆகா! தமிழாக்கத்தில் சங்கரருக்கு ஒரு படி மேலே போன வீரைக்கவிராயர், '... நாணி இசைத் தொழிலைக் கைவிட்டாள் எழில் வீணை உறையிலிட்டாள் ஏது செய்வாள்' என்று கலைவாணியே அடங்கிப் போனதாக அருந்தமிழில் பாடுகிறார். ஆகா! ஆகா!

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/29

சுடருங் கலைமதி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 48 ராகம்: நாயகி


சுடருங் கலைமதித் துன்றுஞ் சடைமுடிக் குன்றிலொன்றிப்
படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்
இடருந் தவிர்த்திமைப் போதிருப்பார் பின்னும் எய்துவரோ
குடருங் கொழுவுங் குருதியுந் தோயுங் குரம்பையிலே.

குன்றெனக் கட்டிய சடைமுடியில் ஒளி வீசும் பிறை நிலவைப் பொருத்திக் கொண்டிருக்கும் சிவன் மேல் நறுமணம் மிகுந்த பச்சைப் பூங்கொடி போல் படர்ந்திருப்பவளை, எந்தத் தடை வந்தாலும் கலங்காது ஒரு கணம் கூடத் தவறாமல் மனதில் நிறுத்தி எண்ணியிருப்பவர்கள், இனி இரத்தமும், சதையும், குடலும் கொண்ட கூடான இந்த உடலுக்குத் திரும்ப மாட்டார்கள்.

எளிமையான பாடல். துன்பமோ தடையோ எது வந்தாலும் கலங்காமல், நம்பிக்கையுடன் அபிராமியை மனதில் எண்ணி வழிபடும் அடியாருக்கு பிறவாமை கிடைக்கும் என்பதே பாடலின் சாரம். கொடிக்கம்பைச் சுற்றிப் படரும் கொடியைப் போல் அடியாரைச் சுற்றி வருபவள் அபிராமி என்பது உட்பொருள்.

கொழு இங்கே சதையைக் குறிக்கிறது. குரம்பை என்றால் கூடு, வீடு, இருப்பிடம். இங்கே உடலைக் குறிக்கிறது. குடர் = குடல். கலை என்றால் சிறுபகுதி என்று பொருளுண்டு. கலைமதி = பிறைநிலா.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/28

வாழும் படியொன்று...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 47 ராகம்: நாயகி


வாழும் படியொன்று கண்டுகொண்டேன் மனத்தே யொருவர்
வீழும் படியன்று விள்ளும்படியன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டுமெட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

கடலினும் விரிவான, ஏழுலகங்களைக்காட்டிலும் பரந்த, பருத்து உயர்ந்த மலைகளைக் காட்டிலும் எட்ட முடியாத, இவையெல்லாவற்றுக்கும் அப்பால் இரவு பகல் எனாது அண்டமெங்கும் நிறைந்திருக்கும், விரும்பினாலும் விளக்க முடியாத, ஒளியின் ஒளியை (அபிராமியை) மனதில் நிறுத்தியிருப்பதே சிறந்த ஒழுக்கம் என்பதை அறிந்து கொண்டேன்.

'இன்னதென்று விவரிக்க முடியாதபடி அளவில்லாத கடல், உலகம், மலை என்று அண்டங்களைத் தாண்டி இரவுபகலாய் ஒளி வீசும் சூரிய சந்திரர்களின் ஒளிப்பிழம்பாக இருக்கும் அபிராமியை வணங்குவதே வாழ்வதற்கான வழி; அந்த வழி அழிவற்றது என்றறிந்து கொண்டேன்' என்றும் பொருள் கொள்ளலாம். 'கடல்கள், ஏழுலகங்கள், எட்டு மலைகள் எல்லாவற்றையும் கடந்திருப்பவள்' என்றும் பொருள் கொள்ளலாம். (மாயாஜாலத் திரைப்படங்களில் நாயகன் நாயகியை அடைய வேண்டி இவற்றைக் கடக்க நேரிடல் போல்).

வாழும் என்பதற்கு ஒழுகும் என்று பொருள். வாழ்க்கை=ஒழுக்கம். வீழும் என்பதற்கு விரும்பும் என்று பொருளுண்டு. விள்ளுதல் என்றால் சொல்லுதல், பேசுதல், விவரித்தல் என்று பொருளுண்டு. உடைத்தல், பிரித்தல் என்றும் பொருளுண்டு. படி என்றால் விதம், வகை, முறை என்று பொருள். வேலை என்றால் கடல், கரை என்று பொருள். நிலம் என்றால் பூமி, பரந்த என்று பொருள். பரு என்றால் பெருத்த, உயர்ந்த என்று பொருள். வரை என்றால் மலை. எட்டு என்பது இங்கே எண்ணாகவும், 'அடைய முடிகின்ற' என்ற பொருளிலும் வருகிறது.

எண்ணத்தாலும் செயலாலும் அடைய மற்றும் அடக்க முடிகின்ற அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒளியானவள் அபிராமி என்பதே பாடலின் சாரம். 'அத்தகை அழியாச் சுடரான அபிராமி அகத்துள் இருக்கும் பொழுது, அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் விவரம் சொல்லி விழலுக்கிரைத்த நீரானதே வாழ்க்கை' என்று பட்டர் வருந்துவது உட்பொருள்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/27

வெறுக்கும் தகைமைகள்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 46 ராகம்: நாயகி


வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே.

நஞ்சை நெஞ்சில் நிறுத்தியதாலுண்டான கருநிற கழுத்தையுடைய சிவன் உடலின் இடது பாகத்தை ஏற்ற அழகிய பொன்னே அபிராமி! என்னுடைய எண்ணங்களும் செயல்களும் நீ விரும்பாதவையாக, நீ வெறுக்கக் கூடியவயாக, இருந்தாலும், உன் அடியார்களைப் பொறுத்து அருள்செய்யும் உன் குணம் எல்லோரும் அறிந்ததே; (என்னையும் மன்னித்தருள்வாய் என்பதை அறிந்ததால்) உன்னையே போற்றி வணங்கி வருவேன்.

அடியார்களை 'அஞ்சேல்' என்று அருளுவதாகவும், தவறு செய்யாமல் அன்றே தடுத்து ஆட்கொண்டதாகவும், 'என் குறையெல்லாம் நின் குறையே' என்று அபிராமியின் மேல் விளையாட்டுப் பழி போடுவதாகவும் பாடிய பட்டர், தவறு செய்தவனைப் பொறுத்தருளும் அபிராமியின் குணத்தைத் தொடர்ந்து பாடுகிறார்.

தவறு செய்தவர்களை வெறுத்து ஒதுக்குவதும் தண்டிப்பதும் சுலபம். என் போன்ற சாமானியர்களின் முதல் வேகம். ஐந்து வயது பிள்ளை அறியாமல் செய்தாலும், ஐம்பது வயது நண்பர் அறிந்து செய்தாலும், நானறிந்த ஒரே வழி கோபத்தில் கண் தெரியாமல் அறிவில்லாமல் அவர்களுக்கு இணையாக நடந்து கொள்வது தான். அறிவில் முதிர்ச்சியுடையோர் அப்படி நடந்து கொள்வதில்லை. எல்லோரையும் படைத்து காத்து அழிக்கும் அபிராமிக்கு அத்தகைய முதிர்ச்சி இருப்பதாகப் பட்டர் சொல்வதில் வியப்பேதுமில்லை. புதியதன்று. தான் செய்யும் தவறுகளைப் பொறுத்தருள வேண்டுமென்ற கோரிக்கையை அபிராமியின் அறிவையும் முதிர்ச்சியையும் காரணம் காட்டி முன்வைக்கிறார் பட்டர்.

இன்னொரு கருத்தும் உண்டு. எத்தனை தவறு செய்தாலும் 'தன் பிள்ளை' என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பவள் தாய் மட்டுமே. எந்த மன நிலையிலும் தஞ்சம் பெறக் கூடியது தாயின் மனமும் மடியும் தான். தாயிற் சிறந்த கோவிலில்லை. அபிராமியைத் தாயாக எண்ணிப் பாடும் பட்டர், தன் பிழைகளைப் பொறுத்து அருளும் தன்மையை ஒரு தாயின் இயல்பாகக் கருதிப் பாடியிருக்கிறார். புதியதன்றே எனினும் எளியதன்று என்பதை அறிந்தவர்.

'அறிந்தும் அறியாமலும் பிழை செய்யும் தகைமையுடையவரை மன்னித்து நல்வழியில் சேர்ப்பவள் அபிராமி' எனும் பட்டர், இங்கே நஞ்சையுண்டவனை எடுத்துக்காட்டியதில் உட்பொருள் ஏதாவது இருக்கிறதா? "அம்மா தாயே... முப்பெரும் கடவுளரில் ஒருவராக பொறுப்பான பதவி கொடுத்து வைத்திருக்கும் உன்னுடைய கணவனான சிவன், ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் நாட்டியம் ஆடிக்கொண்டிருப்பது போதாதென்று சிறுபிள்ளைத்தனமாக விஷ்ணுவும் பிரம்மாவும் சொன்னர்கள் என்பதற்காக விஷத்தை லபக்கென்று விழுங்கிய பொறுப்பில்லாத்தனத்தை மன்னித்து, உயிர் பிழைக்கச் செய்து, திருத்தி, இனிமேலும் இளிச்சவாயனாக இருந்துவிடப்போகிறானே என்று உன் அருகில் வலதுபாகத்திலேயே வைத்துக் கொண்டாய். நான் உன் பிள்ளையல்லவா? அறியாமல் (அமாவாசையைப் பௌர்ணமி என்று அவசரத்தில் சொன்னது போல்) ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மட்டும் தவிக்க விடுவாயா என்ன? மாட்டாய். அதனால் உன்னைத் தொடர்ந்து வணங்குகிறேன்" என்று பட்டர் சொல்வது போல் உட்பொருள். "அந்தச் சிவனை நீ காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன? உன் கணவன் என்பதாலா? இல்லை. சிவனும் உன் அடியாருள் ஒருவன் என்பதால் ஓடோடிச் சென்று அவன் செய்த தவறிலிருந்து அவனை மீட்டாய். நானும் உன் அடியாருள் ஒருவன். என்னையும் கொஞ்சம் கவனி" என்று பட்டர் சொல்வதாகவும் உட்பொருள் கொள்ளலாம். அரசனிடம் தவறான திதி சொன்னது அறியாமை; அப்படிச் சொல்ல வைத்தவள் அபிராமி என்று பட்டர் தீர்மானமாக நம்பியது அறிவு. ஆழ்ந்த நம்பிக்கை அறிவின் வெளிப்பாடு எனப்படுகிறது. (ஆழ்ந்த நம்பிக்கையின்மையும் அறிவின் வெளிப்பாடே. அறிவினால் தெளிவு ஏற்படுகிறது. தெளிவின் வடிவம் பல வகைப்படும். அரைகுறைத் தெளிவில் தான் ஆரவாரம். ஆழ்ந்த தெளிவில் என்றைக்கும் அமைதி காணலாம்).

தகைமை என்றால் குணம், செயல், எண்ணம். மிடறு என்றால் கழுத்து, தொண்டை. ஆலகால விஷத்தை அருந்திய சிவனின் அவசரத்தனத்தைப் பொறுத்து, சக்தி அதை சிவனின் கழுத்திலேயே நிறுத்தியக் கதையைப் புராணங்களில் படிக்கலாம். சிந்துரச் சுந்தரியும் சிவனும் இணைந்த அர்த்தநாரியின் கழுத்தில் கருப்பு-சிவப்பைக் கொண்டு வந்திருக்கிறார் பட்டர்.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்களை நாயகி ராகத்தில் பாடியிருக்கிறார், என்னுடைய தவறுகளையெல்லாம் பொறுத்தருளும் அபிராமி. கல்யாணி போல் ஒலிக்கும் இந்த ராகத்தில் நிறைய பாடல்களைக் கேட்டிருந்தாலும், நாயகி என்று தனி ராகம் இருப்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/26

தொண்டு செய்யாது...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 45 ராகம்: தன்யாசி


தொண்டு செய்யாதுநின் பாதம்தொழாது துணிந்திச்சையே
பண்டு செய்தாருளரோ இலரோ அப்பரிசடியேன்
கண்டு செய்தாலது கைத்தவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றேபின் வெறுக்கையன்றே.

உன்னைப் பணிவதையும் உனக்குத் தொண்டு செய்வதையும் விடத் தன் கடமையைப் பெரிதென நினைப்பவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, அந்தச் செய்கை உன் அருளுக்குப் பாத்திரமான சிறப்புடைய செய்கையோ இல்லையோ, (எப்படியிருந்தாலும்) நான் முன்பு செருக்குடன் அவ்வாறு ஏதாவது செய்திருந்தால் என்னை வெறுக்காமல் என் தவறைப் பொறுக்க வேண்டும்.

சொல்லழகும் உட்கருத்தும் நிறைந்தச் சுவையான பாடல்.

முக்தி எனும் பெரும்பேற்றை அடையப் பல வழிகளுண்டு என்கிறது இந்துமதம். முக்தி எனும் பிறவா நிலையடைய பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம், ஞான யோகம் என்று பலவகைப் பாதைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. பக்தி யோகம் இருப்பதிலேயே சுலபமானது. ஒரு வேலையும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது. ராமா, க்ருஷ்ணா, தேவி, பராசக்தி என்று உருகி உருகி பக்தி செலுத்தினால் போதும், முக்தி உத்தரவாதம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. என் போன்றவருக்கு வசதியான பாதை. கர்ம யோகம் என்பது கடமையை வழுவாமல் செய்வதினால் கிடைக்கும் பேரின்ப நிலைக்கான பாதை. கீதையின் சாரம். கடவுளை வணங்காவிட்டாலும் பரவாயில்லை, கடமையிலிருந்து தவறாதிருத்தலே கடவுளையடைய வழியாகும் எனும் தத்துவம். இந்தப் பாதையில் கொஞ்சம் உடல் வணங்கித் தொழில் செய்ய வேண்டும். என் போன்ற சோம்பேறிகளை இரண்டு மூன்று முறை சிந்திக்க வைக்கும் பாதை. நாத்திகனாக இருந்தாலும் கடமையைச் செய்தால் பிறவாமை கிடைக்கும் (அப்படி ஒன்று இருந்தால்) என்ற கருத்தின் முரண்பாட்டை எண்ணி வியந்திருக்கிறேன். அப்படியல்ல, கடவுளை வெறுப்பவர் கூட கடவுளையே எண்ணியிருப்பதால் அந்த எண்ணமே அவர்களுக்கு நற்பலனைக் கொடுத்து விடுகிறது என்கிறது புராணம். கடவுள், தாய், தந்தை, மக்கள், மனைவி என்ற பந்த பாசங்களுக்கு அடிமையாகாமல், பந்த பாசங்களின் வலிய பிடிக்குக் கட்டுப்படாமல், செய்ய வேண்டிய கடமையைச் செய்வதே கர்மயோக இலக்கணம். கர்மயோகிகள் பக்தி வழியில் செல்ல வேண்டிய அவசியமில்லை. பக்தி வழியில் செல்பவர்களுக்கு எப்படிக் கடவுளைத் தவிர மனதில் வேறெந்த நினைவுமில்லையோ, கர்மயோகிகளுக்குத் தங்கள் கடமையைத் தவிர வேறெதற்கும் மனதில் இடமில்லை. இதே வழியில் ராஜயோகம் (சுவாமி விவேகானந்தர்), ஞானயோகம் (ஆதி சங்கரர்) என்று மற்ற யோகங்களுக்கும் விளக்கமும் உதாரணமும் சொல்லலாம். இருப்பினும், கடவுள் நம்பிக்கையோ பக்தியோ இல்லாதவர்களைக் கர்மயோகிகள் எனலாமா? (கர்மயோகி என்றால் நாத்திகன் என்பது குதர்க்கம் என்கிறார் நண்பர் ராகவன் அன்புடன்).

பட்டர் பாட்டுக்கு வருவோம். "தாயே அபிராமி, உன்னுடைய இன்னொரு பிள்ளை இருக்கிறானே.. அதான் க்ருஷ்ணன்... அவன் கீதையில் 'கடமையே தர்மம், தர்மத்தை செய், பிறவாமை தருகிறேன்' என்று பலவாறாக ஆசை காட்டியிருக்கிறான். அதை நம்பிக் கடமையைச் செய்தவர்களுக்கு உன் அருள் கிடைக்குமா என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால், நீ க்ருஷ்ணனுக்கும் மேலான இறைவியாயிற்றே? க்ருஷ்ணன் கொடுத்தது உறுதிமொழி; நீ சொல்வது தானே இறுதிமொழி? க்ருஷ்ணன் போன்றோரை நம்பி நானும் முற்பிறவியில் அப்படி ஏதாவது செய்திருக்கலாம். அதற்காக என்னை வெறுத்து ஒதுக்கி விடாதே. இதோ, இந்தப் பிறவியில், உனக்குத் தொண்டு செய்வதைத் தவிர, உன்னைப் பணிந்து வணங்குவதைத் தவிர, உன் அழகையும் அருளையும் உருகிப் பாடுவதைத் தவிர... நான் வேறு எதுவும் செய்ய்ய்ய்யவில்லை" என்று அபிராமிக்கு அழுத்தமாக நினைவூட்டுவது போல் அமைந்திருக்கிறது பாடல். அபிராமியுடன் பட்டர் நிகழ்த்தும் இவ்வகைத் தர்க்கங்கள் சுவையானவை. "உன் மேல் பக்தி இருப்பதனால் தானே, என் மனமெல்லாம் நீயே நிறைந்திருப்பதனால் தானே, திதி தெரியாமல் உளறினேன்?" என்று பட்டர் மறைமுகமாகப் புலம்புவதையும் எண்ணிப் பார்த்து ரசிக்க முடிகிறது.

பண்டு என்றால் பழைய, முன்பு என்று பொருள். அப்பரிசு என்றால் 'அந்த வகை' என்று பொருள். மிண்டு என்றால் ஆணவம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/25

தவளே இவளெங்கள்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 44 ராகம்: தன்யாசி


தவளே இவளெங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர்தமக்கு அன்னையு மாயின ளாகையினால்
இவளே கடவுளர் யாவருக்கும் மேலை இறைவியுமாம்
துவளே னினியொரு தெய்வமுண்டாக மெய்த்தொண்டு செய்தே.

எமது இறைவனாகிய சங்கரனின் துணைவியாகவும் தாயாகவும் இருக்கும் தூய்மையான இவளே (அபிராமியே) அனைத்துக் கடவுளர்க்கும் மேன்மையான இறைவியாவாள் (என்பதை அறிந்து) அவளுக்கு உண்மையான தொண்டு செய்வதிலிருந்து தளர மாட்டேன்; இன்னொரு தெய்வத்தைப் பணிய மாட்டேன்.

'இடம் கொண்டு விம்மி' என்ற பாடலில் தொடங்கிய கருத்தோட்டத்தை 'பரிபுரச் சீறடி' பாடலில் தொடர்ந்து, இந்தப் பாடலில் முடிக்கிறார். அந்த இரண்டு பாடல்களிலும் அபிராமியை வர்ணித்தக் காரணம் தொக்கி நிற்பதை, இப்போது மீண்டும் படித்தால் புரிந்து கொள்ளலாம். அபிராமியின் உடலழகையும் உள்ளழகையும் முதல் பாடலில் வர்ணித்தார்; அபிராமியின் சக்தியையும் வீரத்தையும் சிவனுக்கு உதவியதையும் 'பரிபுரச் சீறடி' பாடலில் வர்ணித்தார். 'அழகும், வீரமும், விவேகமும் பொருந்திய அபிராமி சிவனுக்கு மட்டும் அன்னையல்ல, எனக்கும் தான்; சிவனுக்கும் மட்டும் கடவுள் அல்ல, எல்லாருக்கும் கடவுள்' என்று சொல்ல வந்த கருத்தை இந்தப் பாடலில் முடிக்கிறார். மூன்று பாடல்களையும் தொடர்ந்து படித்தால் இந்தப் பொருள் விளங்கும்.

தவளே என்பதற்கு தவம் செய்தவளே என்றும், தாயே என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள். தவளே என்று ஒரு நேர்ச்சொல் நானறிந்ததில்லை (தவளையை அழைப்பதாக இருந்தாலொழிய :-). உரிச்சொல் என்று நண்பர் அரசர் சொன்னார். தவளம் என்பது வெண்மை, தூய்மையைக் குறிக்கும் சொல். சக்தி சிவனுக்கு மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் என்று பட்டர் எண்ணுவதால், மனைவியும் அன்னையும் அவளே என்ற நெருடலான கருத்து தூய்மை என்ற கண்ணோட்டத்தில் நல்ல விளக்கமாகி விடுவதால், தவளே என்பதற்குத் தூய்மையானவள் என்று பொருள் சொல்லியிருக்கிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/24

பரிபுரச் சீறடி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 43 ராகம்: தன்யாசி


பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துரமேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனியிறைவர் செம்பாகத் திருந்தவளே.

நெஞ்சில் தீய எண்ணங்கொண்டு திரிந்த முப்புர அரக்கர்களை, மலையை வில்லாக வளைத்து அம்பு தொடுத்து எரித்தழித்த சிவபெருமானின் இடது பாகத்தில் இருப்பவள் (இருந்து உதவியவள் யாரெனின்) கைகளில் பாசக்கயிறும் அங்குசமும் ஐவகை அம்புகளும் ஏந்தி, கால்களில் சிறப்புமிக்க சிலம்பணிந்து, இனிமையான மொழியும் சிவந்த மேனியும் கொண்ட மூவலகத்திலும் சிறந்தப் பேரழகியான திரிபுரசுந்தரியே (ஆவாள்).

அபிராமியின் அழகை முன் பாடலில் வர்ணித்தவர், அவளுடைய அலங்காரங்களை இந்தப் பாடலில் எடுத்துச் சொல்கிறார். பஞ்ச பாணி என்பது ஐந்து வகை அம்புகளை ஏந்தியவள் என்ற பொருளில், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களினாலுண்டாகும் உணர்வுகளைக் குறிக்கிறது. பொருப்பு என்றால் மலை. சிலை என்றால் வில். சிவன் மேருமலையை வில்லாக வளைத்ததாக திரிபுரம் எரித்த கதையில் வருகிறது. (மலையையே பெயர்த்தெடுத்து ஆயுதமாகப் பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் வலிமை உள்ளவராக இருந்தனர் என்பது உட்பொருளானாலும், கடவுளருக்கும் முனிவர்களுக்கும் மேருமலை மிக வசதியாக இருந்திருக்கும் போலிருக்கிறது. அரக்கர்களை அழிக்க வேண்டுமா? அமுதம் கடைய வேண்டுமா? பயணத்தைத் தடை செய்ய வேண்டுமா? பாதுகாப்புச் சுவர் வேண்டுமா? 'பிடி மேருமலையை' என்று கொஞ்சம் ஏமாந்தால் மேருமலையைக் கையில் எடுத்துக் கொண்டதைப் பல புராணக் கதைகளில் படிக்கலாம். மலையைத் திரும்ப அதே இடத்தில் வைத்தார்களா என்பதைப் புராணங்களில் சொல்லவில்லை).

பரிபுரம் என்றால் சிலம்பு. முந்தைய பாடலின் முடிவில் பரி+புரை என்று பிரித்துப் பொருள் கொண்ட சொல், இங்கே பரிபுரம் என்ற தனிச்சொல்லாகச் சிலம்பு என்ற பொருளில் வருகிறது. காலில் சிலம்பணிந்தவள் என்று சக்தியை இறையிலக்கியங்களில் நிறைய வர்ணித்திருக்கிறார்கள். லலிதாசஹஸ்ர நாமத்தில் 'நவரத்தின மணியினாலான சலங்கை' என்று சொல்லப்பட்டிருக்கிறது. சௌந்தர்யலஹரியில், சக்தியின் சலங்கையொலியைப் பற்றிச் சுவையாகச் சொல்லியிருக்கிறார் சங்கரர். 'ஊடலில் தோற்றுச் சரணடைந்த சிவனின் தலையில் சக்தி தன் கால் விரல்களை விளையாட்டாக வைத்துத் தட்டும் பொழுது ஏற்படும் கிணுகிணுப்பான வெற்றி ஓசையில் எல்லாம் அடங்கி விடும்' என்ற அழகான சங்கரர் கற்பனையை, வீரைக் கவிராஜர் 'இறையை வென்றனன் விழியை வென்றனன் என முழங்கிய குரல் எனாது அறைச் சிலம்பு எழும் அரவம் என்பதேன் அருண மங்கலக் கமலையே' என்று அருமையான தமிழில் சொல்லியிருக்கிறார். சிவனிடம், "ஐயா நீர் மலையை வளைத்து அம்பெய்தி முப்புர அரக்கரைக் கொல்லும் வலிமை படைத்தவர் என்பதெல்லாம் சரி, ஆனால் எம் தலைவியின் கால் சலங்கையொலி உம்மையும் அடக்கி விடுமே?" என்பது போல் தொனிக்கும் பட்டரின் உட்பொருள் இன்னும் சுவை.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/23

இடங்கொண்டு விம்மி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 42 ராகம்: தன்யாசி


இடங்கொண்டு விம்மியிணை கொண்டிறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கைமலை கொண்டிறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கைநலம் கொண்டநாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குற் பனிமொழி வேதப்பரிபுரையே.

அனைத்து நலங்களும் பெற்று வேதங்களின் முதலும் சிறப்புமாக விளங்கும் தலைவியே! நல்ல பாம்பின் படம் போன்ற அலகுல், அழகிய முத்து மாலை படர்ந்த - இறுக்கமாகவும் மென்மையாகவும் ஒன்றுக்கொன்று இணையான குன்று போல் பருத்திருக்கும் - முலைகள், குளிர வைக்கும் இனிய குரல், இவற்றைக் கொண்டு, கல் போன்ற இறுக்கமான மனமுடைய சிவனையும் மயக்கி உன் எண்ணம் போல் ஆட்டி வைக்கும் குணமுடையவளாக விளங்குகிறாய்.

'வேதப்பரிபுரையே, நலம் கொண்ட நாயகி! நல்லரவின் படங்கொண்ட அல்குல், முத்து வடம் கொண்ட இறுகி இளகி இடம் கொண்டு விம்மி இணை கொண்ட கொங்கை மலை, பனிமொழி, கொண்டு இறைவர் வலிய நெஞ்சை நடம் கொண்ட கொள்கை' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

இந்தப் பாடலில் தொடங்கி மூன்றாம் பாடலில் கருத்தை முடிக்கிறார் பட்டர் என்று நினைக்கிறேன். இந்தப் பாடலிலும் அடுத்த பாடலிலும் அபிராமியின் அழகையும் குணத்தையும் ஏற்றிக் கூறி, மூன்றாம் பாடலில் வணக்கத்தைத் தெரிவிக்கிறார். மூன்று பாடல்களையும் சேர்த்துப் படித்தால் முழுக் கருத்தும் விளங்கும். தனித்துப் படித்தாலும் அபிராமியின் அழகை மட்டும் விவரிப்பது போன்ற பாடல்.

'வேதப் பரிபுரையே' என்பதற்கு அறிஞர்கள் 'வேதங்களைக் காற்சிலம்பாகக் கொண்டவளே' என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் ஒரு வகையில் சரியென்றாலும், இந்தப் பாடலின் மையக் கருத்துக்கு ஒத்துப் போவதாகத் தோன்றவில்லை. பட்டர் இருக்கிறாரே, பொல்லாதத் தமிழர்! ஒரே சொல்லைப் பலவிதமாகப் பலபொருளில் பயன்படுத்தி நம்மையும் புரட்டியெடுக்கிறார். இந்தப் பாடலின் முடிவில் 'பரிபுரையே' என்று முடித்து விட்டு, அடுத்தப் பாடலை 'பரிபுர' எனத் தொடங்குகிறார். ஒரே சொல் போல் தோன்றினாலும், பரிபுரை என்பதும் பரிபுர(ம்) என்பதும் வெவ்வேறு பொருள் தரக்கூடியன. பரிபுரை என்பதை பரி+புரை எனப் பிரிக்க வேண்டும். புரை என்ற சொல்லுக்கான பொருளை முன்பே ஆய்ந்திருக்கிறோம். பரி என்பதற்கு அழகு, சிறப்பு என்றும் பொருள். பரிபுரம் என்றால் சிலம்பு. 'வேதங்களைக் காற்சிலம்பாக அணிந்தவளே' என்பது பொருத்தமாகத் தோன்றினாலும், பாடலின் கருத்துடன் பொருந்தவில்லை. இந்தப் பாடலின் முடிவை பரி+புரை எனப் பிரித்து வேதங்களின் முடிவும் (முதலும்) சிறப்பும் ஆனவள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன். அபிராமியின் முலையையும் பெண்குறியையும் வர்ணித்து புலனளவில் வந்த கருத்தை, அவளே நெறிகளின் வடிவாகவும் சிறப்பாகவும் இருப்பவள் என அறிவளவில் உயர்த்தித் தொடர்வது இறையிலக்கியப் பெண் கடவுளர் வர்ணணை வழக்கங்களையும் ஒட்டி இருக்கிறது. வரும் பாடலின் தொடக்கத்தில் 'பரிபுரச் சீறடி' என்ற சொற்றொடர் சிலம்பணிந்த கால் எனப் பொருத்தமாக அமைகிறது. ஏனெனில், வரும் பாடலில் கைகளில் வில் அம்பு என அபிராமியின் வெளித்தோற்ற அலங்காரங்களை விவரிக்கிறார் பட்டர்; காற்சிலம்பு அங்கே பொருந்துகிறது.

கடவுளரில் சிவன் மிகவும் கோபக்காரன், இறுமாப்புக்காரன், கல்நெஞ்சன் (சக்தியையே வெறுத்து அழியச் செய்தவன்; பெற்ற பிள்ளையை விரட்டியவன்) எனப் பலவாறாகக் கடினமான உள்ளம் படைத்தவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். அத்தகையவனை மயக்கித் தன் எண்ணம் போல் ஆட்டுவிக்கிறாள் அபிராமி என்பது பட்டரின் கருத்து. தன் உடலழகையும் அறிவழகையும் குரலழகையும் பயன்படுத்தி வலியவனை ஆட்டி வைக்கிறாள். கொங்கை அல்குல் இரண்டும் உடலழகையும், வேதம் அறிவழகையும், பனிமொழி குரலழகையும் உட்பொருளாகக் குறிக்கிறது. எல்லா அழகையும் பெற்று, தலைவனை ஆட்டி வைப்பவள் தலைவி தானே? உடல் உறுப்புகளின் வெளியழகோடு மட்டும் பார்க்காமல், அறிவு, மொழி என்று உள்ளழகோடும் பார்க்கின், பெண் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் நிறைவானவள் என்பது பட்டரின் மறைபொருள்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/22

புண்ணியஞ் செய்தனமே...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 41 ராகம்: தன்யாசி


புண்ணியஞ் செய்தனமே மனமே புதுப்பூங் குவளைக்
கண்ணியுஞ் செய்யக் கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணியிங் கேவந்து தம்மடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநஞ் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே.

அப்போது மலர்ந்த குவளை மலர் போன்ற கண்களை உடையவளான அபிராமியும், அவளுடையக் கணவரான சிறப்புமிக்கச் சிவபெருமானும், இணைந்து வந்து அடியார்களான நம்முடன் (என்னுடன்) நெருங்கி இருக்கவும், நம் (என்) தலையில் அவர்களின் தாமரைப் போன்ற பாதங்களை வைத்து அருள் புரியவும், என்ன புண்ணியம் செய்தாய் மனமே?

'புதுப் பூங்குவளைக் கண்ணியும், செய்யக் கணவரும், நம் காரணத்தால் கூடி, தம்மடியார்கள் நடுவிருக்க இங்கே நண்ணி வந்து, நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே பண்ணி, புண்ணியஞ் செய்தனமே மனமே!' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

செய்ய என்றால் அழகிய, சிவந்த என்று பொருளுண்டு. அந்தப் பொருளில் அழகிய கணவர், சிவந்த நிறத்தையுடைய சிவபெருமான் என்று அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் பொருத்தம் தான். 'பொன்னார் மேனியனே' என்று சிவனைப் பாடியிருக்கிறோமே? இருப்பினும், அபிராமியின் அழகையும் குங்கும நிறத்தையும் வானத்துக்கு வர்ணித்துவிட்டு, இங்கே சிவனை சிவந்தவன் என்றோ அழகன் என்றோ பட்டர் அழைப்பாரென்று நான் எண்ணவில்லை. அபிராமி அந்தாதியின் நாயகி, அபிராமி. அதனால், தான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி என்பார் பட்டர் என்று எனக்குத் தோன்றுகிறது. செய்ய என்ற சொல்லுக்கு சிறந்த என்ற பொருளும் உண்டு. அதனால் சிறப்புமிக்க சிவன் என்ற பொருளைச் சொல்லியிருக்கிறேன். நண்ணி என்றால் நெருங்கி என்று பொருள்.

முன் பாடலில் தன்னை ஆள்வதற்கு அபிராமியின் பாதங்கள் உண்டு என்று பாடிய பட்டர் அந்தக் கருத்திலே தொடர்கிறார். சிவனும் சக்தியும் இணைந்து வந்து அடியார்களுடன் தங்கியிருப்பது போதாதென்று, அவர்களின் தலையில் பாதம் பதித்து அருள் செய்வதாகவும் சொல்கிறார். அந்த அருளைப் பெறும் அடியார்களில் ஒருவனாகத் தன்னையும் எண்ணி, அந்தப் பேறு கிடைப்பதற்காக, தான் முன் செய்த நல்வினைப் பயனை வியந்து பாடுகிறார். உடல் அழியும், மனம் (ஆன்மா) அழியாது என்ற இந்துமதத் தத்துவக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது, பட்டரின் முன்வினை அவருடைய மனதுக்கு மட்டும் தான் தெரியும் அல்லவா? அதனால், 'மனமே, நான் செய்த புண்ணியம் என்ன சொல்?' என்று மனதைக் கேட்கிறார்.

ஒரு எளிய புதிருக்கு நேரமிருக்கிறதா? இத்தனை பாடல்களைப் படித்து வந்தீர்களென்றால் இந்தக் கேள்விக்கு விடை சொல்லுங்கள். இந்தப் பாடலின் முதல் சீர்களைப் புரட்டிப் போட்டு இன்னொரு ணகர எதுகைப் பாடல் அமைத்திருக்கிறார் பட்டர். எந்தப் பாடல் என்று சொல்ல முடியுமா?

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் தன்யாசி ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/21

வாணுதற் கண்ணியை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 40 ராகம்: காம்போதி


வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற் கெண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்
காணுதற் கண்ணிய ளல்லாத கன்னியைக் காணுமன்பு
பூணுதற் கெண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

தேவர் மூவரென விண்ணுலகத்தவர் அனைவரும் பணிந்து வணங்கிப் போற்றும் மஞ்சள் குங்குமத் திலகம் ஒளி வீசும் பரந்த நெற்றியை உடைய என் தலைவி, அழிவற்றவள்; நெஞ்சில் அறியாமை கொண்டவரை அணுகி அருள் புரியாதவள்; (அப்படிப்பட்டவளை) அன்புடன் வழிபடத் தோன்றியது என் நல்வினைப் பயனாகும்.

'வாணுதற் கண்ணி' என்பதற்கு நெற்றிக்கண்ணை உடையவள் என்றும் பொருள் கொள்ளலாம். லலிதாசஹஸ்ர நாமம் மற்றும் சௌந்தர்யலஹரியில் ஒளி வீசும் நெற்றி, நெற்றிக் கண் இரண்டு விதத்திலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறாள் சக்தி. சிவனுடைய நெற்றிக்கண்ணே சக்தி தான் என்றும் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சௌந்தர்யலஹரியிலும் அந்தக் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது ("சிவனுடைய கண்ணின் கனலானவள்").

பட்டரின் சொல்லாட்சியை ரசிப்போம். 'தேவரையும் மூவரையும் பெற்றவள், சிவனுடன் பலவிதங்களில் காமப்போர் புரிபவள்' என்றெல்லாம் முன்பு சொல்லிவிட்டு இங்கே அபிராமியைக் கன்னி என்கிறாரே பட்டர்? கருணையுடையவள், எளியவருக்கும் அருள் புரிபவள் என்று முந்தைய பாடல்களில் சொன்னவர், இங்கே அபிராமியை எளிதில் காணமுடியாதவள் என்பானேன்? கன்னி என்ற சொல்லுக்கு அழிவில்லாத, எல்லாவற்றுக்கும் தொடக்கமான என்று பொருளுண்டு. அபிராமி அழிவில்லாதவள் என்பதால் கன்னி என்றார். அபிராமி எல்லாவற்றுக்கும் தொடக்கம் என்பதால் கன்னி என்றார். அழிவில்லாத தொடக்கம் தானே அந்தாதி? அழிவில்லாத தொடக்கமான அபிராமிக்குப் பொருத்தமாக அந்தாதி பாடியவர் இன்னொரு நுட்பத்தையும் தெரிவிக்கிறார். பேதமை என்றால் அறியாதிருத்தல் என்று பொருள். பெண்ணுக்குப் பேதை என்று ஒரு பொருள் உண்டு. பெண்கள் அறிவில்லாதவர்கள் என்று பொருள் அல்ல. சிலவற்றை அறிந்தும் அறியாதவர் போல் காரணம் தொட்டு நடந்து கொள்வதால் பெண்களுக்குப் பேதை எனும் பொருள் வழங்கலாயிற்று. தேவர்களும் கடவுளருமே பணிந்து வணங்கும் அழிவில்லாத அபிராமியை அறிந்தும் நம்பிக்கையிழந்து அறிவில்லாதவர் போல் நடந்து கொள்ளும் பேதைகளுக்கு அபிராமியின் அண்ணியம் கிடைக்காது என்பதால், 'பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள்' என்றார் பட்டர். அண்ணுதல் என்றால் நெருங்குதல்; அண்ணித்தல் என்றால் அருளுதல். அண்ணியம் இரண்டுக்குமே பெயர்ச்சொல்.

மூன்றாம் சுழியை இத்தனை முறை ஒரே பாடலில் பார்த்ததில்லை. மூன்று சுழி 'ண' முடிவில்லாததையோ நிரந்தரத்தையோ பேரானந்தத்தையோ குறிப்பதாக நம்பப்படுகிறது. கண், மண், பெண், விண், பண் என்று 'ண' இடம்பெறும் தமிழ்ச் சொற்களைக் கவனித்தால் இது உண்(!)மையோ என்று எண்ணத் தோன்றுகிறது. அளவில்லாதவள், எல்லாவற்றுக்கும் தொடக்கமானவள், அழிவில்லாதவள் என்று அபிராமியை ஏத்தும் பட்டர், ணகரத்தை மிகையாகப் பயன்படுத்தியது காரணத்தோடா, தற்செயலா? பாடலின் இருபது சீர்களில் மொத்தம் 19 முறை மூன்று சுழியைப் பயன்படுத்தியிருக்கிறார். நான்கு அடிகளில், ஒவ்வொரு அடியிலும், குறைந்தது மூன்று முறையாவது மூன்றாம் சுழியைப் பயன்படுத்தியிருக்கிறார். முதற்சீரில் எதுகை அமையப் பாடுவதே சிறப்பு தான்; அடுத்தடுத்த சீர்களில் எதுகையைப் புகுத்திப் பாடியிருப்பது பெரும் சிறப்பு - அதுவும் ணகர எதுகை! அபிராமி அந்தாதியின் நூறு பாடல்களில், பத்து பாடல்கள் ணகர எதுகையில் அமைந்திருக்கின்றன. (மற்ற எழுத்து எதுகைகளை விட ணகர எதுகையில் பாடல்கள் அதிகமா என்று ஆய்ந்து பார்கக் வேண்டும்)

த, ர, ம, க, ப, ந, ன, ல போன்றவை எதுகைக்கு ஏற்றவை - நிறைய தமிழ்ச்சொற்களில் அவை இரண்டாம் எழுத்தாக அமைந்திருப்பதால். மூன்றாம் சுழி இருக்கிறதே - கொஞ்சம் சிரமம். ஆனால் சுவையான அழுத்தமுடைச் சொற்களைக் கொண்டது. (கண், பெண், மண், பண் என்று ஒரு பேச்சுக்கு - பொதுப்படையாக - எழுதினால், தேடிப் பார்த்த போது அதே எதுகையில் பட்டர் ஒரு பாடலைத் தந்திருக்கிறார்!). ஒரு பாடலின் ணகர எதுகை முதற்சீர்ச் சொற்களைப் புரட்டிப்போட்டு, இன்னொரு பாட்டில் அமைத்திருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அதே சொல் என்றாலும் வேறு ஒரு பொருளில் அமைத்திருப்பது இன்னும் சிறப்பு. 'கண்ணி' என்ற சொல்லை கண்ணியள் (கண்ணை உடையவள்) என்று ஒரு பாடலில் பயன்படுத்திவிட்டு, அதே சொல்லை இன்னொரு பாடலில் கண்ணியம் (மேன்மை) என்று பயன்படுத்தியிருக்கிறார் பட்டர்.

தோண்டினால் இன்னும் ஏதாவது தோன்றும்; இந்தப் பாடல் தமிழ்ச்சுவைக்கொரு கேணி.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/20

ஆளுகைக்கு உந்தன்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 39 ராகம்: காம்போதி


ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின்கடை உண்டு மேலிவற்றின்
மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்புதொடுத்த வில்லான்பங்கில் வாணுதலே.

மூன்று அசுரர்களின் இருப்பிடங்களை ஒரே அம்பால் அழிக்க முயன்ற போரில் பங்கெடுத்து சிவனுக்கு உதவிய பெண்ணே! உன் அழகிய பாதங்கள் என்னைக் காப்பாற்றி என் மனதை ஆட்சி செய்ய வல்லவை; இருளரசனாம் எமனுடைய பிடியிலிருந்து மீண்டு வர உன் கடைக்கண் பார்வையே போதுமானது. (முப்புர அசுரர்களிடமிருந்து தேவர்களைக் காப்பாற்றியது போல்) என்னைக் காத்தருள உன் திருவடிகளும் கடைக்கண் பார்வையும் இன்னும் சேர்ந்து வராதது என் தவறா, உன் தவறா? (நீயே சொல்).

'என் குறை நின் குறை அன்று' என்ற தொடர், பல விதங்களாகப் பிரித்துப் பொருள் உணரற்பாலது.

என் குறை அன்று, நின் குறை: "எனக்கு அருள் கிடைக்காதது என்னுடைய தவறல்ல, உன்னுடைய தவறு" என்று பட்டர் அபிராமியிடம் முறையிடுவதாகக் கொள்ளலாம். 'அன்றே தடுத்தென்னை ஆண்டு கொண்டாய்' எனத் தன்னைத் தீய வழியில் செல்லாமல் அபிராமியையே எண்ணித் தவமிருக்கச் செய்துவிட்டு இன்னும் காப்பாற்ற வராதது அபிராமியின் குறை தான் என்று அன்புடன் சாடுவதாகப் பொருள்.

என் குறை, நின் குறை அன்று: "எனக்கு அருள் கிடைக்காதது என் தவறே அன்றி உன்னுடைய தவறு அல்ல" என்று பட்டர் தன் தவப்பயனின் குறைவை நொந்து கொள்வதாகப் பொருள். தேவருக்கும் மற்றவருக்கும் அபிராமியின் பாதம், கடைக்கண் பார்வை இவற்றின் பாதுகாப்பு கிடைக்கும் பொழுது தனக்கு இன்னும் கிடைக்காதிருப்பதன் காரணம் தன்னுடைய தவறே, தன் தவப்பயனின் குறையே, தவிர எல்லோருக்கும் அருள் தரும் அபிராமியின் குறை அல்ல என்று பட்டர் தன் வேதனையை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

என் குறை, நின் குறை: "எனக்கு அருள் கிடைக்காதது என் குறையே, இருப்பினும் என்னுடைய செயல்கள் எல்லாவற்றையுமே இயக்கும் சக்தி நீ தான் என்பதால் என்னுடைய குறையும் உன்னுடைய குறை தான்" என்று பட்டர் அபிராமியிடம் சொல்வதாகப் பொருள். (இங்கே அன்று என்ற சொல்லை அடுத்து வரும் முப்புரங்கள் சொல்லுடன் இணைக்க வேண்டும்).

மேற்சொன்னதையொட்டி நான் பொருள் சொல்லியிருக்கிறேன். 'என்னுடைய குறையென்பது உன்னுடைய குறையே' என்று திட்டமாக அபிராமியின் மேல் பழியிடாமல், 'பலன் கிடைக்காதது யாருடைய குறை?' என்று பட்டர் அபிராமியை உரிமையுடன் கேட்பது போல் பொருள் சொல்லியிருக்கிறேன். 'என்னுடைய குறையானால் நான் பொறுப்பேற்கிறேன்; உன்னுடைய குறையானால் இதைத் தீர்த்து விட்டு மறுவேலை பார்' என்ற பட்டரின் உரிமைக் கோரிக்கை, மறைபொருளாகத் தொக்கி நிற்கிறது.

'வில்லான் பங்கில்' என்பதற்கு 'சிவனின் உடலில் பங்கெடுத்துக் கொண்டவளே' என்று அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். சிவனின் இடது பாகத்தில் இருப்பவள் சக்தி என்ற வகையில் அது பொருத்தமே. அரக்கர்களுடன் நடந்த போரில் பங்கெடுத்துக் கொண்டவளாகப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

முப்புர அரக்கர்களைக் கொல்ல உபாயம் தோன்றாமல் தயங்கிய சிவன், திருமாலிடமும் சக்தியிடமும் உதவி கோரிய கதை சுவையானது. சமணமதம் தோன்றிய கதை இதுதான். தேவ-அசுர அரசியல் காரணமாகக் கொல்லப்பட்ட முப்புர அரக்கர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. எந்த நேர்வழியும் தோன்றாமல் மதமாற்றத்தை வைத்து அரக்கர்களை அழித்தது, கடவுளரின் கொள்கைகளைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.

வாணுதல் என்றால் பெண் என்று பொருள். பெயர்க் காரணம் உண்டு. வாணுதல் என்ற சொல்லை வாள்+நுதல் என்று பிரிக்கலாம். வாள் என்ற சொல்லுக்கு ஒளி என்று பொருளுண்டு. நுதல் என்றால் நெற்றி. வாணுதல் எனும் சொல் ஒளி வீசும் நெற்றி என்ற பொருளைத் தருகிறது. மஞ்சளும் குங்குமமும் கலந்த திலகம், பரந்த நெற்றியில் பொன்னும் மாணிக்கமும் போல் ஒளி வீசுவதாக உட்பொருள். வாணுதல் என்று இந்தப் பாடலை முடித்த பட்டர், வரும் பாடலை வாள் நுதல் என்று பிரித்த சொல்/பொருளில் தொடங்குகிறார்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/19

பவளக் கொடியில்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 38 ராகம்: காம்போதி


பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா மெங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.

நெருக்கமாக இணைந்த முலைகளைத் தாங்கும் உடுக்கை போன்ற இடை துவளும்படி சிவபெருமானுடன் காதல் போர் புரிகிற அபிராமியின் பவளப்பழம் போன்ற சிவந்த உதடுகளில் மிளிறும் குளிர்ச்சியான வெண்ணிறப் புன்னகை (கொண்ட முகமே) துணையென்றுப் பணிந்து வணங்கினால் தேவருலகத்தில் அரச பதவி கிடைக்கும் (என அறிவோமாக).

பவளக் கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் புன்னகை என்றே பேராகும் என்கிறார் பட்டர்.

உதடுகளைப் பவளக் கொடியில் பழுத்த பழம் என்பது சுவையான கற்பனை. பனிமுறுவல் - குளிர்ச்சியான புன்னகை. தவளம் என்றால் வெண்மை. செவ்வாய் என்பதை செம்மை+வாய் எனப்பிரித்து சிவந்த வாய் என்றோ, சூடான வாய் என்றோ பொருள் கொள்ளலாம். இணைந்த கொங்கையுடனும் துடியிடையுடனும் சிவனுடன் காதல் போர் புரியும் அபிராமியின் உதடுகள் வெப்பத்தினால் சிவந்திருப்பதாகக் குறிப்பதாகக் கொள்ளலாம். வெப்பமான உதடுகள் எனும் பவளப் பழத்தைப் பிளந்தால் குளிர்ச்சியான புன்னகை என்பது, சுவைக்குச் சுவை சேர்க்கும் கற்பனை.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/18

கைக்கே அணிவது...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 37 ராகம்: காம்போதி


கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலமன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விடவரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டுமெட்டுத்
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே.

கைளில் கரும்பையும் மலர்களையும், தாமரை மலர்கள் போன்ற முலை மேல் வெண் முத்து மாலையையும், விஷப்பாம்பின் படம் போன்ற அல்குலைச் சுற்றிப் பலவகை மணிகளையும் பட்டாடையையும் அணிந்து சிறப்பு மிகுந்த சிவபெருமானின் இடது பாகத்தில் சேர்ந்திருக்கும் நீயே எட்டுத் திக்கையும் அணிந்திருக்கிறாய் (பாதுகாக்கிறாய்).

'எட்டுத் திக்கையும் ஆடையாக அணிந்த சிவபெருமானின் இடது பாகத்தை ஏற்றவளே' என்றும் 'எட்டுத் திக்கையும் ஆடையாக அணிந்திருக்கும் சிவபெருமானுடன் சேர்ந்து இருப்பவளே' என்றும் அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

கன்னல் என்றால் கரும்பு. மெய் என்ற சொல்லுக்கு உடல், முலை என்று பொருள். பை என்றால் படம் பிடித்து ஆடும் பாம்பு, அழகு, இளமை, பெண்குறி (உருவகம்), அல்குல் என்று பொருள்.

முந்தைய பாடலில் சிவ-சக்தி இணைப்பை 'ஆயிரந்தாமரை' யோகப் பொருளில் பாடிய பட்டர், இந்தப் பாடலில் அபிராமியின் உள்ளழகைத் தொடர்ந்து பாடுகிறார். படமெடுத்து ஆடும் பாம்பின் நிலை பெண்குறிக்கு உவமையாகச் சொல்லப்பட்டிருப்பதை, பல இந்துமத இறையிலக்கியங்களில் பார்க்கலாம். இங்கே விஷப்பாம்பு என்ற சொல்லை உபயோகித்திருப்பது, விஷங்கொண்ட பாம்புகளே பொதுவாகப் படமெடுத்து ஆடக்கூடியன என்பதால். இன்னொரு சுவையான சிருங்காரக் கற்பனையும் இங்கே பொருந்தும். சிவனுடைய கழுத்து விஷங்கொண்ட பாம்பு போல் இருக்கிறது; பொருத்தமாக சக்தியின் காலிடை விஷங்கொண்ட பாம்பு போல் இருக்கிறது. இது போன்ற கருத்துக்கள் சௌந்தர்யலஹரியில் பாதிப் பாடல்களுக்கு மேல் வருகிறது. 'உன் தொப்புளுக்குக் கீழே இருக்கும் குகை சிவனுக்கு விருப்பமானது' என்று கூட வர்ணித்திருக்கிறார் சங்கரர். பெண் கடவுளரின் உடலழகை ஒரு பகுதி விடாமல் வர்ணித்து, மனங்கலங்காமல் பக்தியுடன் வணங்குவது பாராட்டுக்குரிய முதிர்ச்சி. பட்டரும் சங்கரரும் சங்கடப்படாமல் உள்ளதை உள்ளபடி முலை, அல்குல் என்று சொல்லியிருக்கும் பொழுது, பாடலுக்கு பொருள் சொன்ன அறிஞர்கள் இடை தொடை இடுப்புப்பகுதி என்றும், இன்னும் குழப்பும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியும், சங்கடப்பட்டிருப்பது சுவையான வேடிக்கை. பக்தி எனும் ஒளியேற்றி முக்தி எனும் பேரின்ப நினைவுடன் சக்தியை வழிபடுவதால், குயுக்தி என்ற இருள் புகாமல் மனது கட்டுப்பட்டு இருக்கிறது என்று ஒரு சங்கராச்சாரியார் விளக்கத்தை படித்திருக்கிறேன். ஏற்க வேண்டிய கருத்து.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/17

பொருளே பொருள்முடிக்கும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 36 ராகம்: காம்போதி


பொருளே பொருள்முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும்
மருளே மருளில்வரும் தெருளே என்மனத்து வஞ்சத்து
இருளே துமின்றி ஒளிவெளியாகி இருக்கு முந்தன்
அருளே தறிகின்றிலேன் அம்புயாதனத் தம்பிகையே.

தாமரையை இருப்பிடமாகக் கொண்ட தாயே! (நான்) பொருட்செல்வத்தைத் தேடிய போது பொருளாகவும், அந்தச் செல்வத்திலிருந்து இன்பம் நுகர விழைந்த போது இன்பமாகவும், இன்பம் நுகர்ந்ததால் ஏற்பட்ட பகுத்தறிய இயலாத மயக்கமாகவும், பின் அந்த மயக்கம் தீர்ந்து ஏற்பட்ட தெளிவாகவும் விளங்கியவள் நீயே (என்பதை அறியும் படி) என் மனதின் அறியாமை எனும் இருளை நீக்கியது உன் அருட்செல்வமெனும் ஒளியே என்பதை (எளியவன்) அறியவில்லை.

அந்தாதிக்குள் அந்தாதி பாடுகிறார் அபிராமிப் பித்தர். இது போன்ற பாடல்கள் படிக்க மிகச் சுவையாகவும் சுலபமாகவும் தோன்றினாலும், பிரிக்கவும் பொருள் உரிக்கவும் சவாலாக அமைகின்றன. படிப்பவர் அறிவுக்கும் நம்பிக்கைக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ற பொருளை அளிக்க வல்லன. பட்டரின் பாடல் மண் என்றால் அவர் பாடலின் பொருள், படிப்பவர் செய்யும் பலவித பொம்மைகளாகின்றன.

பொருள் என்பதைச் சாதாரண செல்வம், வீடு, நிலம், பெண் என்ற விதத்தில், அந்தப் பொருளினால் உண்டாகும் இன்பத்தையும், இன்பத்தினால் விளையும் - வாழ்வின் நோக்கமான முக்தியை மறக்கடிக்கும் - மயக்கத்தையும், பிறகு இறையருளால் மயக்கம் நீங்கி வரும் தெளிவையும், பட்டர் விளக்கிச் சொல்வதாகப் பொருள் கொள்ளலாம்.

போகம் யோகம் இரண்டுமே வாழ்க்கை நெறி என்ற கண்ணோட்டத்தில் பொருள், போகம், மருள் (மாயை), தெருள் இவற்றுக்கு விளக்கம் கொள்ளலாம் - அதாவது, மானிடராய்ப் பிறந்தவர் போகம் யோகம் இரண்டையும் சமமாகக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில். இரண்டையும் சமமாகக் கருதாதவர்கள் அறியாமை இருளில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அத்தகைய அறியாமை இருள் அகல அபிராமியை நாட வேண்டும் என்று பட்டர் சொல்வதாகப் பொருள் கொள்ளலாம்

சற்று நுட்பமாகவும் விளக்கம் தேடலாம். பொருள் என்றால் கடவுள். போகம் என்றால் இன்பம். மருள் என்றால் மயக்கம். தெருள் என்றால் தெளிவு. கடவுள் என்ற உண்மையை அறிந்ததும் ஏற்படும் இன்பமும், அந்த அரிய இன்பத்தின் நுகர்ச்சி காரணமாகத் தோன்றும் பிறப்பு/பிறவாமை எனும் நிலைகளின் மயக்கம், அந்த மயக்கத்திலிருந்து ஏற்படும் பிறவாமை நிலை பற்றிய தெளிவு என்றும் பொருள் கொள்ளலாம்.

கடவுள் என்ற உண்மையை உணர்ந்தாலும், கடவுளிடம் எத்தகைய போகம் வேண்டுகிறோம் என்பதைப் பொருத்தது அல்லவா மயக்கம்? தத்தம் நம்பிக்கைகளின் பலனாகக் கடவுளின் அண்மையை உணர்ந்தவர்களுள் பெரும்பாலானோர் வீடு, நிலம், நூற்றாண்டு வாழ்வு, சந்ததிச் செழிப்பு போன்ற இன்ப நிலைகளைத் தானே நாடுகிறார்கள்? அபிராமியின் அண்மை என்ற போகத்தை அனுபவிக்க வாய்ப்புடையவர்கள் இத்தகைய மருளிலிருந்து விடுபட்டு பிறவாமை ஒன்றையே வேண்ட வேண்டும் - அது தான் தெருள் - என்கிறார் பட்டர். பிறவியிலின்பம் தேடுவதைத் தவிர்த்து பிறவாமை எனும் பேரின்பம் நாடும் தெளிவு ஏற்பட, மனதில் அறியாமை எனும் இருள் அகல வேண்டும் என்கிறார்.(பிறவாமலிருந்தால் பிறகு என்ன இன்பம் வேண்டிக்கிடக்கிறது என்று நமக்குத் தோன்றுகிறது)

அபிராமி நம் முன் தோன்றி, "ஒரு வரம் தருகிறேன், என்ன வேண்டும் கேள்" என்றால், நம்மில் எத்தனை பேர் உடனே "தாயே, இனிப் பிறவாமை வேண்டும்" என்று கேட்போம்? இறந்தபின் பிறவாமை கிடைத்தால் நமக்கென்ன தெரியவா போகிறது? பிறந்து விட்டோம்; ஏதோ அபிராமி வரத்தால் பக்கத்து வீட்டுக்காரன், அண்ணன் தம்பி மாமன் மச்சான் இவர்களை விட நாமும் நம் தலைமுறையும் வசதியாக வாழ்ந்தால் போதும் என்றுதான் நம் மனம் உடனே நினைக்கும்; அதைத்தான் வரமாகக் கேட்கும். இன்றைக்கு எப்படியோ தெரியாது, அன்றைக்கு அபிராமி என் தாய் முன் தோன்றி 'ஒரே ஒரு வரம் தருகிறேன், என்ன வேண்டும் சொல் இந்திரா' என்றால், 'பிறவாமை வேண்டும்' என்று கேட்டிருக்க மாட்டார்; 'என் பிள்ளைகளை வாழ வை தாயே' என்றுதான் கேட்டிருப்பார். பந்தபாசங்களின் பிடி அப்படிப்பட்டது. சட்டி சுட்டதடா எனும் மனப்பக்குவம் மிகவும் அரியது. போகத்தில் தவறில்லை. போகம் மனித இயல்பு. நெறி. மருள். அதை உணர்ந்து தெளிவு பெறுவது என்பது சாதாரண முதிர்ச்சியில்லை. இதைத்தான் 'மனத்து வஞ்சத்து இருள்' என்றார் பட்டர்.

'அம்புயாதனத் தம்பிகையே' என்பதற்குக் கூட பல வித விளக்கங்கள் சொல்லலாம். அம்பிகை என்பதற்கு தாய் என்று பொருள். அம்புய+ஆதனத்து+அம்பிகையே எனப் பிரித்து தாமரையை இருக்கையாக (ஆதனம்:ஆசனம்) உடைய தாயே எனலாம். அதே சொற்பிரிவில் தாமரையை யோக நிலையாக (ஆசனம்) உடையவளே எனப் பொருள் கொள்ளலாம். அம்புய+தனத்து+அம்பிகையே எனப் பிரித்து தாமரை போல் பரந்த, மென்மையான அல்லது குவிந்த மார்பை உடைய தாயே எனவும் பொருள் கொள்ளலாம். ('குவிந்த முலையுடைய தாயே' என்கிறார் கண்ணதாசன். அடுத்தப் பாடலின் பொருளை வைத்துப் பார்க்கும் பொழுது கண்ணதாசன் கருத்து மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது)

என் அறிவுக்கு பட்டர் இங்கே யோக நிலையைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி பாடல்களில் தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள் என்று அடிக்கடி வருகிறது. நான்கு இதழ் தாமரையில் இருப்பவளே, ஆறு இதழ் தாமரையில் இருப்பவளே, எட்டு இதழ், பத்து இதழ், பதினாறு இதழ் என்று வரிசையாக ஆயிரம் இதழ் தாமரையில் இருப்பவளே வரை லலிதா சஹஸ்ரநாமத்தில் தொடர்ந்து வணங்கப்படுகிறாள் திரிபுரசுந்தரி (ஆயிரம் நாமத்தில் இப்படியே நூறு நாமம் போல் ஓட்டி விட்டார்கள்). சௌந்தர்யலஹரியில் கொஞ்சம் நுட்பமாகச் சொல்லியிருக்கிறார்கள். அது பட்டர் சொல்லியிருக்கும் போகம், மருள்-தெருளுக்குப் பொருந்துவது போல் தோன்றுகிறது. மூலாதாரம் என்பது ஆயிரம் இதழ் தாமரை வடிவில் முதுகெலும்பின் அடியிலோ மூளையின் அடியிலோ இருப்பதாக நம்பப்படுகிறது. அதில் சிவனும் சக்தியும் இருப்பதாக நம்பப்படுகிறது. மனிதன் யோக நிலையைக் கடைபிடித்து குண்டலினி விடுவிக்கும் நிலையை அடைந்து தன் அக-புற இயக்கங்களை முற்றிலும் கட்டுப்படுத்தியிருக்கும் பொழுது, சிவ-சக்தியை உணர முடியும் எனும் சௌந்தர்யலஹரி பாடலை, "...மென் கமலத்து ஆயிரந் தோட்டு அருண பீடத்து ஆலவிடம் பருகிய தன் மகிழ்நரோடும் ஆனந்தமுறும் பொருளை அறியலாமே" என்று கவிராஜர் அழகான தமிழில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

'தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்...', 'இருள்சேர் இருவினையும் சேரா...', '...செம்பொருள் காண்ப தறிவு' என பொருள்-இருள்-மருள்-தெருள் பற்றி, தடுக்கி விழுந்தால் திருக்குறள் தென்படுகிறது. மெய்யுணர்தல் என்று இதற்கென்றே ஒரு அதிகாரத்தைத் தமிழ் வேதத்தில் காணலாம்.

பொருளில் வரும் போகம் பட்டரின் தமிழ் என்றால், காம்போதி ராகம் அரும்போகம் செய்யும் மருளாகும்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/16

திங்கட் பகவின்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 35 ராகம்: சண்முகப்ரியா


திங்கட் பகவின் மணநாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட் கொருதவ மெய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட் குமிந்தத் தவமெய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.

அலை வீசும் கடலில், சிவந்த கண்களையுடைய பாம்பையே படுக்கையாகக் கொண்டு துயில விரும்பும் மேன்மையானவளே! பிறைச்சந்திரனைப் போல் அழகிய தோற்றமும் ஒளியும் கொண்ட நறுமணம் வீசும் உன் திருவடிகளில் தலை வைத்து வணங்கும் வாய்ப்பு தேவர்களுக்கும் ஏனைய வானவருக்கும் கிடைக்குமோ? (அவர்களுக்கும் கிடைக்காத) இந்த வாய்ப்பு உன் அடியார்களான எங்களுக்குக் கிடைத்தது எங்கள் தவப்பயனே.

'தரங்கக் கடலுள், வெம் கண் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே, திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க எண்ணிறந்த விண்ணோர் தங்கட்கும் (இந்தத்) தவமெய்துமோ, எங்கட் கொருதவ மெய்தியவா!' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

முந்தைய பாடலில், அபிராமி முக்கடவுளராகவும் அவர்களின் சக்தியாகவும் பெண்ணுருவாகவும் இருந்தபடி அடியாருக்கு வானுலகப் பேறு வழங்குகிறாள் என்றார் பட்டர். தொடர்ந்து இந்தப் பாடலில் அபிராமியை விஷ்ணு வடிவாக எண்ணிப் பாடுகிறார். விஷ்ணுவானவள், விஷ்ணுவின் சக்தியானவள் என்று லலிதாசஹஸ்ரநாமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பகவு என்றால் பிளவு, பாதி, பாகம் என்று பொருள். படுத்திருக்கும் சக்தியின் (வைணவி) பாதங்கள் பிறைச்சந்திரனைப் போல் வளைந்து காணப்படுவதாலும், ஒளி நிறைந்து காணப்படுவதாலும், மலர்கள் தூவப்பட்டிருப்பதால் மணம் மிகுந்திருப்பதாகவும் பட்டர் பாடுவது சுவையான கற்பனை. தரங்கம் என்றால் அலை. பணி என்றால் பாம்பு என்று பொருள். கூரும் என்பதற்கு விரும்பும் என்று பொருள். துயிலும் என்பதற்கு பதில் துயில் கூரும் என்பானேன்? 'அபிராமி தூங்குவது போல் பாவனை செய்தால் - சும்மா படுத்திருக்க, ஓய்வெடுக்க விரும்பினால் - பரவாயில்லை; தூங்கினால் உலகமே இருண்டு விடுமே?' என்பது பட்டரின் கற்பனை.

தேவர்களுக்கும் கிடைக்காத வாய்ப்பு அபிராமியின் அடியவருக்குக் கிடைப்பதாகச் சொல்வதேன்? அபிராமியுடன் பல்வேறு வானுலகங்களில் கலந்து இருக்கும் வாய்ப்புடைய, பிறவாமை பேறு பெற்ற, தேவர்களை விட பட்டர் போன்ற மானிட அடியாரின் தவப்பயன் சிறந்ததா? கொஞ்சம் சிந்திப்போம். நம் உற்றார், உறவினர், பிள்ளைகள், நண்பர்கள்... இப்படி நம்முடன் இருப்பவர்களை நெருக்கமாக அறிவோம். அப்படியிருப்பினும் எத்தனை பேருடைய கால், காலழகு, பாத அழகைப் பற்றி அறிவோம் என்று கணக்கிட்டால் மிக மிக நெருங்கிய ஓரிருவரைத் தவிர நம்மால் எவரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தேவரும் மற்ற வானவரும் அபிராமியின் பாதங்களைக் கவனிக்கும் பேறு பெறாதவர்கள்; பட்டர் போன்ற அடியவர்கள் எப்போதும் அபிராமியின் மலர் போன்ற பாதங்களில் தலை வைத்து வணங்குவதால் அபிராமியின் பாத அழகை அறிந்தவர்கள் என்கிறார். சரி, இதில் என்ன தவப்பயன்? இந்து மத இறைவழிபாட்டிலும் மானிட வணக்க முறைகளிலும் பாதங்களைத் தொட்டு வணங்குவது முக்கியமான மரியாதையாகவும் பணிவின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. பாதங்களில் விழுந்தவன் பகைவனாக இருந்தாலும் உடனே வாழ்த்தத் தான் தோன்றும். யாராவது நம் காலில் விழ வருகிறார்கள் என்றால் முதல் வேலையாக தடுத்து ஒதுங்கத் தான் நினைப்போம் (சிலரைத் தவிர). மனிதருக்கே அந்நிலையென்றால், இறைவியின் கால்களில் என்னாளும் தலைவைத்து வணங்கும் வாய்ப்பு கிடைப்பதென்றால் அரிது தானே? இன்னொரு கருத்தும் சுவையானது. தேவர்களில் பலருக்கும் பல முகங்கள், கைகள் என்று இருந்தாலும் கால்கள் இரண்டு தான். ஏனெனில் காலைப் பொருத்தவரைக் குழப்பமே வரக்கூடாது என்பதற்காக. ஒரு முக வடிவத்தை வணங்குவதா அல்லது அதே கடவுளின் ஆறு முக வடிவத்தை வணங்குவதா என்பதில் இருக்கும் குழப்பம், இரண்டே திருவடிகளை வணங்குவதில் இல்லை. இதையொட்டிய சுவையான விளக்கத்தை, வாரியார் சொன்னதாக, திரு.ராஜகோபால் அவர்கள் தன்னுடைய அபிராமி அந்தாதி ஆங்கில மொழி பெயர்ப்பில் வழங்கியிருக்கிறார்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/15

வந்தேசரணம் புகுமடியாருக்கு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 34 ராகம்: சண்முகப்ரியா


வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தே னலங்கல் பருமணி ஆகமும் பாகமும்பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.

உன்னைத் தஞ்சம் புகும் அடியவர்களுக்கு பெரும்பேறான இறையுலகத்தை வழங்கும் நீயே, பிரம்மா விஷ்ணு சிவன் எனும் கடவுளராகவும் (அவர்களின் துணைவியராகவும்)- வேதங்களெனும் நெறிகளாவும் - பொன், கடல், மலர், சூரியன், சந்திரன் (இவை விளங்கும் நிலம், நீர், வளி, தீ, வான் எனவும்) எனும் ஐம்பொறிகளின் உறைவிடமாகவும் - விளங்குகிறாய்.

அந்தாதி பாடுவது எந்த விதத்திலும் சுலபமில்லை. கற்பனை, சொல்லாட்சி, பொருட்செறிவு எதுவும் வற்றாமல் தொடக்கத்தையும் முடிவையும் இணைத்துத் தொடர்ந்து நூறு பாடல்களைப் பாடுவது மிக மிக மிகச் சிலருக்கே சாத்தியம். பட்டருக்கு அந்த விதத்தில் என் மதிப்பையும் வணக்கங்களையும் குறையில்லாது சமர்ப்பிக்கிறேன்.

இருப்பினும், அபிராமி அந்தாதி பாடல்களில் என்னைக் குழப்பியடித்த சில பாடல்களில் இது ஒன்று என்று சொல்லிக்கொள்ள விழைகிறேன். பட்டர் தன் எண்ணங்களைப் பொருத்தமாக இணைக்கவில்லை என்று நினைக்கிறேன். குழப்பம் என்னுடைய அறிவு குறைவினாலும் இருக்கலாம். வந்தே, தந்தே, பைந்தே, செந்தே என நிரடும் எதுகைகள் தொடங்கி (ஐகாரம் இலக்கணப்படி சரியே), இணையாமல் அங்கே இங்கே என்று சுற்றும் கருத்தினால் கொஞ்சம் குழப்புகிறது. பல அரிய தமிழ்ச் சொற்களைப் பயன் படுத்தியிருந்தாலும், அவற்றைப் பொருத்தமுற இணைக்காததால் சுவையும் குறைவாகப் படுகிறது. பட்டர் அரை குறையாக விட்ட பாடலோ என்று தோன்றுகிறது.

இந்தப் பாடலுக்குப் பொருள் சொன்ன அறிஞர்களின் கருத்தை வைத்துப் பார்த்தோமானால் இந்த முரண்பாடு இன்னும் தெளிவாகிறதோ என அஞ்சுகிறேன். முதல் ஒன்றரை வரிகளின் 'தஞ்சம் புகுந்தவர்களுக்கு வானுலகத்தை பரிவோடு அளித்து' என்பது புரிகிறது. முந்தைய பாடலின் 'காலனின் அழைப்பில் நடுங்கி அம்மா என்று கதறும் பொழுது அஞ்சாதே என்று சொல்லி ஓடி வந்து காக்க வேண்டும்' என்ற கருத்தோடு ஒட்டி வருகிறது. இதற்குப் பிறகு 'தான் போயிருக்கும்...திங்களுமே' வரிகளை முதல் ஒன்றரை வரிகளுடன் இணைக்க முடியவில்லை. 'வானுலகத்தைக் கொடுத்து விட்டு நீ பிரம்மனாகவும், விஷ்ணுவாகவும், சிவனின் இடது பாகமாகவும் போய் இருக்கிறாய்' என்று சிலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'சரசுவதி, மகாலட்சுமி, துர்க்கையாக இருக்கிறாய்' என்று கடவுளரின் பெண் துணைகளாகச் சிலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். சதுர்முகம் என்பதற்கு பிரம்மன் என்றும் காயத்ரி என்றும் சிலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். திங்களைக் காரணம் காட்டி சந்திரசேகரனின் துணைவி சந்திரசேகரி என்று சிலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். மலரின் மணமாகவும், தேனின் இனிமையாகவும், சூரிய சந்திரர்களின் வெப்ப, குளிர் கதிராகவும் இருப்பவள் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

மூன்றாம் வரியில் வரும் பைந்தேன், அலங்கல், மணி, ஆகம் என்பவை கடலில் இருக்கும் ஒரு கடவுளைக் குறிப்பது போல் தொனித்தாலும் சொற்களைப் பிரித்தால் 'மாலை அணிந்த' என்ற பொருள் மட்டுமே வருகிறது. பைந்தேன் என்பது பசுமையான தேன், அதாவது, புதிய தேன் என்ற பொருளில் வருகிறது. அலங்கல் என்றால் மாலை. பரு என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள். ஆகம் என்பதற்கு உடல், நெஞ்சு என்று பொருள். பாற்கடலைக் கடைந்த பொழுது தோன்றிய அமுதம் (பைந்தேன்) போல் வாடாத, எழில் வற்றாத, ஒளி கொண்ட மணி, மாலை இவற்றை நெஞ்சில் அணிந்த திருமாலையோ மகாலட்சுமியையோ குறிப்பதென்பது அறிஞர்கள் கருத்து. பைந்தேன் அலங்கல் என்பது என்றைக்கும் வாடாத துளசி மாலை என்ற பொருளில் கொள்ளலாம். அந்த வகையில் இந்த வரி விஷ்ணு அல்லது மகாலட்சுமியைக் குறிக்கிறது எனலாம்.

முந்தைய வரியின் சதுர்முகம் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மன் என்ற பொருளில் வந்தாலும், நான்கு வேதங்களையும் குறிக்கும். நான்கு வேதங்களையும் முகமாகக் கொண்டவள் காயத்ரி எனும் பெண் கடவுள் என்பது, பிரம்மன் காயத்ரியை காரணமில்லாமல் காரியத்துக்காக மணம் புரிந்து கொண்ட புராணக் கதையிலிருந்து தெரிய வருகிறது. இந்த வரியின் ஆகம், ஆகமம் என்பதன் சுருக்கமாகவும் இருக்கலாம். ஆகமம் என்பது வேதம். வேதமும் பருவில், கடலில், தோன்றியதாகச் சொல்கிறது புராணம். அந்த வகையில் முந்தைய வரியும் மூன்றாம் வரியும் கொஞ்சம் ஒட்டுகிறது. சக்தியே மகாலட்சுமி, மகாலட்சுமியே காயத்ரி என்று தலையைச் சுற்றித் தொட்டாலும், ஒட்டுகிறது. 'வானுலகம் வழங்கி விட்டு முக்கடவுளாக இருக்கிறாய்' என்ற பட்டர், அடுத்த வரிகளில் 'செந்தேன் மலர், அலர் கதிர் ஞாயிறு, திங்கள் என்று உப கடவுளராகவும் இருக்கிறாய்' என்றதாகவும் விளக்கியிருக்கிறார்கள். 'எல்லாம் நீயே' என்ற பட்டர் பல முறை சொல்லியிருப்பதால் இதையும் ஏற்றுக் கொள்ளலாம்.

எப்படிப் பார்த்தாலும், 'வானுலகம் தந்தே தான் போயிருக்கும்' என்பது தொக்கியே நிற்கிறது. மற்றப் பாடல்களில் போல் கருத்து நிறைவு பெறவில்லை என்பது என் சில்லறை அறிவின் சிறு பிடுங்கல். பட்டர் சொல்லுக்கும் அறிஞர் பொருளுக்கும் இடையே என் சிற்றறிவைக் கொண்டு வர எனக்கு வீரமில்லை. விவேகமும் குறை. அதனால் பாடல் விளங்காவிட்டாலும், அறிஞர்கள் கருத்தின் பின்னே ஒளிந்து கொண்டு 'கடவுளராகவும், நெறிகளாகவும், ஐம்பொறிகளாகவும் இருக்கும் அபிராமியே தஞ்சம் அடைந்தவருக்கு வானுலகத்தையும் அளிக்க வல்லவள்' என்று பட்டர் பாட்டுக்குப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/14

இழைக்கும் வினைவழியே...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 33 ராகம்: சண்முகப்ரியா


இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சலென்பாய் அத்தசித்த மெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் பொழுதுன்னையே அன்னையே என்பனோடிவந்தே

என் தந்தையாகிய சிவனின் மனம் முழுதும் நிறைந்திருக்கும் மணங்கமழ் சாந்து பூசிய கும்பம் போன்ற மார்பகங்களையுடைய தாமரை முகத்தவளே! எளியோரைக் காக்கும் யாமளையே! என்னுடைய தீவினைகளின் பயனாக எமன் என்னை அச்சுறுத்தி அழைக்கும் பொழுது, அம்மா என்று வருந்தி உனை அழைப்பேன்; நீ ஓடி வந்து கலங்காதே என்று சொல்லி என்னைக் காத்தருள்வாய்.

அத்தன் என்றால் தந்தை என்று பொருள். அத்த சித்தமெல்லாம் என்பதை அத்தர்+சித்தம்+எல்லாம் எனப்பிரிக்க வேண்டும். 'தந்தை மனம் முழுதும்' என்று பொருள். களபம் என்றால் சேறு, சாந்து என்று பொருள். இங்கே மஞ்சள், குங்குமம் மற்றும் சந்தனம் கலந்த மணங்கமழ் சாந்து என்ற பொருளில் வருகிறது. யாமளைக்குப் பொருளை முன்பே பார்த்திருக்கிறோம். உழைக்கும் என்ற சொல்லுக்கு வருந்தும், நோகும் என்று பொருள் உண்டு.

இறையிலக்கியங்களில் பெண் கடவுளரின் உடலழகை விவரித்துப் பாடுவதைப் பற்றி முன்பு எழுதியிருந்தேன். இந்தப் பாடலின் முதல் வரியில் 'கும்பம் போன்ற முலை' என்றும் அடுத்த வரியில் 'அன்னையே' என்று வருவதையும் கவனிக்கவும். பசிக்கும் பாசத்துக்கும் அழும் பிள்ளைக்கு அன்னையின் நெஞ்சமே தஞ்சம். அந்தக் கருத்தில் "அம்மா என்று வருந்தி உன்னை அழைப்பேன்; நீ ஓடி வரவேண்டும்" என்று பட்டர் அபிராமியை ஏங்கிப் பாடும் பொழுது, மின்னல் இடுப்பை உடையவளே என்று வர்ணிக்காமல், அபிராமியின் நெஞ்சம் பட்டரின் நினைவுக்கு வருவது பொருத்தமாகப் படுகிறது. அஞ்சி அழும் பிள்ளையை அணைத்துக் கொண்ட தாய் என்ன சொல்லுவாள்? "நானிருக்கிறேன் பார். பயப்படாதே. அம்மா வந்துவிட்டேன் பார்" என்பாள். அணைப்பில் கிடைக்கும் தஞ்சம் ஆதரவான மொழியில் கிடைக்கும் பாதுகாப்பாக மேம்படுகிறது. (தந்தையின் அணைப்பு கிடைத்தாலும், கூடவே 'என்ன எல்லாத்துக்கும் பயந்து நடுங்குறதா?' என்ற வசையும் கிடைக்கும்). ஒரு குழந்தை போல் பட்டர் அபிராமியிடம் தஞ்சமும் ஆறுதலும் எதிர்பார்ப்பது சுவை.

காலனின் வரவைத் தீவினைப் பயனென்று கருதி அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வினைவழியே என்று இங்கே பொதுவாகச் சொன்னாலும், இறக்கும் தறுவாயில் தீவினை அதிகமாக இருந்தால் எமனின் தூதர்களும், நல்வினை அதிகமாக இருந்தால் சிவனின் தூதர்களும் வந்து அழைத்துச் செல்வார்கள் என்கிறது இந்து மதம். இங்கே 'அடுங்காலன்' என்பதால் தன்னுடைய தீவினைகள் அதிகம் என்று பட்டர் நம்புவதாக அறிஞர்கள் விளக்கம் சொல்லியிருப்பது பொருத்தமே.

'மரண அச்சத்தைப் போக்குகிறவள்' என்ற பொருளில் லலிதா சஹஸ்ரநாமத்தில் பலமுறை வணங்கப்படுகிறாள் திரிபுரசுந்தரி.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/13

ஆசைக்கடலில் அகப்பட்டு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 32 ராகம்: சண்முகப்ரியா


ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் எனும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்தாண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே.

சிவனின் ஒரு பாகமாக விளங்கும் அழகிய அபிராமிப் பெண்ணே! இந்தப் பிறவியின் பந்தபாசத் தொடர்பினாலுண்டான கடல் போல் அளவில்லாத ஆசைகளுக்கு அடிமையாகி நான் செய்த செயல்களின் விளைவினால், கருணையில்லாத காலனின் கைப்பிடியில் சிக்கித் தவிக்க இருந்த என்னை, தக்க நேரத்தில் உன் மணமிகு தாமரை மலர்பாதங்களை நீயாகவே என் தலைமீது இட்டு என்னை நல்வழிப்படுத்திய உன் கருணையை எப்படிப் புகழ்ந்து பாடுவேன்?

ஆசையைக் கடலுக்கு ஒப்பிடுவானேன்? கரையில் நின்று கொண்டிருக்கிறோம். வெண்ணிற அலைகள் பட்டுத்துண்டுகள் போல் காலை வருடி விட வருகின்றன. 'வா' என்கிறது சிற்றலை; தூய நிறமுடைய அலையாயிற்றே, அழகாக இருக்கிறதே, உடலைத் தொட்டு கிளுகிளுப்பூட்டுகிறதே, மனதில் மகிழ்ச்சியூட்டுகிறதே... என்றெல்லாம் எண்ணிக் கால் வைக்கிறோம். 'இன்னும் கொஞ்சம் தூரம் வா, கால் என்ன உடலையும் வருடுகிறேன்' என்கிறது அலை (கடல்); குளிக்கிறோம். 'முத்து, மீன் என்று பலவற்றையும் கொள்ளலாம் வா' என்று இன்னும் இழுக்கிறது; இன்னும் போகிறோம். திடீரென்று ஆழத்தை உணர்ந்து, 'அடடா இந்த ஆழம் அப்போது வந்த அலையில் புரியவில்லையே!' என்று திரும்ப நினைக்கிறோம். தாமதமாகி விட்டது; கடலின் ஆழத்தில் தத்தளிக்கத் தொடங்கிவிட்டோம். ஆசை எனபதும் அப்படித்தான். ஆசையின் போர்வைக்குள் மறைந்திருப்பது அழகான விரல்கள் மட்டுமல்ல என்பதை உணரும் பொழுது நிறைய இழந்து விட்டதைப் புரிந்து கொள்கிறோம். கபடமில்லாமல் நம்மைக் கவரும் ஆசை மெள்ள நம்மைக் கயவனாக்க வல்லது என்பதை முதலில் அறிய இயலாததால், ஆசை கடலைப் போன்றது. ஆசைக் கடலில் மூழ்கினால் முத்தோ மீனோ எடுக்கப் போவதில்லை; இருப்பதையும் இழக்கப் போகிறோம் என்பதனால் - ஆசைக்கடலில் மூழ்குவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்பதால் - ஆசைக்குத் துன்பக்கடல் என்றும் பெயர். (துன்பக்கடலில் தோணி என்ற உவமையை இறையிலக்கியங்களில் அடிக்கடி காணலாம்).

அந்தகன் என்றால் எமன். எமன் அருளற்றவனா? எமனுக்கு அருளும் கிடையாது, வஞ்சமும் கிடையாது என்பார்கள். சமநிலையுடைவன் என்று கடவுளரில் எமனுக்கு ஒரு பெயர் உண்டு. அதனால் எமனை நீதிக்குத் தலைவனென்றும் பாடியிருக்கிறார்கள். தவறு செய்கிறோம். பெற்றோர், உற்றார், ஆசிரியர் என்று யாராவது நம்மை தண்டிக்கிறார்கள்; அந்த நேரத்தில் தண்டனை கொடுப்பவர்களுக்குக் கருணையே இல்லையா என்று நினைக்கிறோம். பட்டர் இங்கே சிறுபிள்ளை; தாயை எண்ணிக் கலங்குகிறார். அதனால் தண்டனை கொடுக்கும் எமன் கருணையற்றவனாகத் தோன்றுகிறான். அரசனை இங்கே அருளற்றவன் என்று தாக்குவதாகவும் நினைக்கிறேன். "அம்மா அபிராமி, அப்படியென்ன தவறு செய்து விட்டேன்? திருடினேனா? கொலை செய்தேனா? அமாவாசையைப் பௌர்ணமியென்றது அப்படியென்ன குற்றமாகி விட்டது? இதற்கு தலையை வெட்டுவேன் என்று சொல்லும் அரசனுக்கு கருணையே இல்லையா? இப்படிப்பட்ட கருணையே இல்லாதவனுக்குப் பணிந்து வாழ்வதும் ஒரு வாழ்வா?" என்பது உட்பொருள்.

தண்டனை கொடுப்பவர்களுக்கும் நிறைவேற்றுபவர்களுக்கும் கருணை கிடையாது என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஒரு இந்துமதக் குட்டிக்கதை.

இறந்தபிறகு எமனுலகம் சென்றானாம் ராமசாமி. எமனின் காரியதரிசியான சித்திரகுப்தன் ராமசாமியின் குற்றங்களையெல்லாம் பட்டியலிட்டுச் சொன்னதும் எமன், "ஐயா ராமசாமி... கொதிக்கும் எண்ணைக் குடுவைக்குள் தள்ளுவது தான் உங்களுக்குச் சரியான தண்டனை" என்றானாம்.

ராமசாமி எமனைப் பார்த்து, "ஐயா, தருமதேவரே, கொஞ்சம் பொறுங்க. என்னை உலகில் படைச்சது யார்?" என்று கேட்டானாம்.

"பிரம்மன் தான் படைக்கும் கடவுள்" என்றானாம் எமன்.

"அப்படின்னா அவர் தான் இந்தத் தவறுக்கெல்லாம் காரணம்; என்னைப் படைக்காமலிருந்தால் இந்த தவறுகளெல்லாம் நடந்தே இருக்காதே? அதனால அவருக்கும் இந்தத் தண்டனையில் பங்குண்டு" என்றானாம் ராமசாமி.

"ராமசாமி அவர்களே, நீங்கள் சொல்வது சரியாகத் தோன்றுகிறது; பையா, போய் பிரம்மனை அழைத்து வா" என்றானாம் எமன்.

பிரம்மன் வந்ததும் எமன் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி இன்னொரு எண்ணைக் குடுவை தயார் செய்யச் சொன்னானாம். பிரம்மன் உடனே, "இதென்ன கூத்து? எனக்குப் படைக்க மட்டும் தான் தெரியும். அது என் தொழில். என் தொழிலைச் செய்வது எப்படிக் குற்றமாகும்? காக்கும் தொழிலைச் செய்வது விஷ்ணு. அவர் தான் இதெல்லாம் நிகழாமல் ராமசாமியைக் காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால் பாதி நேரம் அங்கே இங்கே ஒளிந்து கொண்டு திருட்டு, ஏமாத்து வேலை, பெண்கள் பின்னால் சுத்துவது... என்பதே அவருக்கு வழக்கமாகி விட்டது. அவர்தான் இந்தக் குற்றங்களுக்கெல்லாம் பொறுப்பு" என்றானாம்.

"அப்ப விஷ்ணுவுக்கும் என் தண்டனையில பங்குண்டு தருமதேவரே" என்றானாம் ராமசாமி.

"மேதகு ராமசாமியாரே, சரியாகச் சொன்னீர்கள். பையா, விஷ்ணுவைக் கூட்டி வா" என்றானாம் எமன்.

விஷ்ணுவோ "சரியான எருமை மாடாக இருப்பீர் போலிருக்கிறதே? சிவன் தானய்யா இதற்கெல்லாம் காரணம். ஒரு வேலைக்கு லாயக்கில்லாமல் சும்மா ஆடிக்கொண்டிருக்கம் அந்த ஆளைக் கேளும். மாயையைக் கட்டுப்படுத்தி அழிக்கும் கடவுள் இந்த மாதிரி பாவங்களையெல்லாம் அழித்திருந்தால் பிரச்சினையே இல்லையே? சும்மா உலகத்தை அழிக்கிறேன்னுட்டு கடைசி வரைக்கும் நாட்டியம் ஆடுறது யாருக்கு தான் தெரியாது? இப்படியே விட்டுக்கிட்டு இருந்தா இவரு அழிப்பானேன்? உலகம் தானே அழிஞ்சு போகுமே? அதனால அவரைப் போய் கேளுயா" என்றானாம்.

"பையா, சிவனைக் கூட்டி வா, ஓடு ஓடு" என்றானாம் எமன்.

சிவன் வந்ததும் வழக்கம் போல் நெற்றிக்கண்ணைத் திறப்பதாக பயமுறுத்த, ராமசாமி தலையிட்டு "நிறுத்துங்க சிவனாரே. உங்க வேலையைச் செய்யாம நெத்திக்கண்ணைத் திறப்பேன்னு சொன்னா எப்படி? தாராளமா பாருங்க; எப்படியும் எண்ணைக் கொப்புறைல போடுவேன்னு சொல்லியிருக்காரு எமன், என்ன பெரிய நெத்திக்கண்ணு? நாட்டியம் ஆடுறதை நிறுத்திட்டு ஒழுங்காக வேலையைப் பாத்திருக்க வேணாம்?" என்றானாம்.

'என்ன இவன், நெற்றிக்கண்ணுக்குக் கூட அஞ்சமாட்டான் போலிருக்கிறதே?!' என்று சிவன் கொஞ்சம் சிந்தித்து விட்டு, "நாட்டியத்தை நிறுத்துறதா? எனக்கு உலகத்தை அழிக்க மட்டும் தான் தெரியும். இதற்கெல்லாம் காரணம் மற்ற கடவுள்கள்" என்று கல்வி, தொழில், திருமணம், செல்வம், இளமை, மூப்பு, வீரம், காதல், பிள்ளைப்பேறு, நிலம், அறுவடை, உணவு, உடை, பொன், பொருள் என்று வரிசையாக ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாகச் சொல்லப்படும் கடவுளரைச் சுட்டிக்காட்டி, "அவங்களையெல்லாம் நிறுத்தச் சொல்லுங்க; அப்ப நானும் நிறுத்துறேன்" என்றானாம் ஆவேசத்துடன்.

ஆக, ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி முப்பத்து முக்கோடி தேவர்களும் எமனுலகம் வந்து விட்டார்களாம். அப்படியும் எவரும் எதற்கும் பொறுப்பேற்காமல் அவரவர் தொழிலைச் செய்வதாகவும், தொழில் தர்மம் குற்றமாகாது என்றும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்களாம். எமனோ நீதி எல்லோருக்கும் பொது என்று தீர்மானமாக இருந்தானாம். அத்தனை பேருக்கும் எண்ணைக் குடுவைகளுக்கு எங்கே போவேன் என்று எமன் தலையில் கை வைத்து உட்காரவும், கூச்சல் பொறுக்காத ராமசாமி எமனைப் பார்த்து, "என்னய்யா, இங்கே வந்தும் பெரிய தலைவலியா போச்சு!...இந்தாய்யா எமன், ஏன்னு கேட்டா எல்லாரையும் குற்றவாளினு கொண்டாந்துட்டே நீ.. இவங்கள்ள யாரும் எதுக்கும் பொறுப்பேத்துக்குவாங்கன்னு தோணலை... இவங்களுக்கு எண்ணைக் குடுவையே மேல். நல்லா சூடு பண்ணச்சொல்லு, குதிக்கிறேன்' என்றானாம்.

விலகிச் சென்றதற்கு மன்னியுங்கள். பட்டர் பாடலுக்குத் திரும்புகிறேன்.

ஈசன் என்றால் கடவுள் என்று பொதுவாக வழங்கப்பட்டாலும், அது சிவனைக் குறிப்பதாகும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றைக் குறிப்பதாகும் (வடகிழக்கு பார்த்த முகம்). இங்கே ஈசர் பாகத்து நேரிழை (பெண்), அர்த்தநாரி வடிவத்தைக் குறிக்கிறது. இந்தப் பாடல் 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர்' என்ற குறளை நினைவூட்டுகிறது.

அபிராமி அந்தாதி பற்றி இணையத்தில் நிறைய விளக்கங்கள் கிடைக்கின்றன. இறையிலக்கியங்கள் பற்றி நிறைய எழுதி வரும் திரு.குமரன் அவர்களின் அபிராமி அந்தாதி வலைப்பூ பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். அவருடைய வலைப்பூவின் சிறப்பு, எளிமையான விளக்கங்கள் மட்டுமல்ல மெய்சிலிர்க்க வைக்கும் சித்திரங்களும் கூட. எங்கே பிடித்தார் படங்களை என்று தெரியவில்லை. குமரனின் பதிவில் இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடலுக்கான விளக்கமும் படமும் அருமை.

தவறு செய்தோமென்று வையுங்கள்; உலகில் நம்மைச் சுற்றியிருக்கும் அத்தனை பேரும் நம்மைக் குற்றவாளி என்ற நோக்கத்தில் தான் பார்ப்பார்கள் - ஒருவரைத் தவிர. தாய். தாய் மட்டும் 'தன்னுடைய சேய்' என்பதை முதலில் நினைத்து, பிறகே குற்றத்தின் சுமையைக் கணக்கிடுவாள். எத்தகைய குற்றம் கோபம் வெறுப்பு இருந்தாலும், தானாகவே வலிய வந்து அணைப்பவள் தாய் மட்டும் தான். அதனால் பட்டரும் அபிராமியைத் தாயாகப் பார்த்து "வலிய வந்து என்னை நல்வழிப் படுத்த அருள் செய்தாய், உன் கருணையை எப்படிப் புகழுவேன்?" என்றார். அபிராமி பட்டரின் தாயானாலும் சரி, அப்பாதுரையின் தாயானாலும் சரி, அத்தனை பேரின் தாயானாலும் சரி.. தாயின் கருணையைப் பாட எந்த மொழியிலும் சொல்லும் பொருளும் போதாது.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/12

உமையும் உமையொருபாகனும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி: நூல் 31 ராகம்: சண்முகப்ரியா


உமையும் உமையொரு பாகனும் ஏகவுருவில் வந்திங்கு
எமையும் தமக்கன்பு செய்ய வைத்தார் இனியெண்ணுதற்கு
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயுமில்லை
அமையும் அமையுறுதோளியர் மேல்வைத்த ஆசையுமே.

ஒளி போன்ற உமையவளும், அவளைத் தன்னுடலின் ஒரு பாகமாக ஏற்ற சிவபெருமானும் ஓருருவாக இணைந்து அர்த்தநாரியெனும் வடிவத்தில் என் கண்ணில் தோன்றி உள்ளத்தில் நிறைந்ததுடன், என்னை அவர்கள் மேல் பக்தியுண்டாகும்படி செய்துவிட்டனர்; (அதனால்) இனி இன்னொரு மதத்தையோ கடவுளையோ எண்ணப் போவதில்லை; பிறவாமை நிலையடையப் போவதால் எந்தத் தாயும் என்னை இனிப் பெற்றெடுக்க வேண்டியதில்லை; என் மனதில் இனி நிறையப்போவது அழகான தோளையுடைய அபிராமியின் மேல் நான் வைத்திருக்கும் அன்பு மட்டுமே.

அர்த்தநாரியைத் தொடர்ந்து போற்றுகிறார் பட்டர். அபிராமியின் அருளையே எண்ணித் தவமிருப்பதால் இனி வேறு சிந்தனைகளுக்கு இடமுமில்லை நேரமுமில்லை என்கிறார். 'சமயம்' என்ற சொல், இங்கே எதுகை பொருட்டு 'சமையம்' ஆனது. 'எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை' என்பதற்கு 'வேறு மதங்களோ தெயவங்களோ தேவையில்லை' என்று பட்டர் சொல்வதாக அறிஞர்கள் விளக்கியிருக்கிறார்கள். அப்படி இருக்கலாம். அல்லது காலம் என்ற நேர்பொருளாகக் கொண்டு வேறு சிந்தனைகளுக்கு நேரமில்லை என்றும் பட்டர் சொல்லியிருக்கலாம்.

'அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசை' என்பதற்கு 'மூங்கில் போன்ற தோளையுடைய பெண்கள் மீதான மோகம்' என்று அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். சிலர் 'பெண்' என்பதை 'பெண்-ஆண்' என்பதற்கான பொதுச் சொல்லாக எடுத்துக் கொண்டு 'சிற்றின்ப மோகம்' என்ற பொருளில் கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதாவது 'உடல் பற்று இனி அடங்கியது' என்று பட்டரின் வரிகளுக்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்து மத இறையிலக்கியங்களில் எனக்கு உடன்பாடு இல்லாத பலவற்றுள் தலையாயது இப்படிப் பெண்களைக் காரணமில்லாமல் கேவலப்படுத்துவது தான். பெண்களோடு முடிந்த வரை இன்பம் கொண்டாடி விட்டு திடீரென்று 'சிவனே, குகனே, ராமா, க்ருஷ்ணா போதுமப்பா இந்தப் பெண் பித்து, காயமே பொய்...' என்று பெண்ணைப் பலவாறாகத் தரையில் போட்டு மிதித்து விடும் கருத்துக்கள் என்னை மிகவும் வருந்த வைக்கின்றன. 'ஓட்டையில் பிறந்து ஓட்டையில் இருந்து ஓட்டைக்குள் புகும் கேவலம் ஒழிய' என்று விரக்தியாகப் பாடுவது வேடிக்கையாகக் கூட இருக்கிறது. திடீரென்று பெண்கள் கேவலமாகி விட்டார்களா என்று எண்ணத் தோன்றுகிறது. சில அறிஞர்கள் அதற்கும் விளக்கம் சொல்கிறார்கள். பெண்ணைக் கேவலமாகச் சொல்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, பெண்ணாசை என்பதை சபலம், மாயை, மோகம் என்ற பொருளில் அனைவருக்கும் பொருந்துவதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள் (வியாசர் உள்பட). இந்த விளக்கம் இன்னும் மோசமாகப் படுகிறது. உலகத்தில் இருக்கக் கூடிய அத்தனை தீமைகளுக்கும் பெண்ணாசை என்று பெயரிட்டு விடுவதா? பெண்ணைத் தன் உடலில் பாதியாக ஏற்றுக் கொண்ட ஒரு கடவுளை வழிபட்டுப் போற்றிய சைவப் புலவர்களே பெண்களை மிகவும் கீழ்த்தரமாகச் சித்தரிக்கிறார்கள் என்பதை எண்ணும் பொழுது இந்த இரட்டை நிலையை ஏற்கவே முடியவில்லை. ஆதி சங்கரரிலிருந்து இதே கதை தான்.

பட்டருக்கு வருகிறேன். இந்தக் குறிப்பிட்ட பாடலின் கடைசி வரி 'பெண்ணாசை ஒழிந்தது' என்ற பொருளில் வரவில்லை என்று நினைக்கிறேன். ஆசை என்பதற்கு அன்பு என்று பொருள். அமையும் என்ற சொல்லுக்கு அடங்கும் என்ற பொருள் இருப்பது போல் உண்டாகும், நிறையும் என்றும் பொருளுண்டு. அமை என்பதற்கு அழகான, திடமான, மூங்கில், நாணல் என்றும் பொருளுண்டு. தோளியர் என்பதற்கு தோளை உடையவர் என்று பொருள். திடத்தையும் வலிவையும் எடுத்துக் காட்டுவதற்காக மூங்கில் தோளுடையான் என்று ஆண்களைச் சொல்வது வழக்கம். இங்கே திடமான, அழகான, பளபளப்பான என்ற பொருளில் மூங்கில் தோளுடையவள் என்று பெண்ணைக் குறிப்பிட்டிருக்கலாம்; அல்லது நாணல் போல் வளைந்து கொடுக்கக் கூடிய என்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும் இங்கே 'அமையுறு தோளியர்' என்று பட்டர் சொல்லியிருப்பது அபிராமியைத் தான் என்று நினைக்கிறேன். 'தோளியர்' என்ற சொல்லை இறைக்கண்ணியம் கருதி 'தோளியர்' என்று எடுத்தாண்டிருக்கிறாரே தவிர, பன்மை கருதியல்ல என்று நினைக்கிறேன். அபிராமியின் உடலழகை மிகையாக வர்ணித்து விட்டு, கணவருடன் இணைந்திருக்கும் காட்சிகளைச் சொல்லிவிட்டு, அன்னை என்று பலமுறை உருகி வணங்கி விட்டு, அதே அன்னையிடம் 'உன்னால் பெண்ணாசை அழிந்தது' என்று சொல்வார் என்பதை ஏற்க முடியவில்லை. மேலும், பெண்ணாசை ஒழிந்தது என்று கருத்துக்கே இங்கே அவசியமில்லை என்றும் தோன்றுகிறது. அதனால், 'அழகிய தோளுடைய அபிராமி மேலிருக்கும் அன்பு மட்டுமே இனி மனதில் நிறைந்து நிலைக்கும்' என்று பட்டர் பாடியதாகக் கருதுகிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/11

அன்றே தடுத்தென்னை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 30 ராகம்: மோகனம்


அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய் கொண்டதல்ல வென்கை
நன்றே உனக்கினி நான் என்செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே
ஒன்றே பலஉருவே அருவேயென் உமையவளே

தனி உருவம் கொண்டும் பல உருவங்களிலும் தன்னை வெளிப்படுத்தும் உருவங்களுக்கப்பாற்பட்ட ஒளி போன்றவளே! எத்தனையோ பிறவிகளுக்கு முன்பே என்னைத் தடுத்து உன் வழியில் திருப்பி உனது பொறுப்பாக ஏற்றுக் கொண்டு விட்டாய்; இனி என்னைக் கைவிடுவது முறையல்ல. உன் பொறுப்பில் வந்த பிறகு, என் செயல்களின் விளைவாகப் பிறவிக்கடலில் மீண்டும் மூழ்கினாலும் என்னைப் பிறவாமை எனும் கரையில் சேர்க்கும் பொறுப்பை ஏற்று அருள வேண்டும்.

அறிந்து வழிபட எதுவும் தேவையில்லையென்றாலும், கடவுள் என்று தெரிந்து வழிபட ஏதோ ஒரு உருவத்தைக் கண்ணிலும் மனதிலும் கொள்ள வேண்டியிருக்கிறது. அசைவன அசையாதன என்று நாம் கண்டு அறியக்கூடிய வகையில் அங்குமிங்கும் நிறைந்திருப்பதாக நம்புவதால், நம்மில் பெரும்பாலோர் கடவுளைப் பல வடிவங்களில் காண்கிறோம். சிலர் கடவுளை உருவமே இல்லாத வகையில் அருவாகக் காண்கிறோம்; தனக்குள் கடவுள் என்ற தத்துவமும் இதில் அடக்கம். முன் பாடல்களில் சொல்வது போல் தனிப்பெரும் சக்தியாகவும், முப்பெரும் கடவுளர் மற்றும் பிற தேவர்கள் போலவும், உருவம் விவரிக்க இயலாத வேதங்கள் போலவும், உருவம் எனும் வரைக்கே உட்படாத எங்கும் நிறைந்திருக்கும் தன்மையுடைத்தவள் என்றும் பட்டர் அபிராமியை அறிந்ததால் 'ஒன்றே, பல உருவே, அருவே' என்றார். அபிராமியை எந்த வடிவிலும் காணலாம் என்பதே பட்டரின் கருத்து. உமையவள் என்பதை உமா+அவள் எனப் பிரிக்கலாம். உமா என்ற சொல்லுக்கு ஒளி என்ற பொருளை அறிவோம். ஒளிக்குத் தனிப்பட்ட உருவம் கிடையாது. விளக்காகவும் பார்க்கலாம்; தீயாகவும் பார்க்கலாம். நேராகவும் மறைமுகமாகவும் அறியலாம்; சூரியனும் ஒளி தான், நிலவும் ஒளி தான். கைக்குள் அடக்கி வைத்துப் பார்க்கலாம்; அடங்க முடியாத அனலாகவும் பார்க்கலாம். உருவ வரைகளுக்கப்பாற்பட்ட தத்துவம் என்று சொல்லிவிட்டு அதற்குப் பொருத்தமாக அபிராமியை ஒளி என்று அழைத்தது பட்டரின் சொல்லாட்சிக்கு உதாரணம். உமையவளே என்பதற்கு பதில் இமையவளே என்றோ மலைமகளே என்றோ அழைக்காதது கருத்துச் செறிவைத் தொடர்ந்து சுவைக்க வைக்கிறது என்று நினைக்கிறேன்.

'அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய்' என்பதற்கு 'இளம் பிராயத்திலேயே' என்றும் 'பல பிறவிகளாய்' என்றும் பல வகையில் பொருள் சொல்லியிருக்கிறார்கள் அறிஞர்கள். பட்டரின் அன்றைய நிலையை எண்ணும் பொழுது, 'இன்ன செய்கிறோம் என்ற அறிவைப் பெறுவதற்கு முன்பே' என்பது பொருத்தமாகத் தோன்றுகிறது. தவறான திதியைச் சொல்லி அவஸ்தைக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பட்டர் கரை சேர அபிராமியின் துணையை வேண்டிப் பாடுகிறார் என்ற வெளிப்பொருள் தெள்ளெனத் தெரிந்தும், இங்கே உட்பொருள் அதுவல்ல என்று கருதுகிறேன். முந்தைய பாடல்களின் தொடர்ச்சியாக முக்திக்கு வித்தாகவும், முளைத்தெழுந்த புத்தியாகவும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை என்று அபிராமியைக் கருதுவதால் அதிலிருந்து பிறழாமல் தொடர்வதாக நினைக்கிறேன். முக்திப் பாதையில் 'இறையண்மை' முதல் நிலையாகச் சொல்லப்பட்டிருக்கிறதை அறிவோம். பல பிறவிகள் எடுத்து அபிராமியை வழிபட்டதால் மனிதப் பிறவி கிடைத்ததையும் முன்பே பாடியிருப்பதால், இங்கே 'அன்றே' என்பது 'முன் பிறவிகளிலேயே' என்ற பொருளிலும் வருவதாக நினைக்கிறேன். மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நீயாக வேண்டும் என்று இந்த மனிதப் பிறவியிலும் அபிராமியையே எண்ணிக் கொண்டிருந்ததால் அந்த அண்மையைப் பெற்றுவிட்ட பட்டர், அதிலிருந்து விலகி இங்கே அரசனுக்காக வேறு ஏதாவது சொல்லிப் பணிந்து விடக்கூடாதே என்ற அச்சத்தில் பாடுவதாக நினைக்கிறேன்.

'உன்னையே நினைத்துக் கொண்டிருந்ததால் இந்த நிலை ஏற்பட்டது; இதற்கு நீ தான் பொறுப்பு. இந்த ஆட்டத்துக்கு வரவில்லை என்று இனி நீ ஓட முடியாது' என்று அபிராமியை விளையாட்டாகக் கடிந்து கொள்வதாகவும் தோன்றுகிறது. என் செயல்களுக்கு நீ தான் தூண்டுதல். நீ எண்ணம்; நான் செயல். நீ கருவி; நான் கலை. நீ இயக்குனர்; நான் நடிகன். 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே' என்கிறார் பட்டர். தன் செயலுக்கு அபிராமியைத் தூண்டுதலாகச் சொல்வது வேடிக்கைச் சுவையென்றாலும், அது அபிராமியிடம் அவர் பெற்றிருக்கும் அண்மையையும் குறிக்கிறது.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/07/10

சித்தியும் சித்திதரும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:29 | ராகம்:மோகனம்


சித்தியும் சித்திதரும் தெய்வமாகித் திகழும் பரா
சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவமுயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே.

என்னைக் காத்தருளும் அழகிய பெண்ணே (அபிராமி)! உன்னை எண்ணித் தவமிருப்பவருக்கு அவ்வாறு தவமிருக்கும் எண்ணத்தையும் தவத்தைத் தொடர வேண்டி அறிவையும் சக்தியையும் அளித்து, பின் வெற்றியையும் உயர்வான முக்தியையும் பேரறிவையும் தந்து, காத்தருளுகிறாய்! (ஏனெனில்) எண்ணம், அறிவு, சக்தி, முக்தி, வெற்றி, பேரறிவு எனும் அனைத்தும் நீயே தான்.

சித்தி, சத்தி, முத்தி, புத்தி என ஓசை நயம் மிகுந்த எதுகைகள். சக்தி, முக்தி இரண்டும் எதுகை தொட்டு அவற்றின் தமிழ் வடிவான சத்தி, முத்தி எனவாயின. சிவம் என்பது இங்கே உயர்வு என்ற பொருளில் வருகிறது. சிவபெருமானைத் தழைக்கச் செய்யும் சக்தி அல்லது சக்தியைத் தழைக்கச் செய்யும் சிவபெருமான் என்றும் அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். சித்தி என்ற சொல்லுக்கு அறிவு, வெற்றி என்று பொருள். சத்தி என்ற சொல்லுக்கு பராசக்தி, திறமை, உபாயம், வலிமை என்று பொருள். முத்தி என்ற சொல்லுக்கு மேன்மை, பேரின்பம், வீடு, பிறவாமை என்று பல பொருளுண்டு. வித்து என்ற சொல்லுக்கு விதை, தூண்டுதல், காரணம் என்று பொருள். புத்தி என்ற சொல்லுக்கு அறிவு (காணறிவு), பேரறிவு (பகுத்தறிவு), வெற்றி என்று பொருள். புரத்தல் என்றால் காத்தல். புரத்தை என்பதை புரக்கும்+தை என்று பிரித்து காக்கும் அழகிய பெண் என்று பொருள் சொல்லியிருக்கிறேன்.

படிப்பதற்கு எளிமையானப் பாடலாகத் தோன்றினாலும் பொருள் சொல்லக் கடினமான பாடலென்று நினைக்கிறேன். சுலபமான வழியில் சென்று சித்தியிலிருந்து புத்தி வரைக்கும் எல்லாமே அபிராமி தான் என்று பொருள் சொல்லலாம். ஒன்றிலிருந்து ஒன்று உருவாகும் என்ற வகையில், பல அறிஞர்கள் சொல்லியிருப்பது போல் இவ்வாறு பொருள் சொல்லலாம்: 'சித்தியும் அந்தச் சித்தியைத் தரும் தெய்வமாகவும், ஆதி சக்தியாகவும், சக்தியினால் தழைக்கும் சிவனாகவும், தவம் புரிபவர்கள் பெற விரும்பும் முக்தியாகவும், அந்த முக்தியின் விதையாகவும், அந்த விதையிலிருந்து எழும் ஞானமாகவும், ஞானத்தைக் கொடுத்து காத்தருளும் கடவுளாகவும் இருக்கிறாய் அபிராமியே!'.

கொஞ்சம் புரட்டி எடுக்கிறது பாடல். முக்தியின் விதையாவது? விதையிலிருந்து எழும் புத்தியாவது? முக்தி கிடைத்தபின் சித்தி எதற்கு? உட்பொருளோடும் தமிழ்ச் சொற்களோடும் கொஞ்சம் விளையாடியிருக்கிறார் பட்டர். என் போன்ற சூனியங்களுக்கு இந்தப் பாடல் ஒரு சவால்.

சித்தி, சத்தி இரண்டையும் பார்ப்போம். இந்துமத இறையிலக்கிய, புராணங்களில் ஐந்து சித்தி, எட்டு சித்தி, ஒன்பது சித்தி, பத்து சித்தி என்று ஆளாளுக்குத் தோன்றியபடி சித்திகளை அடுக்கிக் கொண்டே போயிருக்கிறார்கள். கிருஷ்ணர் சொன்னதாகவும், சிவன் சொன்னதாகவும் குறிப்பிட்டால் எவரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்று அவரவருக்குத் தோன்றியதை அட்டவணை போட்டுச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றை ஆய்ந்து பார்க்கையில் ஐந்து வகை சித்திகள் பொதுவாகக் காணப்படுகின்றன. மற்றவை இந்த ஐந்து வகை சித்திகளைப் புரட்டிப் போட்டு உருவாக்கிய கிளை/உப சித்திகள் போல் தோன்றுகிறது. இந்த ஐந்து வகைப் பொது சித்திகள் பின்வருமாறு: 1) கடந்த, நிகழ், எதிர் என்று முக்காலத்தையும் உணர்தல் (முற்பிறவி, இப்பிறவி, வரும்பிறவி என்றும் கொள்ளலாம்), 2) இன்ப-துன்ப, சுக-துக்க, ஜனன-மரண இருநிலை எதிர்நிலை சமநிலைகளை உணர்தல், 3) பிறரின் எண்ணங்களையும் உந்துதல்களையும் உணர்தல், 4) சுற்றி இருக்கும் வான், தீ, வளி, மண், நீர் எனும் இயற்கை நிலைகளின் ஆதிக்கத்தையும் விளைவையும் உணர்தல், 5) கலக்கவோ கலைக்கவோ முடியாதபடி மனதை ஒரு நிலைப்படுத்தி, மற்ற நான்கு சித்திகளையும் பயன்படுத்தி, நம்மையும் சூழலையும் அடக்கி ஆளுதல். சற்று சிந்தித்தால் இவை கடவுள்/மத வகைகளுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை நெறியாகத் தோன்றுகிறது. இந்த நெறிகளின் உருவம் அபிராமி; இவற்றை நமக்குக் கொடுத்தவளும், இவற்றைக் கடைபிடிக்க வைப்பவளும் அபிராமி என்று பொருள் கொள்ளலாம். அதே போல் சக்தியும் ஆயிரம் வகை இருக்கும் போல் தோன்றுகிறது. அத்தனைக்கும் அடிப்படை திறமை, வலிமை, ஒருமை எனலாம். சித்தி பெற சக்தி வேண்டும்; சக்தியாக இருப்பவளும் சக்தியைக் கொடுப்பவளும் அபிராமி என்று பொருள்.

முக்தி, முக்திக்கு வித்து, புத்தி... இவற்றைப் பார்ப்போம். முக்திக்கு விதையானவள் அபிராமி என்ற அறிஞர்களின் பொருளை ஏற்றுக் கொண்டாலும், பொருளின் பின்னே இருப்பது என்ன என்று கேட்கத் தோன்றுகிறது. சக்தியை முன்னர் மரமென்றது போல் இங்கே முக்தி மரமாக்கி விட்டார்களா? முக்திக்கு எது விதை? விதையிலிருந்து புத்தி எப்படி முளைத்தெழும்? அப்படியென்றால் புத்தி மரமா? பட்டர் இப்படிப் புரட்டி எடுக்கிறாரே? இந்தப் புரட்டலுக்காகவே அபிராமி நிலவை எறிந்திருக்க வேண்டும்.

இறையிலக்கியங்களிலும் புராணங்களிலும் முக்திக்கான பாதை (விதை) விளக்கப்பட்டிருக்கிறது. எப்படி விதையானது படிப்படியாக வளர்ந்து மரமாகிறதோ, அதே போல் முக்திக்கான விதையும் இறைவனின் அருகில் செல்லும் முதல் நிலையிலிருந்து படிப்படியாக வளர்ந்து இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஐந்தாவது நிலையை அடைந்த பிறகே முக்தி எனும் நிலையை அடைகிறது. ஒவ்வொரு நிலையிலும் இறைவனோடு சேரவேண்டிய அறிவும் வளர்கிறது. இந்த அறிவு குறையாமல் வளர முக்திப் பாதையில் செல்வோர் ஒவ்வொரு நிலையிலும் செய்ய வேண்டியவையும் கடைபிடிக்க வேண்டியவையும் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இறைவனுக்கு அண்மையைப் பெறுவதில் முதல் நிலை தொடங்குகிறதே? அப்படியானால் அது இறந்த பின் நிகழ்வதா, இருக்கும் பொழுதே நிகழ்வதா? இதை அவரவர் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன். அப்படி இறந்த பின் நிகழ்வதானால் நிச்சயம் இன்னொருவரின் துணை வேண்டும்; இறந்த பின் என்னவாகும் என்று நமக்குத் தெரியாதே? எப்படி நிகழ்ந்தாலும் இது போன்ற நிலைகளின் எண்ணம் நம் மனதில் உருவாக வேண்டுமே? சாதாரண அறிவுக்கு இந்த எண்ணங்கள் தோன்றுமா? முக்திக்கான எண்ணமே தோன்றவில்லையென்றால் பயணம் சாத்தியமில்லையே? அப்படிப் பட்ட எண்ணமே பேரறிவென்றால், பேரறிவுக்கான எண்ணங்களுக்கு எது தோற்றுவாய்? அதைத்தான் முக்திக்கு வித்து என்றார் பட்டர். அபிராமியே முக்திக்கு வித்தாகவும், முக்தியின் பாதையில் செல்லும் பொழுது தொடர்ந்து வளரும் அறிவாகவும், அறிவு குறையாமல் காப்பவளாகவும் இருப்பதாகச் சொல்கிறார்.

பிறவிச் சுழலில் சிக்கி மனம் கலங்கியிருக்கும் மனிதருக்கு சம நிலை எனும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தி, பிறவா நிலை எனும் முக்தி பெற வேண்டிய முதிர்ந்த எண்ணத்தைத் தோற்றுவித்து, முக்தியின் ஐந்து (பல) நிலைகளைக் கடக்கத் திறமையும் வலிமையும் கொடுத்து, நிலைகளின் இடையே அறிவு பிறழாமல் ஒருமைப்படுத்தி வளர்த்து, முடிவில் உயர்வான முக்தி எனும் வெற்றியைக் கொடுத்துக் காப்பவள் அபிராமி. இது தான் பாடலின் சாரம்.

குடும்பக் கிளைக்கதை: எங்கள் பாட்டியை (அம்மாவின் தாய், கூட்டுக் குடும்பம் காரணமாக) சித்தி என்று தான் எல்லாருமே அழைப்போம். எனக்கு என் சித்தி, என் அம்மாவை விட ஒரு படி மேலே என்பேன். 'சித்தி தரும் தெய்வம்' என்று என் அம்மா பாடும் போதெல்லாம், சித்தியைக் கொடுத்த கடவுள் என்று பாடுவதாகக் கொள்வேன். பொருள் புரியாத அன்றைக்கும் பொருத்தமாகத் தோன்றியது; பொருள் புரிந்த இன்றைக்கும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 30 | அன்றே தடுத்து...

2010/07/09

சொல்லும் பொருளும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:28 | ராகம்:மோகனம்


சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

நறுமணப் பூங்கொடி போன்றவளே! என்றைக்கும் புதிதாகத் தோன்றும் உன் மலர்ப் பாதங்களை நாளும் பொழுதும் வணங்குகிறவருக்கு இந்திர பதவியும், முக்தியடைவதற்கான பாதையும், அனைத்துக்கும் மேம்பட்டதான - ஆனந்தக் கூத்தாடும் சிவனுடன் சொல்லில் கலந்த பொருள் போல் நீ இணைந்திருக்கும் - சிவலோகமும் கைகூடும்.

'பரிமளப் பூங்கொடியே! நின் புது மலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும், செல்லும் தவநெறியும், நடமாடும் துணைவருடன் (நீ) சொல்லும் பொருளும் எனப் புல்லும் சிவலோகமும், சித்திக்குமே' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

சொல் இல்லாமல் பொருளை அறியவே முடியாது. பொருள் இல்லாத சொல் வெறும் ஓசை. ஓசை அறிவைத் தொடாது. பொருள் வேண்டும்; பொருளை அறியப் பொருத்தமான சொல் வேண்டும். அர்த்தநாரி என்று முன்னர் பல முறை பாடிய பட்டர் இங்கே சிவ-சக்தியை, சொல்-பொருள் என்று அழைப்பது சுவையான உவமை.

புது மலர்த்தாள் என்றார். அபிராமியின் மலர்ப் பாதம் எப்படி புதிதாகும்? அதே அபிராமி தானே? இருக்கலாம்; ஆனால் பட்டருக்குத் தாள் புதிதெனப் படுகிறது. காரணம், அது வெறும் தாளா? இல்லை, மலர்த்தாள். மலர்களால் மூடப்பட்ட பாதம். ஏன் மூடப்பட்டிருக்கிறது? முன்பே சொல்லியிருக்கிறார், 'அடியவர் சாத்தும் கடம்பு மணம் நாறும் நின் தாள்' என்று. பிரம்மன், விஷ்ணு, சிவன் தொடங்கி அனைத்து தேவர்களும் அடியார்களும் தினம் புது மலர்கள் சாற்றுவதால் அபிராமியின் பாதம் தினம் புதிதாக மலர்வதாகப் பாடுகிறார். நல்ல கற்பனை. புதுத் தாள் என்றால் புதுக் கை, புது முகம் என்று எல்லாமே புதிதாமோ? ஏன் தாளை மட்டும் புதிதென்கிறார்?

சீதையின் முகத்தை விவரிக்க முடியாமல் தடுமாறியதேன் என்று லட்சுமணனைக் கேட்ட போது, "ஐயா, நான் அவருடைய பாதங்களைத் தானே பார்த்துக் கொண்டிருந்தேன்? பிராட்டியின் பாதப் பொலிவை அறிவேனே தவிர, முக அழகை விவரிக்க அறியேன். தாள் கண்டேன், தாளே கண்டேன்" என்றானாம். அந்தக் கற்பனை பட்டருக்கும் பொருந்தும். 'பாதம் என் சென்னி' என்று பாடிய பட்டருக்கும் அபிராமியின் பாதங்களைப் பற்றியே அதிகம் தெரிந்திருக்கும் என்று தோன்றுகிறது.

அழியா அரசு என்பதற்கு 'என்றைக்கும் அழியாத அரசபதவி' என்று பலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். அழியாத அரச பதவியா? அது என்ன? மனிதருக்கெல்லாம் மேலானவர் அழியாத தேவர் என்றால், தேவர்களையே ஆளும் பதவி அழியாத அரசு பதவி அல்லவா? மேலும், மனிதப்பிறவியே மாயை எனும் பட்டர், சாதாரண அரச பதவியையா பலனாகச் சொல்வார்? பிறவா நிலையடைந்த பின் கிடைக்கும் அரச பதவியைத்தான் அழியா அரசு என்கிறார். இங்கே இந்திர பதவியைப் பொருளாகச் சொல்லியிருக்கிறேன். அதற்கு மேலும் ஏதாவது அழியா அரசு இருக்ககூடும். பிரம்மலோகம், விஷ்ணுலோகம் என்று இன்னும் பல தேவ உலகங்கள் இருப்பதாகவும் அவை முக்தியடையும் ஆத்மாவின் தற்காலிக இருப்பிடங்கள் என்றும் புராணங்கள் சொல்கின்றன. அவற்றையும் 'அழியா அரசு' என்ற வகையில் சேர்த்திருக்கிறார் பட்டர்.

சிவலோகத்தை மட்டும் தனிப்படுத்திச் சொல்வானேன்? சக்தி அங்கே இருப்பதே காரணம். புல்லும் என்பதற்கு இணையும், புணரும், சேரும் என்று பொருள். நடமாடும் துணைவருடன் - சக்தியின் தாளத்திற்கு சிவன் நடனமாடுவதை முன்னர் குறிப்பிட்டிருக்கிறார் பட்டர், புல்லும் - அபிராமி இணைந்திருக்கும், இடம் சிவலோகம் தானே? சிவலோகம் தவிர தேவ உலகங்கள் உள்ளிட்ட அனைத்து உலகங்களும் ஊழிக் காலத்தில் அழிவன என்று சிவ/சக்தி புராணங்கள் சொல்கின்றன. அதனால் அனைத்திலும் மேம்பட்ட சிவலோகமும் சித்திக்கும் - கைகூடும் - என்றார்.

எளிமையான பாடல் என்றாலும் பட்டரின் உவமைகளும் கருத்துச் செறிவும் பருகத் தூண்டும் பழச்சாறு போல் இனிக்கிறது. பண்ணோ பழச்சாறை விட இனிமை.

தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 29 | சித்தியும் சித்தி...