2010/08/31

அணங்கே அணங்குகள்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 81 ராகம்: ஹடானா


அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கே னொருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கே னெனதுன தென்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கே னறிவொன்றிலேன் என்கண் நீவைத்த பேரளியே.

பேதையான என் மேல் கருணை கொண்ட தெய்வமே! இனி நான் கபட நெஞ்சம் கொண்டவர்கள் சொற்படி நடக்க வேண்டிய அவசியமில்லை; தான் பெற்றதையெல்லாம் உனக்கே சமர்பிக்கும் உள்ளம் உடையவர்களோடு வேற்றுமை காண அவசியம் இல்லை; உன்னைத் தவிர வேறெவரையும் போற்றத் தேவை இல்லை; மற்ற தெய்வங்களும் உனக்குப் பணிந்தவர்களென்பதால் அவர்களை வணங்கத் தேவையுமில்லை.

தன் குரலுக்கு செவி சாய்த்து அருள் புரிந்த அபிராமியை நன்றியுடன் பாடுகிறார் பட்டர். 'நீ இருக்கும் பொழுது இனி எதுவும் எவரும் தேவையில்லை' என்கிறார். நம்மை மதித்து நமக்கு உதவி புரிவோரை உயரே வைத்துப் பார்ப்பது இயற்கை தானே?

அணங்கு என்பது பெண்பால். உயர்ந்தவள், தெய்வம், பேய் என்றெல்லாம் பொருளுண்டு. இங்கே தெய்வம் என்ற பொதுப்பாலில் வருகிறது. பேரளி: பேர்+அளி. பெரும் கருணை, இரக்கம் என்ற பொருளில் வருகிறது. வஞ்சகர் என்ற சொல்லுக்கு சிறுமைத்தனம் கொண்டவர், கபடம் உள்ளவர் என்று பொருள். தவறான திதியைச் சொன்ன காரணத்துக்கு தலையை வெட்டுவேன் என்று சொன்ன அரசனை சிறுமையானவன் என்று சொல்கிறார். வஞ்சகரோடு இணங்கேன் - அரசனுக்கு இணங்கி நடக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்.

நாம் பாடுபட்டுச் சேர்த்த செல்வம் அனைத்தும் இன்னொருவருக்குச் சொந்தம் என்ற கண்ணோட்டம் மிகவும் முதிர்ந்த மனத்தின் அடையாளம். அந்த நிலையில் பந்தம் அறுந்து விடுகிறது. எல்லாமே அபிராமி செயல் என்று பார்க்கும் பொழுது பிறவாமைச் சுழலுக்கான முக்கிய காரணத்தை - நான், எனது என்ற சுய நலம், சுற்றம், பந்தங்களை - வேரோடு அறுக்க முடிகிறது. அதைத்தான் பட்டர் குறிப்பிடுகிறார். தனக்கு அத்தகைய அறிவு கிடையாது என்று நம்புவதால் அப்படி பந்தங்களை அறுத்த அறிவுள்ளவரோடு சேர்ந்திருப்பதாகச் சொல்கிறார். நமக்கு அறிவில்லாத பொழுது அறிவுள்ளவரோடு சேர்ந்து பழகுவது நன்மை தானே? அறிவுள்ளவரை அறிவில்லாதோர் அறிவது எப்படி? அதற்கு அபிராமியின் கருணை வேண்டும் என்கிறார் பட்டர். பேதையான தனக்கு அறிவுள்ளவரின் துணை கிடைக்க அபிராமி இரக்கம் கொண்டு உதவி செய்தாள் என்று நன்றியுடன் பாடுகிறார்.

ராமாயணக் கிளைக்கதை ஒன்று. பட்டாபிஷேகம் முடிந்தது. தனக்கு வழங்கப்பட்ட மற்றும் கேட்டுப் பெற்ற நாடு, நிலம், சிற்றரசுப் பதவி, செல்வம் என்று பரிசுகளையும் சலுகைகளையும் வாங்கிக் கொண்டு ராமனுக்கு உதவி செய்த அனைவரும் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்கள். "உனக்கு என்ன வேண்டும்?" என்று லட்சுமணனிடம் கேட்கிறான் ராமன். சீதையையும் ராமனையும் சேர்த்து வணங்கிய லட்சுமணன், "அண்ணா, நீ மட்டும் என் உள்ளம் முழுதும் வெற்றிடமே இல்லாமல் நிரம்பியிருக்க வேண்டும்" என்று கேட்கிறான். "சரி" என்கிறான் ராமன். பிறகு தனித்திருக்கும் பொழுது, "ராமா, என்னோடு சேர்ந்து சீதாராமனாக தன் உள்ளத்தில் இருக்க வேண்டும் என்று லட்சுமணன் விரும்பாததைக் கூடப் புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால் வெற்றிடமே இல்லாமல் நீ மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்றானே? ஏன்? ஊர்மிளையைக் கூட இடமில்லாமல் செய்து விட்டானே?" என்று சீதை ராமனிடம் கேட்கிறாள். "எல்லாமே நான் தான் என்று லட்சுமணன் நம்புகிறான். ஆசை பாசம் இவையெல்லாம் கரையான் போல. நல்ல உள்ளங்களையும் அரித்து விடும். உள்ளத்தில் வேறு எந்த எண்ணத்திற்கும் இடம் தராவிட்டால் - என்னையே நினைத்திருந்தால் - சூது, ஆசை, பாசம், பொறாமை என்ற எதுவும் அவன் உள்ளத்தில் இடம்பெறாது இல்லையா? என்னைத் தவிர என்னுடன் நீயோ மற்றெவரோ எதுவோ இருந்தால், அவனுக்கு சபலங்கள் எதுவும் ஏற்படாவிட்டாலும், நமக்குள் ஏற்படும் பிணக்கு சஞ்சலங்களினால் அவன் உள்ளத்தில் விரிசல் ஏற்பட்டு மற்ற துயரங்களுக்கு இடம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியதால், என்னை மட்டும் அவன் உள்ளத்தில் குடியிருக்கச் சொல்கிறான்" என்று ராமன் பதில் சொல்கிறான். கணப்பொழுதானாலும் மான் மேல் ஆசை வைத்த காரணத்தினால் சீதைக்கு நிகழ்ந்ததை எடுத்துச் சொல்கிறான். சுக்ரீவ வாலி சகோதரர்களுக்கு அவர்கள் நெஞ்சில் இருந்த ஆசா பாசங்களினால் நேர்ந்த துன்பங்களை எடுத்துச் சொல்கிறான். ராவண விபீஷண சகோதரர்களுக்கு நேர்ந்த துன்பங்களை எடுத்துச் சொல்கிறான் (கூடப்பிறந்தவர், சுற்றம் என்று அத்தனையையும் இழந்து விபீஷணன் சந்தோசமாக பதவியில் இருந்திருப்பான் என்கிறீர்களா?). தசரதனில் தொடங்கி இப்படி ஒவ்வொருவராக உதாரணம் காட்டிச் சொன்ன ராமன், "இளவரசனான லட்சுமணன் காலப்போக்கில் வேறு சபலங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறான். என்னை விட முதிர்ந்த மனது அவனுக்கு" என்று சொல்லி முடித்த பின், சீதையிடம் "என் உள்ளத்திலும் நீ அது போல் வியாபித்து இருக்க வேண்டும்" என்று கேட்கிறான். சீதை புன்னகைக்கிறாள். பொருள் பொதிந்த புன்னகை. சக்தி-பண்டாசுரப் போர் பற்றியப் புராணக்கதையை முன்பு குறிப்பிட்டிருக்கிறேன். பண்டாசுரன் 'ராவணன் என்ற ஆயுதத்தை' எறிய, சக்தி 'ராமன் என்ற ஆயுதத்தால்' அதை வீழ்த்தியதாகப் புராணக்கதை. சீதை சக்தியின் வடிவம் என்று ராமன் நம்பினான். ராமனுக்கும் முதிர்ந்த மனது தான்.

அபிராமியை நம்பி, 'எனது உனது என்றிருப்பார் பற்றறுப்பார்' என்பது பட்டர் பாடலின் சாரம்.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் ஹடானா ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)