2010/08/24

நயனங்கள் மூன்றுடை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 74 ராகம்: சுத்த தன்யாசி


நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயனென்று கொண்டவர் பாவையராடவும் பாடவும் பொற்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

முக்கண்ணனாகிய சிவனும், நாராயணனும், பிரம்மனும், வேதங்களும் புகழ்ந்து வணங்கும் அபிராமியின் திருவடிகளைப் பற்றுவதே பிறவிக் காரணமென்று அறிந்தவர்கள், தேவ மகளிர் ஆடிப்பாடி மகிழ்விக்கும் பொற்சோலையின் பொன் கட்டிலில் அமையப்பெறுவர்.

பரவும் என்றால் வணங்கும், புகழும் என்று பொருள். தமனியம் என்றால் பொன். கா என்றால் தோட்டம், சோலை என்று பொருள். பொற்சோலை, கற்பகச்சோலை என்று பொருள் கொள்ளலாம். அபிராமியின் பாதங்களைப் பற்றி வணங்குவதே பிறவியின் நோக்கம் என்று அறிந்து கொண்டவர்கள், தேவருலகம் அடைவர் என்கிறார் பட்டர். இதற்கு முன்பே, 'வானுலகம் தந்து தான் போயிருக்கும்' என்று பாடியிருக்கிறார்.

நசிகேதன் கதை தெரியுமா? தந்தையின் முட்டாள்தனத்தினால் எமனுலகம் சென்ற சிறுவன், எமன் கண்ணில் விரல் விட்டு ஆட்டி உபதேசம் பெற்ற கதை. நசிகேதனை அமைதிப்படுத்த எமன் வழங்கும் சலுகைகளில் ஒன்று, தேவர் குலப்பெண்கள் ஆடிப் பாடி மகிழ்விக்கும் பொற்சோலை வாசம். நசிகேதன் தேவையில்லையென்கிறான். பிறவாமை ரகசியத்தை அறிய வேண்டுகிறான். கிடைப்பதனால் எதையும் ஏற்க வேண்டுமென்பதில்லை, உண்மையான அன்பைத் தவிர. பட்டர் கூட முன் பாடலொன்றில் 'பிரம்மலோக' வசதிகள் தேவையில்லை என்று பாடியிருப்பது நினைவிருக்கலாம். தேவருலகம், கற்பகச் சோலை, பொற்சயனம் இவையெல்லாம் பட்டர் பாடல்களில் தொடர்ந்து வருகின்றன. இவற்றையெல்லாம் பெறும் வாய்ப்பு அபிராமி அன்பர்களுக்குக் கிடைக்கும் என்றாலும் அவற்றை ஒதுக்கி, 'பிறவாமை அடையும் வழியை அறிவது மட்டுமே பிறவியின் நோக்கமாகும்' என்ற உட்பொருளிலேயே தொடர்ந்து பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)