2010/08/31

அணங்கே அணங்குகள்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 81 ராகம்: ஹடானா


அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கே னொருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கே னெனதுன தென்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கே னறிவொன்றிலேன் என்கண் நீவைத்த பேரளியே.

பேதையான என் மேல் கருணை கொண்ட தெய்வமே! இனி நான் கபட நெஞ்சம் கொண்டவர்கள் சொற்படி நடக்க வேண்டிய அவசியமில்லை; தான் பெற்றதையெல்லாம் உனக்கே சமர்பிக்கும் உள்ளம் உடையவர்களோடு வேற்றுமை காண அவசியம் இல்லை; உன்னைத் தவிர வேறெவரையும் போற்றத் தேவை இல்லை; மற்ற தெய்வங்களும் உனக்குப் பணிந்தவர்களென்பதால் அவர்களை வணங்கத் தேவையுமில்லை.

தன் குரலுக்கு செவி சாய்த்து அருள் புரிந்த அபிராமியை நன்றியுடன் பாடுகிறார் பட்டர். 'நீ இருக்கும் பொழுது இனி எதுவும் எவரும் தேவையில்லை' என்கிறார். நம்மை மதித்து நமக்கு உதவி புரிவோரை உயரே வைத்துப் பார்ப்பது இயற்கை தானே?

அணங்கு என்பது பெண்பால். உயர்ந்தவள், தெய்வம், பேய் என்றெல்லாம் பொருளுண்டு. இங்கே தெய்வம் என்ற பொதுப்பாலில் வருகிறது. பேரளி: பேர்+அளி. பெரும் கருணை, இரக்கம் என்ற பொருளில் வருகிறது. வஞ்சகர் என்ற சொல்லுக்கு சிறுமைத்தனம் கொண்டவர், கபடம் உள்ளவர் என்று பொருள். தவறான திதியைச் சொன்ன காரணத்துக்கு தலையை வெட்டுவேன் என்று சொன்ன அரசனை சிறுமையானவன் என்று சொல்கிறார். வஞ்சகரோடு இணங்கேன் - அரசனுக்கு இணங்கி நடக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்.

நாம் பாடுபட்டுச் சேர்த்த செல்வம் அனைத்தும் இன்னொருவருக்குச் சொந்தம் என்ற கண்ணோட்டம் மிகவும் முதிர்ந்த மனத்தின் அடையாளம். அந்த நிலையில் பந்தம் அறுந்து விடுகிறது. எல்லாமே அபிராமி செயல் என்று பார்க்கும் பொழுது பிறவாமைச் சுழலுக்கான முக்கிய காரணத்தை - நான், எனது என்ற சுய நலம், சுற்றம், பந்தங்களை - வேரோடு அறுக்க முடிகிறது. அதைத்தான் பட்டர் குறிப்பிடுகிறார். தனக்கு அத்தகைய அறிவு கிடையாது என்று நம்புவதால் அப்படி பந்தங்களை அறுத்த அறிவுள்ளவரோடு சேர்ந்திருப்பதாகச் சொல்கிறார். நமக்கு அறிவில்லாத பொழுது அறிவுள்ளவரோடு சேர்ந்து பழகுவது நன்மை தானே? அறிவுள்ளவரை அறிவில்லாதோர் அறிவது எப்படி? அதற்கு அபிராமியின் கருணை வேண்டும் என்கிறார் பட்டர். பேதையான தனக்கு அறிவுள்ளவரின் துணை கிடைக்க அபிராமி இரக்கம் கொண்டு உதவி செய்தாள் என்று நன்றியுடன் பாடுகிறார்.

ராமாயணக் கிளைக்கதை ஒன்று. பட்டாபிஷேகம் முடிந்தது. தனக்கு வழங்கப்பட்ட மற்றும் கேட்டுப் பெற்ற நாடு, நிலம், சிற்றரசுப் பதவி, செல்வம் என்று பரிசுகளையும் சலுகைகளையும் வாங்கிக் கொண்டு ராமனுக்கு உதவி செய்த அனைவரும் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்கள். "உனக்கு என்ன வேண்டும்?" என்று லட்சுமணனிடம் கேட்கிறான் ராமன். சீதையையும் ராமனையும் சேர்த்து வணங்கிய லட்சுமணன், "அண்ணா, நீ மட்டும் என் உள்ளம் முழுதும் வெற்றிடமே இல்லாமல் நிரம்பியிருக்க வேண்டும்" என்று கேட்கிறான். "சரி" என்கிறான் ராமன். பிறகு தனித்திருக்கும் பொழுது, "ராமா, என்னோடு சேர்ந்து சீதாராமனாக தன் உள்ளத்தில் இருக்க வேண்டும் என்று லட்சுமணன் விரும்பாததைக் கூடப் புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால் வெற்றிடமே இல்லாமல் நீ மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்றானே? ஏன்? ஊர்மிளையைக் கூட இடமில்லாமல் செய்து விட்டானே?" என்று சீதை ராமனிடம் கேட்கிறாள். "எல்லாமே நான் தான் என்று லட்சுமணன் நம்புகிறான். ஆசை பாசம் இவையெல்லாம் கரையான் போல. நல்ல உள்ளங்களையும் அரித்து விடும். உள்ளத்தில் வேறு எந்த எண்ணத்திற்கும் இடம் தராவிட்டால் - என்னையே நினைத்திருந்தால் - சூது, ஆசை, பாசம், பொறாமை என்ற எதுவும் அவன் உள்ளத்தில் இடம்பெறாது இல்லையா? என்னைத் தவிர என்னுடன் நீயோ மற்றெவரோ எதுவோ இருந்தால், அவனுக்கு சபலங்கள் எதுவும் ஏற்படாவிட்டாலும், நமக்குள் ஏற்படும் பிணக்கு சஞ்சலங்களினால் அவன் உள்ளத்தில் விரிசல் ஏற்பட்டு மற்ற துயரங்களுக்கு இடம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியதால், என்னை மட்டும் அவன் உள்ளத்தில் குடியிருக்கச் சொல்கிறான்" என்று ராமன் பதில் சொல்கிறான். கணப்பொழுதானாலும் மான் மேல் ஆசை வைத்த காரணத்தினால் சீதைக்கு நிகழ்ந்ததை எடுத்துச் சொல்கிறான். சுக்ரீவ வாலி சகோதரர்களுக்கு அவர்கள் நெஞ்சில் இருந்த ஆசா பாசங்களினால் நேர்ந்த துன்பங்களை எடுத்துச் சொல்கிறான். ராவண விபீஷண சகோதரர்களுக்கு நேர்ந்த துன்பங்களை எடுத்துச் சொல்கிறான் (கூடப்பிறந்தவர், சுற்றம் என்று அத்தனையையும் இழந்து விபீஷணன் சந்தோசமாக பதவியில் இருந்திருப்பான் என்கிறீர்களா?). தசரதனில் தொடங்கி இப்படி ஒவ்வொருவராக உதாரணம் காட்டிச் சொன்ன ராமன், "இளவரசனான லட்சுமணன் காலப்போக்கில் வேறு சபலங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறான். என்னை விட முதிர்ந்த மனது அவனுக்கு" என்று சொல்லி முடித்த பின், சீதையிடம் "என் உள்ளத்திலும் நீ அது போல் வியாபித்து இருக்க வேண்டும்" என்று கேட்கிறான். சீதை புன்னகைக்கிறாள். பொருள் பொதிந்த புன்னகை. சக்தி-பண்டாசுரப் போர் பற்றியப் புராணக்கதையை முன்பு குறிப்பிட்டிருக்கிறேன். பண்டாசுரன் 'ராவணன் என்ற ஆயுதத்தை' எறிய, சக்தி 'ராமன் என்ற ஆயுதத்தால்' அதை வீழ்த்தியதாகப் புராணக்கதை. சீதை சக்தியின் வடிவம் என்று ராமன் நம்பினான். ராமனுக்கும் முதிர்ந்த மனது தான்.

அபிராமியை நம்பி, 'எனது உனது என்றிருப்பார் பற்றறுப்பார்' என்பது பட்டர் பாடலின் சாரம்.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் ஹடானா ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/30

கூட்டியவா என்னை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 80 ராகம்: பைரவி


கூட்டியவா என்னைத் தன்னடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என்கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடமாடகத் தாமரை ஆரணங்கே.

தாமரை மலர் போன்ற அழகியே, உன் உண்மையான உருவைக் கண்ட என் கண்ணும் நெஞ்சும் பெரும் மகிழ்ச்சியடைகிறது. என் தீவினைகளை ஒழித்து உன்னுடைய அடியார்களில் ஒருவனாக அழைத்து ஏற்றுக்கொள்ளும் பொருட்டு என் முன்னே தோன்றுவதற்கென்றே நீ நடத்திய நாடகமா இது?

தன்னுடைய பக்தர்களைச் சோதிப்பது கடவுளரின் பொழுதுபோக்கு. இதெற்கென்றே நூற்றுக்கணக்கில் புராணக்கதைகள் இருக்கின்றன. சோதனையின் ஆழம் பலனின் பெருமையைப் பொருத்து அமையும். பிறவாமை வேண்டி அபிராமியை வணங்கிய பட்டருக்கு உயிரிழக்கும் சோதனையை வழங்கியிருப்பது பொருத்தமாகப் படுகிறது பட்டருக்கு.

'அரசனிடம் அமாவாசைக்குப் பதிலாகப் பௌர்ணமி என்று சொல்ல வைத்தது அபிராமி; பிழையைத் திருத்த நிலவைக் கொண்டு வா என்று அரசனை ஆணையிட வைத்தது அபிராமி; அவசரப்பட்டு விட்டோமே என்று கையைப் பிசைந்து நின்றவருக்கு வேறு வழி எதையும் எண்ணவைக்காமல் அபிராமியைப் பற்றியே பாட வைத்தது அபிராமி; சரியான நேரத்தில் நிலவை உருவாக்கி தன்னை வெளிக்காட்டியது அபிராமி; காட்சியளித்தோடு தன் அண்மையில் சேர்த்தது அபிராமி' என்று அனைத்தையும் அபிராமியின் செயலாகவே பார்க்கிறார் பட்டர். தன்னை ஆட்டிவைத்தமைக்காக ஆனந்தப்பட்டுச் சிறந்த இயக்குனருக்கான ஆரணங்கு விருதை அபிராமிக்கு வழங்குகிறார் பட்டர்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/29

விழிக்கே அருளுண்டு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 79 ராகம்: பைரவி


விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்க,
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்துங்கயவர் தம்மோடென்ன கூட்டினியே?

அருளைத் தவிர வேறொன்றில்லாத விழிகளையுடைய அபிராமியை வழிபடும் முறைகளை அறிந்தபின் அந்த வழியில் செல்லாமல், பாவச் செயல் புரிந்து நரகத்துக்கு வழி தேடுவோருடன் சேரும் வீண் பிறவி எதற்கு? (தேவையில்லை)

'பிறவாமை தரும் அபிராமியை அடையும் வழியறிந்த பின், பிறவிச் சுழலில் சிக்கும் வழிகள் எனக்குத் தேவையில்லை' என்று சுருக்கமாகப் பாடியிருக்கிறார் பட்டர்.

இந்தப் பாடலின் பின்னணி: 'உன்னை நம்பி நானே உள்ளமிழந்தேனே' என்று உருகி உருகிப் பாடிய பட்டரின் அருந்தமிழுக்கு மயங்கிய அபிராமி, தன் காதணியை எடுத்து வானில் சுழற்றி எறிந்தாளாம். வைரத்தரளக் குழை கொப்பான அபிராமியின் காதணி வானில் முழு நிலவையும் மிஞ்சும் அளவுக்கு ஒளி வீசி நின்றதாம். அந்தப் பரவசத்தில் பட்டர், 'அன்னையைப் பார்த்தபின் இன்னும் என்ன நெஞ்சமே?' என்று பாடியிருக்கிறார்.

பழி என்றால் பாவம், வீண், பலனற்ற என்று பொருள். 'பழிக்கே சுழன்று' என்பது வீணானப் பிறவிச் சுழற்சியைக் குறிக்கிறது. வேதம் என்றால் அறிவு. 'வேதம் சொன்ன வழி' என்பது இங்கே அபிராமியை வணங்க வேண்டும் என்ற அறிவைக் குறிக்கிறது. வேத முறைப்படி வணங்கச் சொல்லவில்லை பட்டர். அருளைத் தவிர வேறொன்றுமே இல்லையாம் அபிராமியின் விழிகளில். வேத முறையோ பேத முறையோ, அபிராமியை வணங்க வேண்டும் என்ற அறிவு இருந்தால் போதும். எப்படி வணங்கினாலும் யார் வணங்கினாலும் அவளுடைய கொழுங்கடைப் பயனுண்டு என்பதே பாடலின் சாரம்.

அபிராமி அருள் புரிந்து விட்டாளே? நிலவு தோன்றிவிட்டதே? பட்டர் இந்தப் பாடலோடு ஏன் நிறுத்தவில்லை என்று தோன்றுகிறது. பிறவாமைக்கான பாயின்ட் டு பாயின்ட் நேர்வழி வண்டியுடன் அபிராமி காத்திருக்கும் பொழுது பட்டர் தொடர்ந்து பாடியதேன்? அபிராமியைக் கண்ட ஆனந்தத்தில் இன்னும் ஒன்றிரண்டு பாட்டு பாடியிருந்தாலும் பரவாயில்லை, 'கொஞ்சம் இரம்மா, இன்னும் இருபது பாட்டு பாக்கியிருக்கிறது' என்று பாடியிருக்கிறாரே? கடவுளைக் கண்டவுடன் 'சட்டி சுட்டதடா' என்று உயிர் துறந்த முனிவர்களின் கதையை முன்பு பார்த்தோம். பட்டர் தொடர்ந்து பாடியது தமிழுக்கும் நமக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. குறை சொல்வானேன்?

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/28

செப்பும் கனகக்கலசமும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 78 ராகம்: பைரவி


செப்பும் கனகக் கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணி தரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.

தங்கமும் செம்பும் சேர்த்தக் கலசம் போன்ற நறுமணச்சாந்து பூசிய முலைகள், முத்தும் வைரமும் கலந்து செய்த காதணிகள், குளிர்ச்சியான அருள் விழிகள், பவள இதழ்கள், நிலவு முகம், (இவையனைத்தும்) உடைய கொடி போன்ற அபிராமியின் அழகை என் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் துணையாகக் கொண்டேன்.

'அருள் விழியே அபிராமி, உன் அழகை இரு கண்களில் எழுதி வந்தேன்' என்று பாடியிருக்கிறார் பட்டர்.

'அணி தரளக் கொப்பும் வயிரக் குழையும்' என்பதை 'வைரத்தரளக் குழை கொப்பு அணியும்' என்று பிரிக்க வேண்டும். தரளம் என்றால் முத்து. குழை என்றால் காது. கொப்பு என்றால் காதணி, தோடு, தாடங்கம். முத்து வெண்மையான நிறமுடையது; வைரம் கண்ணைக் கூசவைக்கும் ஒளியுடையது. இரண்டும் கலந்த காதணி இங்கே முழு நிலவுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சூரிய சந்திரனை காதணியாகக் கொண்டவள் என்று முன்பே பாடியிருக்கிறார். நிலவு குளிர்ச்சியைத் தரக்கூடியது. அருள் பொங்கும் கண்களைக் கொண்ட நிலவு முகம் என்று பாடுகிறார். இந்தப் பாடல் முழுக்க நிலவை நினைவுபடுத்திப் பாடுவது போலிருக்கிறது. 'அபிராமியே நிலவு; அபிராமி எனும் இந்த நிலவை நான் பார்த்தால், அது எனக்கென வந்தது போலிருக்கும்' என்று பாடியிருக்கிறார். கொழுமை என்றால் குளுமை. இங்கே அருளைக் குறிக்கிறது. கொழுங்கடை என்பது இங்கே கடைவிழியின் குளுமையான அருள் வீச்சைக் குறிக்கிறது. துப்பு என்றால் பவளம். இங்கே உதடுகளைக் குறிக்கிறது. (துப்பு என்ற சொல்லுக்கு பல அரும் பொருளுண்டு. சொற்சிலம்பாட்டம் ஆடியிருக்கும் வள்ளுவரின் குறள் நினைவுக்கு வருகிறது)

'பாட்டுக்கு பாட்டு நிலவை நினைவுபடுத்தி வருகிறேன், இனிமேல் தாளாது' என்று பாடுகிறாரா? காரணம் இருக்கிறது. நிலவை நினைவுபடுத்தியது இது தான் கடைசி முறை. அடுத்த பாடலில் நிலவு வந்து விடுகிறது.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/27

பயிரவி பஞ்சமி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 77 ராகம்: பைரவி


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.

பைரவன் சிவனின் துணைவியானதால் பைரவி, பிரம்மா விஷ்ணு சிவன் முருகன் இந்திரன் எனும் ஐந்து கடவுளர்களின் சக்தி வடிவான அழகியென்பதால் பஞ்சமி, கைகளில் பாசக்கயிறும் அங்குசமும் தாங்குவதால் பாசாங்குசை, ஐவகை மலரம்புகளை ஏந்தியதால் பஞ்சபாணி, தீயோரின் உயிரைக்குடிப்பதால் சண்டி, காலன் (காலபைரவன்) எனப்படும் சிவனின் சக்தியானதால் காளி, ஒளிமிக்க வைர இடையணி அணிவதால் வயிரவி, சூரிய சந்திர மண்டலங்களை ஆபரணங்களாகக் கொண்டதால் மண்டலி, பலவித மாலைகள் அணிவதால் மாலினி, சூலமேந்தி உலகைக் காப்பதால் சூலி, வராக அவதாரத்தின் சக்தியென்பதால் வராகி... என்று குறையில்லாத வகையில் நான்கு வேதங்களிலும் போற்றப்படும் (அபிராமியின்) பெயர்களைச் சொல்லி வழிபடுவோம்.

அபிராமிக்கு ஒரு சிறிய அர்ச்சனை செய்திருக்கிறார் பட்டர் இந்த எளிமையான பாடலின் வழியாக.

தேவி மகாத்மியம் என்று ஒரு சம்ஸ்க்ருத இறையிலக்கியம். சக்தியின் திருவிளையாடல்களைப் பற்றியப் புராணக்கதைகள் தழுவிய வழிபாட்டிலக்கியம். பட்டரின் ஊர்க்காரரான மார்க்கண்டேயரால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. பட்டர் துதித்திருக்கும் பெயர்களுக்கான காரணங்களை தேவி மகாத்மியம் படித்து அறிந்து கொள்ளலாம். ஒன்றிரண்டை எடுத்துக்காட்டாக எழுதுகிறேன். பஞ்சமி என்பதற்கு பஞ்சபூதங்களின் தலைவி என்று பலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும் தேவி மகாத்மிய விளக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது. ரக்தபீஜன் எனும் அசுரனைக் கொல்ல ஐந்து கடவுள்களின் சக்தியையும் ஒருமைப்படுத்த வேண்டியிருந்ததாம். சிவனிடமிருந்து சக்தி, விஷ்ணுவிடமிருந்து வைஷ்ணவி அல்லது வராகி, பிரம்மாவிடமிருந்து பிரம்மி, கார்த்திகேயன் எனும் முருகனிடமிருந்து கார்த்திகேயி அல்லது கௌமாரி, இந்திரனிடமிருந்து இந்திரா எனும் இந்த ஐந்து பெண் சக்திகளும் கூட்டாகச் சேர்ந்து ரக்தபீஜ அசுரனை அழித்ததாகப் புராணக் கதை. இந்த ஐந்து சக்திகளும் சேர்ந்ததால் பஞ்சமி. (பஞ்சமம் என்ற சொல்லுக்கு அழகு என்றும் பொருளுண்டு. எளிமையாக அழகி என்று பொருள் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்). ஆண் கடவுளர் எவராலும் வெல்லமுடியாத சண்ட அசுரனை வென்றதால் சண்டி என்று பெயர் வந்ததாக இன்னொரு தேவி மகாத்மியக் கதை. தேவி மகாத்மியத்தில் மற்ற பெயர்களுக்கானக் கதைகளைப் படித்து விட்டு மறுகாரியம் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

பயிரவி என்பது பைரவி எனும் சொல்லை எதுகை தொட்டுப் பிரித்த விளைவு. கலா என்பது கலை என்ற சொல்லின் திரிபு. கலை என்றால் பிறை என்று பொருளுண்டு. வயிர் என்றால் சினம் என்று பொருளுண்டு. ஒளிரும் கலா+வயிர்+அவி என்பது இங்கே 'ஒளி மிகுந்த பிறை நிலாவைச் சூடிய அருள் வடிவானவளே (சினமற்றவளே)' என்ற பொருளில் வருவதாகவும் கொள்ளலாம். இடையில் வைர மேகலை அணிந்தவள் தேவி என்று சௌந்தர்யலஹரியிலும் லலிதா சஹஸ்ரநாமத்திலும் வருகிறது. சூரியனையும் சந்திரனையும் தன் மார்பகங்களாகக் கொண்ட மண்டலி என்று சௌந்தர்யலஹரியில் சொல்லப்பட்டிருக்கிறது. பலவித மாலைகள் அணிவதால் மாலினி என்று பொருள் சொன்னேன். பாக மாலினி ஜ்வால மாலினி அந்த மாலினி இந்த மாலினி என்று போட்டா போட்டியாக சௌந்தர்யலஹரியிலும் லலிதா சஹஸ்ரநாமத்திலும் நிறைய சொல்லியிருக்கிறார்கள். எண்ணங்களை மாலையாக அணிந்தவள் என்ற அற்புதமான கற்பனையை சௌந்தர்யலஹரியில் படிக்கலாம். தலையோட்டை மாலையாக அணிந்த மாலினி என்று சற்றே அச்சம் காட்டுகிறது தேவி மகாத்மியம்.

செயிர் என்றால் குறை, குற்றம், ஊனம் என்று பொருள். செயிர்+அவி+நான்மறை என்பது இங்கே குறைவில்லாத (நிறைவான) வேதங்கள் என்ற பொருளில் வருகிறது. அபிராமியின் இத்தனை பெயர்களும் வேதங்களில் சொல்லப்படுகின்றன என்கிறார் பட்டர். எனக்குக் கொஞ்சம் கூட வேத அறிவு கிடையாது. தவறாக எண்ண வேண்டாம், சண்டி மற்றும் சூலி எனும் பெயர்கள் வேதங்களில் வரவில்லை என்று படித்திருக்கிறேன். ஒரு சுவையான பின்னணி இருக்கிறது. வேதங்களை ஓதியதும் பரப்பியதும் ஆரிய, அந்தணர்கள். சண்டி, சூலி எனும் பெயர்கள் அந்தணரல்லாதவரின் கடவுள்களென்று கருதப்பட்டதால் வேதங்களில் இந்தப் பெயர்கள் இடம் பெறவில்லையாம். பொதுவாக நகர நாட்டு எல்லைகளில் காவல் தேவதைகளாக அந்தணரல்லாத, ஆரியரல்லாதவர்களால் வழிபட்டு வந்த உபசக்தி வடிவங்கள் என்று கருதப்பட்டனவாம். வேதங்களில் வருகின்றனவோ அல்லவோ, அது அந்தணர்கள் ஆரியர்கள் கதையென்று விடுவோம். சக்தியே சொல்லி, விஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படும் ஹயக்ரீவர் வழி மொழிந்ததாகச் சொல்லப்படும் லலிதா சஹஸ்ரநாமத்தில் சண்டி உண்டு. சக்தியின் இன்னொரு பாதியான, அந்தணர்களின் முதன்மைக் கடவுளாகக் கருதப்படும் சிவனே ஆதிசங்கரருக்கு மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சௌந்தர்யலஹரியில் சண்டி இல்லை. ம்ம்.. சுவையான பின்னணி என்றேனே? நதி எங்கே போகிறது?

இந்தப் பாடலுக்கேற்ற அழகான சித்திரத்துடன் விளக்கம் சேர்த்திருக்கும் வித்தகர் குமரனின் இடுகை இங்கே.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/26

குறித்தேன் மனத்தில்....

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 76 ராகம்: பைரவி


குறித்தேன் மனத்தில் நின்கோல மெல்லாம் நின்குறிப் பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டி
வெறித்தே னவிழ் கொன்றைவேணிப் பிரானொரு கூற்றை மெய்யில்
பறித்தே குடி புகுதும் பஞ்சபாண பைரவியே.

ஐவகை மலரம்புகளை ஏந்திய சக்தியே, வண்டுகள் துளைக்கும் அளவுக்கு மயக்கும் தேனைக் கொண்ட கொன்றை மலர் மாலையை முடியில் அணிந்த சிவனுடைய உடலின் ஒரு பகுதியை உன்னுடன் சேர்த்துக் கொண்ட உனது அழகிய வடிவங்களை எண்ணிக் கொண்டிருந்தேன்; உன் திருவுளப்படியே எமன் என்னைத் தேடி வரும் வழியைத் தடை செய்து விட்டேன்.

'பஞ்ச பாண பைரவியே, வண்டு கிண்டி வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப்பிரான் மெய்யில் ஒரு கூற்றை பறித்தே குடி புகுதும் நின் கோலமெல்லாம் மனத்தில் குறித்தேன்; நின் குறிப்பறிந்து மறலி வருகின்ற நேர்வழி மறித்தேன்' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

குறிப்பு என்றால் விருப்பம் என்று பொருளுண்டு. 'குறிப்பறிந்து' என்பது இங்கே அபிராமியின் விருப்பப்படி, 'பட்டருக்கு உதவும் திருவுளப்படி' என்ற பொருளில் வருகிறது. மறலி என்றால் எமன். மறல் என்றால் மரணம். மரணத்தைக் கொண்டு வருபவன் மறலி. கிண்டி என்பதற்கு துளைத்த என்று பொருள். வெறி என்றால் மயக்கம் என்று பொருளுண்டு. வேணி என்றால் சடை என்று பொருளுண்டு. கூறு என்றால் பிரிவு, பகுதி. இங்கே 'சிவனுடைய உடலில் ஒரு பாதியை' என்ற பொருளில் வருகிறது. பைரவி என்றால் வலிமையுடையவள், சக்தியுடையவள் என்று பொருள். அபிராமி தனக்கு உதவி செய்ய முன்வந்து விட்டாள் என்று பட்டர் உணர்ந்தது போல் பாடியிருக்கிறார்.

பயிரவி என்று நேர்சொல் இருப்பதாக என் சிற்றறிவுக்கு தெரியவில்லை. பயிரவி என்பது இங்கே பைரவியைக் குறிக்கிறது. அந்தாதித் தொடை காரணமாகவும் அடுத்த பாடலின் எதுகை காரணமாகவும் பைரவி, பட்டர் பாட்டில் பயிரவி ஆனாளென்று நினைக்கிறேன். பைரவி என்பது பைரவனின் பெண்பால் - வலிமையுடையவள் என்று பொருள். வயிரவி என்பதன் மருவாகக் கொள்ளலாம். வயிரவி என்பது வயிரவனின் பெண்பால். வயிரவன் என்றால் தலைவன், சிவன் என்று பொருள். வயிரவி என்பதற்கு ஒளிவீசுகிறவள் (வயிரம்:வைரம்) என்றும் பொருள்.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் பைரவி ராகத்தில் அமைந்துள்ளன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/25

தங்குவர் கற்பகத்தாருவின்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 75 ராகம்: சுத்த தன்யாசி


தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயரின்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தவுந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

உயர்ந்த மலைகளையும் பொங்கியெழும் பெருங்கடல்களையும் பதினான்கு உலகங்களையும் தன் வயிற்றில் பெற்றெடுத்த நறுமணம் செறிந்த பூக்களை அணிந்த கூந்தலையுடையவளின் மேனியழகை மனதில் நிறுத்தியவர்கள் மட்டுமே, இவ்வுலகில் பிறவி எனும் தீமையை ஒழித்து, பெற்றெடுக்கும் தாயில்லாத நிலையில் கற்பகமர நிழலில் தங்குவார்கள்.

'மால் வரையும் பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் உந்தி பூத்த கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே, வழுவாம் மண்ணில் பிறவியை மங்குவர்; தாயரின்றி கற்பகத் தாருவின் நீழலில் தங்குவர்' எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.

மால் என்றால் நெடிய, உயர்ந்த என்று பொருள் (விஷ்ணுவைத் தமிழில் திருமாலென அழைப்பதேன் தெரியுமா?). வரை என்றால் மலை. உவர், ஆழி இரண்டுமே கடலைக் குறிக்கும் (ஒரு பொருட்பன்மொழி). உந்தி என்றால் வயிறு. 'உந்தி பூத்த' என்பது பெற்றெடுத்த என்ற பொருளில் வருகிறது. கொங்கு என்றால் நறுமணம். இவர் என்றால் செறிந்த, மிகுந்த என்று பொருள். 'குறித்த' என்றால் எண்ணிய என்று பொருள். வழு என்றால் குற்றம், பாவம், தீமை என்று பொருள். மங்குதல் என்றால் தேய்தல், அழிதல் என்று பொருள். 'பிறவி மங்குவர்' என்பது 'பிறவி ஒழிப்பர்' என்ற பொருளில் வருகிறது. தாரு என்றால் மரம். கற்பக மரம் தேவருலகத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். (தென்னை பனை மரங்களுக்கும் கற்பகம் என்று பெயர்; தேவலோகத் தென்னை மரமாக இருக்கலாம்). நீழல் என்றால் நிழல். 'தாயரின்றி' என்பது தாயில்லாத நிலையை, அதாவது, பெற்றெடுக்க வேண்டிய அவசியம் இல்லாத பிறவாமை நிலையைக் குறிக்கிறது. அபிராமியின் அழகை எண்ணியவருக்குப் பிறவியில்லை எனும் கருத்தை, அருமையான தமிழ்ச்சொற்கள் பலவற்றைப் பயன்படுத்திப் பாடியிருக்கிறார் பட்டர். பிறவாமை நிலையை, 'தாயரினிறி' என்று பட்டர் சொல்லியிருப்பது சுவை.

கற்பகத்தாருவின் நிழலில் கட்டில் போட்டமர்ந்து தேவ மகளிர் ஆடிப்பாடுவதைக் கண்டு பிறவிக்களைப்பாறலாம் என்றார் முந்தைய பாடலில்; 'இவ்வளவு தானா? கடைசியில் தேவமகளிர் ஆடும் டப்பாங்குத்தைப் பார்க்கத்தான் அபிராமியைக் கொண்டாடினோமா?' என்று நினைக்கும் பொழுது, இந்தப் பாடலில் தெளிவு படுத்துகிறார். அபிராமியின் திருவடிகளைப் பற்றுவதே பிறவியின் குறிக்கோள் என்று அறிந்தவருக்கு தேவமகளிரின் ஆட்டம் பாட்டம், கற்பக மர நிழல் கிடைக்கும்; அப்படி அறிந்து கொண்டதுடன் நிற்காமல் அனைத்தையும் படைத்தவள் என்ற தகுதியோடு அபிராமியை மனதில் நிறுத்தியவருக்கு மட்டுமே கற்பகமர நிழல், களியாட்டம் இவற்றுடன் பிறவாமையும் கிடைக்கும் என்கிறார் பட்டர் (குறித்தவர் என்பதற்கு இலக்காகக் கொண்டவர் என்றும் பொருள்). அபிராமியை அடைக்கலம் என்று அறிவதுடன் நிற்காமல் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அவளை வணங்கவும் வேண்டும் என்பது பட்டரின் உட்பொருள்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/24

நயனங்கள் மூன்றுடை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 74 ராகம்: சுத்த தன்யாசி


நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயனென்று கொண்டவர் பாவையராடவும் பாடவும் பொற்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

முக்கண்ணனாகிய சிவனும், நாராயணனும், பிரம்மனும், வேதங்களும் புகழ்ந்து வணங்கும் அபிராமியின் திருவடிகளைப் பற்றுவதே பிறவிக் காரணமென்று அறிந்தவர்கள், தேவ மகளிர் ஆடிப்பாடி மகிழ்விக்கும் பொற்சோலையின் பொன் கட்டிலில் அமையப்பெறுவர்.

பரவும் என்றால் வணங்கும், புகழும் என்று பொருள். தமனியம் என்றால் பொன். கா என்றால் தோட்டம், சோலை என்று பொருள். பொற்சோலை, கற்பகச்சோலை என்று பொருள் கொள்ளலாம். அபிராமியின் பாதங்களைப் பற்றி வணங்குவதே பிறவியின் நோக்கம் என்று அறிந்து கொண்டவர்கள், தேவருலகம் அடைவர் என்கிறார் பட்டர். இதற்கு முன்பே, 'வானுலகம் தந்து தான் போயிருக்கும்' என்று பாடியிருக்கிறார்.

நசிகேதன் கதை தெரியுமா? தந்தையின் முட்டாள்தனத்தினால் எமனுலகம் சென்ற சிறுவன், எமன் கண்ணில் விரல் விட்டு ஆட்டி உபதேசம் பெற்ற கதை. நசிகேதனை அமைதிப்படுத்த எமன் வழங்கும் சலுகைகளில் ஒன்று, தேவர் குலப்பெண்கள் ஆடிப் பாடி மகிழ்விக்கும் பொற்சோலை வாசம். நசிகேதன் தேவையில்லையென்கிறான். பிறவாமை ரகசியத்தை அறிய வேண்டுகிறான். கிடைப்பதனால் எதையும் ஏற்க வேண்டுமென்பதில்லை, உண்மையான அன்பைத் தவிர. பட்டர் கூட முன் பாடலொன்றில் 'பிரம்மலோக' வசதிகள் தேவையில்லை என்று பாடியிருப்பது நினைவிருக்கலாம். தேவருலகம், கற்பகச் சோலை, பொற்சயனம் இவையெல்லாம் பட்டர் பாடல்களில் தொடர்ந்து வருகின்றன. இவற்றையெல்லாம் பெறும் வாய்ப்பு அபிராமி அன்பர்களுக்குக் கிடைக்கும் என்றாலும் அவற்றை ஒதுக்கி, 'பிறவாமை அடையும் வழியை அறிவது மட்டுமே பிறவியின் நோக்கமாகும்' என்ற உட்பொருளிலேயே தொடர்ந்து பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/23

தாமம் கடம்பு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 73 ராகம்: சுத்த தன்யாசி


தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவரேத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடிச் செங்கைகள் நாங்கொளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே.

(எமக்கு) என் தாயின் பெயரே சிறப்பு; மூன்று கண்களும் மேன்மை; கடம்ப மாலையும், கரும்பு வில்லும், ஐவகை மலரம்புகளுமே பாதுகாப்புச் சேனை; சிவந்த நான்கு கைகளே ஒளி; (அவளைக்) கடவுளர் தொழும் நேரமே காலம்; அவள் திருவடிகளே இன்பம்.

எளிய பாடலென்றாலும் நயத்தையும் பொருளையும் சுவைக்க, சற்றே பிரித்துப் படிக்க வேண்டும். 'அம்மை நாமம் செம்மை, ஒன்றோடிரண்டு நயனங்கள் திரிபுரை, கடம்பு தாமம், தனுக்கரும்பு பஞ்சபாணம் படை யாமம், செங்கைகள் நான்கு ஒளி, வயிரவர் ஏத்தும் பொழுது, திருவடி எமக்கென்று வைத்த சேமம்' என்று பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

'வயிரவர் ஏத்தும் பொழுது யாமம்' என்பதற்கு 'வயிரவர் எனும் கடவுளர் அபிராமியை வணங்கும் நேரம் நள்ளிரவு' என்றே பெரும்பாலும் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. அது பாடலின் கருவுக்குப் பொருத்தமென என் சிற்றறிவுக்குத் தோன்றாததால், கடவுளர் ஏத்தும் நேரமே பொழுது என்று, அதாவது, அபிராமியை வணங்கும் நேரம் தான் காலம் - வணங்காத நேரம் நேரமே அல்ல என்ற பொருளில் சொல்லியிருக்கிறேன். பட்டரின் பின்னணிக்கு இந்தப் பொருள் பொருத்தமாக அமைகிறது என்று நினைக்கிறேன். நாள் பொழுது என்று பாராமல் அபிராமியையே வணங்கிக் கொண்டிருந்ததனால் தானே அரசனிடம் சிக்கினார்? அந்தாதி பாடுகிறார்? யாமளை என்ற சொல்லுக்கு பாதுகாப்பு தருபவள் என்று பொருள் உண்டு (யாமளை புரிவது யாமம்; யாமம் என்ற தனிச்சொல்லுக்கு நள்ளிரவு, அமைதி என்று பொருள்). புரை என்ற சொல்லுக்கு மேன்மை என்று பொருளுண்டு. ஒன்றோடு இரண்டு என்றால் மூன்று. முக்கண்ணி என்ற பொருளில் வருகிறது. தாமம் என்றால் மாலை. சேமம் என்றால் நலம், இன்பம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/22

என் குறைதீர...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 72 ராகம்: சுத்த தன்யாசி


என் குறைதீர நின்றேத்து கின்றேன் இனியான் பிறக்கின்
நின் குறையே யன்றி யார்குறை காணிரு நீள்விசும்பில்
மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்
தன் குறைதீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே.

அகண்ட வானத்தில் தோன்றும் மின்னலைக் குறை சொல்லும் அளவுக்கு மெலிந்த இடையைக் கொண்ட மென்மையானவளே, அபிராமி, எம் தந்தை சிவபெருமானே தன் பிழைகளைப் பொறுத்தருளும்படி உன் பாதங்களையே தாமரை மலராய் மதித்துத் தலைமேல் வைத்திருக்கிறார்; என் பிழை பொறுக்கவும், பிறவாமை வேண்டியும், உன்னை வணங்கிக் கொண்டிருக்கிறேன்; நான் மீண்டும் பிறவி எடுக்க நேர்ந்தால் அது உன்னுடைய பிழையே தவிர, என் பிழையோ வேறு எவருடைய பிழையோ ஆகாது.

அருஞ்சொல் எதுவுமில்லாத எளிய பாடல். தோன்றி மறையும் மின்னலைவிட மெல்லிடை கொண்டவள் என்பது சுவையான கற்பனை.

அபிராமியைப் பற்றியபின் குறையொன்றும் வராது என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டவர், இந்தப் பாடலில் ஒரு படி மேலே செல்கிறார். 'மூளுகைக்கு என் குறை நின் குறையே' என்று முன்னமே சொல்லியிருந்தாலும், இந்தப் பாடலில் தெளிவாகச் சொல்லிவிட்டார். "இதோ பாரம்மா அபிராமி, உன்னை விட்டால் எனக்கு வேறு கதி கிடையாது; நான் எளியவன், சிறியவன், திறமையற்றவன். உன் பாதங்களைக் கொழு கொம்பெனப் பற்றி இனிப் பிறவாமை வேண்டுமெனக் கேட்டு, 'மதியுறு வேணி மகிழ்நனும், கமலாலயனும், மாலும் இன்னும் மற்ற தேவர்களும் துதியுறு சேவடியாய்' என்று தினமும் உன் தாமரையடிகளையே போற்றி வணங்கிக் கொண்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல என் அப்பன் சிவனும் வேண்டுகிறான். அவனுக்கு பிறவாமை இல்லை. எனக்கு மட்டும் பிறப்பு வந்தால், அது உன் குறை தான்" என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்.

ஒருவருக்கு செய்முறையோ விளக்கமோ ஆணையோ கொடுக்க வேண்டுமானால், தேவையையும் எதிர்பார்ப்பையும் தெளிவாக விளக்கிச் சொல்ல வேண்டும்; எதிர்பார்த்தபடி செயல்படாவிட்டால் என்னாகுமென்றும் விளக்க வேண்டும். அடிப்படைத் தகவல் பயிற்சி. குழப்பமே வரக்கூடாது. அதைத்தான் பட்டர் செய்திருக்கிறார். இது வரை உவமையும் உருவகமும் கொண்டு பாடியவருக்கு சந்தேகம் வந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. சிறிய குழந்தைக்கு விளக்குவதைப் போல அபிராமிக்கு விளக்கி விட்டார். 'இனி நான் பிறந்தால் அது உன்னுடைய தவறு, ரெஸ்ட் மை கேஸ் யுவர் ஆனர்'.

இந்தக் கட்டத்தில், பட்டருக்கு இனி நடக்கப் போவது தெரிந்திருக்கும் என்று தோன்றுகிறது. 'பிறவாமை வேண்டும்' என்று தொடர்ந்து பாடியவர், இந்தப் பாடலோடு நிறுத்திக் கொண்டு விட்டார். இனிவரும் பாடல்களில் பிறவாமை பற்றி எதுவுமே இல்லை; ஒரே ஒரு பாடலில் 'எனக்குப் பிறவாமை கிடைத்தது போல் மற்ற அடியவருக்கும் கிடைக்கும்' என்றும் பாடியிருக்கிறாரே தவிர, பிறவாமை கோரிக்கை வைப்பது இது தான் கடைசி. இனி வரும் பாடல்கள் பெரும்பாலும் அபிராமியைக் காணப்போகும் அல்லது கண்ட ஆனந்தம் மட்டுமே வெளிப்படுகிறது. 'இறக்கும் தறுவாயில் என் முன்னே வர வேண்டும்' என்பதைத் தவிர, வேறு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை.

ராமாயணக் காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. சரபுங்க முனிவர் செய்தப் பெருந்தவங்களை மெச்சி பிரம்மன் அவருக்கு பிரம்மலோகப் பதவி தருவதாகச் சொல்லி அழைத்து வர இந்திரனை அனுப்புகிறான். 'நோ தேங்க் யூ, நத்திங் டூயிங்' என்கிறார் சரபுங்கர். ஏமாற்றத்துடன் வெளியே வருகிறான் இந்திரன். வரும் வழியில் அந்தப்பக்கம் வந்து கொண்டிருக்கும் சீதா, ராம, லட்சுமணர்களைப் பார்க்கிறான். வணங்கி விட்டு செய்தி சொல்லிப் போகிறான். இந்திரனை விசாரித்த ராமன் மட்டும் தனியே சரபுங்கரைப் பார்க்கப் போகிறான். ராமனை அடையாளம் கண்ட முனிவர் திக்குமுக்காடிப் போய், 'ஐயா, உன் மனைவி, சகோதரன் எங்கே? அவர்களையும் அழைத்து வா' என்கிறார். ராமனும் சீதை லட்சுமணனை அழைத்து வருகிறான். மூவரையும் கண்குளிரக் கண்ட சரபுங்கர், விழுந்து வணங்குகிறார். உடனே தீ மூட்டி குதிக்கப் போகிறார். அவரைத் தடுத்த ராமன், "ஐயா, என்ன இது? எங்களை உள்ளே வரச்சொல்லிப் பார்த்தீர்... தொழுதீர்... தீமூட்டி விழுதீர்? இது என்ன புதுமை? உட்காரச் சொல்லவில்லை, ஒரு குளிர் பானம் கூடத் தரவில்லை?" என்று கேட்கிறான். சரபுங்கர் சொல்கிறார், "அசல் உலக நாயகனே, ஐயா, உன்னைப் பார்த்த பிறகு உயிர் போய் விட வேண்டும்; இனி எதுவும் தேவையில்லை. பிரம்மலோகம் கூட வேண்டாம் என்று துறந்தவன் நான்; உன் பார்வையும் பாதமும் பட்டதும் எனக்குப் பிறவாமை கிடைத்து விட்டது. இனி நான் செய்ய வேண்டியது எதுவுமே இல்லை. டாடா" என்று தீயில் விழுகிறார்.

கடவுளைக் கண்டவுடன் எத்தனையோ வரங்களைக் கேட்கலாம்; ஒன்றுமே கேட்காமல் பிறவாமை கிடைத்த பயனுடன் உயிரையும் விடலாம். கடவுளைக் கண்டவுடன் பிறவாமை கிட்டியதென்று உயிர் துறப்பது, முதிர்ந்த முனிவர்களின் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. பட்டரும் அப்படித் தான் போல. அபிராமியைக் கண்டதுமே பிறவாமை கிடைத்து விடும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/21

அழகுக்கு ஒருவரும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 71 ராகம்: சுத்த தன்யாசி


அழகுக் கொருவரு மொவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமா மதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற் றுநின்ற நெஞ்சே இரங்கேலுனக் கென்குறையே?

குளிர்ந்த நிலவின் பிறையைச் சூடிய ஒப்பற்ற அழகியான வேதங்கள் கொண்டாடும் யாமளையினுடைய சிவந்தப் பாதத்தாமரைகளே பற்றுக் கோடாக கிடைத்திருக்கும் பொழுது, துன்பமுறும் நெஞ்சே உனக்குக் குறையொன்றுமில்லை, வருந்த வேண்டாம்.

வேதங்களைக் காற்சிலம்பாகக் கொண்டவள் என்பதை முன்பு பரிபுரச்சீரடி என்று வர்ணித்தவர், வேதங்கள் பட்டுச் சிவந்த பாதத்தாமரை என்று இங்கே சொல்கிறார். வேதங்கள் மேல் நடம் புரிந்த என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'பனிமா மதியின் குழவி' இங்கே பிறைச்சந்திரனைக் குறிக்கும். இமயன் மகள் என்றும் பொருள் கொள்ளலாம்; எனில், திருமுடிக் கோமளம் ஒளிவீசும் மென்மையான கூந்தலையுடையவள் என்ற பொருளில் வரும். இழவு என்றால் துன்பம், வீழ்ச்சி என்று பொருளுண்டு. இரங்குதல்: வருந்துதல், கெஞ்சுதல். யாமளை என்ற சொல்லுக்கு நல்வழியில் காத்தருள்பவள் என்ற பொருளை முன் பாடலொன்றில் பார்த்திருக்கிறோம் (எந்தப் பாடலென்று சொல்லுங்கள்?).

'அபிராமியின் பாதங்களைக் கொடிக்கொம்பாகப் பற்றிக்கொண்ட பின் குறையேதுமில்லை, வருந்த வேண்டாம், பசுந்ததமிழ்ப் பைங்கிளியின் பாதத்தாமரைகளே பாதுகாப்பு' என்று தன் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்வதாய் வருகிறது பட்டரின் பாடல். மலரடி பல்லவமல்லது பற்றொன்றிலேன் என்றார் முன்பு.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/20

கண் களிக்கும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 70 ராகம்: சஹானா


கண் களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்குங்குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர்க்குலப்
பெண் களிற்தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

மண்ணுக்கு அழகு சேர்க்கும் பசுமையான நிறமும், இசைக்கு இனிமை சேர்க்கும் குரலும், வீணை ஏந்திய கையும் நெஞ்சுமாக கடம்ப வனத்தில் தோன்றியிருக்கும் மதங்கர் குலப் பெண்ணான என்னுடைய தாயின் பேரழகை, என் கண்கள் மகிழும் அளவுக்குக் கண்டேன்.

நரம்பையடுத்த இசை வடிவான அபிராமியின் அழகை இன்னும் விவரிக்கிறார் பட்டர். மண்ணுக்குப் பசுமையும், இசைக்கு இனிமையும், பெண்ணுக்கு அழகும் சிறப்பு. இவையனைத்தும் அபிராமியின் தன்மைகளே என்கிறார் பட்டர்.

கடம்ப அடவி இங்கே மதுரையைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன். பயோதரம் என்றால் பால், முலை, நெஞ்சு என்று பொருள். வீணை, கைகள் என்பதைத் தொடர்ந்து வருவதால், பயோதரம் 'வீணை ஏந்திய நெஞ்சு' என்ற பொருளில் வருகிறது.

மதங்க முனிவர் தவமிருந்து பார்வதியைப் பெண்ணாகப் பெற்றது சிவபுராணக் கதை. மதங்கம் என்றால் யானை. மதங்கம் என்றால் முருகு (அழகு) என்றும் பொருள். பார்வதியின் இரண்டு பிள்ளைகளும் 'மதங்கர்' என்று அழைக்கப்படுகிறார்கள். யானையை வலிமைக்கும் அழகுக்கும் அறிவுகூர்மைக்கும் நினைவுகூர்மைக்கும் சின்னமாகச் சொல்வர். பார்வதியின் பிள்ளைகளில் முருகனும் கணேசனும் இத்தன்மையுடைவர்கள் என்பதற்கு திருவிளையாடல் கதைகள் உதாரணம். மதங்க - யானை - அழகி பார்வதியின் கதையும் சுவையான திருவிளையாடல் கதை. மாதங்கி என்ற தமிழரசி (சக்தியின் முதல் மந்திரி, தளபதி?) பற்றியும் படித்திருக்கலாம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/19

தனம் தரும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 69 ராகம்: சஹானா


தனந்தரும் கல்வி தருமொரு நாளுந் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன வெல்லாந் தருமன்ப ரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமிக் கடைக்கண்களே.

செல்வம், கல்வி, சோர்வடையாத மனம், அழகான வடிவம், தீமை எண்ணாத உறவு நட்பு, இன்னும் பல நன்மைகளைத் தரும் பூங்குழலி அபிராமியின் கடைக்கண் பார்வை, அவள் அன்பர்களுக்கோ நிலையான பெருமையையும் தரும்.

அபிராமியை மாத்திரை போதும் மனதில் வையாதவர் பாத்திரமேந்தி பிச்சையெடுப்பர் என்று முதல் பாடலிலும், அபிராமியின் பாதங்களைச் சேர்ந்தவர்கள் அடையாத செல்வமே இல்லை என்று அடுத்த பாடலிலும் சொன்னவர், அபிராமியை வணங்கினால் பல வகை செல்வங்கள் கிடைக்கும் என்று இந்தப் பாடலில் விவரமாகச் சொல்கிறார்.

தனம், கல்வி, தளர்வறியா மனம், அழகு, நேர்மையான உறவினர், நண்பர் எல்லாம் சரி, 'சோறு எங்கே?' என்று கேட்பவருக்கு என்ன சொல்கிறார்? 'நல்லன எல்லாம் தரும்' என்பதில் அடங்கியிருப்பதாகச் சொல்கிறார்.

"என்னய்யா இது? அபிராமியை வழிபட்டால் இத்தனை நேரமும் பிறவாமை கிடைக்கும் என்று சொல்லிவிட்டு, இப்போது சாதாரண பணங்காசு, கல்வி, பிள்ளைகள் என்று இந்த உலகத்து நன்மைகள் கிடைப்பதாகச் சொல்கிறீர்களே? மீண்டும் இவற்றிலே சுழலுவோமே? பிறகு பிறவாமைக்கு என்ன வழி? அவ்வளவு தானா? பிறவாமை கிடையாதா?" என்று பட்டரைக் கேட்க தோன்றுகிறது.

பட்டர் பாடலைக் காவனிப்போம். என்ன சொல்கிறார்? அபிராமியை மட்டுமே எண்ணி வழிபடும் அன்பர்களுக்கோ இன்னும் கிடைக்கும் என்கிறார். கனம் தரும் என்கிறார் கடைசி வரியில். அது என்ன? கனம் தருவாளா? பருமனாக்குவாள் அபிராமி என்கிறாரா? கனம் என்ற சொல்லுக்கு நிறைவு, பெருமை, நிலை என்று பொருளுண்டு. அபிராமி அடியாருக்கு மட்டும் கனம் தருவாள், அதாவது நிலையான பெருமையை, பெரும்பேற்றைத் தருவாள் என்கிறார். இந்தச் செல்வங்களை அனுபவிப்பதால் மனம் பேதலிக்காமல் நிலையடையச் செய்வாள் அபிராமி என்றும் பொருள் கொள்ளலாம். 'கடைக்கண் பார்வைக்கே இத்தகைய செல்வங்கள் கிடைத்தால், பாதங்களைத் தழுவும் அண்மைக்கு இன்னும் எத்தகைய செல்வங்களை வழங்குவாள் அபிராமி என்று நினைத்துப் பாருங்கள்' என்று பட்டர், பக்தர்களுக்குச் சவால் விடுவதாகவும் பொருள் கொள்ளலாம்.

சுவையான பாடல்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/18

பாரும் புனலும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 68 ராகம்: சஹானா


பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகுசுவை ஒளிஊறு ஒலியொன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே.

நீர் நிலம் தீ வளி வானம் என அனைத்து நிலைகளுமாய்ப் பரந்தவளும், மணம் சுவை ஒளி தீண்டல் ஓசை என இத்தன்மைகள் ஒருங்கே சேர்ந்தவளும், சிவனின் ஆசை நாயகியுமான அபிராமியின் பாதங்களை அடைந்தவர்கள் பெற இயலாத செல்வமெதுவுமில்லை.

'அபிராமியை நினைக்காவிட்டால் நாய் படாத படுவர்' என்று முந்தைய பாடலில் வன்மையாகப் பயமுறுத்தியவர், இந்தப் பாடலில் 'அபிராமியை வணங்குவோர் எல்லாச் செல்வங்களையும் பெறுவர்' என்று மென்மையாகச் சொல்கிறார். அறம் பாடும் பட்டரை விட, வரம் பாடும் பட்டர் பெட்டர் என்று படுகிறது.

பார்: நிலம், புனல்:நீர், கனல்:தீ, கால்:காற்று, விசும்பு: ஆகாயம். முருகு என்றால் அழகு, மணம் என்று பொருள். (அழகனென்பதால் முருகனா, முருகனென்பதால் அழகனா?) ஊறு என்றால் தீண்டல், தொடல், ஸ்பரிசம் என்று பொருள். இவ்வுலகில் நாம் எதிர்கொள்ளும் நிலை, தன்மை அனைத்துமே அபிராமி தான் என்கிறார் பட்டர். அத்தகைய அபிராமியின் சிறப்பான பாதங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைக்காத செல்வம் எதுவுமே இல்லை என்று வலியுறுத்துகிறார். 'ஐயா, கிடைக்காத செல்வமே இல்லையென்கிறீரே, அவை யாவை என்று சொல்லக்கூடாதா?' என்று யாரும் கேட்டுவிடக்கூடாதே என்று அச்செல்வங்களை வரும் பாடலில் விளக்குகிறார்.

சிவகாம சுந்தரியின் பெயர்க்காரணம் சுவையான, சிருங்காரப் புராணக்கதை. சிவராத்திரியின் பின்னணி. எரிந்த மன்மதனின் மலரம்புகளை எடுத்துக் கொண்டு பார்வதி சிவனைச் சந்தித்த ராத்திரி சிவராத்திரி. மன்மதனின் ஐந்து மலரம்புகள் ஒவ்வொன்றும் சிவனுக்கு ஏற்படுத்திய உபாதைகளையும் சிவன் விழித்திருந்த காரணத்தையும் புராணத்தில் படிக்கலாம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/17

தோத்திரம் செய்து...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 67 ராகம்: சஹானா


தோத்திரம் செய்து தொழுது மின்போலும் நின்தோற்றமொரு
மாத்திரைப் போதுமனதில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றிநாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்குழலா நிற்பர் பாரெங்குமே.

அபிராமியின் மின்னொளி போன்ற தோற்றத்தைக் கணந்தோறும் மனதில் வைத்துப் போற்றி வணங்காதோர், நற்குலம் செல்வம் கல்வி குணம் கொடை அனைத்தையும் இழந்து பாத்திரமேந்தி வீடு வீடாகப் பிச்சை எடுத்துத் துன்புறுவர்.

'செய்து தொழுது' என்பதை 'செய்யாது தொழாது' என்று எதிர்மறையில் பொருள் கொள்ள வேண்டும். மாத்திரை என்றால் கணம். (வழக்கழிந்து போன கால அளவு). வண்மை என்றால் வளமை, தருமம், கொடை என்று பொருள். கோத்திரம் இங்கே செல்வம் என்ற பொருளில் வருகிறது. பலி என்றால் பிச்சை, இரத்தல். 'உழலா நிற்பர்' என்பது 'உழன்று நிற்பர்' என்ற எதிர்மறையில் வருகிறது.

அபிராமி பெயரைச் சொன்னால் சோறு கிடைக்குமா என்று தெளிவாகச் சொல்லாவிட்டாலும், அவள் பெயரைச் சொல்லாவிட்டால் சோறு கிடைக்காது என்பதை பட்டர் தெளிவாகச் சொல்கிறார். அறம் பாடுவது போல் தீர்க்கமாகத் திட்டுகிறார். அபிராமியை மனதில் வையாதவர் பாரெங்கும் திரிந்து பிச்சையெடுப்பார் என்கிறார்.

தன்னைக் காப்பாற்று என்று இதுவரைத் தொடர்ந்து பாடியவர், இந்தப் பாடலில் மற்றவரைத் திண்டாட விடு என்பது போல் பாடியிருப்பது ஏனென்று தெரியவில்லை. நேரமாகிறது, நிலைவைக் காணோம் அபிராமியையும் காணோம் என்று கலங்கியிருப்பாரென்று தோன்றவில்லை. தன்னைக் கேலிக்குள்ளாக்கிய மற்ற புரோகிதர்களையும் அரசனையும் தாக்குகிறார் என்று ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தாலும், அபிராமியை நாளும் பொழுதும் மனதில் நிறுத்தி வணங்குவதால் தனக்கு பிச்சையெடுக்கும் நிலையேற்படப் போவதில்லை என்பதையே பட்டர் தீர்மானமாகச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/16

வல்லபம் ஒன்றறியேன்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 66 ராகம்: சஹானா


வல்லப மொன்றறியேன் சிறியேன் நின்மலரடிச் செம்
பல்லவ மல்லது பற்றொன்றிலேன் பசும்பொற் பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல்லவ மாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே.

பொன்மலையை வில்லாக வளைத்த சிவனுடன் இணைந்து அமர்ந்திருப்பவளே! (அது போல்) அரிய செயல் எதுவும் புரியும் திறமையற்ற எளியவன் நான்; உன் சிவந்த பாதங்களைக் கொடி போல் பற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழி அறியாதவன். குறையிருந்தாலும் என் மொழிகள் உன் பெருமையைப் பாடும் வணக்கங்களாகும்.

முந்தைய பாடலில் 'மற்ற தெய்வங்கள் வாழ்வதற்குத் துணை செய்தாலும் பிறவாமையை வழங்கும் திறனற்ற வீணான தெய்வங்கள்' என்று அதிரடி போட்ட பட்டர், அபிராமியிடம் தன் எளிமையை எடுத்துச் சொல்லி, பிற தெய்வங்களை நம்பாமல் அபிராமியையே எண்ணி வழிபடுவதில் குறையிருந்தாலும் அதைப் பொறுத்தருள வேண்டும் என்கிறார். 'குறையுள்ள மொழியானாலும் அது உன்னை மட்டுமே நம்பிப் பாடும் வணக்கங்களாகும்' என்கிறார் பட்டர். 'நான் பாடுவது தான் தோத்திரம், நீ ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்' என்கிறாரோ? தைரியம் தான்.

வல்லபம் என்றால் வலிமை, திறமை. பல்லவம் என்பதற்கு இளந்தளிர், கொடி, தாழ்ந்த என்று பல பொருளுண்டு. 'செம் பல்லவம்' என்பது சிவந்த பாதங்கள் என்ற பொருளில் வருகிறது; சிவனுடன் வீற்றிருக்கும் பொழுது தாழ்ந்திருக்கும் அபிராமியின் பாதங்கள் என்று பொருள் கொண்டிருக்கிறேன்.

பாதங்களைக் கொடி போல் பற்றிக் கொள்வதாக பட்டர் பாடுவது சுவை. முன்பு அடியார்களைக் கொடி போல் அபிராமி பற்றிக் கொள்வதாகப் பாடியது நினைவிருக்கலாம். வினையேன் என்ற சொல் தன்னிச்சையாக எதுவும் செய்யாமல் வினைப் பலனாற் செயற்படும் நிலையைக் குறிக்கிறது. அபிராமியைப் பாடுவதும் வினைப்பயன்; அரசனிடம் அகப்பட்டுக் கொண்டதும் வினைப்பயன். திறமையில்லாத எளியவன், ஆட்டுவித்தால் ஆடுபவன், என்று தன் திக்கற்ற சாமானிய நிலையை அபிராமியிடம் எடுத்துச் சொல்கிறார்.

'எந்த வகையான சிறப்பும் திறமையும் அற்ற சாதாரணன், அபிராமியைத் தவிர வேறு எந்தவித பற்றுமில்லாதவன்' என்று, ஆதரவற்ற தன் நிலையைச் சொல்லி அழுகிறார் பட்டர். 'வல்லபம் ஒன்றறியேன், சிறியேன்' என்று என் அம்மா பாடும்பொழுதெல்லாம் நெஞ்சம் கலங்கும். ஊரிலேன் காணியில்லை என்ற பிரபந்தப் பாடலின் 'கதறுகின்றேன், ஆருளர் களைகண்?' வரிகள் நினைவுக்கு வரும். பதின்ம வயதில் நெகிழச் செய்தது, இன்றைக்கும் கனக்கிறது.

'நாமங்கள் தோத்திரமே' என்பது சுவை. அழகாக அந்தாதி பாடாமல் 'அபிராமி' என்று ஆயிரக்கணக்கில் பட்டர் சொல்லியிருக்கலாம். லலிதா சஹஸ்ரநாமத்தில் பாருங்கள், ஒரே கருத்தைத் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார்கள். தாமரையில் அமர்ந்தவளே என்பதை மட்டும் நூற்றுக்கணக்கில் சொல்லியிருக்கிறார்கள். எல்லாமே தோத்திரம் தான்.

கேவலமான வாழ்க்கை வாழ்ந்த ஒருவன், நாராயணன் என்ற பெயர் கொண்ட தன் மகனை 'அந்த நாராயணா, இந்த நாராயணா' என்று திட்டி, நையப் புடைத்த காரணத்தால் பெரும்பேறடைந்த கதையைப் பாகவதத்தில் படிக்கலாம். இறைவன் பெயரே தோத்திரம் என்ற நம்பிக்கையினால் பிள்ளைகளுக்கு இறைபெயர் சூட்டும் பழக்கம் உண்டானது. (என் அத்தை திருமதி தர்மாவிடம், தன் மகனுக்கு நாராயணன் என்று பெயர் வைத்திருப்பதால் அவருக்கு சொர்க்கம் உத்தரவாதம் என்று அடிக்கடி சொல்வேன். 'இந்த நாராயணனை உதைக்கணும்' என்று அவர் திட்டினாலும் அது தோத்திரமாகும் என்றும், 'ஏதுடா நாராயணா, உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா?' என்று அவர் கேட்கும் பொழுதெல்லாம் சொர்க்கத்தில் இடம் பிடிக்கிறார் என்றும், கிண்டலாகச் சொல்வேன். கண்டபடி திட்டக்கூடாது என்பதற்காகவும் கடவுள் பெயரை வைப்பதாகச் சொல்வதுண்டு. நண்பர் ராகவனைத் திட்டும் பொழுது மட்டும் வேறு பெயரை உபயோகித்துத் திட்டுவார் அவருடைய அப்பா.) கடவுள் பெயரைச் சொல்லிப் புண்ணியம் சேர்க்க இத்தகைய எளிய வழிகளும் பயன்படுகின்றன என்பதைப் புராணக்கதைகள் சொல்கின்றன. இந்தக் கதைகளை உதாரணமாக எடுத்துக் காட்டி, புதுப்பெயர் வைக்கிறேன் பேர்வழி என்று ஏடாகூடமாகச் செய்து அந்த இலவசப் புண்ணியச் சேர்க்கையையும் இழக்கிறார்கள் என்று பிரபல ஐந்தெழுத்து இறையிலக்கியவாதி பிரபல மூன்றெழுத்துப் பத்திரிகையில் புலம்பியிருப்பதை, க்கும்.. எழுதியிருப்பதை, படித்திருக்கலாம்.

இங்கே தன் அந்தாதியில் குறையிருந்தாலும் (சொல்+அவம்) அது அபிராமி தோத்திரம் என்று பட்டர் பாடுவது, அவரது அசைக்க முடியாத நம்பிக்கையை மட்டுமல்ல, தன்னடக்கத்தையும் காட்டுகிறது என்று எண்ணுகிறேன்.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள், சஹானா ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/15

ககனமும் வானும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 65 ராகம்: ஆபேரி


ககனமும் வானும் புவனமுங் காணவிற் காமனங்கம்
தகனமுன் செய்ததவப் பெருமாற்குத் தடக்கை யுஞ்செம்
முகனுமுன் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண் டாயதன்றோ வல்லிநீ செய்த வல்லபமே.

அன்பின் தேவனான மன்மதனை வானத்திலுள்ள தேவரும் பூமியிலுள்ள மனிதரும் கண்டறியும் படி எரித்த சிவனுக்கு, சிவந்த மேனியும் பன்னிரு கண்களும் ஆறுமுகமும் கொண்ட மகனை அன்பின் அடையாளமாக வழங்கியது, அன்புக்கொடியாகிய அபிராமியே, உன் முதிர்ந்த அறிவின் வல்லமையாகும்.

ஆத்திரம் கண்ணை மூடும்; அவசரம் அறிவை மூடும். ஆத்திரத்திலும் அவசரத்திலும் தவறு செய்வது அறியாமை. அந்த அறியாமையைத் தண்டிப்பது இன்னும் பெருத்த அறியாமை. திருத்துவது முதிர்ச்சியாகும். நம்மைச் சுற்றி இருக்கும் மனைவி, மக்கள், நண்பர் என்று அத்தனை பேரிடத்திலும் இந்த நெறியைக் கையாளலாம். பட்டர் பாட்டின் உட்பொருள் இது தான்.

சிவனின் செயல் ஒன்றுமில்லாதவற்றிற்கெல்லாம் பிள்ளைகளை அடித்துத் துவைக்கும் தகப்பன்களின் அறியாமையை ஒத்தது. அன்பையும் காதலையும் உருவாக்க முயற்சி செய்த மன்மதனை எரித்தது சிவனின் அறியாமை; அந்த அறியாமையை அறிந்து, அது அகல அன்பையே தண்டனையாக வழங்கியது அபிராமியின் முதிர்ந்த அறிவு என்பது பட்டர் கருத்து.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/14

வீணே பலி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 64 ராகம்: ஆபேரி


வீணே பலிகவர் தெய்வங்கள் பால்சென்று மிக்கவன்பு
பூணே னுனக்கன்பு பூண்டுகொண்டேன் நின்புகழ்ச்சி யன்றிப்
பேணே னொருபொழு துந்திருமேனிப் பிரகாச மன்றிக்
காணே னிருநில முந்திசை நான்குங் ககனமுமே.

உன் அழகான மேனியின் ஒளியைப் போல் நான்கு திசைகளிலும் விண்ணிலும் மண்ணிலும் அகண்ட வானிலும் நான் கண்டதில்லை; உன் மேல் பக்தி பூண்டபின் வீணாக உயிர் வாழ வைக்கும் பிற தெய்வங்களை நான் விரும்பவில்லை; உன் பெருமையையே போற்றி வணங்கிக் கொண்டிருப்பேன்.

'வீணே பலி கவர்' என்பதற்கு 'வீணாக உயிர்ப்பலி வாங்கும்' என்றும் பலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். இங்கே 'பலிகவர்' என்பது எதிர்மறையில் வருகிறது என்று நினைக்கிறேன். 'உயிர் வாழ்வது அபிராமியின் புகழைப் பாடுவதற்கே' என்றும் 'அபிராமி அடியவருக்கு பிறவாமை கிடைக்கும்' என்றும் பட்டர் நம்பியதால் இங்கே தன் வாழ்வின் பொருள் விளங்கியது போல் பாடுகிறார். மற்ற தெய்வங்களை நம்பி வாழ்வதில் ஒரு பயனுமில்லை என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். 'உயிரை எடுக்கும் தெய்வமாகவே இருந்தாலும், மீண்டும் பிறவா நிலையைக் கொடுக்கக் கூடியவள் அபிராமி மட்டும் தான்; மற்ற தெய்வங்களை நம்பி உயிரைக் கொடுத்தால் பிறவாமை கிடைக்காது' என்று பட்டர் பாடுவதாகவும் பொருள் கொள்ளலாம். ககனம்: வெளி, அண்டம், வானம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/13

தேறும்படி சில...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 63 ராகம்: ஆபேரி


தேறும் படிசில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறிகுறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளா யிருப்ப தறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.

நற்கதி அடையக் கடைபிடிக்க வேண்டிய வழிகளைச் சொல்லும் ஆறு மதங்களும் தலைவியெனப் போற்றும் இவளை (அபிராமியை) வழிபடாமல் வேறு மதங்களைத் தழுவி நற்கதி அடைய எண்ணுவது, மலையை கோடரியால் வெட்டி நகர்த்த முயற்சிப்பது போன்றதாகும்.

'குன்றில் தறி கொட்டும் வீணர்' என்பது சுவையான உவமை. தறி என்பதற்கு கோடரி என்று பொருளுண்டு. அபிராமியை வழிபடாமல் மற்ற மதங்களைப் பின்பற்றி நற்கதியடைவது மலையை நகர்த்துவதற்கு ஒப்பாகும் என்கிற பட்டர், இங்கே மன்னரைச் சாடுகிறார் என்று நினைக்கிறேன். சரபோஜி அரசனும், பட்டரைக் கோள் சொல்லி சிக்க வைத்த மற்றவரும் என்ன மதத்தைச் சார்ந்தவர்கள் என்று விவரங்கள் ஏதும் தெரியவில்லை.

ஆறு மதங்கள் யாவையென்பதில் வட மற்றும் தென்னாட்டு இறையிலக்கியங்களிடையே வேறுபாடு காணப்படுகிறது. சூரியன், சிவன், விஷ்ணு, முருகன், கணபதி, சக்தி எனும் கடவுள்களை மையமாகக் கொண்ட மதங்கள் ஆறு எனத் தென்னாட்டு இறையிலக்கியங்களில் வருகின்றன. புத்தனை மையமாகக் கொண்ட மதம் வைணவத்தின் ஒரு பகுதி என்று சில தென்னாட்டு நூல்கள் சொல்கின்றன. வடநாட்டு இறையிலக்கியங்களும், தென்னாட்டு சைவ இறையிலக்கியங்களும் சமண மதத்தைத் தனி மதமாக அங்கீகரிக்கின்றன. முருகனை மையமாக வைத்த மதத்தை அதிகம் காணோம். எப்படி இருந்தாலும், இந்த மதங்கள் தத்தம் கடவுளர் தான் மேன்மையானவர்கள் என்றே சொல்கின்றன. சூரியனே முதலும் முடிவும்; எல்லாக் கடவுளரையும் சூரியன் தான் படைத்தான் என்பது சௌர மதச்சாரம் (வடமொழி வழிபாடான ஆதித்ய ஹ்ருதயம் இதைத்தான் சொல்கிறது). அதே போல் சிவனை விட்டால் வேறு கதியே இல்லை என்கிறது சைவம். சக்தி கூட சும்மா கௌரவக் கடவுள் என்பது போல் சிவனடியார்கள் பாடியிருக்கிறார்கள். வைணவ இலக்கியங்களும் திருமாலைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் நினைத்தால் கூட பாவம் என்பது போல் எழுதப்பட்டிருக்கின்றன. கணபதியை மையமாக வைத்து எழுதப்பட்ட இலக்கியங்களுள் நான் படித்த ஒரே ஒரு இறையிலக்கியத்தில் (வினாயக புராணம்), வினாயகர் தான் எல்லாக் கடவுளுக்கும் முதல்வன் என்று எழுதியிருக்கிறார்கள். ஆறு சமயங்களும் சக்தியைத் தலைவியாக ஏற்றுக் கொண்ட விவரத்தை என் சிற்றறிவிற்கு எட்டிய வரை எந்தப் புராணத்திலும் காண முடியவில்லை. எனினும், சக்தி உபாசகரெனத் தோன்றும் பட்டர் இங்கே சக்தியை சர்வ மதத் தலைவி என்று அழைப்பது அவரைப் பொருத்தவரை ஏற்புடையதாகத் தோன்றுகிறது.

இன்னொரு கருத்தும் தோன்றுகிறது. இங்கே 'ஆறும்' என்பது எண்ணிக்கையைக் குறிக்காமல் 'ஒழுகும்' என்ற பொருளில் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். 'நற்கதி அடைய வழி சொல்லும் மதத்தினர் ஒழுகும் (வழிபடும்) தலைவியானவளை அறியாமல், பிற மதம் உண்டென்று எண்ணும் வீணர்' என்ற பொருளும் பொருந்துகிறது. சமயம் என்பது இங்கே மதம், நெறி என்ற பொருளில் எடுத்தாள வேண்டும்.

இன்னொரு உட்பொருளும் இருப்பதாக உணர்கிறேன். பட்டருக்கும் பாசாங்குசைக்கும் இடையே நடக்கும் உரையாடலில், பட்டர் சொல்கிறார்: "அம்மா அபிராமி, நான் என்ன வீணரைப் போல் மற்ற மதத்தையா நினைக்கிறேன்? உன்னைத் தானே நினைத்து வழிபடுகிறேன்? அப்படியிருக்கையில் என் பிறவித்துன்பங்களைத் தவிடு பொடியாக்காமல் சின்னக் கோடரியால் மலையை வெட்டுவது போல் சிறிது சிறிதாகத் தணிக்கிறாயே? அது மற்ற மதக்காரர்களுக்குக் கிடைக்கும் கதியல்லவா? எனக்குமா? நீ தான் அன்றைக்கே என்னைத் தடுத்தாண்டு கொண்டு விட்டாயே? உன்னை வழிபடுவதால் பிறவிப் பிணிமலை தவிடுபொடியாக வேண்டாமோ?"

அந்தாதியின் இலக்கணப்படி ஒரு பாடலின் கடைசிச் சீரின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் எடுத்து அடுத்த பாடலின் முதற்சீராய் அமைத்துப் பாடலாம். இது வரை தனிச்சொல்லாக எடுத்துப் பாடிய பட்டர், இந்த ஒரு பாடலில் மட்டும் முந்தைய பாடலின் சொல்லை விட்டு சொல்லின் கடைசி எழுத்தைக் கையாண்டிருக்கிறார்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/12

தங்கச்சிலை கொண்டு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 62 ராகம்: ஆபேரி


தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்துமத
வெங்கட் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதுமென் சிந்தையதே.

மின்னும் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புர அசுரர்களை வீழ்த்தியவனும், மதயானை அசுரனைக் கிழித்து அவன் உடலைத் தோலாகப் போர்த்திக் கொண்டச் சிறந்த வீரனுமான சிவனுடைய வலுவான உடலில் தழும்பேறும்படி தன் இளநீர் போன்ற முலையழுந்தச் சேர்ந்தவளான என் தலைவி (தன்) பொன் போலும் சிவந்த கைகளில் ஏந்திய கரும்பு வில்லும் மலரம்பும் என் மனதில் என்றும் நிலைத்திருக்கிறாள்.

தங்கச் சிலை இங்கே மேருமலையை வில்லாக வளைத்த விளையாட்டைக் குறிக்கிறது. வெங்கட் கரி என்பதை வெம்+கண்+கரி எனப் பிரிக்கலாம். மதமேறிச் சிவந்த கண்களைக் கொண்ட யானை என்ற பொருளில் வருகிறது. கஜாசுரனைக் கொன்ற கதை. சேவகன் என்ற சொல்லுக்கு வீரன் என்ற பொருளுண்டு. முப்புர அசுரர்களை சாய்த்தும் கஜாசுரனைக் கிழித்தும் சாகசம் செய்தவன் என்பதால் வீரன் என்ற பொருத்தமான பொருளைக் கொள்ள வேண்டும். அபிராமிக்கு சேவை செய்யும் சேவகன் என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள். குரும்பை என்ற சொல் தென்னை, பனை மரங்களின் காய்களைக் குறிப்பது. மலையை வளைத்த தோளும் யானையைக் கிழித்துப் போர்த்திய உடலும் கொண்ட வீரனுடைய மார்பில், அபிராமி மார்பின் தடம் பட்டுக் குறியுண்டானது என்று பட்டர் சொல்வது ரசிக்கும்படியான சிருங்காரக் கற்பனை. இறைவனுடன் இணைந்த அர்த்தநாரி என்றும் இந்த வரிகளுக்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். கோ என்பதற்கு உயர்ந்த என்று பொருள். கனகம் என்றால் பொன்.

பட்டரின் பாடல்களில் புதைந்திருக்கும் சுவையான புராணக்கதைகளில் கஜாசுரன் வதமும் ஒன்று. இந்தக் கதைக்கும் பல தென்னாட்டு வடநாட்டு வடிவங்கள் இருக்கின்றன. 'காணவில்லை கணவனை' என்று பார்வதியைக் கலங்க வைத்தது... திருமாலையும் நந்தியையும் நேயர் விருப்ப நடனமாடச் செய்தது... தங்கள் மனைவிகளைக் கற்பிழக்கச் செய்த சிவனைப் பழிவாங்க தாருகாவன முனிவர்கள் சதி செய்தது... பிள்ளையாருக்கு யானைத்தலை உண்டானது... என்று வகை வகையாக கஜாசுரக் கதைகளைப் புராணங்களில் படிக்கலாம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/11

நாயேனையும் இங்கொரு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 61 ராகம்: ஆபேரி


நாயே னையுமிங்கொரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயே னறியுமறிவு தந்தாய் என்னபேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால்திருத் தங்கச்சியே.

மலையரசன் இமவான் மகளே, திருமாலின் தங்கையே, என் தாயே! நாயைப் போல் எளியவனான என்னை ஒரு பொருட்டாக மதித்து விரும்பி ஏற்றுக்கொண்டதுடன் (நில்லாமல்), அறிவில்லாத எனக்கு உன் இயல்பை அறிந்து கொள்ளும் அறிவையும் கொடுத்தது நான் பெற்ற பெரும் பேறாகும்.

அபிராமியின் அருள் தனக்குக் கிடைத்தது தகுதிக்கு மீறிய சலுகை என்று தொடர்ந்து பாடுகிறார் பட்டர். நாய் என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு சொல்கிறார். சுயமாகச் சிந்திக்கும் அறிவில்லாமல் சோறு போட்ட இடம் சொர்க்கமென நினைக்கும் ஐந்தறிவுப் பிராணியைப் போன்ற தன்னை ஒரு பொருட்டாக மதித்து விரும்பி ஏற்றுக் கொண்ட அபிராமியிடம் விசுவாசமுள்ள நாய் என்கிறார்.

கீழ்த்தரமான நிலையைக் குறிக்க நாயை உவமையாகவும் உதாரணமாகவும் காட்டி, நிறைய இறையிலக்கியங்களில் பாடியிருக்கிறார்கள். நாயிற் கடை, அடி நாயேன் என்று தடுக்கி விழுந்தால் அங்கங்கே திருவாசகத்தில் 'நாயேன்' என்று வருகிறது. திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ் என்று எதைப் படித்தாலும் வெறிநாய், சொறிநாய், கேடுகெட்ட நாய், அந்தநாய், இந்தநாய் என்று வாயில்லாப் பிராணியைப் புரட்டி எடுத்திருக்கிறார்கள். நாயையும், அதற்கடுத்து பெண்ணையும், எவ்வளவு கேவலமாகச் சொல்ல முடியுமோ சொல்லிவிட்டு அதே வீச்சில் இறையருள் கேட்டு பாடலை முடிப்பதைக் காணலாம். ஐந்தறிவுப் பிராணி வாயில்லா ஊமை; ஆறறிவுப் பிராணியோ வாயிருந்தும் ஊமை.

பேய் என்ற சொல்லுக்கு அறிவிலி என்று பொருள். என்ன செய்கிறோம் என்ற நினைவு இல்லாது செயல் புரியும் நிலைக்கு பேய்த்தனம் என்று பெயர். (அறிவு பேதலித்துப் போனவரை அந்த நாளில் கோவிலில் இருத்தி கடவுளை வேண்டிப் பாடுவார்களாம்; பேயோட்டும் சடங்கு இப்படித் தொடங்கி விபரீதமானது)

அபிராமியை உள்ளபடி அறிந்துகொள்ளும் அறிவு பெற்றதற்காக நெகிழ்ந்து, அதன் மெருகை மேம்படுத்திக் காட்டுவதற்காக, அறிவில்லாத நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு பட்டர் பாடியிருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் ஆபேரி ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/10

பாலினும் சொல்லினியாய்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 60 ராகம்: காபி


பாலினும் சொல்லினியாய் பனிமா மலர்ப்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றைவார் சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடமொரு
நாலினும் சாலநன்றோ அடியேன் முடைநாய்த் தலையே?


தேவர்கள் வணங்கும் கொன்றை மலர் சூடிய சிவன், திருமால், உன் புகழ் பாடும் நான்கு வேதங்கள் (என இவை அனைத்தின்) மீதும் பட்டு அருள் புரியும் உன் குளிர்ந்த பாதங்களை, முடை நாற்றமடிக்கும் நாய் போன்ற என் தலையிலும் வைப்பது பொருந்துமோ (சொல்), கள்ளமில்லாத மொழியுடையவளே!

'தேவர் வணங்க நின்றோன் கொன்றைவார் சடையின் மேலினும், மாலினும், கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடமொரு நாலினும், பனி மாமலர்ப் பாதம் வைக்க - அடியேன் முடைநாய்த் தலை சால நன்றோ, பாலினும் சொல்லினியாய்?' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

'தேவர்கள் வணங்கும் கொன்றை மலர் அணிந்த சிவனின் தலை மீதும், திருமால் (தலையின்) மீதும், உன் கண்கள் படும்படி உன் காலடியில் கிடக்கும் நான்கு வேதங்களின் மீதும், உன்னுடைய குளிர்ந்த பாதங்களைப் பதித்து அருள் புரிவது பொருத்தமாக இருக்கிறது; கொடுமையான நாற்றமடிக்கும், நாயைப் போல் எளிய என்னுடைய என் தலையின் மீதும் உன் பாதங்களைப் பதிப்பது பொருத்தமாக இல்லாவிட்டாலும் அது உன் அருளே' என்று பட்டர் பாடுவதாகப் பொருள்.

முப்பெரும் தேவர்கள் தலைமையில் முப்பத்து முக்கோடி தேவர்களும் பணிந்து வணங்குவதாக முன்பே சொல்லியிருக்கிறார். 'பரிபுரச் சீறடி' என்ற பாடலில் வேதங்களைக் காற்சிலம்பாக அணிந்தவள் என்றும் அபிராமியை வர்ணித்திருக்கிறார். தேவர்களும் வேதங்களும் மேன்மையைக் குறிப்பவை. தன் தலையை முடை நாற்றமடிக்கும் நாய்த்தலை என்று கழிவிரக்கமும் தன்னடக்கமும் கலந்து இகழ்ந்து கொள்கிறார். இகழக்கூடியதான தன் தலையிலும் அபிராமியின் காலடி படுவது நன்றாக இல்லை என்று பட்டர் சொல்வது போல் இருந்தாலும், தேவர்களின் தலைகளும் வேதங்களும் அபிராமியின் காலடி பட்டு மேன்மை அடைந்தது போல் தன்னுடைய நாற்றமெடுக்கும் தலையும் அபிராமியின் காலடி பட்டு மேன்மை அடையும் என்ற உட்பொருளில் சொல்லியிருக்கிறார்.

'பாலினும் சொல்லினியாய்' என்ற சொல்லுக்குப் பாலை விட இனிமையான மொழியுடையவள் என்றும் பொருள் கொள்ளலாம். பல அறிஞர்கள் அப்படிப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். பாலுக்கு இனிமையுண்டா? தேனை விட இனிய மொழி உடையவள், நரம்பையடுத்த இசை வடிவானவள் என்றெல்லாம் சொல்லி விட்டு, பாலினும் இனிய சொல் உடையவள் என்று வர்ணிப்பது பொருந்தவில்லை. அந்தாதித் தொடை காரணமாக, 'பாலினும்' என்று தொடங்கியிருப்பது புரிகிறது. பாலுக்கு இனிமை சேர்ப்பது பாகும் தெளிதேனும் இன்னபிற இனிப்பும் தான். தனிப் பாலுக்குள் இனிப்புச் சத்து கலந்திருக்கிறது என்றாலும், இனிமை என்பதற்குச் சின்னமாக தேன், பழச்சாறு, கரும்பைப் போல் பால் பொருந்தாது. இங்கே பாலினும் சொல்லினியாய் என்பது எதைக் குறிக்கிறது? பாலுக்குத் தூய்மையும் வெண்மையும் அடையாளங்கள். பால் போல் சிரிப்பது பிள்ளை. பாலினும் சொல்லினியாய் என்பது கள்ளத்தனமில்லாத மொழியுடையவள் என்ற பொருளில் வருகிறதென்று நினைக்கிறேன். அடியார்களைக் காப்பாற்றுகிறவள் என்ற நம்பிக்கையைப் பொய்யாக்காமல் 'அஞ்சேல்' எனச் சொல்லி வருவதாகக் கருதப்படும் அபிராமி, மாறாமல், கள்ளத்தனமில்லாமல், தன்னையும் காப்பாற்ற வருவாள் என்று பட்டர் நம்பியதால் பாலினும் சொல்லினியாய் என்று உட்பொருளுடன் பாடியிருப்பதாகக் கருதுகிறேன்.

'பனிமாமலர்' என்பது குளிர்ந்த, மென்மையான மலர் போன்ற, என்ற பொருளில் வருகிறது. குளிர்ச்சி அருளுக்கு அடையாளம். அழுகிய மாமிசத்திலிருந்து வெளிவரும் மணத்திற்கு முடையென்று பெயர்.

நாய்த்தலை என்கிறார். முடை நாற்றத்தலை என்று சொல்லி விட்டுப் போயிருக்கலாம். நாய் கீழ்த்தரமானது போல் சொல்லியிருக்கிறார். பொதுவாக எவரையாவது கேவலப்படுத்திப் பேசுவதானால் 'நாயே' என்கிறோம். தமிழ் இறையிலக்கியங்களில் 'நாய்' என்று தன்னைத் தாழ்த்திப் பாடிய புலவர்கள் பலர். சைவ இறையிலக்கியங்களில் அதிகமாகக் காணப்படுகிறதென்று நினைக்கிறேன். அடுத்த பாடலின் விளக்கத்தில் இன்னும் விவரம் சேர்க்கிறேன். (பாவம், நாய் என்ன செய்யும்?)

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/09

தஞ்சம் பிறிதில்லை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 59 ராகம்: காபி


தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின் றிலேனொற்றை நீள்சிலையும்
அஞ்சம் புமிக்கலராகி நின்றா யறியா ரெனினும்
பஞ்சஞ் சுமெல்லடி யாரடியார் பெற்ற பாலரையே.

பிழை செய்த தன் பிள்ளைகளின் அறியாமையைத் தண்டிக்காமல் பொறுத்தருளும் மென்மையான பாதங்களைக் கொண்ட (அன்னைகளைப் போல்), நீண்ட கரும்பு வில்லும் ஐவகை மலர்களால் தொடுத்த அம்பும் ஏந்தி நிற்கும் உன்னை மனதில் நிறுத்தி, (உன்னை விடச்) சிறந்த அடைக்கலம் வேறெதுவுமில்லை என்று வழிபட எனக்குத் தோன்றாதிருக்கலாம்; (அப்படி நடந்திருந்தால் உன் பிள்ளையான நான் செய்தத் தவறையும் பொறுத்தருள வேண்டும்).

எளிய பாடல். தவநெறி என்பது வழிபாட்டு முறை என்ற பொருளில் வருகிறது. 'அபிராமியை விடச் சிறந்த அடைக்கலமில்லை' என்ற மாறாத நம்பிக்கையுடன் வழிபட வேண்டும் என்று பட்டர் சொல்கிறார். பிழைப்புக்காக அரசனை நம்பி மோசம் போனதைக் குறிப்பாகச் சொல்கிறார் - பிறவி எடுத்தக் காரணத்தினால் இன்னொருவரிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதை முன்பாடல்களில் 'இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று' எனக் குறிப்பிட்டிருக்கிறார். சிலை என்றால் வில். ஒற்றை நீள் சிலை இங்கே நீண்ட கரும்பு வில்லைக் குறிக்கிறது. 'அஞ்சம்பு மிக்கலர்' என்பதை அஞ்சு அம்பு இக்கு அலர் எனப் பிரிக்கலாம். இக்கு என்றால் இறுக்கிய, நெருக்கமாகக் கட்டிய என்று பொருள். அலர் என்றால் மாலை என்று பொருள். ஐவகை மலர்களால் தொடுக்கப்பட்ட அம்பு என்று பொருள் கொள்ளலாம். பஞ்சஞ்சு மெல்லடி என்பதை பஞ்சும் அஞ்சும் மெல்லடி என்று பிரிக்க வேண்டும். அருமையான உவமை. பஞ்சை விட மென்மையான பாதங்களைக் கொண்ட பெண்கள் என்ற பொருளில் வருகிறது (அன்னைகளுக்கு உவமை). பஞ்சை விட மென்மையான பாதங்களைக் கொண்ட பிள்ளைகள் என்றும் பொருள் கொள்ளலாம் (அடியார்களுக்கு உவமை). 'அடியாரை அடியார்' என்ற சிறு சிலேடைச் சொல்லாடலை ரசிக்க முடிகிறது.

அபிராமியை இங்கே அங்குசம் பாசக்கயிறு கொண்டவளாகச் சொல்லாததற்கு ஏதேனும் காரணம் உண்டா? தவறு செய்தவர்களைப் பாசக்கயிற்றால் இழுத்து அங்குசம் கொண்டு தைத்துத் தண்டிக்கலாமே? அம்பு, வில், அங்குசம், கயிறு, கபாலம் என்று அத்தனையும் கைகளில் ஏந்தியவள் என்று முன்பு சொல்லிவிட்டு, இங்கே மலரம்பும் கரும்புவில்லையும் கொண்டவளாகச் சித்தரித்திருக்கிறாரே? தவறு செய்த பிள்ளைகளைத் தாய் எப்படிக் கண்டிப்பாள் என்பதை நினைத்துப் பார்த்தால் இந்த உவமையின் நுண்சுவை புரியும். அபிராமியை வணங்க மறந்த அடியவரை அறியாச் சிறுபிள்ளைகளாகவும், இனிய சொல்லும் நோகாத தண்டனையும் வழங்கித் தவறு செய்தோரை திசை திருப்பும் அபிராமியைத் தாயாகவும், பட்டர் நம்பியதால் இங்கே கரும்பு வில் மலரம்பு தரித்தவளாகக் காட்டுகிறார். 'நீயே தான் எனக்கு வழிகாட்டி, என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் விழிகாட்டி' என்று பட்டர் தொடர்ந்து பாடுகிறார். விழி காட்டு, வழி காட்டு, பழி காட்டாதே என்று குறிப்பால் சொல்கிறார்.

இந்த உவமைகள் சௌந்தர்யலஹரியிலும் கையாளப்பட்டுள்ளன. 'அம்புவில் ஏடார் போது ஏக நெடுங்கழை' என்று வீரையார் தமிழாக்கம் தந்திருக்கிறார். கழை என்றால் கரும்பு; 'ஏக' என்பது ஒன்று, ஒற்றை என்ற பொருளில் வருகிறது. ஏக நெடுங்கழை = ஒற்றை நீள்சிலை. போது என்றால் மலர்; ஏடார் என்பது மலரிதழ்கள் என்ற பொருளில் வருகிறது. ஏடார் போது அம்பு = இக்க அலர் அம்பு.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/08

அருணாம் புயத்தும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 58 ராகம்: காபி


அருணாம் புயத்துமெஞ் சித்தாம் புயத்துமமர்ந் திருக்குந்
தருணாம் புயமுலைத் தையல் நல்லாற்றகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமுங் கராம்புயமுஞ்
சரணாம் புயமும் அல்லாற்கண் டிலேனொரு தஞ்சமுமே.

விடியலின் செந்நிறத்தையொத்த தாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் நற்குணங்களின் இருப்பிடமான, இளந்தாமரை மொட்டைப் போன்ற முலையுடைய, பெண்ணே (அபிராமியே) என் மனத்தாமரையிலும் குடியிருக்கிறாள். (அவளுடைய) அருள் பொங்கும் விழித்தாமரைகளும், அழகான முகத்தாமரையும், செழித்த கைத்தாமரைகளும், மென்மையான பாதத்தாமரைகளும் அல்லாமல் நான் வேறொரு அடைக்கலம தேடவில்லை.

அம்புயம் என்றால் தாமரை. (அம்பு+உயம்: நீரில் பிறந்து வாழும் என்பது பொருள்; அம்பு=நீர், உயல்/ம்=உய்வது)

அம்புயம் என்ற சொல்லை வைத்துக் கொண்டு உருவக விளையாட்டு ஆடியிருக்கிறார் பட்டர். லலிதா சஹஸ்ரநாமத்திலும் சௌந்தர்யலஹரியிலும், இங்கே பட்டர் பாடல்களிலும், சக்தியைத் தாமரையெனப் பாடுவதை முன்பே பார்த்திருக்கிறோம். ஆயிரமிதழ் தாமரை என்பது நம் ஒவ்வொருவர் மனதிலும் (மூளைப்பகுதி, முதுகுத்தண்டு என்று பல இடங்களைச் சொல்கிறார்கள்) இருக்கும் மூலாதாரம் (குண்டலியம்) என்பதைக் குறிப்பதாகவும், அதை அறிந்தவர்கள் (விடுவித்தவர்கள்) அதனுள் குடியிருக்கும் சிவ-சக்தியை அறிந்தவராவர் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு யோக நிலையென்று சொல்லப்படுகிறது. பட்டர் முன்பே 'அம்புயாதனத்து அம்பிகையே' என்று பாடியிருக்கிறார். இங்கே அபிராமி எனும் தாமரையை இன்னும் கொஞ்சம் விவரமாகப் பாடுகிறார்.

அருணம் என்றால் விடியல், செம்மை என்று பொருள். இங்கே 'விடியலைப் போன்ற சிவந்த நிறத்தையுடைய தாமரை' என்ற பொருளில் வருகிறது. புறத்தாமரை மலர்ந்தால் பொழுது விடிவது போல் அபிராமி எனும் அகத்தாமரை மலர்ந்ததும் உள்மனதின் இருளும் விலகியது என்று பட்டர் பாடுவதாகவும் சுவையாகப் பொருள் கொள்ளலாம். தருணம் என்றால் இளமை என்று பொருளுண்டு. 'தருண அம்புய' என்பது இளந்தாமரை, தாமரை மொட்டு, என்ற பொருளில் வருகிறது. தகை என்றால் அழகு. 'தகை சேர்' என்பதை இந்தப் பாடலில் எங்கே வேண்டுமானாலும் சேர்த்துப் படிக்கலாம். அழகு சேரும். கைகளைத் தாமரை என்பானேன்? அருள் வழங்கும் பொழுது பரந்து விரிந்த அபிராமியின் கைககள் தாமரை போல் இருக்குமாம். அடைக்கலம் கொடுத்து ஏற்றுக் கொள்ளும் அபிராமியின் கைகள் பரந்து விரிந்த தாமரை போல் இருக்கும் என்பது பட்டரின் கற்பனை.

பட்டர் யோகச் சித்தரா தெரியவில்லை. அப்படி இருந்தால், யோக நிலையைக் கடைபிடித்து பட்டர் குண்டலினியை விடுவித்த அனுபவத்தில் பாடுவதாகவும் பொருள் கொள்ளலாம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/07

அய்யன் அளந்தபடி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 57 ராகம்: காபி


அய்ய னளந்தபடி இருநாழி கொண்டண் டமெல்லாம்
உய்ய வறஞ்செயு முன்னையும் போற்றியொ ருவர்தம்பால்
செய்யப் பசுந்தமிழ்ப் பாமாலையுங் கொண்டுசென்று பொய்யும்
மெய்யு மியம்ப வைத்தாயிதுவோ உந்தன் மெய்யருளே?

என் தந்தை சிவபெருமான் கொடுத்த இரண்டு படி நெல்லை ஏற்று உலகமெல்லாம் பிழைக்கும்படி செய்த (அபிராமியே) உன்னைப் போற்றி வணங்கும், வாடாதத் தமிழ்ப் பாமாலை சூட்டும் என்னை, உண்மையும் பொய்யும் கலந்து பேசவைத்ததும் உன் அருள் செயலே (என்றறிவேன்).

பசுந்தமிழ்ப் பாமாலைக்காகப் பலமுறை படிக்க வேண்டிய பாடல்.

சிவன் கொடுத்த இரண்டு படி (இரு நாழி என்பதன் சரியான அளவு தெரியவில்லை; மன்னிக்கவும்) அரிசியை வைத்து உலகமெல்லாம் பசிப்பஞ்சமின்றி வாழ வகை செய்தவள் காமாட்சி என்கிறது புராணக்கதை. காஞ்சி காமாட்சி (ஏகாம்பரநாதர்) கோவில்களில் இந்தக் கதையை விவரமாகச் சொல்வார்கள். (காஞ்சியில் முதலில் அமுலாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 'ரூபாய்க்கு மூன்று படி அரிசி' திட்டத்திற்கும் இந்தப் பின்னணிக் கதைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று நினைக்கிறேன். அந்தாதி பாடினால் ஏழைக்குச் சோறு கிடைக்குமா என்ற பின்னூட்டமும் நினைவுக்கு வருகிறது; ம்ம்ம்).

'பொய் சொல்ல வைத்தாய், இதுவே மெய்யருள்' என்கிறார், ஏன்? தன் எண்ணம் இயக்கம் எல்லாமே அபிராமியின் செயல் என்று அடிக்கடி சொல்பவர், தான் தவறாகப் பௌர்ணமி என்று சொன்னதன் காரணம் அபிராமியே என்று அவளைப் பழிப்பது புரிகிறது. இதுவே மெய்யருள் என்றால்? கொஞ்சம் சிந்திப்போம். ஒருவேளை பட்டர் அமாவாசை என்று சரியாகச் சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? பட்டரின் தலை பிழைத்திருக்கும் என்றாலும், மிகப் பெரிய இழப்பு பட்டருக்குத் தான். அபிராமியின் அருளையும் அண்மையையும் அடையும் வாய்ப்பை இழக்க நேர்ந்திருக்கும். (பட்டரின் பசுந்தமிழ்ப் பாமாலை நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும் என்பதும் பெரிய இழப்பு). தம் பக்தர்களைச் சோதிப்பது கடவுளரின் வாடிக்கையென்றாலும், தன்னுடன் இணைத்துப் பேரின்ப வழியில் கொண்டு போகுமுன் ஒரு உச்சக்கட்ட சோதனை வைப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் தத்துவத்தை நிறையப் புராணக் கதைகளில் படிக்கலாம். நிலாச் சம்பவம் பட்டருக்கான உச்சக்கட்டச் சோதனை. அபிராமியின் அண்மையை அடையும் நேரம் வந்து விட்டது என்பது பட்டருக்குப் புரிந்திருக்கிறது. ஒரு பொய் சொல்ல வைத்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள அபிராமி செய்த நாடகம் என்று நம்பியதால் 'பொய்யும் இயம்ப வைத்தாய், இதுவே உந்தன் மெய்யருள்' என்றார்.

பட்டரின் நுட்பத்தை நானும் கையாண்டு பார்த்தேன். அபிராமி அந்தாதி பற்றி எழுதுவதை அம்மாவிடம் சொன்ன போது, "இது போல நல்ல விஷயமா எழுது. கண்டபடி எழுதாதே" என்றார். "எல்லாம் அவள் செயல்; இதையும் அதையும் எதையும் எழுதச் செய்தவள் அபிராமி என்று பார்க்கவேண்டியது தான்" என்றேன் பதிலுக்கு. பலிக்கவில்லை.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/06

ஒன்றாயரும்பிப் பலவாய்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 56 ராகம்: காபி


ஒன்றா யரும்பிப் பலவாய் விரிந்திவ்வுல கெங்குமாய்
நின்றா ளனைத்தையும் நீங்கிநிற்பா ளென்றன் நெஞ்சினுள்ளே
பொன்றா துநின்று புரிகின்றவா இப்பொரு ளறிவார்
அன்றா லிலையில் துயின்ற பெம்மானுமென் ஐயனுமே.

என் நெஞ்சினுள் நீங்காத இடம்பெற்றுக் குறையாத அருள் புரியும் அபிராமி, ஒரு அணுவாகத் தோன்றி அண்டமெங்கும் பரவிப் பல வடிவங்களின் உள்ளும் புறமுமாக நிலைத்திருக்கும் (தன்மையுடையவள் என்ற) நுட்பத்தை அறிந்தவர்கள் ஆலிலையில் சிறுபிள்ளையாகத் துயில் கொண்ட திருமாலும், என் தந்தையாகிய சிவபெருமானுமே (ஆவார்கள்).

அகமும் புறமும் அண்டமும் பிண்டமும் அபிராமி என்று முன்பே சொல்லியிருக்கிறார் பட்டர். சுருதிகளின் பணையும் பதிகொண்ட வேரும் சித்தியும் முக்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும் புத்தியுனுள்ளே புரக்கும் புணர்முலையாள் என்று உலக இயக்கங்கள் இருப்புகள் அனைத்தையும் சக்தியின் வடிவில் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலில் அகம் புறம் எனும் இரு நிலைகளிலும் அபிராமி இருப்பதை வியந்து பாடுகிறார். அகம் புற நிலைகளில் இருப்பதென்றால் இயக்கங்களுக்கும் அவள் தான் காரணம் என்ற பட்டரின் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். உள்-வெளி இரு நிலை சம நிலைகளைப் புரிந்து கொள்வது எளிதல்ல; ஏனைய கடவுளர்க்கும் கிட்டாத அறிவு சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் மட்டுமே தெரியும் என்று பட்டர் சொல்கிறார். அவர்கள் இருவருக்கும் மட்டும் தெரியும் நுட்பமா? ஏன்? இதன் பின்னணியில் மிகச் சுவையான கதை இருக்கிறது. சிவனின் திருவிளையாடல்களும் திருமாலின் அத்தனை அவதாரங்களும் சக்தியின் சதுரங்கக் காய்கள் என்று சக்தி-பண்டாசுரக் கதையைப் படித்தவர்கள் அறிவார்கள். அந்தக் கதையின் அடிப்படையில் உருவாக்கி, வெளிநின்று, காத்து அழித்தவளும் அபிராமியே என்ற கருத்தைச் சொல்கிறார் சுப்பிரமணியர்.

அணுவிலிருந்து தோன்றி எங்கும் விரைந்து பரவுவதை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிகிறது. உலகத் தோற்றமும் வளர்ச்சியும் அப்படி ஏற்பட்டது தான் என ஆய்வறிக்கைகளின் வழியாக இப்போது தெரிந்து கொண்டிருக்கிறோம். (அந்த அறிவின் வித்து பட்டரின் காலத்துக்கு முன்பே இருந்தது; மேலை நாட்டு அறிவியல் வளர்ச்சியின் வித்தாகவும் இருந்தது; கடவுள்/மத குருக்களுக்கு அஞ்சி வெளிப்படாமல் கலிலியோவின் சாத்தப்பட்ட அறைக்குள் தூசி படர்ந்திருந்தது - நியூடன் வந்து தூசி தட்டி மறு அறிக்கை விடும் வரை - அவருக்குப் பின் வந்த ஐன்ஸ்டைன் ஹாகின்ஸ் வகை விஞ்ஞானிகள் அந்தக் கருவை வளர்த்து ஐம்பது வருடங்களுக்கு முன் big bang theoryஐ உலகம் முழுமையாக ஏற்கும் வரை). பட்டர் போன்ற இந்துமத அறிஞர்கள் (கீழை நாட்டு, நம்ம ஊர் மெய் ஞானிகள்?) நூற்றாண்டுகளுக்கு முன் இந்தத் தத்துவத்தை வெகு சுலபமாகச் சொல்லியிருக்கிறார்கள் - கடவுள் மதம் எனும் போர்வை அல்லது ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அஞ்சாமல் வெளிப்படுத்தினார்கள் - என்பது வியந்து போற்றத்தக்கது.

"அம்மா தாயே அபிராமி, நீ உள்ளே நின்று ஒளி வீசி அருள் புரிவது சரி, கொஞ்சம் வெளியே வந்து உன் அருளைக் காட்டம்மா, ஒளியைக் காட்டம்மா. சிவனுக்கும் திருமாலுக்கும் புரிந்தது இந்த சாமானியர்களுக்கும் புரியட்டும்" என்று பட்டர் உட்பொருள் வைத்து அபிராமியுடன் அண்மையாகப் பேசுவதை ரசிக்க முடிகிறது.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/05

மின்னாயிரம் ஒரு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 55 ராகம்: சாரங்கா


மின்னா யிரமொரு மெய்வடிவாகி விளங்குகின்ற
தன்னா ளகமகிழ் ஆனந்த வல்லி அருமறைக்கு
முன்னாய் நடுவெங்குமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னா தொழியினு முன்னினும் வேண்டுவ தொன்றிலையே.

முதல்-இடை-கடை என வேதங்களின் அரிய உட்பொருளானவளும், ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்தாற் போல் நெஞ்சைப் பறிக்கும் ஒளியுடையவளும், தன்னை வணங்கும் அடியவருக்குப் பெரும் மகிழ்ச்சி தரக்கூடியவளுமான ஆனந்தக் கொடியவளை நினைக்காமலே காலத்தைக் கழித்தாலும் அவளுக்குக் குறையேதுமில்லை (நினைத்து வழிபடாதவருக்கே குறை).

அபிராமியை வணங்காததனால் அவளுடைய அழகுக்கும் பொலிவுக்கும் குறைவேற்படப் போவதில்லை என்ற பட்டரின் கருத்து சுவையானது.

ஒரு செயலைத் தொடங்கி நடத்தும் பொழுது, இடைவேளையில் விரும்பிய பலன் கிடைக்காது போல் தோன்றினால் அயர்ச்சியும் தளர்ச்சியும் வருவது இயற்கை. தன் இலக்கிலும் செயலிலும் நம்பிக்கையுள்ளவர்கள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து செல்வார்கள். அபிராமி நிலவைக் கொண்டு வருவாள் அல்லது தன்னை ஏற்றுப் பிறவாமை தருவாள் என்ற நம்பிக்கையில் அந்தாதி பாடத் தொடங்கினார்; ஐம்பதுக்கு மேல் பாடிவிட்டார்; நிலவையும் காணோம், அபிராமியையும் காணோம். அவர் கண்ணோட்டத்தில் ஒரு பலனையும் காணோம்; இனி எத்தனை பாடினால் அபிராமி வருவாள் என்பது தெரியாது. நம்பிக்கையை விட்டுத் தலைமறைவாகி விடலாமா என்று பட்டர் ஒரு கணம் கூட நினைக்கவில்லை. தொடர்ந்து பாடுவேன் என்பதைக் குறிப்பால் சொல்கிறார் - அதனால் தான் அபிராமி தன்னை ஒரு பொருட்டாக நினையாவிட்டாலும் தான் தொடர்ந்து அவளை எண்ணி வணங்கி உருகிப்பாடுவதாகச் சொல்கிறார்.

இன்னொரு கண்ணோட்டத்திலும் பார்க்கலாம். தன்னை மதிப்பவரையும் மதியாதவரையும் இரு தரப்பினரையுமே ஒரு பொருட்டாக மதிக்காவிட்டால் பிறகு அபிராமியை வணங்கி என்ன பயன்? நன்றாக இருக்கிறதே கதை? தவமிருந்தும் பாட்டு பாடியும் உருகி உருகி வணங்கியும் ஒரு குழு இருக்க, ஒன்றுமே செய்யாமல் வணங்காமல் இன்னொரு குழு இருக்க, இரண்டுமே கடவுளைப் பொருத்தவரையில் ஒன்று தான் என்றால் அடிப்படையிலேயே தகராறு வரும் போலிருக்கிறதே? இதன் பின்னணிக் கருத்து என்னவென்று பார்ப்போம். கடவுளை அடைவதற்கு பற்றுதலை விடவேண்டும் என்கிறோம்; நாம் அடைய நினைக்கும் கடவுளும் பற்று இல்லாதவராக இருந்தால் தானே ஒரு நல்ல உதாரணமாக விளங்க முடியும்? 'என்னை மட்டும் காப்பாத்தம்மா' என்பது பற்றுதல் வணக்கம்; 'எல்லோரையும் காப்பாத்தம்மா' என்பதும் பற்றுதல் வணக்கம் தான். 'உன் அருளே எனக்குத் தேவையில்லை; விலகு' என்பது வணக்கமில்லாத பற்றுதல். எல்லாவற்றையும் ஏற்று கோரிக்கைகளை நிறைவேற்றினால் இறைவனுக்கும் பற்று உண்டு என்றாகிவிடுமே? அதனால் தான் இறைவன் அருள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நம்பிக்கையிழக்காமல் பக்தியுடன் வணங்க வேண்டும் என்கிறோம். 'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்ற குறள் நினைவுக்கு வருகிறது.

தன்னை வணங்குவோரையும் அல்லாதாரையும் ஒரு பொருட்டாக மதியாத அபிராமி பற்றற்றவள் என்பதை பட்டர் இங்கே குறிப்பிடுகிறார். வணங்குவதால் அபிராமிக்கு மேன்மை கூடவோ குறையவோ போவதில்லை; மேன்மை எய்துவது அடியார்கள் தான் என்பது பாடலின் சாரம். 'அவள் என்னை பொருட்டாக நினைத்து என் கோரிக்கையை ஏற்று நிலவைக் கொண்டு வருகிறாளோ இல்லையோ, நான் அவளை மதித்து நம்பிக்கையோடு தொடர்ந்து போற்றுவேன்' என்பது உட்பொருள்.

மின்னல் வடிவானவள் என்று சக்தி பெரும்பாலான புராணங்களிலும் இறையிலக்கியங்களிலும் போற்றப்படுகிறாள். ஒரு மின்னல் கண்ணைப் பறிக்கலாம்; ஐந்து மின்னல்கள் சேர்ந்து வந்தால் கண் தாங்கலாம். ஆயிரம் மின்னல்கள் சேர்ந்து வந்தால் கண்ணும் போகும்; நெஞ்சும் (உயிரும்) போகும். அதனால் நெஞ்சைப் பறிக்குமென்று பொருள் சொன்னேன். கௌரவரது அவையில் கண்ணன் விசுவரூபம் எடுத்தபோது ஒளி தாங்கமுடியாமல் எல்லாருடைய நெஞ்சத் துடிப்பும் அடங்கி விட்டதாம் - வேறொரு பரிணாமத்தில் தான் ஒளியைப் பார்க்க முடிந்தது என்கிறது புராணம். திருதிராஷ்டிரனுக்குத் தற்காலிகப் பார்வை கிடைத்தது அந்தப் பரிமாணத்தில் தான். கடவுளர் தோன்றும்பொழுது ஒளிப்பிழம்பாகக் காட்சியளிப்பார்கள் என்பது மதம் கடந்த எண்ணம், கருத்து, வர்ணனை.

விளக்கம் சொல்லும் பொழுது அபிராமியைக் கொடியவள் என்றேன். பட்டர் தமிழைப் படிக்கப்படிக்க எனக்கும் அரைகுறை சொல்லாட்சி வந்துவிட்டது. கொடி+அவள் என்று பிரித்து, 'ஆனந்தக் கொடி அவள்' என்று படிக்கவும்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/04

இல்லாமை சொல்லி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 54 ராகம்: சாரங்கா


இல்லாமை சொல்லி யொருவர் தம்பாற் சென்றிழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்றக் கயவர் தம்பாலொரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

வறுமையைப் போக்க இன்னொருவரிடம் கையேந்தி நிற்கும் இழிவைத் தவிர்க்கவேண்டுமானால், (அபிராமியின் மேல்) நம்பிக்கையில்லாத தீயவர்களிடம் ஒரு நாளும் செல்லாமலிருக்க வேண்டுமென்று திரிபுரசுந்தரியான அபிராமியின் பாதங்களை வணங்கிக் கேட்டுக் கொள்வோம்.

பிறவிப்பிணியின் கொடுமையை வெளிப்பார்வை கொண்டு பார்க்கும் இன்னொரு எளிய பாடல். பிறவியெடுத்ததால் தானே பந்தபாச நெருக்கடிகள் தோன்றுகின்றன? பசி, நோய், வறுமை, ஆசை, ஆணவம், குடும்பம், வீடு, வாசல், உறவு என்று ஒரு பிறவிப்பிணியைத் தொடர்ந்து ஒன்பது ஒட்டுப்பிணிகள். இவற்றைச் சமாளிக்க.. இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கத்தானே பொருள் சேர்க்க வேண்டியிருக்கிறது? பொருள் சேர்க்க இயலாமல் வாடுவதால் தானே இன்னொருவரிடம் கையேந்தி உதவி கேட்க வேண்டியிருக்கிறது? அப்படிக் கேட்பதால் தானே அவமானப்பட வேண்டியிருக்கிறது? இவையெல்லாவற்றுக்கும் அடிப்படை பிறவி. பிறவியெனும் மகா கொடுமையை ஒழிக்க என்ன வழி? அபிராமியை வணங்கினால் பிறவாமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவள் பாதங்களை வணங்குவது தான். நம்பிக்கையில்லாதவர்களை கயவர்கள் என்கிறார் பட்டர். அத்தகைய கயவர்கள்பால் செல்லாமலிருக்க வேண்டுமே என்ற கலக்கம் வேறு. அத்தகைய கயவர்களுடன் கூட்டு சேராமல் இருப்பதற்குக் காரணமும் அபிராமிதான் என்கிறார். 'அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய்' என்று முன்பு பாடியிருக்கிறார்.

'கல்லாமை கற்ற கயவர்' என்ற தொடரில் இருக்கும் முரண்பாட்டைப் பல அறிஞர்கள் ரசித்துப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'தவம் கல்லாமை கற்ற கயவர்' என்று சேர்த்துப் படிக்க வேண்டும். அபிராமியை எண்ணித் தவமிருக்கும் வழிகளைக் கற்காதவர் என்ற பொருள் கொள்ள வேண்டும். 'அபிராமியைத் தவிர வேறொரு தெய்வம் இல்லை, அபிராமி இல்லாத மதம் தேவையில்லை' என்றெல்லாம் முன்பு பாடிய பட்டர், 'அபிராமியை எண்ணித் தவமிருக்காதவர் கயவர்' என்று இங்கே பாடுவது பொருத்தமென்று நினைக்கிறேன். கல்லாமையைக் கற்க முடியாது என்றாலும், சொல்லழகுக்காக ரசிக்க முடிகிறது. இங்கே கயவர் என்று சரபோஜி அரசனையும் பட்டர் குறிப்பிட்டிருக்கலாம்.

பட்டர் பாடலுக்கும், பண் பாடியவர் பாடலுக்கும், வேற்றுமை இருப்பதை எழுதும் போதுதான் அறிந்துகொண்டேன். 'கல்லாமை கற்ற கயவர் தம்பாலொரு காலத்திலும் செல்லாமை வைத்த' என்று பட்டர் பாடியிருப்பதாக நான் படித்த புத்தகங்களிலும் இணையத்திலும் காணப்படுகிறது. தான் பாடியிருக்கும் 'கல்லாமை கற்ற கயவர் தம்பாற் சென்று நில்லாமை வைத்த' எனும் வரிகளை எங்கே பிடித்தார் அம்மா என்று தெரியவில்லை. நாற்பது வருடங்களாக இதையே கேட்டுப் பழகிப் போன எனக்கு பட்டர் பாட்டைத் திருத்தத் தோன்றியது தவறுதான். அம்மா பாடியதைத் திருத்த இனி எப்போது இந்தியா போவேனோ தெரியாது. பொருளில் பிழை வராத காரணத்தால் இந்தச் சொற்பிழையைப் பொறுக்க வேண்டுகிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/03

சின்னஞ் சிறிய...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 53 ராகம்: சாரங்கா


சின்னஞ் சிறிய மருங்கினிற் சாத்திய செய்யப்பட்டும்
பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங் கரியகுழலுங் கண்மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந் தனியிருப்பார்க் கிதுபோலுந் தவமில்லையே.

சிவந்த பட்டாடை சுற்றப்பட்ட சிறிய இடை, இடை தாங்கும் பெரிய முலைகளின் மேல் பரவியிருக்கும் முத்து மாலை, மணங்கமழ் மல்லிகை அடர்ந்திருக்கும் கரிய கூந்தல், அழகிய கண்கள் மூன்று இவையனைத்தையும் மனதில் நிறுத்தி அபிராமியைத் தவிர வேறெந்த பற்றுமில்லாமலிருப்பதே சிறந்த தவம்.

பிறவாமை கருத்தைத் தொடர்ந்து அறிவுறுத்தும் பாடல். தன்னந்தனி இருப்பார்க்கு என்பதை பற்றில்லாமல் இருப்பவருக்கு என்று பொருள் சொல்லியிருக்கிறேன். தனிமையில் தியானித்திருப்பவருக்கு என்றும் பொருள் கொள்ளலாம்.

தன்னந்தனி இருப்பார்க்கு என்பதைக் கொஞ்சம் ஆய்ந்து பார்க்கலாம். இந்த உலகில் தன்னந்தனி இருப்பு சாத்தியமா? பிறவி என்று எடுத்து விட்டால் ஏதாவது ஒரு பற்று அல்லது பந்தம் இருந்து கொண்டே தான் இருக்கும். காட்டிற்கு தனியே சென்று தவமிருப்பவர் கூட அந்தக் காட்டிலே இருக்கும் மரம் செடி கொடி மிருகம் மேல் பற்று கொண்டு தவப்பயனிழந்த கதைகள் புராணங்களில் ஏராளம். தன்னந்தனி என்பது மனிதரே இல்லாத என்ற பொருளில் வருவது போல் தோன்றினாலும் இங்கே பந்த பாச ஆசை கோபம் உறவு அற்ற நிலையைக் குறிக்கிறது. அனைத்து உணர்வுகளயும் அடக்கித் தவமிருப்பதையே இப்பாடலின் 'தன்னந்தனி' நிலை குறிக்கிறது. அப்படி மனதைக் கட்டுப்படுத்தித் தவம் செய்ய ஒரு உருவம், ஒலி என்று ஏதாவது ஒரு நிலையான காட்சி, அகக்காட்சியானாலும், தேவைப்படுகிறது. அபிராமியின் அழகே அந்தக் காட்சியாக அமைய வேண்டும் என்பது பட்டர் பாடலின் உட்பொருள்.

மருங்குல் என்றால் இடை. பிச்சி என்றால் ஜாதிமல்லிகை, செண்பகப்பூ என்று படித்திருக்கிறேன். கண் மூன்று என்பதற்கு நெற்றிக்கண்ணை உடையவள் என்ற பொருளைக் கொள்ளலாம். அல்லது அபிராமியின் நெற்றியில் இருக்கும் மஞ்சள் குங்குமத் திலகத்தின் பொலிவையும் குறிப்பதாகக் கொள்ளலாம். லலிதா சஹ்ஸ்ரநாமத்திலும் சௌந்தர்யலஹரியிலும் 'நெற்றிக்கண்ணி' என்று வருகிறது. சிவனுடைய நெற்றிக்கண்ணின் கனலானவள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறாள் சக்தி.

'பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழல்' அருமையான சொல்லாட்சி. வண்டு மொய்க்கும் பூ அறிவோம்; பூ மொய்க்கும் கூந்தல்? அடர்த்தியான பூச்சூடலை அழகாகச் சொல்லியிருக்கிறார். அபிராமியின் அழகைப் படிப்பவர் கண்முன் கொண்டு வர, பட்டர் பாடியிருக்கும் பல பாடல்களில் இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். சாரங்கா ராகத்தின் ஊஞ்சலினிமையில் பாடல் இன்னும் சிறப்பாகிறது.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)

2010/08/02

வையம் துரகம்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 52 ராகம்: சாரங்கா


வையந் துரகம் மதகரி மாமகுடஞ் சிவிகை
பெய்யுங் கனகம் பெருவிலையாரம் பிறை முடித்த
அய்யந் திருமனையாளடித் தாமரைக் கன்புமுன்பு
செய்யுந் தவமுடையார்க் குளவாகிய சின்னங்களே.

உலக அரசாளும் பதவி, யானை-குதிரை-தேர் எனும் சேனை, பொன்-மணி-முத்தாரமெனும் பெருஞ்செல்வம் உடையவரெல்லாம், பிறைநிலாவைத் தன் தலையில் தாங்கியிருக்கும் தந்தை சிவபெருமானின் இல்லத்தரசி (என் தாய்), அபிராமியின் பாதங்களைத் தங்கள் முற்பிறவிகளில் பணிந்து வணங்கிய தவப்பயனைப் பெற்றவர்கள் (ஆவர்).

அபிராமியைப் பணிந்து வணங்கினால் இத்தகைய செல்வங்கள் பெறலாம் என்றும் பொருள் கொள்ளலாம். பதவி, படை, பெருஞ்செல்வமுடையவரைக் கண்டால் அபிராமியின் அருள் பெற்றவரெனத் தெரிந்து கொள்ளலாம் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'பதவி, படை, பொற்செல்வம் இவை எல்லாம் மாட்சியின் அடையாளங்கள், அபிராமியின் திருவடிகளைப் போல' என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

அபிராமியின் அருள் பெற்றவர்கள் அனைத்துச் செல்வமும் உடையவர்கள் என்ற கருத்தைச் சொல்கிறார் பட்டர். அரசபதவி, சேனை, செல்வம் என்று அனைத்தும் உடைய அரசர்களே தவம் கிடந்து போற்றும் அபிராமியைத் தானும் பணிந்து வண்ங்குகையில் புதிதாக வந்த இந்த சரபோஜி அரசன் விவரம் தெரியாமல் நடந்து கொள்கிறானே என்ற பட்டரின் ஏளனம் பாடலின் உட்பொருள்.

இதே கருத்து லலிதா சஹஸ்ரநாமத்திலும் வருகிறது. திரிபுரசுந்தரியைச் சுற்றி தேர், யானை, குதிரை, பொன் என்று அனைத்தும் கோடிக்கணக்கில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தேவர்கள், அரசர்கள், பெருஞ்செல்வந்தர்கள் அனைவரும் திரிபுரசுந்தரியைச் சுற்றி அவள் காலடியில் தவம் கிடப்பதே காரணம் என்பது இந்த வர்ணனைகளில் பொருள்.


பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)