2010/06/30

வெளிநின்ற நின்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:19 | ராகம்:ஹம்சாநந்தி


வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

ஒன்பது வகை சக்திகளின் உருவாக விளங்குபவளே! என் கண் முன் தோன்றிய உன்னைப் பார்த்து என் விழியும் நெஞ்சும் கரை காணாத வெள்ளம் போல் மகிழ்ச்சியடைந்தாலும், இது பேரின்பத்தின் இடைநிலை என்கிற அறிவும் தெளிவும் எனக்கு ஏற்படுமாறு அருளியது உன் கருணையோ?

முந்தைய பாடலில் சிவ-சக்தி இணைந்த அர்த்தநாரி வடிவத்தில் தன் முன்னே வர வேண்டும் என்று வேண்டிய பட்டர், இந்தப் பாடலில் அப்படிப்பட்ட காட்சியின் விளைவைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் உட்கருத்து சிறப்பானது.

பட்டரின் நிலையைக் கற்பனை செய்து பார்ப்போம். சக்தியின் உருவத்தைக் கண்டதும் மகிழ்ச்சி தோன்றும். இயற்கை. பிறகு? அந்த மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்ற எண்ணம், ஆவல், கவலை தோன்றலாம். அல்லது சக்தியின் உருவத்தைக் கண்டதனால் பெரும்பேறு எனும் பிறவாநிலைக்கான உத்தரவாதம் கிடைத்தது போன்ற நிம்மதி தோன்றலாம். அதைத்தான் அவர் களி என்றும் ஞானம் என்றும் சொன்னார். இரண்டையும் ஒருங்கே அளிக்க வல்லவள் அபிராமி என்றார். கண்களுக்கு எதிரே தெரிந்த காட்சி ஒன்று, அறிந்த காட்சி இன்னொன்று. பார்த்துக் களித்த காட்சி ஒன்று, புரிந்துச் சிலிர்த்த காட்சி மற்றொன்று. அகக்கண்ணையும் திறந்தது அபிராமியின் அருள் என்று வியந்து போனார். 'காட்சி வந்ததும் கண் திறந்ததா?' என்ற கேள்வியை அன்றைக்கே கேட்டிருக்கிறார் பட்டர்.

இந்த 'இருநிலை-எதிர்நிலை-சமநிலை' தத்துவத்தைக் கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் அது நம் வாழ்வின் ஒவ்வொரு இயக்கம், செயல், எண்ணத்தில் கலந்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம். சுத்தம்-அசுத்தம், சித்து-அசித்து என்ற சாதாரண எதிர் நிலைகளிலிருந்து இன்பம்-பேரின்பம், ஜடம்-ஞானம் எனும் ஆழ்ந்த எதிர் நிலைகள் வரை சிவ-சக்தியின் வெவ்வேறு பொருளை உபமன்யு முனிவர் கண்ணனுக்கு விளக்கியதாக சிவபுராணம் கூறுகிறது. இங்கே அபிராமியைக் கண்டதும் ஏற்பட்டக் கரை காணாத மகிழ்ச்சி வெள்ளம், பிறவிக் கடலிலிருந்து வெளியேறிக் கரை காணவேண்டிய அவசியத்தையும் நினைவு படுத்துவதாகப் பட்டர் பாடியது ஆழமான கருத்து.

ஆனந்தத்தையும் அறிவையும் ஒருங்கே வழங்கும் அபிராமியின் அருளைப் பற்றிய இந்தப் பாடலுக்குக் குமரன் எழுதியிருக்கும் விளக்கம் என்னைக் கவர்ந்தது (பின்னூட்டங்களும் சுவை).

சிவ-சக்தியின் இணைந்த வடிவத்தைக் கண்டதும் ஏற்படக் கூடியதான மகிழ்ச்சி நிலை, பட்டரின் ஆனந்த-பேரானந்தக் கருத்து, 'சமரச பரானந்த' என்று சௌந்தர்யலஹரியிலும் எழுதப்பட்டிருக்கிறது.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 20 | உறைகின்ற நின்...

2010/06/29

வவ்விய பாகத்து...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:18 | ராகம்:ஹம்சாநந்தி


வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியு முங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலனென்மேல் வரும்போது வெளிநிற்கவே.

இறைவனான சிவனும் நீயும் கலந்து மகிழ்ந்திருக்கும் அழகும், உங்கள் திருமணக் காட்சியும், என்னை என்றைக்கும் ஆளும் பொற்பாதங்களுடன் என் மனதிலிருக்கும் அழுக்காறு நீங்கும் விதமாக, சினம் கொண்ட எமன் என்னைக் கொள்ள வரும் நேரத்தில் என் முன் தோன்றியருள வேண்டும்.

மேற்சொன்னது அறிஞர்கள் சொன்ன பொருள்.

எமனுக்கு அஞ்சுவது போல் பட்டர் பாடியிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. இங்கே 'சினங்கொண்ட எமன்' என்று அரசனைச் சொல்கிறார் பட்டர் என்பது என் கருத்து. ஒளியின் ஒளியான அபிராமி தன்னைக் காக்க வேண்டும் என்று விரும்பியதாலும், சக்தியும் சிவனும் இணைந்திருக்கும் காட்சி ஆயிரம் நிலவுகளுக்கப்பாற்பட்ட ஒளியுடன் இருக்கும் என்று பட்டர் நம்பியதாலும், அரசன் அவரைக் காண வரும்பொழுது வெளி நிற்க - காட்சி தர - வேண்டும் என்று பாடியிருக்கிறார் என நினைக்கிறேன். மரணத்தைக் கண்டு அஞ்சுபவராகத் தோன்றவில்லை பட்டர். நிதானமாகப் பாட்டு பாடிக் கொண்டிருப்பதிலேயே தெரியவில்லையா?

இன்னொரு உட்பொருளும் தோன்றுகிறது. பட்டர் இருந்த ஊர் கடவூர். எமனுக்கே மரணம் விளைந்த ஊர் என்று மார்க்கண்டேயக் கதை கூறுகிறது. "அம்மா அபிராமி, என்னைக் காண வரும் எமன் உன் கணவரின் பழைய பகைவன். முன்பே அவனை வென்றிருக்கிறான். அதனால் அவருடைய முகத்தைக் காட்டினால் கூடப் போதும், எமன் ஓடிவிடுவான்" என்பதுபோல் இறையனாருடன் வரச் சொல்லி வேண்டுகிறார்.

மரணத் தறுவாயில் என்ன சொல்கிறோமோ, நினைக்கிறோமோ அதுவே மறுபிறவியில் நடக்கும் என்ற நம்பிக்கையையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம். இறக்கும் நேரத்தில் சிவ-சக்தி கண்முன் தோன்றினால் பட்டர் என்ன நினைப்பார் என்கிறீர்கள்? சிவ-சக்தியை மகிழ்ந்திருக்கும் கோலத்தில் வரச் சொல்கிறார். இறக்குந்தறுவாயில் சிவ-சக்தி ஆவேசத்தைப் பார்க்க விரும்புமா மனம்? பட்டர் மட்டும் விலக்கா என்ன? நிறைவைக் கண்டு நிறைவைப் பெற விழைகிறார் எனலாம்.

இந்தப் பாடலின் அருமையான எதுகைகள் செவிக்கின்பம் தருவன. வவ்வுதல் என்றால் கவர்தல், பற்றுதல் என்று பொருள். செவ்வி என்றால் அழகு. அவ்வியம் என்றால் அழுக்காறு, பற்று, தீய எண்ணம். வெவ்வி என்றால் சினம்.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 19 | வெளிநின்ற நின்...

2010/06/28

அதிசயமான வடிவுடையாள்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:17 | ராகம்:ஹம்சாநந்தி


அதிசய மான வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசய மான தபசயமாக முன் பார்த்தவர்தம்
மதிசய மாகவன்றோ வாமபாகத்தை வவ்வியதே?

உலகத்து அத்தனை தாமரைகளும் பெறத் தவமிருக்கும் முக அழகைக் கொண்டவளும், ரதியின் கணவனான மன்மதனின் வெற்றியைத் தன் நெற்றிக் கண் பார்வையால் தோல்வியாக்கியவரான சிவனின் விருப்பம் வெற்றிகரமாக நிறைவேற அவரின் இடப் பாகத்தை ஏற்று, இன்னும் மேம்பட்ட வடிவைப் பெற்றவளும் (ஆன அபிராமி) அல்லவா எனக்குத் துணையானவள்?

'அரவிந்தம் எல்லாம் துதிசய சுந்தரவல்லி, இரதி பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர் தம் மதி சயமாக வாம பாகத்தை வவ்விய அதிசயமான வடிவுடையாள் அன்றோ துணை ஆனதே?' எனப்பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

உலகத்துத் தாமரைகள் சேர்ந்து வந்தாலும் உன் முக ஒளிக்கு ஈடாகாது எனும் குமார சம்பவ வர்ணனை நினைவுக்கு வருகிறது. ஆயிரம் தாமரை அழகுடையவள் என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருகிறது. அத்தனை அழகும் பொலிவும் உள்ளவள், தலையோட்டு மாலையும் சாம்பலும் பூசி நிற்கும் சிவனின் ஒரு பாதியை விரும்பிப் பெறுவானேன்?

ஆணுக்குப் பெண் நிகர் என்ற நெறியைச் சமூகத்துக்குத் தெரிவிக்கும் ஒரே மதம் என்ற வகையில் அர்த்தநாரி வடிவம் இந்து மதத்துக்குப் பெருமை சேர்ப்பதாக எண்ணுகிறேன். அதுபோக, சிவ-சக்தி கதைகளிலேயே மிகவும் சுவையானது அர்த்தநாரீஸ்வரர் கதை என்று நினைக்கிறேன் (அர்த்தபுருஷீஸ்வரி என்பது சரியாக வரவில்லையோ?). மற்ற நிகழ்வுகளைப் போல இதற்கும் பல வேறு வடிவங்கள் இருந்தாலும் - எனக்குத் தெரிந்து மூன்று விதமான கதைகள் உண்டு, அதற்கு மேலும் இருக்கும் என நம்புகிறேன் - பல விதங்களில் அர்த்தநாரியின் பின்னணி என்னைக் கவர்ந்திருக்கிறது என்பேன். 'சிவனில்லாமல் சக்தியில்லை, சக்தியில்லாமல் சிவனில்லை' என்ற திருவிளையாடல் கதை பொதுவாக எல்லாரும் அறிந்தது. பிருங்கி முனிவர் சிவனை மட்டும் தான் கும்பிடுவேன் என்று அடம் பிடித்ததும் அதைப் பொறுக்காத சக்தியின் விஷமத்தன சதியும் எனக்குப் பிடித்த கதை.

இருக்கட்டும், இங்கே பட்டர் புதுக் கதை சொல்லியிருக்கிறாரா? எல்லாவற்றையும் விடச் சுவையாக இருக்கும் போலிருக்கிறதே?

மதி என்ற சொல்லுக்கு விருப்பம் என்று ஒரு பொருள். முன் பார்த்தவர் தம் மதி சயமாக - நெற்றிக்கண்ணைத் திறந்து பார்த்தவரின் விருப்பம் வெற்றி பெரும் விதமாக, வாம பாகத்தை - இடது பாகத்தை, வவ்வியது - ஏற்றது, ஏன்? இதைப் புரிந்து கொள்ள இதற்கு முந்தைய வரியைப் பார்க்க வேண்டும். இரதி பதி சயமானது - ரதியின் கணவன் மன்மதனின் வெற்றியை, அப சயமாக முன் பார்த்தவர் - நெற்றிக் கண்ணால் பார்த்து தோல்வியடையச் செய்தவர், என்கிறார். யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி இங்கே?

சிவனின் தவத்தைக் கலைக்க மன்மதனைத் தூது அனுப்பிய கதை தெரிந்திருக்கும். முதலில் பயந்து நடுங்கிய மன்மதனை எல்லா தேவர்களும் விஷ்ணு பிரம்ம கடவுள்களும் பலவாறாகப் புகழ்ந்து மமதையடையச் செய்து, சிவனிடம் அனுப்புகிறார்கள். மன்மதனும் தன்னுடைய மோகாஸ்திரம் எனும் அம்பை மறைந்திருந்து சிவன் மேல் வீசுகிறான். சிவன் உடனே நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனைச் சுட்டெறிக்கிறார். ரதி புலம்ப, எல்லாரும் வேண்ட, சமாதானமாகிறது - அது வேறு கதை. மன்மதன் பஸ்பமானால், வெற்றி எங்கிருந்து வந்தது? அது தான் பட்டர் சேர்த்திருக்கும் சுவை.

மன்மதன் அம்பை எறிந்து விடுகிறான். தவம் கலைந்த சிவன், முதலில் பார்த்த பார்வையிலேயே பார்வதியிடம் அத்தனையையும் பறி கொடுத்து விடுகிறார். தறிகெட்ட சிவனின் உள்ளம் பார்வதியை உடனே மடி மேல் அமர்த்திக் கொஞ்சத் துடிப்பதாகச் சொல்கிறது சிவபுராணம். பார்வதி ஒரே ஒரு கணம் தலை குனிந்து சிவனின் பாதங்களைத் தொடவும், அவள் முகம் மறைந்த அந்த நொடியில் சற்று தொலைவில் மன்மதன் மறைந்திருந்ததைப் பார்த்த சிவனுக்கு நினைவு திரும்புகிறது. மிச்ச கதை தான் தெரியுமே. (அம்பெறிந்து தவம் கலைத்ததால் சிவன் காமனை எரிக்கவில்லை; வந்த வேலை முடிந்தும் விலகாமல் மமதையுடன் சிவ-சக்தி தனிமையைக் குலைத்ததால் சிவன் காமனை எரித்தார் என்றும் ஒரு தரப்பு உண்டு.)

இங்கே, மன்மதன் வந்த காரியம் முடிந்து விட்டது. வெற்றி தான். ரதி பதி சயம் என்பது சரிதான். வந்த கடுப்பில் மதனை எரித்து விட்டு அவசரக்குடுக்கை போல் சிவன் நடந்து கொண்டது வெற்றியா தோல்வியா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். சிவன் மன்மதனை எரித்ததற்கு இன்னொரு காரிய காரணம் இருக்கிறது என்கிறது புராணம். அதை புராணத்திலேயே விட்டு, பட்டருக்கு வருவோம். மன்மதன் எரிந்தாலும், அவன் விடுத்த கணையின் வலி சிவனை விடவில்லை. காமத்தீயில் எரிகிறார். சக்தியுடன் ஐக்கியமானால் தான் விடும் போலிருப்பதால் சக்தியுடன் ஒன்றாக எண்ணித் தன் உடலிலேயே இடம் தந்து விடுகிறார். 'இடம்' தந்து விடுகிறார். ஏற்கும் படி பார்வதியைக் கெஞ்சுகிறார். தன்னை நினைந்து உருகும் சிவனுடைய காதலையும் அந்தக் காதலின் தீவிர வெளிப்பாடான சிவனுடைய உடலின் இடது பாதியையும் பார்வதி விரும்பி ஏற்கிறார். (இதயம் இருப்பது எந்தப் பாகத்தில் என்று ஒருகணம் சிந்தியுங்கள்). அதனால் தான் மன்மதனின் செயலை வெற்றி என்றார் பட்டர். அர்த்தநாரியின் சூட்சுமத்தை விளக்கும் அறிஞர்கள், அது ஆண் பாதி பெண் பாதி அல்ல, ஆண் வடிவம் பெண் வடிவம் இரண்டும் கலந்த உரு என்கிறார்கள். பட்டரின் கருத்துடன் ஒத்துப் போகிறது.

பட்டர் அர்த்தநாரியை அபிராமியாகப் பார்க்கிறார் என்பது சுவை. இடது புறம் சக்தியைக் கொண்ட சிவனைப் பார்க்கவில்லை அவர். வலது புறம் சாம்பல் பூசி, பாம்பு மற்றும் தலையோட்டு மாலை அணிந்தபடி காட்சி தரும் அபிராமியைப் பார்க்கிறார். அந்த வடிவம் எப்படி இருக்கிறதாம் அவருக்கு? அதிசயம் என்பதற்கு மேன்மையான என்று ஒரு பொருள் உண்டு. அதிசயமான - மேம்பட்ட, வடிவுடையவளாக இருக்கிறாளாம் அபிராமி. அப்படிப் பட்டவளே தனக்குத் துணையென்கிறார். (சக்தி உபாசகர் என்று ஒரு கூட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். சக்தியை மையமாக வைத்து வழிபடும் கூட்டம். பட்டர் சக்தி உபாசகராக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது)

வலது புறம் சக்தியைக் கொண்ட அர்த்தநாரியைப் பார்த்திருக்கிறீர்களோ? பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் தீட்டப்பட்ட அரிய சித்திரத்தின் பத்து ரூபாய் வரவேற்பரைப் படப் பிரதியின் மின் வடிவம்:(உரிமையில்லாமல் பதிவில் சேர்த்திருக்கிறேன். இந்தியாவின் ஏதோ ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பதாகக் கேள்வி. 'image search' செய்யத் தெரிந்தவர்கள் இதன் உரிமை விவரங்களைத் தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்)


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 18 | வவ்விய பாகத்து...

2010/06/27

கிளியே கிளைஞர்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:16 | ராகம்:ஹம்சாநந்தி


கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணிலொன்றும் இல்லா
வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

கிளி போன்றவளே! உன்னைத் தியானம் செய்து வழிபடும் அடியார்களின் மனதுள் புதைந்திருக்கும் ஒளியாக விளங்குகிறாய்; அந்த ஒளிக்கு இணையாக வான், வளி, தீ, நீர், நிலம் எனப் பரவி உலகெங்கும் பிரகாசிக்கும் ஒளிகளின் இருப்பிடமாகவும் தோற்றுவாயாகவும் விளங்குகிறாய்; எண்ணிப் பார்க்கையில், ஒளியே இல்லாத வெளியாக அண்டமெல்லாம் விரிந்து நிற்கிறாய்; என் எளிய அறிவிற்கு இவையெல்லாம் விளங்க வைத்த அதிசயத்தை என்னவென்பேன் தாயே!.

தன்னுள்ளேயும் வெளியேயும் அபிராமியை ஒளிவடிவாகப் பார்த்ததால் அரசனின் கேள்விக்குத் தவறான பதில் சொன்ன கதையை அறிவோம். தான் தவறாகச் சொன்னதன் காரணம், எங்கும் நிறைந்திருக்கு அபிராமியின் ஒளி வடிவமே என்பதை இந்தப் பாடலில் அறிவிக்கிறார் பட்டர்.

'பிரபா ரூபம்' (ஒளியின் வடிவம்), 'பரஸ்மை ஜ்யோதிஷம்' (மூலாதார ஒளி) என்று லக்ஷ்மி சஹஸ்ரநாமத்திலும். 'சுமனோகர காந்தி' என்று மகிஷாசுரமர்த்தனி வழிபாட்டிலும் இதே கருத்து கையாளப்பட்டிருக்கிறது.

இலக்கியம் பக்கம் அடி வைப்போமா?

பெண்களைக் கிளிகளுக்கு ஒப்பிடுவது ஏன் தெரியுமோ? எனக்கும் தெரியாது.

முதல் முறையாக இதைப் பற்றிய விளக்கத்தைக் கேட்க நேர்ந்தது பள்ளி நாட்களில், சம்ஸ்கிருத வகுப்பில், என்று நினைக்கிறேன். தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமே என்ற அச்சத்தில் ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்த 'குமாரசம்பவம்' பாடல்களை அரைகுறையாக மனதில் வாங்கிக் கொண்டு, மறு நாள் தமிழ் வகுப்பில் இன்னொரு செய்யுளில் அதே விவரம் தோன்ற, முதல் நாள் நினைவிலிருந்து கொஞ்சம் எடுத்து விட்டு மார்தட்டியதும் நினைவுக்கு வருகிறது. சம்ஸ்க்ருதத் தேர்வுகளில் என்ன கேள்வி கேட்பார்கள், என்ன பதில் எழுத வேண்டும் என்பதை முன்பே சொல்லிவிடுவார்கள் (பத்தில் ஆறு கேள்விகளுக்காவது இப்படி முன்பே சொல்லிக் கொடுத்து விடுவார்கள்; அதனால் சம்ஸ்க்ருதத்தில் எப்பொழுதுமே எண்பது தொண்ணூறு மதிப்பெண் சுலபமாக வாங்க முடியும். அப்படி இருந்தும் வடமொழியில் எங்களுக்கு ஆர்வம் இல்லாமல் போனது ஏனென்று தெரியவில்லை).

கிளி என்பது கண்ணைக் கவரும் அழகிய பல வண்ணப் பறவை. பெண்களும் கண்ணைக் கவரும் வகையினர். சில கிளிகள் சொன்னதைத் திருப்பச் சொல்லும் திறனுடையன, ரசிக்கக் கூடிய குரல் வளம் கொண்டவை - பெண்களைப் போலவே. (சும்மா 'நைநை'னு அதையே சொல்லிட்டிருக்கியே என்று சுற்றத்துப் பெண்களைக் கேட்கும் பொழுது நினைவில் வையுங்கள்). கிளிகளின் பளபளப்பைப் பெண்களின் உடலழகுக்கு ஒப்பிடலாம். கிளிகளின் படபடப்பும் பெண்களுக்கு இணைதான். கிளிகள் நிலையில்லாதவை போலத் தோன்றும்; கள்ளக் குறும்புத்தனம் கொண்டவை. பெண்களைப் போலவே. Mischievous and Flirtatious என்ற பொருளில் நம் இலக்கியங்களில் மட்டுமல்ல, ஷேக்ஸ்பியர் வரிகளில் கூட கிளியும் பெண்ணும் அடிக்கடி ஒப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். இவை எல்லாவற்றையும் விட ஒரு தனிக்குணம் கிளியிடம் உண்டு என்கிறார்கள். கிளிகள் குடும்பப் பறவைகள். துணையுடன் இருப்பவை. தனக்கு ஒரு துணையைப் பிடித்து விட்டால், பெண் கிளி அந்தத் துணை கிடைக்கும் வரை விடாதாம். துணைக் கிளிக்காகத் தியாகமும் தவமும் செய்யுமாம். சிவனுக்காகத் தவம் கிடக்கப் போகும் பார்வதியைத் தடுத்து நிறுத்தும் அவளுடைய தாய், அவளுடைய அழகிலிருந்து, பளபளப்பிலிருந்து, குறும்பிலிருந்து, படபடப்பிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி "கிளி போன்றவளே" என்று அழைத்து விட்டு, "(கிளி போல்) தவம் கிடக்க உன் உடலிலும் மனதிலும் வலு இல்லை, நீ கிளியினும் மென்மையானவள், தவம் வேண்டாமே?" என்று வேண்டுவதாகக் காளிதாசன் குமாரசம்பவத்தில் சொல்கிறார்.

இன்னொரு விளக்கம்/விவாதமும் உண்டு. வடமொழியில் 'சுக' என்றால் கிளி. வடமொழியில் 'சுக' என்றால் 'மரம்' என்றும் ஒரு பொருள். வடமொழிக் காவியங்களில் பெண்ணை மரத்துக்கு ஒப்பிட்டு (மரமாட்டம் நிக்கறியே என்ற பொருளில் அல்ல, மரம் போல் தழைப்பதால் என்ற பொருளில்) எழுதப்பட்டிருக்கிறது. வேதத்தை மரத்துக்கு ஒப்பிட்டு, அபிராமியைக் கூட 'வேத மரம்' என்ற உருவக வடிவில் பார்த்திருக்கிறார் பட்டர். சில குறும்புக்கார வடமொழிப் பேர்வழிகள் சொன்னது: "தமிழிலும் தொன்மையானது எங்கள் ஆரிய மொழி. நாங்கள் மரத்தைப் பற்றிச் சொன்னால், தமிழர்கள் கிளிகள் என்று புரிந்து கொண்டு பெண்களைக் கிளிகள் என்று பாடத் தொடங்கி விட்டார்கள்". இந்தக் கருத்தை, குடுமி வைத்த என் சம்ஸ்க்ருத ஆசிரியரும் சொல்லியிருக்கிறார். தமிழனுக்குக் கற்பனை குறைவென்பது போன்ற இந்த வாதத்தை என்னால் அந்த நாளிலும் ஏற்கமுடியவில்லை. குடுமி வாத்தியாருக்குத் தமிழும் அருமையாக வரும். அதனால் அவரைக் குறை சொல்ல முடியாது. சிந்தித்துப் பார்த்தால் சங்க இலக்கியங்களில் பெண்களை வர்ணித்த விதம் வடமொழி இலக்கியங்களிலிருந்து மாறுபட்டிருக்கிறது. அங்கே நாரீஷூ ரம்பா என்றால், நம்ம ஊரில் மேனகை (சேர நாடு). புஷ்பேஷூ கமலம் அங்கே; மல்லிகை தான் மலர்களின் ராணி இங்கே - அதனால் பெண்ணை மல்லிகை மலருக்கு ஒப்பிடுகிறோம்; அங்கே பெண்ணைக் கிளி என்றால் (?) இங்கே பெண்ணைப் பொதுவாகப் புறாவுக்கு ஒப்பிட்டிருக்கிறோம். வெண்மை தூய்மைக்கு அடையாளம் என்பதால் பெண்ணைப் புறா என்றோம். புறா அளவுக்குக் கிளி தமிழிலக்கியங்களில் பெண்ணைக் குறிக்கும் உவமையாக இடம் பெற்றிருக்கிறதா? எனக்கு அறிவு போதாது.

சௌந்தர்யலஹரியிலிருந்தும் லலிதா சஹஸ்ரநாமத்திலிருந்தும் இத்தனை எடுத்தாண்டிருக்கிறாரே (அல்லது கருத்து ஒற்றுமை இருக்கிறதே) என்பதால், 'கிளி' என்று பொருளில் எத்தனை முறை திரிபுரசுந்தரியை அந்த நூல்களில் வர்ணித்திருக்கிறார்கள் பார்ப்போமே என்று விளையாட்டாகத் தேடினேன். அதை ஏன் கேட்கிறீர்கள்! 'மரம்' என்ற பொருளில் சௌந்தரியலஹரியில் எட்டு முறையும், லலிதா சஹஸ்ரநாமத்தில் ஐந்து முறையும் காண முடிந்தது. ஒரு வேளை எனக்குத் தேடத் தெரியவில்லையோ?

இங்கே பட்டர் அபிராமியைக் கிளியென்றதன் காரணம் என்னவாக இருந்தாலும், அவர் சொன்ன 'எண்ணிலொன்றும் இல்லா வெளியே' என்பதே இந்தப் பாடலில் என்னை மிகவும் கவர்ந்த கருத்து. ஒளியின் தோற்றம் அணு. அணுவின் தொடக்கம் முதல் அது விரிந்து பரவி எல்லாவற்றையும் வசீகரிக்கும் அளவு வரை, எல்லா வடிவிலும் அபிராமியைப் பார்க்கிறார். இது கொஞ்சம் ஆழமான சிந்தனை. ஒளி ஒரு சிறிய அணுவிலிருந்து உருவாவதையும் பிறகு அது அண்டத்தை அழிக்கும் அளவுக்கு பரவி ஒடுங்குவதையும் இன்றைக்கு அறிவியல் வழியாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். ஒளியின் தோற்ற முடிவைப் பற்றி இந்திய இறையிலக்கியங்களில் உள்ள அளவுக்கு வேறு எந்த நாட்டு இறையிலக்கியத்திலும், நான் படித்தவரை, காணப்படவில்லை. பட்டருக்கு முறையான விண்ணியல் பயிற்சி உண்டா தெரியாது; விண்வெளியில் பெரும்பாலும் இருள் தான் (ஒளியில்லா வெளி) என்பதும், அண்டம் விரிந்து கொண்டே இருக்கிறது என்பதும், பட்டருக்குப் பிற்காலக் கண்டுபிடிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. அளியேன் என்பதற்கு எளியவன் என்று பொருள். அரிய தத்துவத்தைச் சொல்லிவிட்டு அளியேன் என்ற தன்னடக்கமும் குறிப்பிடத்தக்கது.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 17 | அதிசயமான வடிவுடையாள்...

2010/06/26

தண்ணளிக்கு என்று...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:15 | ராகம்:சாவேரி


தண்ணளிக்கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமளயாமளைப் பைங்கிளியே.

சிவ-சக்தி வடிவில் என்னைப் பாதுகாக்கும் யாமள தந்திரத்தின் உருவே! உன் அருளின் குளிர்ச்சியைப் பெற வேண்டி முற்பிறவிகளிலிருந்து பல கோடித் தவங்களைச் செய்து வருபவர்கள், மண்ணுலகத்தில் பெறக்கூடிய செல்வங்களையா விரும்பிப் பெறுவார்கள்? தேவர்கள் இருக்கும் விண்ணுலகத்தில் பெறக்கூடிய செல்வங்கள் கூட நிறைவு தராது. உன்னை எண்ணி உருகி நல்ல பண் பாடிப் போற்றுவதன் பலனாகக் கிடைப்பது, என்றைக்குமே அழியாத ஆனந்தமான, பிறவியில்லாப் பெரும்பேறு அல்லவா? அழகிய கிளி போன்றவளே! நீயே சொல்.

'யாமளை! தண்ணளிக்கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார், மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் மதி. அழியா முக்தி, வீடும் அன்றோ பரிமளப் பண்ணளிக்கும்? பைங்கிளியே, சொல்' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

இந்தப் பாடலுக்கு அறிஞர்கள் சொன்ன விளக்கங்களின் உரு பின்வருமாறு:     பச்சைக் கிளியின் இசை போல் இனிய சொல்லுடைய, நறுமணம் வீசும் கரிய/பசுமை நிறத்தவளே! உன் திருவருளை வேண்டிப் பலகோடித் தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? வானுலகத்து இந்திர பதவியும் விண்ணுலகச் செல்வங்கள் அத்தனையும் பெறுவர். அழியாத முக்திப் பேற்றையும் பெறுவர்.

தண்ணளி என்றால் அருள். 'தண்ணளிக்கு என்று' என்பது 'அருள் வேண்டி' என்ற பொருளில் வருகிறது.

இது வரை சிவப்பு நிறத்தின் அத்தனை உவமைகளையும் பயன்படுத்திய பட்டர், இந்தப் பாடலில் அபிராமியை வேறு நிறத்தவளாய்ப் பாடியிருப்பார் என்று தோன்றவில்லை. அபிராமியின் அழகையும் அண்டத்திற்கப்பாற்பட்ட ஆற்றலையும் பாடிக்கொண்டிருந்தவர், அபிராமியைக் கிளி போல் பேசுவதாக/பாடுவதாகச் சொல்லியிருப்பார் என்றும் தோன்றவில்லை. 'பண்ணளிக்கும் சொல்' அபிராமியின் குரலினிமையைக் குறிப்பதாகத் தோன்றவில்லை.

இங்கே பண்ணளிப்பது பைங்கிளி அல்ல, பட்டர் என்பதை மட்டும் கருத்தில் கொள்வோம். பைங்கிளியைப் பற்றி விவரமாக அடுத்த பாடலில் பார்ப்போம்.

யாமளை என்கிறாரே? யாமளை என்றால் கரிய நிறத்தவள் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'கரிய நிறத்தில் கிளி போல் பேசுபவளே' என்பதை எப்படி நல்லுவமையாகக் கொள்வது? "அட, அப்படியேவா பொருள் கொள்ளுவார்கள்? இரண்டும் வெவ்வேறு சிறப்புகளைக் குறிக்கும் உவமைகள் என்று தெரியாதா?" எனலாம். ஏற்க முடிகிறது. அல்லது, இங்கே யாமளை என்றதற்கு வேறு காரணம் உண்டா?

அமாவாசையன்று நிலவு வரும் என்று நிரூபிக்க, வேறு வழி தெரியாமல் அபிராமியை எண்ணி வரிசையாகப் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார் பட்டர். முன்பே சொன்னது போல், நிலவு தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் அவருக்கு அபிராமி தான் கதி என்று ஐயமின்றித் தெளிவாகிறது. இந்த நிலையில், யாமளை என்ற சொல்லுக்கு நிறத்தைப் பொருளாகக் கொள்ளத் தோன்றவில்லை.

சிவன்-சக்தி முற்றிலும் கலந்த வரையறுப்புக்கப்பாற்பட்ட நிலைக்கு யாமளை என்று வேத விளக்கங்களில் பெயர் சொல்லியிருக்கிறது. சிவனுக்கும் சக்திக்குமிடையே நிகழ்ந்த உரையாடலில் தோன்றிய அறுபத்து நாலு (எழுபத்தேழு என்கிறார்கள் சிலர்) ஆகமங்களின் முப்பெரும் பிரிவுகளில் ஒன்று யாமள சாஸ்திரம் அல்லது தந்திரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தந்திரத்தின் அவசியமும் பொருளும் 'முறையான விவரங்களுடன் கூடிய விவரமான விசாலமான பாதுகாப்பு' என்று சொல்லப்பட்டிருக்கிறது. சக்தியே தந்திரத்தின் அன்னை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அன்றைய நிலையில் பட்டருக்கு விசாலமான பாதுகாப்பு அளிக்கக் கூடியவர் அபிராமி ஒருவரே என்று அவர் நம்பியதால், யாமளை என்றார் என்பது என் கருத்து. மேலும், பட்டருக்கு வேறு எந்தச் செல்வத்திலும் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை; காரணம், பாட்டுக்குப் பாட்டு பிறவா நிலை பற்றியது. அதனால், 'மண்ணுலக, விண்ணுலகச் செல்வங்களுக்கா உன்னை எண்ணித் தவம் கிடக்கிறேன்? பிறவா நிலை வழங்கி என்னை உன்னுடன் சேர்த்துக் கொள்' என்று உருகிப் பாடுவதாகத் தான் நினைக்கிறேன்.

பரிமளம் என்றால் நறுமணம். இங்கே பரிமளப் பண் என்பது தமிழ்ப் பாட்டைக் குறிக்கும் உரிமையை எடுத்துக் கொண்டேன். தமிழின் நறுமணம் பட்டருக்குத் தெரிந்திருக்கிறது; அவர் வணங்கிய பார்வதிக்கும்.

பாடுவோர் பாடினால் பரிமளம்.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 16 | கிளியே கிளைஞர்...

2010/06/25

வந்திப்பவர் உன்னை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:14 | ராகம்:சாவேரி


வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க் கெளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே:

தேவர்களும், அசுரர்களும், தவமுனிகளும் உன்னை எப்பொழுதும் வணங்குகிறார்கள்; நான்கு திசைகளிலும் முகம் அமைந்த பிரம்மமனும், நாராயணனும், உன்னையே எக்கணமும் சிந்திக்கிறார்கள்; அழிவில்லாத பரமசிவனோ உன்னை உள்ளத்தியே கட்டி வைத்திருக்கிறார். இருப்பினும், இந்த உலகில் உன்னைத் தரிசனம் செய்து வழிபடுவோருக்கு உன் அருள் எளிதில் கிடைக்கிறதே!

'வானவர் தானவர் ஆனவர்கள் உன்னை வந்திப்பவர்; நாற்றிசை முகர், நாரணர் (உன்னை) சிந்திப்பவர்; அழியாப் பரமானந்தர் (உன்னை) பந்திப்பவர்; (எனினும்) எம்பிராட்டி நின் தண்ணளி பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம்' எனப் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

தேவர்கள், ரிஷிகள், முப்பெரும் கடவுளர், யோகிகள் என்று வரிசையாகச் சொல்லி எல்லாரும் திரிபுரசுந்தரியை வணங்கும் போதிலும், அன்புடன் 'பவானி' என்று அவளை நினைத்த கணமே திரிபுரசுந்தரியின் அருள் பக்தர்களுக்குக் கிடைத்து விடுகிறது என்ற கருத்து சௌந்தர்யலஹரியிலும் லலிதா சஹஸ்ரநாமத்திலும் வருகிறது.

பிரம்மனைப் பொருத்த வரை, சக்தியை எக்கணமும் சிந்திக்கிறாரோ இல்லையோ எக்கணமும் மறக்காமலிருக்க வாய்ப்பிருக்கிறது; ஐந்து முகங்களில் ஒரு முகம் குறையக் காரணமாயிருந்தவள் என்கிறதே புராணம்?

இந்தப் பாடலின் எளிமையும், எதுகை மோனைகளும் சுவை.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 15 | தண்ணளிக்கு என்று...

2010/06/24

பூத்தவளே புவனம்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:13 | ராகம்:சாவேரி


பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே?

பதினான்கு உலகங்களையும் தோன்றச் செய்தவளே! அவற்றைக் காத்து, பின் மறைப்பவளே! ஆலகால நஞ்சுண்ட சிவனுக்கும் முன்னால் தோன்றியவளே! என்றைக்கும் முதுமை பெறாத திருமாலுக்கு இளையவளே! பெருந்தவம் செய்தவளே! உன்னைத் தவிர்த்து வேறொரு தெய்வத்தை எதற்காக வணங்க வேண்டும்?

சௌந்தர்யலஹரியில் இந்தக் கருத்து வருகிறது. சக்தி கண்ணசைத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழிலையும் தொடங்குவார்களாம். சக்தி மறுபடி கண்ணசைத்தால் நிறுத்துவார்களாம். அதனால் சக்தியை விடச் சிறந்த தெய்வம் வேறு இல்லை என்ற கருத்தில் சௌந்தர்யலஹரிப் பாடல் எழுதப்பட்டிருக்கிறது.

அதை அப்படியே கையாண்டிருக்கலாம் பட்டர். கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் என்று படுகிறது. சக்தி தான் மூவரையும் படைத்தாள் என்றால், சிவனுக்கு முன்னால் தோன்றியவள் திருமாலுக்கு எப்படி இளையவளாக முடியும்? மீனாட்சி என்ற அவதாரத்தில் திருமாலின் தங்கையாக சக்தி தோன்றினாள் என்று புராணக்கதை இருக்கிறது. அதைத்தான் பட்டர் இங்கே சொல்லியிருக்கிறார் என்பது புரிந்தாலும், இது வரை பாடல் வரிகளில் முரண்பாடு இல்லாமல் கொண்டு போனவர் இங்கே அதை மறந்திருக்கிறார். சிவனுக்கும் முன்னால் தோன்றியவள் என்பதைத் தொடர்ந்து, அதற்குப் பொருந்துகிறார் போல் வேறு ஏதாவது சொல்லியிருக்கலாம். திருமால் தங்கை விவகாரத்தை வேறொரு பாடலில் எடுத்துக் காட்டியிருக்கலாம். ஒரே பாடலில் இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் வருவதால் சற்று சுவை குன்றுகிறது. பட்டருக்கு எண்ணக் களைப்போ? அல்லது என்ன 'தலை போகிற' அவசரமோ தெரியவில்லை.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 14 | வந்திப்பவர் உன்னை...

2010/06/23

கண்ணியது உன்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:12 | ராகம்:சாவேரி


கண்ணிய துன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்துபத்தி
பண்ணிய துன்னிரு பாதாம் புயத்தில் பகலிரவாய்
நண்ணிய துன்னை நயந்தோர வையத்து நான்முன்செய்த
புண்ணிய மேதென்னம்மே புவியேழையும் பூத்தவளே.

ஏழுலகையும் படைத்த என் தாயே! நான் எக்கணமும் நினைத்திருப்பது, உன் சிறப்பை; உன்னடியார் கூட்டத்துடன் விரும்பிச் சேர்ந்து இரவு பகலென நான் எந்நேரமும் அன்புருக வழிபடுவது, உன் தாமரைப் பாதங்களை; இதற்கு நான் முற்பிறவிகளில் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

எளிமையான பாடல். ஈற்றடியில் உட்கருத்து. 'ஏழு உலகினையும் படைத்தவள்' என்று போற்றினார். அப்படிப்பட்டவளின் புகழைப் பாடுவது 'தான் செய்த புண்ணியம்', என்று தன்னடக்கத்துடன் முடிக்கிறார். இதில் என்ன உட்கருத்து?

இந்து சமயத்தில் ஓருலகு, ஈருலகு, மூவுலகு, ஏழுலகு, ஈரேழுலகு, அண்டம், பேரண்டம் என்று அடுக்கிக் கொண்டே போவதைக் காணலாம். பட்டர் கூட ஒரு பாடலில் ஏழுலகு என்றும், இன்னொரு பாடலில் பதினான்கு உலகு என்றும் சொல்லியிருக்கிறார். இந்த இடத்தில் ஏழுலகுக்கு என்ன பொருள்? அதைப் புரிந்து கொள்ள மொத்த உலகையும் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும. குறைந்தது, தெரிந்து கொள்ளவாவது வேண்டும். ஓருலகு, அண்டம் என்ற எல்லாம் அடங்கிய கணக்கில் சொல்லப்படுகிறது. ஈருலகு என்றால் மேலடுக்கு, கீழடுக்கு எனப் பகுப்பபட்ட இரண்டு தட்டு உலகங்கள் என்று பொருள். மேலுலகம், பூவுலகம், பாதாளம் என மூன்று உலகப் பிரிவைக் குறிப்பது மூவுலகு. (ஏன் பூமியைத் தனியாகப் பிரித்தார்கள் என்று தெரியவில்லை). இரண்டு தட்டு உலகங்கள் என்றோம் இல்லையா? அந்த ஈருலகில், மேலுலகங்கள் ஏழு, கீழுலகங்கள் ஏழு. மொத்தம் ஈரேழு. மேலுலகங்கள் ஏழில் நாமிருக்கும் பூமி, மேலிருந்து கீழாக, ஏழாவது என்று நம்பப்படுகிறது. சரி, புண்ணியத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு? அழிவென்பது உடலுக்கு மட்டுமே, உயிரெனப்படும் ஆத்மாவுக்கு அழிவில்லை என்பது, இந்து மத ஆதார நம்பிக்கைகளுள் ஒன்று. பிறவிக்குப் பின் பிறவியெடுத்து, ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்த நற்பயனின் விளைவாக அடுத்தடுத்த பிறவிகளில் மேம்பட்டு, இறுதியில் பிறவியில்லா நிலையடைவது இந்துமத குறிக்கோள்களில் முக்கியமானது. உயிர் அல்லது ஆத்மா, ஒவ்வொரு உலகமாகப் பிறவிப் பயணம் செய்கிறது. பூமிக்கு வரும்பொழுது ஓரளவுக்குப் புண்ணியம் சேர்த்து விடுகிறது. இங்கிருந்து அடுத்த மேல்தட்டு உலகங்களைப் பார்த்தால் (புவ, சுவ, மக, ஜன, தப, பிரம்ம) ஒவ்வொன்றும் இன்னும் மேன்மைக்கான இடங்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை மேலுலகங்களைக் கடந்து பிறவியில்லா நிலையடைய இந்தப் பிறவியில் (பூமியில்) நல்முறையில் வாழ வேண்டும். இறைவனை/இறைவியை வழிபடுவது தான் அந்த நல்முறை. கொஞ்சம் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும், விளக்கம் இது தான்: எத்தனையோ புண்ணியம் செய்து அரிதாகக் கிடைத்த மானிடப் பிறவியில் இறைவனை வழிபட்டு பிறவா நிலையடைய முயற்சி செய்ய வேண்டும். மானிடப் பிறவியில் மட்டும் தான் பிறவா நிலை பற்றிய அறிவே தோன்றுமாம். மற்றக் கீழுலகப் பிறவிகளில் தோன்றாதாம். மற்றக் கீழுலகப் பிறவிப்பயணங்களில் புண்ணியம் செய்கிறோம், பாவம் செய்கிறோம் என்ற நினைவு கூட இருக்காதாம். புண்ணியம் செய்திருந்தால் அறியாமல் செய்தது தான். (புராணக்கதைகளைப் படித்தால் அப்படித் தோன்றவில்லை. அறியாமல் செய்தால் புண்ணியம் என்பதை ஏற்கும் பொழுது பாவமும் அறியாமல் செய்வது தானே என்று தோன்றுகிறது. அறியாமல் செய்த பாவத்தின் சம்பளம், மனிதரல்லாத மற்றப் பிறவியா என்று கேட்கத் தோன்றுகிறது).

கதையை விட்டு கவிதைக்கே வருகிறேன். பட்டர், தன் முற்பிறவிகளில் தான் அறியாமல் செய்த புண்ணியம் என்ன என்று அபிராமியிடம் வியந்து கேட்கிறார். ஏழுலகையும் புண்ணியப் பேற்றையும் இணைத்தது தான் உட்கருத்து.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 13 | பூத்தவளே புவனம்

2010/06/22

ஆனந்தமாய் என்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:11 | ராகம்:சாவேரி


ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடி வுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணார விந்தம் தவள நிறக்
கானந்தமாட ரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே.

சுடலைக் காட்டில் ஆடும் வெண் நீறு பூசிய சிவன் தன் தலைமேல் வைத்திருப்பதும், வேதங்கள் நான்கிற்கும் எல்லையான மாணிக்கம் போன்றதுமான பாதங்களையுடைய, அண்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பேரழகியே (அபிராமியே) எனக்கு அறிவாகவும் ஆனந்தமாகவும் பெரும்பேறாகவும் விளங்குகிறாள்.

'தவள நிறக் கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணிய, மறை நான்கினுக்கும் தான் அந்தமான அரவிந்த சரண், வான் அந்தமான வடிவு, உடையாள் - என் அறிவாய் ஆனந்தமாய் அறிவாய் நிறைந்ததே' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

இதுவரை அருளிய பாடல்களில் அரும்பொருள் பல கொண்ட தமிழ்ச் சொற்கள், இந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கின்றன. பிரிக்கப் பிரிக்க தமிழ்ச்சுளை. பருகப் பருகத் தமிழ்த்தேன். இந்தப் பாடலில் தமிழுடன் விளையாடிப் பார்த்திருக்கிறார் பட்டர் என்று தோன்றுகிறது. நாமும் கொஞ்சம் கலந்து கொள்வோமா?

அடிகளின் முதல் சீர்களில் வரும் சொற்களை அந்தம், அனந்தம் எனப் பிரிக்கலாம். அந்தம் என்பதற்கு அழகு என்று ஒரு பொருள்; முடிவு என்று ஒரு பொருள்; எல்லை என்று பிரிதொரு பொருள். எல்லை என்பது முடிவா, தொடக்கமா? அனந்தம் என்பதற்கு அளவில்லாத என்று பொருள்; பொன் என்று ஒரு பொருள். உடன் சேரும் ஆ, வா, தா, கா - அல்லது ஆன், வான், தான் - என்ற சொற்களுடன் முறையே சேரும் பொழுது ஒவ்வொன்றும் சுவையான பொருளாகின்றது. ஆன்+அந்தம் என்று பிரித்து உயிரின் எல்லை எனப் பொருள் கொள்ளலாம். ஆனந்தம் என்ற சொல்லின் நேரடிப் பொருளாகவும் கொள்ளலாம். வான்+அந்தம் எனப் பிரித்து 'வான், வளி, நீர், தீ, காற்று என எல்லாவற்றையும் கடந்த' எனப் பொருள் கொள்ளலாம். 'வா+அனந்தம்' எனப் பிரித்து 'அனந்தமான வடிவுடையாள் வா' எனப் பொருள் கொள்ளலாம். ஒரு வரியில் அனந்தம் என்றும் இன்னொரு வரியில் அந்தம் என்றும் பொருள் பிரித்துப் பார்த்தாலும் பொருத்தம். 'மறை நான்கினுக்கும் தான் அந்தம்' எனப் பிரித்து, வேதங்களின் எல்லை எனப் பொருள் கொள்ளலாம். கா+அனந்தம் எனப் பிரித்து அளவில்லாத காட்டில் எனப் பொருள் கொள்ளலாம். ஒரே சொல்லைப் பல விதமாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் ஒரு உவமையைக் காணலாம். மூன்றாம் வரியில் சரண்+அரவிந்தம் என்று பிரித்தால் தாமரை பாதங்கள் எனப் பொருள் கொள்ளலாம். சரண ஆர விந்தம் எனப் பிரித்தால், விந்தம்: மாணிக்கம். ஆர: மிகுந்த, மிகச்சிவப்பான நிறத்திற்கு உவமையாகக் கொள்ளலாம். கண்ணியதே என்பதை கருதப்பட்டது என நேரடியாகப் பொருள் கொள்ளலாம். முடி+கண்ணியதே எனப் பிரித்து நெற்றிக் கண்ணானது எனப் பிரிக்கலாம் (அபிராமியின் பாதங்களே சிவனின் நெற்றிக்கண் எனப் பொருள் வரும்). 'தவள நிறக் கானந்தமே எம்பிரான் ஆடரங்காம்' எனப் பிரித்தால் வெண்ணிறம் தூக்கும் (தலையோடு, எரிந்த சாம்பல், நீறு) சுடுகாட்டை நடன அரங்காகக் கொண்டவன் எனப் பொருள் கொள்ளலாம். அல்லது, திருவெண்காட்டு எம்பிரான் என நேரடிப் பொருளும் கொள்ளலாம் (கடவூரின் அருகிலேயே திருவெண்காடு என்ற சிவன் கோவில் இருக்கிறது). தவள நிறம்: வெள்ளை நிறம்.

'வானந்தமான வடிவுடையாள்', 'எம்பிரான் கானந்தமாடரங்கம்' என்று சக்தி-சிவன் நிலைகளை இங்கே வர்ணித்திருப்பதற்கு இன்னொரு உட்கருத்தும் இருப்பதாக உணர்கிறேன். ஆதி அந்தம் இல்லாதவள், அண்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவள் என்று சக்தியைப் போற்றிவிட்டு, சுடுகாட்டு நடனக்காரன் என்று சிவனைச் சாதாரணமாகச் சொல்வது பொருந்துமா? பட்டர் சாதாரண ஆளில்லை. சிவன் சுடலை நடனமாடும் பின்னணிக் கதை தெரிந்தவர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள். சிவன் 'அனந்த கா'வில் நடனமாடும் நேரத்தில், சிவனும் சக்தியுமே மட்டுமே மிஞ்சி இருப்பதாகவும், மற்ற எல்லாமே - தேவர்கள், கடவுள்கள் உள்பட - அழிந்து விடுவதாகவும், முடிவின் தொடக்கமாகவும் தொடக்கத்தின் முடிவாகவும் விளங்கும் நடனமென்றும், சக்தியின் தாளத்துக்கு சிவன் ஆடுவதாகவும் புராணக்கதை சொல்கிறது. (சக்தியின் தாளத்துக்குத் தான் சிவனும் ஆடுகிறாரா? பலே!) அண்டத்திற்கப்பாற்பட்டவள் என்று சக்தியை வைத்த அதே தட்டில் சிவனையும் வைத்திருக்கிறார் பட்டர்.

நான் மிகவும் ரசிக்கும் அபிராமி அந்தாதி பாடல்களில் இது ஒன்று.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 12 | கண்ணியது உன்...

2010/06/21

நின்றும் இருந்தும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:10 | ராகம்:பிலஹரி


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தியானந்தமே.

அறிந்து கொள்ள முடியாத வேதசாரத்தில் கலந்தவளே, அருள் வடிவமே, ஹிமவானுக்குப் பிறந்தவளே, உமா, அழியாத பேரின்பமான முக்தியின் வடிவமே! நான் எந்த நிலையிலும் உன்னையே உணர்கிறேன்; உன் மலர் போன்ற பாதங்களையே வணங்குகிறேன்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் என்ற வரிக்கு, அறிஞர்கள் பல விதமாகப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'நின்றுகொண்டு இருந்தாலும், நடந்துகொண்டு இருந்தாலும்' என்ற வெளிப்படையான பொருள் சொன்னவர்கள் பெரும்பாலோர். இதில் நுட்பம் இருப்பதாக எண்ணி சற்றே ஆழமான பொருள் சொன்னவர்கள் சிலர். இரண்டுமே ஏற்கத்தகுந்தவை. பாராயணம் செய்ய நேர்பொருள் போதும்; பலவாறாய் ரசிக்க புதைபொருள் வேண்டும். இது என் கருத்து.

பட்டர் பாடல்களில் எளிமை முகத்திலடிப்பது உண்மைதான். எனினும் ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது ஒரு சிறிய கிளைக்கருத்தைச் சொல்லியிருக்கிறார். இங்கே நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் என்பது, முறையே "அசைவன அசையாவிட்டாலும், உறையாதன உறைந்து போனாலும், இறவாதன இறந்து விட்டாலும், நிகழாதன நிகழ்ந்து விட்டாலும் (என்று நான் உணர்ந்தாலும்)" என்று குறிப்பதாக நினைக்கிறேன். பட்டரின் அந்த நாள் நிலையை மனதில் வைத்துப் பார்க்கும் பொழுது அவர் குறிப்பிடுவது இப்படி இருக்குமோ என்று எண்ணுகிறேன். மலரைப் பார்த்தால் நீ; மலையை பார்த்தால் நீ; நீரைப் பார்த்தால் நீ; நெருப்பைப் பார்த்தால் நீ; உயிரைப் பார்த்தால் நீ; உடலைப் பார்த்தால் நீ; அமைதியைப் பார்த்தால் நீ; எழுச்சியைப் பார்த்தால் நீ. இந்தப் பொருளில் தான் 'அமாவாசையைப் பார்த்தால் நீ; பௌர்ணமியைப் பார்த்தால் நீ' என, நடவாதது நடந்தாலும் என்கிறார் என எண்ணுகிறேன். அபிராமியின் நினைவாகவே இருந்ததால் தான் அரசன் திதி கேட்ட பொழுது, மனக்கண்ணில் 'நின்றி'ருந்த அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர், 'பௌர்ணமி' என்றார். இந்தப் பாடலில் தன்னுடைய இயலாமையை - அபிராமியையே எந்த நிலையிலும் நினைத்திருந்ததால் ஏற்பட்ட பகுத்தறியும் இயலாமையை - வெளிப்படுத்துகிறார்.

அடுத்த வரியில் வரும் 'உமையே' என்ற சொல்லிலும் ஒரு கிளைக்கருத்து இருக்கிறது. உமா என்ற சொல்லுக்கு ஒளி என்று பொருள். உமா என்பதற்கு, 'பெண்ணே வேண்டாம்' என்றும் பொருள் உண்டு. 'விட்டால் போதும்' என்ற பொருளில் அது தோன்றினாலும், இதன் பின்னணியில் சுவையான புராணக்கதை இருக்கிறது. பார்வதியாகப் பிறந்த சக்தி, கரிய நிறத்தவளாக இருந்தாளாம். சிவன் பார்வதியை 'கரிக்குஞ்சு' என்று கிண்டல் செய்ய, பார்வதி கோபம் கொண்டு சிவனை விலகினாளாம். பதிலுக்கு ஏதாவது சிவனைக் கிண்டல் செய்து விட்டுப் போகக்கூடாதோ? தன்னுடைய நிறத்தை மாற்றக் கடுந்தவம் செய்யப் போனாளாம். 'வேண்டாம், கடுமையான தவம் மேற்கொள்ளாதே' என்று பார்வதியை அவளுடைய தாய் தடுத்ததாகப் புராணக் கதை. (உ, மா: பெண்ணே, வேண்டாம்!). இந்தப் பாடலுக்குத் திரும்புவோம். திதியைத் தவறாகச் சொல்லிவிட்டு, உயிர் பிழைக்க பட்டர் அந்தாதி பாடியது அமாவாசையன்று. அமாவாசை பௌர்ணமியாக என்ன தேவை? ஒளி.

இந்தப் பாடலுக்கான கருவை சௌந்தர்யலஹரியிலிருந்து இறக்குமதி செய்தது போல் ஒற்றுமை. 'மனஸ் த்வம் வ்யோம த்வம்' என்ற சௌந்தர்யலஹரி செய்யுள் வரிகளில் திருபுரசுந்தரியை 'எல்லாம் நீ' என்ற பொருளில் வழிபடுவதாக வருகிறது.

சிவன் கொடுத்த சௌந்தர்யலஹரியை நந்தியிடம் அசடு போல் பறிகொடுத்த ஆதிசங்கரர், மீண்டும் சிவனிடமே சென்று கோள் சொல்லி முறையிட்டதாக வரும் பின்னணிக் கதையைத் தெரிந்தவர்கள், இந்தப் பாடல் சிவனே எழுதியது என்று சொல்வார்கள். அது உண்மையாகும் வகையில், சிவனின் நினைவில் சக்தி எல்லா வடிவாகவும் அல்லது வடிவே இல்லாமலும் நிறைந்திருப்பதாக அறிய முடிகிறது. அதைத்தான் பட்டர் 'நின்றும் இருந்தும்' என்று நிலை, நிலையின்மை, நிலை கடந்த நிலை என அனைத்து நிலைகளிலும் அபிராமியையே நினைப்பதாகப் பாடியிருக்கிறார் என்று தோன்றுகிறது. நின்று கொண்டும், இருந்து கொண்டும், கிடந்து கொண்டும் நினைக்கிறேன் என்று சாதாரண மனித இயக்க நிலைகளில் சொல்லவில்லை என்பது என் கருத்து. ஆழம் என்பதே தோண்டத் தோண்டத் தானே தெரிகிறது? பத்து விரலில் ஆழம்; பத்தடியிலும்.

பட்டரின் இந்தப் பாடல், 'நெக்கு நெக்குள்ளுருகி புக்கு நிற்பதென் கொல்லோ' என்ற உருக வைக்கும் திருவாசகப் பாடலை நினைவூட்டுகிறது. 'நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி' என்று திருவாசகத்திலும் பாடப்பட்டிருக்கிறது. எந்த நிலையிலும் இறைவனை வணங்குவதாகக் கருத்து.

வீரைக் கவிராஜ பண்டிதர் என்று ஒரு புலவரும் அபிராமியைப் பற்றிப் பாடியிருக்கிறார் - அரிய சௌந்தர்யலஹரியை அருமையான தமிழில் வழங்கி. இவருக்குப் பின்னணிக் கதை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் இன்றைக்கு இவர் பாடல்கள் அபிராமி அந்தாதி அளவுக்கு பிரபலமாகியிருக்கும். வடமொழி வடிவை கரடு முரடாய், பொருள் புரியாமல், அப்படியே உருப்போட்டு சொல்பவர்கள், ஒரு வேளை கவிராஜரின் வளமிகு தமிழாக்கத்தையும் போற்றிச் சொல்லிக் கொண்டிருக்கக்கூடும்.

கவிராஜரின் பாடல், மாதிரிக்கு:
      மனமும்நீ வெளியும்நீ வளியும்நீ கனலும்நீ
          மறிபுனலும்நீ புவியும்நீ
      நினையில் நிணபரமற வளர்ந்தொளி பரந்துவிடில்
          நீயன்றி ஒன்றுமுளதோ
      உனதுமா ஞானானந்த உருவைப் புவன
          உருவென வகுத்தருளவோ
      அனையுமாய் மகவுமா மாமாறுபோல் நீசத்தி
          அருணவடி வாயதுமையே.


கவிராஜர் அபிராமியை 'ஞானானந்த உரு' என்கிறார். பட்டர் அபிராமியை 'முக்தி ஆனந்தமே' என்கிறார். முக்தி (பிறவா நிலை) மட்டுமே என்றைக்கும் நிறைவான, அழியாத ஆனந்தம் என்ற கருத்து சௌந்தர்யலஹரி, லலிதா சகஸ்ரநாமத்திலும் வருகிறது; சக்தி, 'முக்தி ரூபிணி' என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறாள்.

அம்மாவின் குரலும் அழியாத ஆனந்தம் தான்.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 11 | ஆனந்தமாய் என்...

2010/06/20

கருத்தன எந்தை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:9 | ராகம்:பிலஹரி


கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன பாலழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையுமம்பும்
முருத்தன மூரலும் நீயுமம்மே வந்தென் முன்நிற்கவே.

என் தந்தையாகிய சிவபெருமானின் கண்ணையும் கருத்தையும் கவரும் பொன்மலை போன்ற பெருத்த முலையினால் அழுத பிள்ளைக்கு பாலும் பேரருளும் வழங்கினாய்; அத்தகைய சிறப்புமிக்க மார்பை அலங்கரிக்கும் மாலையுடனும், கரும்பு வில்லும் அம்பும் ஏந்திய சிவந்த கைகளுடனும், முருக்கம்பூ போன்ற நெருங்கிய சிவந்த உதடுகளில் புன்னகையுடனும் என் முன் தோன்ற வேண்டும், என் தாயே!

பிரித்துப் பொருள் சொல்ல வேண்டிய அவசியமில்லாத பாடல். அழுத பிள்ளைக்குப் பால் வழங்குவது உயிர் கொடுப்பது போல. இங்கே பட்டர் வேண்டுவதும் உயிர்ப்பிச்சை (அரசனுக்குப் பதில் சொல்ல வேண்டுமே?); பசிக்கு அழும் பிள்ளை போல் அபிராமியின் அருளுக்கு அழுவதாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்டு, "அன்று ஒரு பிள்ளைக்குப் பால் கொடுத்து அருளினாய் அல்லவா, இன்று இங்கே இன்னொரு பிள்ளை உன் அருளுக்காக அழுகிறேன் - தாயே, என் முன்னே வந்து எனக்கும் அருள் தருவாய்" என்று கெஞ்சுகிறார்.

மூரல் என்றால் புன்னகை. குறிப்பாக, குழந்தைகளும் பெண்களும் புரியும் புன்னகை. முருத்தன என்பதற்கு மென்மையான என்று ஒரு பொருள் உண்டு. (மயிலிறகு போன்ற)'மென்மையான உதடுகளில் புன்னகையுடன்' என்று அறிஞர்கள் சிலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். இங்கே சிவப்பு நிறம் மறுபடியும் தலைதூக்கி நிற்பதால், முருத்தன என்பதும் அந்த வகையில் சிவப்பு நிறத்தைக் குறிப்பதென்று எண்ணுகிறேன். முருக்கம்பூ போன்ற நெருங்கிய, சிவந்த (முருத்தன்ன) உதடுகளில் புன்னகை என்பது, மயிலிறகு போன்ற மென்மையான என்பதை விடப் பொருத்தமாக அமைகிறது என்று நினைக்கிறேன். பெண்ணின் உதடுகளை மயிலிறகுக்கு ஒப்பிடுவது சரியாகத் தோன்றவில்லை. பெருத்த முலைக்கு முருத்த நகை பொருத்தம்."
இங்கே 'பாலழும் பிள்ளைக்கு' என்பதன் பின்னணிக் கதை பலருக்கும் தெரிந்திருக்கலாம். குழந்தை ஞானசம்பந்தருக்கு முலைப்பால் வழங்கித் தாயானவள் என்று சக்தியைப் பற்றி ஒரு கதை உண்டு. இந்தக் கதை சௌந்தர்யலஹரியில் வருவதைப் படித்து வியந்தேன். ஆதிசங்கரருக்கு தமிழ் நாயனாரைப் பற்றி எப்படித் தெரிந்தது? 'சாரஸ்வதமிவ தயவத்ய தத்தம் த்ராவிட சிசு ராஸ்வத்ய' என்ற வரியில் திராவிட சிசு என்று சங்கரர் சொல்லியிருப்பது ஞானசம்பந்தரைப் பற்றி என்று நானும் நம்புகிறேன். இங்கே முலைப்பாலை சரஸ்வதியென்று வர்ணித்திருக்கிறார் சங்கரர். சரஸ்வதி கலைவாணியல்லவா? சக்தியின் முலைப்பாலாக ஞானசம்பந்தரின் அறிவில் கலந்தவள் கலைவாணி என்ற சங்கரரின் கற்பனையை ரசிக்க முடிகிறது. (சங்கரர் ஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்று அழைப்பது வியப்பாக இல்லை? பண்டைய இறையிலக்கியங்களில் தமிழ்ப்புலவர்கள் வடமொழிப் புலவர்கள் பலரை ஆரிய முனிவன் என்று சொல்லிப் படித்திருக்கிறேன்; ஒரு ஆரியப் புலவன் தமிழனைத் திராவிட சிசு என்று அழைத்து இப்போது தான் படிக்கிறேன். ஆரிய-திராவிட பிரிவினை எங்கே போகிறது பாருங்கள்.)


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 10 | நின்றும் இருந்தும்...

2010/06/19

சுந்தரி எந்தை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:8 | ராகம்:பிலஹரி


சுந்தரி எந்தை துணைவி என்பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாளென் கருத்தனவே

பிரம்மனின் தலையோட்டைக் கையில் வைத்திருக்கும் காளியே! மகிஷ அசுரனின் தலையைக் கொய்த அண்டங்களுக்கெல்லாம் அரசியே! என்றைக்கும் இளமை மாறாத சிவந்த நிறமுடைய பேரழகியே! என் தந்தை சிவபெருமானின் துணைவியே! என்னுடைய (இவ்வுலகப்) பற்றுதல்களை அறுத்து எறிய அருள் புரிய வேண்டும்; உன் மலர் போன்ற பாதங்களை என் மனதில் இருத்தி வேண்டுகிறேன்.

'ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் நீலி, மகிடன் தலைமேல் அந்தரி, அழியாத கன்னிகை சிந்துர வண்ணத்தினாள், சுந்தரி, எந்தை துணைவி, (உன்)மலர்த்தாளென் கருத்தனவே, என் பாசத் தொடரையெல்லாம் வந்தரி' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

இவ்வுலகப் பற்றுதலை ஒழிக்க அபிராமியின் அருளை வேண்டும் பட்டர், பிரம்மனுக்கும் சிவனுக்கும் நடந்த போர், மகிஷாசுரனை வதைத்த காளியின் உக்கிரம், என்று அங்கே இங்கே சுற்றி விஷயத்துக்கு வருகிறார். பற்றுதலை ஒழிக்க வேண்டுபவர் சுற்றி வளைப்பானேன்? அழகி, சிவப்பு நிறத்தவள் என்று குளிர்மொழி சொல்லி நேரே கேட்க வேண்டியது தானே? பிரம்ம-சிவ-மகிஷாசுரப் போர்களின் அடிப்படைக் காரணத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். பற்றுகளினால் உருவாகும் நோய்களில் மோசமானது ஆணவம். ஆணவம் அறிவை மறைக்கும் நோய். பிரம்ம-சிவ-மகிஷாசுரப் போர்களின் காரணம் ஆணவம். பொய்ப்பகட்டின் மேலிருந்த பற்றினால் வந்த ஆணவம் பிரம்மனுக்கு; மெய்ப்பகட்டினால் வந்த ஆணவம், கோபம் சிவனுக்கு; மகிஷாசுரனுக்கோ தன்னை எவராலும் வெல்ல முடியாத அந்தஸ்தினால் வந்த ஆணவம். பிரம்ம-சிவ-மகிஷாசுர போர்க்கதைககளில் தொலைந்து போகாமல், பாடலுக்கு வருகிறேன். இவர்களின் ஆணவத்தையெல்லாம் அறுத்தெறிந்தவள் யார்? அபிராமி. அதனால் தான் பற்றினை ஒழித்தெறிய பார்வதியை வேண்டுகிறார். முந்தைய பாடல்களில் 'பாசாங்குசம்' கொண்டவள் என்று வர்ணித்து விட்டார். பாசத் தொடர்களை வந்து அரி, சுந்தரி என்று இந்தப் பாடலில் வேண்டுகிறார். 'பாசாந்தரி' என்று சௌந்தர்யலஹரியிலும் லலிதா சஹஸ்ரநாமத்திலும் வணங்கப்படுகிறாள் திருபுரசுந்தரி.

கந்தரி என்ற சொல்லை கம்+தரி என்று பிரிக்க வேண்டும். கம் என்றால் தலை என்று பொருள். கம் தரி கைத்தலத்தாள் என்றால் தலையைக் கையில் கொண்டவள் என்று பொருள் கொள்ளலாம். தலை இங்கே தலையோட்டைக் குறிக்கிறது.

ஆரணம் என்றால் வேதம் என்று பொருள். ஆரணத்தோன் என்று பிரம்மனுக்கு ஒரு பெயர் உண்டு. பிரம்மனுடையை தலையோட்டை சிவனிடமிருந்து வாங்கி அவரைக் காப்பாற்றியவள் என்ற பொருளில் ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் என்று பொருள் கொள்ளலாம். பாம்பை மாலையாக அணிந்தவன் என்ற பொருளில், ஆரணத்தோன் என்று சிவனுக்கும் பெயர் உண்டு. பிரம்மனின் தலையோடுகளை மாலையாக அணிந்தவன் என்ற பொருளில் கந்தரி ஆரணத்தோன் என்று சிவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. எப்படிப் பிரித்தாலும் தவறில்லை; பொருட்சுவை தான் கூடுகிறது. தலையோட்டை வாங்கிக் கொண்டு சிவனைக் காப்பாற்றியவள் என்பதே சாரம்.

மகிஷாசுர வதம் என்பது அகந்தையை அழிப்பதன் உருவக வடிவம் என்றும் சில அறிஞர்கள் நம்புகிறார்கள். இவர்கள் கருத்தை ஏற்க முடிகிறது. எருமை மாட்டிற்கு பதவி வந்தால் எப்படி நடந்து கொள்ளும்? நீங்கள் சுற்றியிருப்பவரைப் பார்வையிடுங்கள் - நான் கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறேன் - எல்லாம் புரியும்.

பிலஹரி அருமையான ராகம். எனக்குப் பிடித்த ராகங்களுள் ஒன்று. இனிமையும் கம்பீரமும் இணைந்த ராகம். மோகனத்துக்கும் சங்கராபரணத்துக்கும் பிறந்த ராகம் என்று சொல்வார்கள். பொருத்தம் தான். முதுமையின் சாயல் இப்போது தெரிந்தாலும், இந்தப் பாடலைக் கேட்கும் போது என் அம்மாவின் குரலில் இந்த ராகத்தின் இனிமையும் கம்பீரமும் முப்பது வருடங்களுக்கு முன் என்னைத் தாக்கியது போலவே இன்றைக்கும் உணர்கிறேன்.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 9 | கருத்தன எந்தை...

2010/06/18

ததியுறு மத்தின்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:7 | ராகம்:பிலஹரி


ததியுறு மத்தின் சுழலும் என்னாவி தளர் விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே.

தாமரையை உறைவிடமாகக் கொண்ட பிரம்மன், நிலவைச் சடையிலே தாங்கி மகிழும் சிவன், திருமால் - என மூவரும் நாளும் வணங்கிப் போற்றும் பாதங்களை உடையவளே! குங்கும நிறப் பேரழகியே! கடையும் மத்தினைப் போல் என் உயிர் நிலையில்லாமல் சுழன்று ஒடுங்குவதைக் கண்டாய்; அந்நிலை மாறி நற்கதியடைய மனமிரங்குவாய்.

'கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் என்றும் வணங்கி துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே! ததியுறு மத்தின் சுழலும் என்னாவி கண்டாய், தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருது' எனப்பிரித்து பொருள் சொல்லியிருக்கிறேன்.

வேணி என்பதற்கு சடை என்று ஒரு பொருளுண்டு. மதியுறு வேணி: நிலவைத் தாங்கிய சடை. சிந்துரானன சுந்தரியே என்பதற்கு செந்தூரத் திலகம் அணிந்தவளே என்றும் அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தப் பாடலில் ஒரு சிறப்பான உவமையைக் கையாண்டிருக்கிறார் அய்யர். தயிர் கடையும் மத்தை அறிவோம். ஒரு பானையைக் கடைந்து முடித்ததும் இன்னொரு பானைக்கு எடுத்துச் செல்கிறோம். மத்துக்கு எப்படி ஓய்வே கிடைப்பதில்லையோ, பட்டருடைய உயிரும் அப்படி பிறவிக்கு பிறவி இன்னொரு உடலிலே குடியேறி வருந்துகிறதாம். பிறவிச் சுழற்சியில் ஓய்ந்து போகிறதாம். அப்படி பிறவியெடுத்து ஒடுங்கிப் போகாமல் நற்கதி அடைய அபிராமி மனது வைத்தால் முடியும் என்று வருந்தி வேண்டுகிறார். பிறவிச் சுழலினின்று விடுபட்டு நற்கதியடைய அபிராமி மனம் வைக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்.

மூன்று தெய்வங்களுக்கும் மூலாதாரமானவள் அபிராமி என்று பட்டர் முன்பே சொல்லியிருக்கிறார். "படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முப்பெரும் தொழில்களைச் செய்பவர்களே உன்னைத் தான் வணங்குகிறார்கள், அதனால் என்னைக் காப்பாற்றிக்கொள்ள உன்னைச் சரணடைந்தேன்" என்று அபிராமியை நாடுகிறார். அதாவது மேலதிகாரிகளின் பிடியிலிருந்து விடுபட முதலாளியிடமே தஞ்சமடைகிறார். "இது வரை சுழன்றது போதும், என்னை இனிப் படைத்து காத்து அழித்து எதுவும் செய்ய வேண்டாம் என்று உன் சிப்பந்திகளிடம் சொல்லடி சக்தி" என்று விண்ணப்பிக்கிறார்.

'பாசாந்தரி' என்று சௌந்தர்யலஹரியிலும் லலிதா சக்ஸ்ரநாமத்திலும் வருகிறது. 'மும்மூர்த்திகளும் வணங்கும் வைபவி' என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருகிறது. இங்கே அவற்றை எடுத்தாண்டு, பிறவியைத் தயிருக்கும் உயிரை மத்திற்கும் உவமைகளாகச் சொல்லி மேலும் அழகுபடுத்தி, ஒரு எளிமையான இனிமையான கவிதையைக் கொடுத்திருக்கிறார் பட்டர்.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 8 | சுந்தரி எந்தை...

2010/06/17

சென்னி அது...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:6 | ராகம்:பிலஹரி


சென்னியதுன் பொற் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னியதுன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னியநின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியதென் றுமுந்தன் பரமாகம பத்ததியே.

குங்கும நிறத்தவளே! தாமரை போல் மென்மையான, தங்கம் போல் ஒளிவீசும், உன் பாதங்களை என் தலையால் தாங்க வேண்டும்; உன் அடியார்களுடன் சேர்ந்து நீ அருளிய ஒழுக்க நெறிகளை நான் போற்றிப் பேண வேண்டும்; உன் பெயர்களை மந்திரமாக மனதில் இருத்தி நாளும் நான் ஓத வேண்டும். (இதற்கு அருள் செய்).

பத்ததி: விதி, கட்டளை, ஆணைகளை விவரிப்பது
முன்னுதல்: சேர்தல், இணைதல்
பன்னுதல்: புகழ்தல், பேசுதல்
மன்னுதல்: எண்ணுதல், மறவாதிருத்தல்

எளிமையான பாடல் போல் தோன்றுகிறது. ஆனால் இந்தப் பாடலின் பின்னே ஒரு நுட்பம், சூட்சுமம், சிறப்பு, இருக்கிறது.

சௌந்தர்யலஹரிக்கும் அபிராமி அந்தாதிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக முன்னர் எழுதியிருந்தேன். லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரியிலிருந்து நிறையவே எடுத்துக் காட்டியிருக்கிறார் பட்டர். பாராட்ட வேண்டிய செயல். வடமொழியில் புதைந்து போயிருக்க வேண்டியவற்றை நல்ல தமிழில் எடுத்துச் சொன்னதற்காக. இரண்டுமே திரிபுரசுந்தரியைப் பற்றியது. லலிதா சஹஸ்ரநாமத்தில் திரிபுரசுந்தரியின் ஸ்ரீவித்யா மந்திரம் பற்றி வருகிறது. இங்கே அது தான் திருமந்திரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (ஸ்ரீ=திரு; வித்யா=அறிவு, மந்திரம்).

வேறே என்ன சூட்சுமம்? ஸ்ரீவித்யா மந்திரங்களின் ஆதாரம் ஸ்ரீசக்ரம் எனப்படும் ஒரு தந்திர யந்திரம். ஸ்ரீசக்ர யந்திரத்தை மனதில் இருத்தி பலவாறாக வழிபடவேண்டும் என ஸ்ரீவித்யா வழிபாட்டு முறையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் திருமந்திரத்தின் அடிப்படையான ஸ்ரீசக்ரத்தை மனதில் இருத்தும் பொழுது, திரிபுரசுந்தரியைத் தனியாக அழைப்பது முறையாகாது; சிவ-சக்தி வடிவாகச் சொல்லப்பட்டிருப்பதால், சிவனும் சக்தியும் சேர்ந்தால் தான் ஸ்ரீசக்ரம். சிவன் இல்லாமல் சுந்தரியின் திருமந்திரத்தை நினைத்தும் பயனில்லையே? அதனால் தான் இரண்டு பாடல்களுக்கு முன் 'சிவபெருமானோடு சேர்ந்து வா' என்று அபிராமியை அழைத்தார் பட்டர். இருவரையும் முறையாக அழைத்து விட்டு, இந்தப் பாடலில் திருமந்திரத்தை ஓதுவதாகச் சொல்கிறார். பாடல்களிலும் ஒரு செயல்முறை வரிசையைப் புகுத்தியிருக்கிறார். அது தான் சூட்சுமம். (இந்தப் பாடலைப் பற்றி எழுதும் பொழுது தான் எனக்கும் புரிந்தது).


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 7 | ததியுறு மத்தின்...

2010/06/16

பொருந்திய முப்புரை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:5 | ராகம்:பூபாளம்


பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயம் மேல்
திருந்திய சுந்தரியந்தரி பாதமென் சென்னியதே.

செம்பினால் செய்யப்பட்டது போன்ற மார்பகங்களின் இணைந்த சுமையைத் தாங்கி வருந்தும் கொடியிடை கொண்டவளே, பேரின்பப் பேரறிவே, வார் போன்ற நீண்ட சடை தரித்த சிவன் அருந்திய நஞ்சைத் தடுத்து அமுதாக்கிய தாயே, தாமரை மேல் அமர்ந்திருக்கும் பேரழகியே, மூன்று தொழிலையும் பொறுப்பேற்று நடத்தும் அண்டமெங்கும் நிறைந்திருப்பவளின் பாதங்களைத் தலை வணங்குகிறேன்.

'செப்புரை புணர்முலையால் வருந்திய மருங்குல் வஞ்சி, மனோன்மணி, வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல் திருந்திய சுந்தரி, பொருந்திய முப்புரை செய்யும் அந்தரி பாதம் என் சென்னியதே' எனப்பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

புரை என்ற தமிழ்ச்சொல் விசித்திரமானது. வீடு, கோவில், மாட்டுத்தொழுவம் என்று பொருள்; உள்ளே, வெளியே என்று பொருள்; குற்றம், நீதி என்று பொருள்; சிறுமை, மேன்மை என்று பொருள்; உயர்வு, தாழ்வு என்று பொருள்; ஆக்கம், அழிவு என்று பொருள்; கடந்தகாலம், எதிர்காலம் என்று பொருள்; இப்படி எதிர்நிலை, எதிர்பொருள் பல கொண்ட ஒரே சொல் புரை தான் என்று நினைக்கிறேன். படைத்தல் காத்தல் அழித்தல் என்று மூன்று தொழில்கள், மூன்று குண நிலைகள், மூன்று கடவுள்கள், மூவுலகங்கள், மூன்று காலங்கள்,... இப்படி 'மூன்று' என்ற எண்ணிக்கை எதிர்பொருள் எதிர்நிலைகளைக் குறிக்கும் வாழ்வியல் மற்றும் வேதாந்த விளக்கங்களில் அடிக்கடி இடம்பெறுவதை அறிவோம். இந்தப் பாடலில் 'முப்புரை' என்பது மூன்று தொழில்கள் அல்லது 'மூன்று' என்ற வாழ்வியல் அடிப்படைகள் என்ற பொருளில், மூன்றையும் பொருப்பேற்று நடத்தும் என்ற பொருளில் வருவதாக நினைக்கிறேன்.

'நஞ்சமுதாக்கிய' என்பதை இங்கே தான் படிக்கிறேன். சிவன் அருந்த முற்பட்ட ஆலகால நஞ்சை, சக்தி அவர் கழுத்தில் தொட்டு நிறுத்தியதாகப் புராணங்கள் சொல்கின்றன - நீலகண்டன் என்ற பெயர்க் காரணத்துக்கு. நஞ்சை அமுதாக்கியவள் என்று கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டிருக்கிறாரோ பட்டர்?

இறையிலக்கியங்களில் பெண் கடவுளரின் உடல் பாகங்களை உவமைகளோடு விவரித்திருப்பதை எண்ணி வியந்திருக்கிறேன். எப்படிச் சாத்தியம்? "பெரிய முலை கொண்டவளே, உன்னை வணங்குகிறேன் தாயே" என்று களங்கமில்லாமல் எப்படிச் சொல்வது? களங்கமில்லாவிட்டாலும் ஒரு கவர்ச்சிக் குறுகுறுப்பாவது தோன்றாதா? பள்ளிக்கூடத் தமிழாசிரியர் மங்கலமன்னன், "முலை என்பது, பெண்ணுக்கு தாய்மையைக் குறிக்கும் உடலுறுப்பு. அதனால் முலை என்பதைத் தாய்மையின் அடையாளமாகவும், பிள்ளைக்குப் பால் கொடுத்து உயிர் கொடுக்கும் தியாகத்தின் வடிவாகவும் பார்க்க வேண்டும்" என்று பொருள் சொல்லி எங்களை அதட்டியது நினைவுக்கு வருகிறது. பின்னாளில் நிறைய நூல்களில் பெண் கடவுளரை வர்ணிக்கும் பொழுது ஒரு வரியில் 'கொங்கை அல்குல் பிட்டம்' என்றால், அடுத்த வரியிலேயே 'தாய் தெய்வம் கருணைக்கடல்' என்று ஏதாவது இடம்பெறுவதைக் கவனித்திருக்கிறேன். இந்தப் பாடலில் வரும் 'அம்பிகை' என்ற சொல்லுக்குத் தாய் என்று பொருள் உண்டு.

சுந்தரி சரி, அந்தரி என்பானேன்? பட்டர் அபிராமியை மனோன்மணி என்பானேன்?

அந்தரி என்ற சொல்லுக்கு ஆகாயத்தில் உள்ளவள் (அண்டத்தை ஆள்பவள்) என்று பொருள். எல்லாவற்றிற்கும் முடிவைக் கொண்டவள் என்று பொருள். எல்லாமே அபிராமியில் தான் முடிகிறது (அதனால் தொடங்குகிறது) என்று நம்பி அந்தரி என்றார் பட்டர். அந்தாதி பாடியது பொருத்தம். சுந்தரி அந்தரி எதுகை இன்னொரு பாடலிலும் வருகிறது.

மனோன்மணி ஒரு அருமையான சொல். மனோன்மணி என்ற சொல்லை, நான் படித்த வரை, வடமொழியிலும் தமிழிலும் பெண் கடவுளைக் குறிப்பிடும் பொழுது பயன்படுத்தியிருக்கிறார்கள். இருப்பினும் மனோன்மணிக்கு பால் வேறுபாடு கிடையாது. அது ஒரு நிலை. மனோன்மணி என்ற சொல்லுக்கு பேரறிவு, ஞானம் என்ற பொருள் உண்டு. புருவங்களுக்கிடையிலான பகுதிக்கு மனோன்மணி என்று பெயர். மனதை நிலைப்படுத்தித் தியானம் செய்து, எந்தவிதமான பற்றும் இல்லாமல் விலகி, 'உன்மணி' நிலையை அடைவது. அகமும் புறமும் இரண்டறக் கலப்பது. மன+உள்+மணி.

சிவனுடைய சக்திக்கு மனோன்மணி என்று பெயர். அண்டத்தின் அத்தனை உயிர்களையும் பெண்மையின் (தாய்மையின்) வடிவாகப் பார்த்து உய்வது தான் பிறவியின் ரகசியம் என்ற சித்தாந்தம், மொழி, இனம், மதம் கடந்து பொதுவாக நம்பப்படுகிறது. முடிவையும் தொடக்கத்தையும் தன்னுள் அடக்கி வைக்கும் பெண்மைதான் உண்மையான தெய்வம் என்று பல மத இலக்கியவாதிகள் நம்புகிறார்கள். பண்டைய கிரேக்க மொழியிலிருந்து, ஆங்கிலம் (primordial mother), தமிழ் (மூலாதார சக்தி) எனப் பல மொழிகளிலும், தாய் என்பவள் கடவுளுக்கும் அப்பாற்பட்டக் கடவுள் என்ற சித்தாந்தத்தை அரவணைத்த இறையிலக்கியங்கள் உள்ளன. 'கடவுளுக்கும் அப்பாற்பட்ட கடவுள்' என்பதே அந்தாதி தான். ஒரு பெண்ணைப் பெண், சகோதரி, தோழி, மனைவி என்ற வடிவங்களில் பார்க்கும் பொழுது முறையாக மதிக்காமல், தாய் என்றதும் மதிக்கிறோம் (சில சமயம்). சக்தி எனும் பெண்மை - பெண்ணாகி, கன்னியாகி, துணையாகி, தாயாகி, கடவுளாகி, கடவுளுக்கும் அப்பாற்பட்டவளாகி, முடிவுகளுக்குத் தொடக்கமாகும் தொடக்கங்களுக்கு முடிவாகும் பரிணாம வளர்ச்சி பற்றிய ஞானத்தை, தத்துவத்தை, மனோன்மணியம் எனலாம். இந்தத் தத்துவம் இந்து (சக்தி), கிறுஸ்தவ (புனித ஆவி), இஸ்லாம் (ரூஹ்) என்று பல மதங்களிலும் நம்பப்படுகிறது. கொஞ்சம் தலை சுற்றினாலும், ஆழமான தத்துவம். (Eschatology எனும் தொடக்க-முடிவு வட்டம் தொட்ட மதத்தத்துவ ஆராய்ச்சிப்பிரிவு இதற்கென்றே இருக்கிறது. Incredibly profound for the believers; intellectually stimulating for the rest of us.)

வாயும் மனமும் கடந்த மனோன்மணி, பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை, ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும் நல் தாரமுமாமே. இது திருமந்திரப் பாடல். சொல்லுக்கும் சிந்தைக்கும் அப்பாற்பட்டவள், பேய்களையும் கணங்களையும் ஆளும் பெண், ஆராய முடியாதவனான சிவனுக்கும் (அப்பாற்பட்டவளாகி) தாய், மகள், தாரம் என விளங்கும் மனோன்மணி என்று சக்தியைப் பாடுகிறார் திருமூலர்.

இந்த வகை ஆழமான தத்துவங்களை விடுங்கள். இன்றைக்குக் கூட அடிபட்டால் 'அம்மா' என்று தான் சொல்கிறேன். வாழ்க்கையில் சறுக்கும் பொழுது, பிடிப்பில்லாமல் போகும் பொழுது, வருத்தப்படும் பொழுது, என் அம்மாவைத் தான் நினைத்துக் கொள்கிறேன். சாதாரண நிகழ்வுகளுக்கே இப்படியென்றால், உண்மையிலேயே 'தலை போகிற' சிக்கலுக்கு பட்டர் தாயைக் கூப்பிடாமல் யாரைக் கூப்பிடப் போகிறார்?

'புணர்முலை வஞ்சி', தன் அன்பரைப் பெரும் ஞானம் அடைய வழி செய்பவள் என்பதால் 'மனோன்மணி' என்றார் பட்டர். எல்லாவற்றிற்கும் முதலும் கடைசியுமாக அபிராமியை நினைத்ததால் - ஆதி அந்தம் கடந்த கடவூர்த் தாய்... என்ற ஞானத்தைப் பெற்றதால் - அபிராமியை மனோன்மணி என்று அழைத்தது, பொருத்தமாகத் தோன்றுகிறது.

பாரதியின் சக்தி பாடல்களைப் படித்தால் புல்லரிக்கும். அவரும் தன் மனைவியை சக்தியின் வடிவாகப் பார்த்ததாகப் படித்திருக்கிறேன்.

இவையெல்லாம் இருந்தும் தெரிந்தும், சமூகத்தில் ஒரு படி குறைவாகத்தான் பெண்களை வைத்திருக்கிறோம், ஏன்?


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 6 | சென்னி அது...

2010/06/15

மனிதரும் தேவரும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:4 | ராகம்:பூபாளம்


மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்தப்
புனிதரும் நீயுமென் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

மனிதர்களும் தேவர்களும் மரணமில்லாத மார்க்கண்டேயரும் பணிந்து வணங்கும், மாணிக்கம் போன்ற சிவந்த பாதங்களை உடையவளே! கொன்றை மலர், குளிர்ச்சி தரும் நிலவு, பாம்பு, கங்கை நதி - இவற்றைத் தன் வார் போல் நீண்ட சடை மேல் தரித்திருக்கும் தூயவரான சிவனும், நீயும் என்றென்றும் என் சிந்தையில் தங்க வேண்டுகிறேன்.

புந்தி: மனம், சிந்தை

எளிமையான பாடல். பிரித்துப் போட வேண்டிய அவசியமே இல்லை. அபிராமியின் பாதங்களைத் தஞ்சமடைந்தவர், சிவபெருமானையும் துணைக்கு அழைப்பது ஏனென்று மட்டும் புரியவில்லை.

மாயா முனிவர் என்பதற்கு 'தவமுனிவர்கள்' என்று பலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'மாயா' என்ற சொல்லுக்குத் தமிழிலும் வடமொழியிலும் பொய்மை, உண்மையற்ற நிலை என்று பொருள் சொல்லியிருக்கிறது. தவம் என்ற பொருளைக் காணோம். 'மாயா முனிவர்' என்பதற்குத் 'தவமுனிவர்கள்' பொருந்தவில்லை. கடவூர்க் கோவிலில் இருப்பவர் மாளா முனிவர் - மார்க்கண்டேயர். அவரைத்தான் மாயா முனிவர் என்று பட்டர் பாடியிருக்கிறார். மாளா என்பது ஓசை நயம் கருதி மாயா என்றானதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. (இந்தக் கருத்தைச் சொன்னவர் திருமதி தேவகி முத்தையா - வழிமொழிகிறேன்).


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 5 | பொருந்திய முப்புரை...

2010/06/14

அறிந்தேன் எவரும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:3 | ராகம்:பூபாளம்


அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் நினது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன் நின்னன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே.

பெருஞ்செல்வமே, அபிராமி! உன் அடியார்களின் சிறப்பை உணராமல் பிறவியாகிய நரகத்துள் மீண்டும் விழும் மனிதரை அஞ்சிப் பிரிந்து, எவரும் அறியாத அடைக்கலமான உன் திருவடிகளை அறிந்து கொண்டு சிறப்படைந்தேன்.

திருவே, நின்னன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் நரகுக்கு மறிந்தே விழும் உறவாய மனிதரை வெருவி நினது திருவடிக்கே பிறிந்தேன்; எவரும் அறியா மறையை அறிந்தேன்; அறிந்து கொண்டு செறிந்தேன் என்று பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

"உன்னையும் உன் அடியார்களின் பெருமையையும் இதுவரை நான் மனதாலும் எண்ணாத காரணத்தால் மீண்டும் நரகத்தில் விழுந்து மனிதர்களையே நம்பிக் கொண்டிருந்தேன்; அவர்களைப் பிரிந்து, எவரும் அறியாத வேதசாரமான உன்னை அறிந்து கொண்டு உன் திருவடிகளைத் தஞ்சமடைந்தேன்" என்று அறிஞர்கள் பலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

பட்டர் ஒரு மெய்யான அபிராமி அடியார் என்பது தெளிவாகப் புரிகிறது. இல்லையென்றால் முகமூடி அணிந்து ஊரை விட்டு ஓடாமல் பாட்டு பாடி நிலவை வரவழைக்க முயற்சிப்பாரா? அபிராமி அடியார்கள், மற்ற அடியார்களின் பெருமையை அறியாதிருப்பரா என்பது சந்தேகமே. அதனால் அடியார்களின் பெருமையை மனதால் நினைக்கவில்லை என்ற கருத்தில் பட்டர் பாடவில்லை என்று கருதுகிறேன். இந்தப் பாடலின் கட்டத்தில் அபிராமியின் அன்பர் யார்? பட்டர். விவரம் தெரியாமல் உளறினாலும் பட்டர் அபிராமியின் அன்பர் என்பது உண்மை. 'அபிராமி அன்பரின் பெருமை எண்ணாத நரகுக்கு உறவாய மனிதர்' என்று இங்கே அரசனை மறைமுகமாகத் தாக்குகிறார் என்றே நினைக்கிறேன். 'அரசனை நம்பி ஒரு பயனுமில்லையம்மா, அபிராமி, உன்னை அறிந்தேன், என்னைக் காப்பாற்று' என்று பொருள்படச் சொல்லியிருப்பார் என்றே தோன்றுகிறது. அரசன் என்கிற மனிதரை நம்பினால் நரகம் (தலையை வெட்டுவதாக அல்லவா சொல்லிவிட்டுப் போனார் சரபோஜி?); அபிராமி என்கிற கடவுளை நம்பினால் உயிர் பிழைக்கக் கூடும், அல்லது மோட்சமாவது கிட்டும் என்ற நம்பிக்கையில் அபிராமியைச் சரணடைந்து பாடியிருக்கிறார் என்று தோன்றுகிறது.

'எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு' என்பதற்குப் பொருள் சொன்ன அறிஞர்கள், 'எவருக்கும் புரியாத வேதத்தின் பொருளை அறிந்து கொண்டு' என்றோ, 'எவரும் அறியாத வேதமான உன்னை அறிந்து கொண்டு' என்றோ, பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'எவருக்கும் புரியாதது, இவருக்கும் மட்டும் எப்படிப் புரிந்தது?' என்று கேட்கத் தோன்றுகிறது. அன்றைய நிலையைப் பார்ப்போம். பட்டரின் தலைக்குக் கெடு. அரசனை நம்பிப் பயனில்லை. யாரை நம்புவது? முன்பே சொன்னபடி, அபிராமியைத்தான் நம்ப வேண்டும். 'மறை' என்ற சொல்லுக்கு 'அடைக்கலம்' என்று ஒரு பொருள் உண்டு. இங்கே 'அடைக்கலம்' என்ற பொருளில் 'அபிராமியின் திருவடிகள் எவருக்கும் கிடைக்காத அடைக்கலம்' எனப் பாடியிருக்கிறார் என்று நம்புகிறேன்.

என் தமிழறிவு, மிகக்குறைவில் பாதி. பட்டரின் பாட்டில் பிழை சொல்லவில்லை, இருந்தாலும், 'பிறிந்தே, மறிந்தே' போன்ற சொற்கள் எதுகைக்காகச் சேர்க்கப்பட்டவை என்றே தோன்றுகிறது. நிறையத் தமிழகராதிகளில் தேடிவிட்டேன். சொற்களைக் காணோம். பிறிது என்ற தமிழ்ச்சொல் வேறுபட்ட, மாறுபட்ட என்ற பொருளில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் பிறிந்தேன் என்பதை மருவாக ஏற்றுக்கொள்ளலாம். மறிந்தே என்பது மறுபடி என்பதன் திரிபாக ஏற்றுக்கொள்ளலாம். அறிஞர்கள் கூட 'பிரிந்தேன்' என்று எளிய வழியைக் கையாண்டிருக்கையில், அப்பாதுரைக்கேன் வம்பு? பிறிந்தே, மறிந்தே சொற்களை மற்றத் தமிழ்ப் பாடல்களிலோ, அகராதியிலோ சந்தித்தால் சொல்லுங்கள். நன்றி.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 4| மனிதரும் தேவரும்...