2010/08/10

பாலினும் சொல்லினியாய்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 60 ராகம்: காபி


பாலினும் சொல்லினியாய் பனிமா மலர்ப்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றைவார் சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடமொரு
நாலினும் சாலநன்றோ அடியேன் முடைநாய்த் தலையே?


தேவர்கள் வணங்கும் கொன்றை மலர் சூடிய சிவன், திருமால், உன் புகழ் பாடும் நான்கு வேதங்கள் (என இவை அனைத்தின்) மீதும் பட்டு அருள் புரியும் உன் குளிர்ந்த பாதங்களை, முடை நாற்றமடிக்கும் நாய் போன்ற என் தலையிலும் வைப்பது பொருந்துமோ (சொல்), கள்ளமில்லாத மொழியுடையவளே!

'தேவர் வணங்க நின்றோன் கொன்றைவார் சடையின் மேலினும், மாலினும், கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடமொரு நாலினும், பனி மாமலர்ப் பாதம் வைக்க - அடியேன் முடைநாய்த் தலை சால நன்றோ, பாலினும் சொல்லினியாய்?' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

'தேவர்கள் வணங்கும் கொன்றை மலர் அணிந்த சிவனின் தலை மீதும், திருமால் (தலையின்) மீதும், உன் கண்கள் படும்படி உன் காலடியில் கிடக்கும் நான்கு வேதங்களின் மீதும், உன்னுடைய குளிர்ந்த பாதங்களைப் பதித்து அருள் புரிவது பொருத்தமாக இருக்கிறது; கொடுமையான நாற்றமடிக்கும், நாயைப் போல் எளிய என்னுடைய என் தலையின் மீதும் உன் பாதங்களைப் பதிப்பது பொருத்தமாக இல்லாவிட்டாலும் அது உன் அருளே' என்று பட்டர் பாடுவதாகப் பொருள்.

முப்பெரும் தேவர்கள் தலைமையில் முப்பத்து முக்கோடி தேவர்களும் பணிந்து வணங்குவதாக முன்பே சொல்லியிருக்கிறார். 'பரிபுரச் சீறடி' என்ற பாடலில் வேதங்களைக் காற்சிலம்பாக அணிந்தவள் என்றும் அபிராமியை வர்ணித்திருக்கிறார். தேவர்களும் வேதங்களும் மேன்மையைக் குறிப்பவை. தன் தலையை முடை நாற்றமடிக்கும் நாய்த்தலை என்று கழிவிரக்கமும் தன்னடக்கமும் கலந்து இகழ்ந்து கொள்கிறார். இகழக்கூடியதான தன் தலையிலும் அபிராமியின் காலடி படுவது நன்றாக இல்லை என்று பட்டர் சொல்வது போல் இருந்தாலும், தேவர்களின் தலைகளும் வேதங்களும் அபிராமியின் காலடி பட்டு மேன்மை அடைந்தது போல் தன்னுடைய நாற்றமெடுக்கும் தலையும் அபிராமியின் காலடி பட்டு மேன்மை அடையும் என்ற உட்பொருளில் சொல்லியிருக்கிறார்.

'பாலினும் சொல்லினியாய்' என்ற சொல்லுக்குப் பாலை விட இனிமையான மொழியுடையவள் என்றும் பொருள் கொள்ளலாம். பல அறிஞர்கள் அப்படிப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். பாலுக்கு இனிமையுண்டா? தேனை விட இனிய மொழி உடையவள், நரம்பையடுத்த இசை வடிவானவள் என்றெல்லாம் சொல்லி விட்டு, பாலினும் இனிய சொல் உடையவள் என்று வர்ணிப்பது பொருந்தவில்லை. அந்தாதித் தொடை காரணமாக, 'பாலினும்' என்று தொடங்கியிருப்பது புரிகிறது. பாலுக்கு இனிமை சேர்ப்பது பாகும் தெளிதேனும் இன்னபிற இனிப்பும் தான். தனிப் பாலுக்குள் இனிப்புச் சத்து கலந்திருக்கிறது என்றாலும், இனிமை என்பதற்குச் சின்னமாக தேன், பழச்சாறு, கரும்பைப் போல் பால் பொருந்தாது. இங்கே பாலினும் சொல்லினியாய் என்பது எதைக் குறிக்கிறது? பாலுக்குத் தூய்மையும் வெண்மையும் அடையாளங்கள். பால் போல் சிரிப்பது பிள்ளை. பாலினும் சொல்லினியாய் என்பது கள்ளத்தனமில்லாத மொழியுடையவள் என்ற பொருளில் வருகிறதென்று நினைக்கிறேன். அடியார்களைக் காப்பாற்றுகிறவள் என்ற நம்பிக்கையைப் பொய்யாக்காமல் 'அஞ்சேல்' எனச் சொல்லி வருவதாகக் கருதப்படும் அபிராமி, மாறாமல், கள்ளத்தனமில்லாமல், தன்னையும் காப்பாற்ற வருவாள் என்று பட்டர் நம்பியதால் பாலினும் சொல்லினியாய் என்று உட்பொருளுடன் பாடியிருப்பதாகக் கருதுகிறேன்.

'பனிமாமலர்' என்பது குளிர்ந்த, மென்மையான மலர் போன்ற, என்ற பொருளில் வருகிறது. குளிர்ச்சி அருளுக்கு அடையாளம். அழுகிய மாமிசத்திலிருந்து வெளிவரும் மணத்திற்கு முடையென்று பெயர்.

நாய்த்தலை என்கிறார். முடை நாற்றத்தலை என்று சொல்லி விட்டுப் போயிருக்கலாம். நாய் கீழ்த்தரமானது போல் சொல்லியிருக்கிறார். பொதுவாக எவரையாவது கேவலப்படுத்திப் பேசுவதானால் 'நாயே' என்கிறோம். தமிழ் இறையிலக்கியங்களில் 'நாய்' என்று தன்னைத் தாழ்த்திப் பாடிய புலவர்கள் பலர். சைவ இறையிலக்கியங்களில் அதிகமாகக் காணப்படுகிறதென்று நினைக்கிறேன். அடுத்த பாடலின் விளக்கத்தில் இன்னும் விவரம் சேர்க்கிறேன். (பாவம், நாய் என்ன செய்யும்?)

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)