2010/08/27

பயிரவி பஞ்சமி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 77 ராகம்: பைரவி


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.

பைரவன் சிவனின் துணைவியானதால் பைரவி, பிரம்மா விஷ்ணு சிவன் முருகன் இந்திரன் எனும் ஐந்து கடவுளர்களின் சக்தி வடிவான அழகியென்பதால் பஞ்சமி, கைகளில் பாசக்கயிறும் அங்குசமும் தாங்குவதால் பாசாங்குசை, ஐவகை மலரம்புகளை ஏந்தியதால் பஞ்சபாணி, தீயோரின் உயிரைக்குடிப்பதால் சண்டி, காலன் (காலபைரவன்) எனப்படும் சிவனின் சக்தியானதால் காளி, ஒளிமிக்க வைர இடையணி அணிவதால் வயிரவி, சூரிய சந்திர மண்டலங்களை ஆபரணங்களாகக் கொண்டதால் மண்டலி, பலவித மாலைகள் அணிவதால் மாலினி, சூலமேந்தி உலகைக் காப்பதால் சூலி, வராக அவதாரத்தின் சக்தியென்பதால் வராகி... என்று குறையில்லாத வகையில் நான்கு வேதங்களிலும் போற்றப்படும் (அபிராமியின்) பெயர்களைச் சொல்லி வழிபடுவோம்.

அபிராமிக்கு ஒரு சிறிய அர்ச்சனை செய்திருக்கிறார் பட்டர் இந்த எளிமையான பாடலின் வழியாக.

தேவி மகாத்மியம் என்று ஒரு சம்ஸ்க்ருத இறையிலக்கியம். சக்தியின் திருவிளையாடல்களைப் பற்றியப் புராணக்கதைகள் தழுவிய வழிபாட்டிலக்கியம். பட்டரின் ஊர்க்காரரான மார்க்கண்டேயரால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. பட்டர் துதித்திருக்கும் பெயர்களுக்கான காரணங்களை தேவி மகாத்மியம் படித்து அறிந்து கொள்ளலாம். ஒன்றிரண்டை எடுத்துக்காட்டாக எழுதுகிறேன். பஞ்சமி என்பதற்கு பஞ்சபூதங்களின் தலைவி என்று பலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும் தேவி மகாத்மிய விளக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது. ரக்தபீஜன் எனும் அசுரனைக் கொல்ல ஐந்து கடவுள்களின் சக்தியையும் ஒருமைப்படுத்த வேண்டியிருந்ததாம். சிவனிடமிருந்து சக்தி, விஷ்ணுவிடமிருந்து வைஷ்ணவி அல்லது வராகி, பிரம்மாவிடமிருந்து பிரம்மி, கார்த்திகேயன் எனும் முருகனிடமிருந்து கார்த்திகேயி அல்லது கௌமாரி, இந்திரனிடமிருந்து இந்திரா எனும் இந்த ஐந்து பெண் சக்திகளும் கூட்டாகச் சேர்ந்து ரக்தபீஜ அசுரனை அழித்ததாகப் புராணக் கதை. இந்த ஐந்து சக்திகளும் சேர்ந்ததால் பஞ்சமி. (பஞ்சமம் என்ற சொல்லுக்கு அழகு என்றும் பொருளுண்டு. எளிமையாக அழகி என்று பொருள் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்). ஆண் கடவுளர் எவராலும் வெல்லமுடியாத சண்ட அசுரனை வென்றதால் சண்டி என்று பெயர் வந்ததாக இன்னொரு தேவி மகாத்மியக் கதை. தேவி மகாத்மியத்தில் மற்ற பெயர்களுக்கானக் கதைகளைப் படித்து விட்டு மறுகாரியம் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

பயிரவி என்பது பைரவி எனும் சொல்லை எதுகை தொட்டுப் பிரித்த விளைவு. கலா என்பது கலை என்ற சொல்லின் திரிபு. கலை என்றால் பிறை என்று பொருளுண்டு. வயிர் என்றால் சினம் என்று பொருளுண்டு. ஒளிரும் கலா+வயிர்+அவி என்பது இங்கே 'ஒளி மிகுந்த பிறை நிலாவைச் சூடிய அருள் வடிவானவளே (சினமற்றவளே)' என்ற பொருளில் வருவதாகவும் கொள்ளலாம். இடையில் வைர மேகலை அணிந்தவள் தேவி என்று சௌந்தர்யலஹரியிலும் லலிதா சஹஸ்ரநாமத்திலும் வருகிறது. சூரியனையும் சந்திரனையும் தன் மார்பகங்களாகக் கொண்ட மண்டலி என்று சௌந்தர்யலஹரியில் சொல்லப்பட்டிருக்கிறது. பலவித மாலைகள் அணிவதால் மாலினி என்று பொருள் சொன்னேன். பாக மாலினி ஜ்வால மாலினி அந்த மாலினி இந்த மாலினி என்று போட்டா போட்டியாக சௌந்தர்யலஹரியிலும் லலிதா சஹஸ்ரநாமத்திலும் நிறைய சொல்லியிருக்கிறார்கள். எண்ணங்களை மாலையாக அணிந்தவள் என்ற அற்புதமான கற்பனையை சௌந்தர்யலஹரியில் படிக்கலாம். தலையோட்டை மாலையாக அணிந்த மாலினி என்று சற்றே அச்சம் காட்டுகிறது தேவி மகாத்மியம்.

செயிர் என்றால் குறை, குற்றம், ஊனம் என்று பொருள். செயிர்+அவி+நான்மறை என்பது இங்கே குறைவில்லாத (நிறைவான) வேதங்கள் என்ற பொருளில் வருகிறது. அபிராமியின் இத்தனை பெயர்களும் வேதங்களில் சொல்லப்படுகின்றன என்கிறார் பட்டர். எனக்குக் கொஞ்சம் கூட வேத அறிவு கிடையாது. தவறாக எண்ண வேண்டாம், சண்டி மற்றும் சூலி எனும் பெயர்கள் வேதங்களில் வரவில்லை என்று படித்திருக்கிறேன். ஒரு சுவையான பின்னணி இருக்கிறது. வேதங்களை ஓதியதும் பரப்பியதும் ஆரிய, அந்தணர்கள். சண்டி, சூலி எனும் பெயர்கள் அந்தணரல்லாதவரின் கடவுள்களென்று கருதப்பட்டதால் வேதங்களில் இந்தப் பெயர்கள் இடம் பெறவில்லையாம். பொதுவாக நகர நாட்டு எல்லைகளில் காவல் தேவதைகளாக அந்தணரல்லாத, ஆரியரல்லாதவர்களால் வழிபட்டு வந்த உபசக்தி வடிவங்கள் என்று கருதப்பட்டனவாம். வேதங்களில் வருகின்றனவோ அல்லவோ, அது அந்தணர்கள் ஆரியர்கள் கதையென்று விடுவோம். சக்தியே சொல்லி, விஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படும் ஹயக்ரீவர் வழி மொழிந்ததாகச் சொல்லப்படும் லலிதா சஹஸ்ரநாமத்தில் சண்டி உண்டு. சக்தியின் இன்னொரு பாதியான, அந்தணர்களின் முதன்மைக் கடவுளாகக் கருதப்படும் சிவனே ஆதிசங்கரருக்கு மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சௌந்தர்யலஹரியில் சண்டி இல்லை. ம்ம்.. சுவையான பின்னணி என்றேனே? நதி எங்கே போகிறது?

இந்தப் பாடலுக்கேற்ற அழகான சித்திரத்துடன் விளக்கம் சேர்த்திருக்கும் வித்தகர் குமரனின் இடுகை இங்கே.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)