2010/08/25

தங்குவர் கற்பகத்தாருவின்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 75 ராகம்: சுத்த தன்யாசி


தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயரின்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தவுந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

உயர்ந்த மலைகளையும் பொங்கியெழும் பெருங்கடல்களையும் பதினான்கு உலகங்களையும் தன் வயிற்றில் பெற்றெடுத்த நறுமணம் செறிந்த பூக்களை அணிந்த கூந்தலையுடையவளின் மேனியழகை மனதில் நிறுத்தியவர்கள் மட்டுமே, இவ்வுலகில் பிறவி எனும் தீமையை ஒழித்து, பெற்றெடுக்கும் தாயில்லாத நிலையில் கற்பகமர நிழலில் தங்குவார்கள்.

'மால் வரையும் பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் உந்தி பூத்த கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே, வழுவாம் மண்ணில் பிறவியை மங்குவர்; தாயரின்றி கற்பகத் தாருவின் நீழலில் தங்குவர்' எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.

மால் என்றால் நெடிய, உயர்ந்த என்று பொருள் (விஷ்ணுவைத் தமிழில் திருமாலென அழைப்பதேன் தெரியுமா?). வரை என்றால் மலை. உவர், ஆழி இரண்டுமே கடலைக் குறிக்கும் (ஒரு பொருட்பன்மொழி). உந்தி என்றால் வயிறு. 'உந்தி பூத்த' என்பது பெற்றெடுத்த என்ற பொருளில் வருகிறது. கொங்கு என்றால் நறுமணம். இவர் என்றால் செறிந்த, மிகுந்த என்று பொருள். 'குறித்த' என்றால் எண்ணிய என்று பொருள். வழு என்றால் குற்றம், பாவம், தீமை என்று பொருள். மங்குதல் என்றால் தேய்தல், அழிதல் என்று பொருள். 'பிறவி மங்குவர்' என்பது 'பிறவி ஒழிப்பர்' என்ற பொருளில் வருகிறது. தாரு என்றால் மரம். கற்பக மரம் தேவருலகத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். (தென்னை பனை மரங்களுக்கும் கற்பகம் என்று பெயர்; தேவலோகத் தென்னை மரமாக இருக்கலாம்). நீழல் என்றால் நிழல். 'தாயரின்றி' என்பது தாயில்லாத நிலையை, அதாவது, பெற்றெடுக்க வேண்டிய அவசியம் இல்லாத பிறவாமை நிலையைக் குறிக்கிறது. அபிராமியின் அழகை எண்ணியவருக்குப் பிறவியில்லை எனும் கருத்தை, அருமையான தமிழ்ச்சொற்கள் பலவற்றைப் பயன்படுத்திப் பாடியிருக்கிறார் பட்டர். பிறவாமை நிலையை, 'தாயரினிறி' என்று பட்டர் சொல்லியிருப்பது சுவை.

கற்பகத்தாருவின் நிழலில் கட்டில் போட்டமர்ந்து தேவ மகளிர் ஆடிப்பாடுவதைக் கண்டு பிறவிக்களைப்பாறலாம் என்றார் முந்தைய பாடலில்; 'இவ்வளவு தானா? கடைசியில் தேவமகளிர் ஆடும் டப்பாங்குத்தைப் பார்க்கத்தான் அபிராமியைக் கொண்டாடினோமா?' என்று நினைக்கும் பொழுது, இந்தப் பாடலில் தெளிவு படுத்துகிறார். அபிராமியின் திருவடிகளைப் பற்றுவதே பிறவியின் குறிக்கோள் என்று அறிந்தவருக்கு தேவமகளிரின் ஆட்டம் பாட்டம், கற்பக மர நிழல் கிடைக்கும்; அப்படி அறிந்து கொண்டதுடன் நிற்காமல் அனைத்தையும் படைத்தவள் என்ற தகுதியோடு அபிராமியை மனதில் நிறுத்தியவருக்கு மட்டுமே கற்பகமர நிழல், களியாட்டம் இவற்றுடன் பிறவாமையும் கிடைக்கும் என்கிறார் பட்டர் (குறித்தவர் என்பதற்கு இலக்காகக் கொண்டவர் என்றும் பொருள்). அபிராமியை அடைக்கலம் என்று அறிவதுடன் நிற்காமல் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அவளை வணங்கவும் வேண்டும் என்பது பட்டரின் உட்பொருள்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)