2010/08/04

இல்லாமை சொல்லி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 54 ராகம்: சாரங்கா


இல்லாமை சொல்லி யொருவர் தம்பாற் சென்றிழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்றக் கயவர் தம்பாலொரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

வறுமையைப் போக்க இன்னொருவரிடம் கையேந்தி நிற்கும் இழிவைத் தவிர்க்கவேண்டுமானால், (அபிராமியின் மேல்) நம்பிக்கையில்லாத தீயவர்களிடம் ஒரு நாளும் செல்லாமலிருக்க வேண்டுமென்று திரிபுரசுந்தரியான அபிராமியின் பாதங்களை வணங்கிக் கேட்டுக் கொள்வோம்.

பிறவிப்பிணியின் கொடுமையை வெளிப்பார்வை கொண்டு பார்க்கும் இன்னொரு எளிய பாடல். பிறவியெடுத்ததால் தானே பந்தபாச நெருக்கடிகள் தோன்றுகின்றன? பசி, நோய், வறுமை, ஆசை, ஆணவம், குடும்பம், வீடு, வாசல், உறவு என்று ஒரு பிறவிப்பிணியைத் தொடர்ந்து ஒன்பது ஒட்டுப்பிணிகள். இவற்றைச் சமாளிக்க.. இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கத்தானே பொருள் சேர்க்க வேண்டியிருக்கிறது? பொருள் சேர்க்க இயலாமல் வாடுவதால் தானே இன்னொருவரிடம் கையேந்தி உதவி கேட்க வேண்டியிருக்கிறது? அப்படிக் கேட்பதால் தானே அவமானப்பட வேண்டியிருக்கிறது? இவையெல்லாவற்றுக்கும் அடிப்படை பிறவி. பிறவியெனும் மகா கொடுமையை ஒழிக்க என்ன வழி? அபிராமியை வணங்கினால் பிறவாமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவள் பாதங்களை வணங்குவது தான். நம்பிக்கையில்லாதவர்களை கயவர்கள் என்கிறார் பட்டர். அத்தகைய கயவர்கள்பால் செல்லாமலிருக்க வேண்டுமே என்ற கலக்கம் வேறு. அத்தகைய கயவர்களுடன் கூட்டு சேராமல் இருப்பதற்குக் காரணமும் அபிராமிதான் என்கிறார். 'அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய்' என்று முன்பு பாடியிருக்கிறார்.

'கல்லாமை கற்ற கயவர்' என்ற தொடரில் இருக்கும் முரண்பாட்டைப் பல அறிஞர்கள் ரசித்துப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'தவம் கல்லாமை கற்ற கயவர்' என்று சேர்த்துப் படிக்க வேண்டும். அபிராமியை எண்ணித் தவமிருக்கும் வழிகளைக் கற்காதவர் என்ற பொருள் கொள்ள வேண்டும். 'அபிராமியைத் தவிர வேறொரு தெய்வம் இல்லை, அபிராமி இல்லாத மதம் தேவையில்லை' என்றெல்லாம் முன்பு பாடிய பட்டர், 'அபிராமியை எண்ணித் தவமிருக்காதவர் கயவர்' என்று இங்கே பாடுவது பொருத்தமென்று நினைக்கிறேன். கல்லாமையைக் கற்க முடியாது என்றாலும், சொல்லழகுக்காக ரசிக்க முடிகிறது. இங்கே கயவர் என்று சரபோஜி அரசனையும் பட்டர் குறிப்பிட்டிருக்கலாம்.

பட்டர் பாடலுக்கும், பண் பாடியவர் பாடலுக்கும், வேற்றுமை இருப்பதை எழுதும் போதுதான் அறிந்துகொண்டேன். 'கல்லாமை கற்ற கயவர் தம்பாலொரு காலத்திலும் செல்லாமை வைத்த' என்று பட்டர் பாடியிருப்பதாக நான் படித்த புத்தகங்களிலும் இணையத்திலும் காணப்படுகிறது. தான் பாடியிருக்கும் 'கல்லாமை கற்ற கயவர் தம்பாற் சென்று நில்லாமை வைத்த' எனும் வரிகளை எங்கே பிடித்தார் அம்மா என்று தெரியவில்லை. நாற்பது வருடங்களாக இதையே கேட்டுப் பழகிப் போன எனக்கு பட்டர் பாட்டைத் திருத்தத் தோன்றியது தவறுதான். அம்மா பாடியதைத் திருத்த இனி எப்போது இந்தியா போவேனோ தெரியாது. பொருளில் பிழை வராத காரணத்தால் இந்தச் சொற்பிழையைப் பொறுக்க வேண்டுகிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)