2010/07/01

உறைகின்ற நின்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:20 | ராகம்:ஹம்சாநந்தி


உறைகின்ற நின்திருக்கோயில் நின்கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே.

எங்கும் நிறைந்திருக்கும் மங்களகரமானவளே! நீ விரும்பிச் சிறப்பாகக் குடியிருப்பது எங்கே? உன் துணைவரான சிவபெருமான் உடலின் இடது பாகத்திலா? முறையாகப் பாடப்படும் வேதங்களிலா? அமுதம் நிறைந்தாற் போல் வெண்ணிற ஒளி வீசும் சந்திரனிலா? வெள்ளைத் தாமரையிலா? எல்லாவற்றையும் தனக்குள் கொண்ட பாற்கடலாம் பெருங்கடலிலா? இல்லை என் உள்ளத்திலா?

எளிமையான பாடல். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறாள் அபிராமி என்ற கருத்தில் பட்டர் பாடியிருப்பதாகக் கொள்ளலாம். எல்லா இடங்களையும் விட, அபிராமியை எண்ணி உருகும் அவள் அடியார்களின் நெஞ்சத்தையே சிறப்பாக எண்ணிக் குடியிருக்கிறாள் என்ற கருத்தில் பாடியிருப்பதாகவும் கொள்ளலாம். தான் அறிவித்த தவறான திதிக்கு வெள்ளைத் தாமரை, பாற்கடல், வெண்ணிலா என்று பல ஒளி வகைகளாக அபிராமி நிறைந்திருப்பதைக் காணும் தன் மன நிலை தான் காரணம் என்று மறைமுகமாக அறிவிப்பதாகவும் கொள்ளலாம்.

கஞ்சம்-(வெண்) தாமரை, வாரிதி-பெருங்கடல், மங்கலை-மங்களகரமானவள் போன்ற அரிய தமிழ்ச் சொற்களைச் சந்திக்க வைத்தது இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 21 | மங்கலை செங்கலச...