2010/07/16

திங்கட் பகவின்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 35 ராகம்: சண்முகப்ரியா


திங்கட் பகவின் மணநாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட் கொருதவ மெய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட் குமிந்தத் தவமெய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.

அலை வீசும் கடலில், சிவந்த கண்களையுடைய பாம்பையே படுக்கையாகக் கொண்டு துயில விரும்பும் மேன்மையானவளே! பிறைச்சந்திரனைப் போல் அழகிய தோற்றமும் ஒளியும் கொண்ட நறுமணம் வீசும் உன் திருவடிகளில் தலை வைத்து வணங்கும் வாய்ப்பு தேவர்களுக்கும் ஏனைய வானவருக்கும் கிடைக்குமோ? (அவர்களுக்கும் கிடைக்காத) இந்த வாய்ப்பு உன் அடியார்களான எங்களுக்குக் கிடைத்தது எங்கள் தவப்பயனே.

'தரங்கக் கடலுள், வெம் கண் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே, திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க எண்ணிறந்த விண்ணோர் தங்கட்கும் (இந்தத்) தவமெய்துமோ, எங்கட் கொருதவ மெய்தியவா!' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

முந்தைய பாடலில், அபிராமி முக்கடவுளராகவும் அவர்களின் சக்தியாகவும் பெண்ணுருவாகவும் இருந்தபடி அடியாருக்கு வானுலகப் பேறு வழங்குகிறாள் என்றார் பட்டர். தொடர்ந்து இந்தப் பாடலில் அபிராமியை விஷ்ணு வடிவாக எண்ணிப் பாடுகிறார். விஷ்ணுவானவள், விஷ்ணுவின் சக்தியானவள் என்று லலிதாசஹஸ்ரநாமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பகவு என்றால் பிளவு, பாதி, பாகம் என்று பொருள். படுத்திருக்கும் சக்தியின் (வைணவி) பாதங்கள் பிறைச்சந்திரனைப் போல் வளைந்து காணப்படுவதாலும், ஒளி நிறைந்து காணப்படுவதாலும், மலர்கள் தூவப்பட்டிருப்பதால் மணம் மிகுந்திருப்பதாகவும் பட்டர் பாடுவது சுவையான கற்பனை. தரங்கம் என்றால் அலை. பணி என்றால் பாம்பு என்று பொருள். கூரும் என்பதற்கு விரும்பும் என்று பொருள். துயிலும் என்பதற்கு பதில் துயில் கூரும் என்பானேன்? 'அபிராமி தூங்குவது போல் பாவனை செய்தால் - சும்மா படுத்திருக்க, ஓய்வெடுக்க விரும்பினால் - பரவாயில்லை; தூங்கினால் உலகமே இருண்டு விடுமே?' என்பது பட்டரின் கற்பனை.

தேவர்களுக்கும் கிடைக்காத வாய்ப்பு அபிராமியின் அடியவருக்குக் கிடைப்பதாகச் சொல்வதேன்? அபிராமியுடன் பல்வேறு வானுலகங்களில் கலந்து இருக்கும் வாய்ப்புடைய, பிறவாமை பேறு பெற்ற, தேவர்களை விட பட்டர் போன்ற மானிட அடியாரின் தவப்பயன் சிறந்ததா? கொஞ்சம் சிந்திப்போம். நம் உற்றார், உறவினர், பிள்ளைகள், நண்பர்கள்... இப்படி நம்முடன் இருப்பவர்களை நெருக்கமாக அறிவோம். அப்படியிருப்பினும் எத்தனை பேருடைய கால், காலழகு, பாத அழகைப் பற்றி அறிவோம் என்று கணக்கிட்டால் மிக மிக நெருங்கிய ஓரிருவரைத் தவிர நம்மால் எவரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தேவரும் மற்ற வானவரும் அபிராமியின் பாதங்களைக் கவனிக்கும் பேறு பெறாதவர்கள்; பட்டர் போன்ற அடியவர்கள் எப்போதும் அபிராமியின் மலர் போன்ற பாதங்களில் தலை வைத்து வணங்குவதால் அபிராமியின் பாத அழகை அறிந்தவர்கள் என்கிறார். சரி, இதில் என்ன தவப்பயன்? இந்து மத இறைவழிபாட்டிலும் மானிட வணக்க முறைகளிலும் பாதங்களைத் தொட்டு வணங்குவது முக்கியமான மரியாதையாகவும் பணிவின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. பாதங்களில் விழுந்தவன் பகைவனாக இருந்தாலும் உடனே வாழ்த்தத் தான் தோன்றும். யாராவது நம் காலில் விழ வருகிறார்கள் என்றால் முதல் வேலையாக தடுத்து ஒதுங்கத் தான் நினைப்போம் (சிலரைத் தவிர). மனிதருக்கே அந்நிலையென்றால், இறைவியின் கால்களில் என்னாளும் தலைவைத்து வணங்கும் வாய்ப்பு கிடைப்பதென்றால் அரிது தானே? இன்னொரு கருத்தும் சுவையானது. தேவர்களில் பலருக்கும் பல முகங்கள், கைகள் என்று இருந்தாலும் கால்கள் இரண்டு தான். ஏனெனில் காலைப் பொருத்தவரைக் குழப்பமே வரக்கூடாது என்பதற்காக. ஒரு முக வடிவத்தை வணங்குவதா அல்லது அதே கடவுளின் ஆறு முக வடிவத்தை வணங்குவதா என்பதில் இருக்கும் குழப்பம், இரண்டே திருவடிகளை வணங்குவதில் இல்லை. இதையொட்டிய சுவையான விளக்கத்தை, வாரியார் சொன்னதாக, திரு.ராஜகோபால் அவர்கள் தன்னுடைய அபிராமி அந்தாதி ஆங்கில மொழி பெயர்ப்பில் வழங்கியிருக்கிறார்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)