2010/07/24

பரிபுரச் சீறடி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 43 ராகம்: தன்யாசி


பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துரமேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனியிறைவர் செம்பாகத் திருந்தவளே.

நெஞ்சில் தீய எண்ணங்கொண்டு திரிந்த முப்புர அரக்கர்களை, மலையை வில்லாக வளைத்து அம்பு தொடுத்து எரித்தழித்த சிவபெருமானின் இடது பாகத்தில் இருப்பவள் (இருந்து உதவியவள் யாரெனின்) கைகளில் பாசக்கயிறும் அங்குசமும் ஐவகை அம்புகளும் ஏந்தி, கால்களில் சிறப்புமிக்க சிலம்பணிந்து, இனிமையான மொழியும் சிவந்த மேனியும் கொண்ட மூவலகத்திலும் சிறந்தப் பேரழகியான திரிபுரசுந்தரியே (ஆவாள்).

அபிராமியின் அழகை முன் பாடலில் வர்ணித்தவர், அவளுடைய அலங்காரங்களை இந்தப் பாடலில் எடுத்துச் சொல்கிறார். பஞ்ச பாணி என்பது ஐந்து வகை அம்புகளை ஏந்தியவள் என்ற பொருளில், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களினாலுண்டாகும் உணர்வுகளைக் குறிக்கிறது. பொருப்பு என்றால் மலை. சிலை என்றால் வில். சிவன் மேருமலையை வில்லாக வளைத்ததாக திரிபுரம் எரித்த கதையில் வருகிறது. (மலையையே பெயர்த்தெடுத்து ஆயுதமாகப் பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் வலிமை உள்ளவராக இருந்தனர் என்பது உட்பொருளானாலும், கடவுளருக்கும் முனிவர்களுக்கும் மேருமலை மிக வசதியாக இருந்திருக்கும் போலிருக்கிறது. அரக்கர்களை அழிக்க வேண்டுமா? அமுதம் கடைய வேண்டுமா? பயணத்தைத் தடை செய்ய வேண்டுமா? பாதுகாப்புச் சுவர் வேண்டுமா? 'பிடி மேருமலையை' என்று கொஞ்சம் ஏமாந்தால் மேருமலையைக் கையில் எடுத்துக் கொண்டதைப் பல புராணக் கதைகளில் படிக்கலாம். மலையைத் திரும்ப அதே இடத்தில் வைத்தார்களா என்பதைப் புராணங்களில் சொல்லவில்லை).

பரிபுரம் என்றால் சிலம்பு. முந்தைய பாடலின் முடிவில் பரி+புரை என்று பிரித்துப் பொருள் கொண்ட சொல், இங்கே பரிபுரம் என்ற தனிச்சொல்லாகச் சிலம்பு என்ற பொருளில் வருகிறது. காலில் சிலம்பணிந்தவள் என்று சக்தியை இறையிலக்கியங்களில் நிறைய வர்ணித்திருக்கிறார்கள். லலிதாசஹஸ்ர நாமத்தில் 'நவரத்தின மணியினாலான சலங்கை' என்று சொல்லப்பட்டிருக்கிறது. சௌந்தர்யலஹரியில், சக்தியின் சலங்கையொலியைப் பற்றிச் சுவையாகச் சொல்லியிருக்கிறார் சங்கரர். 'ஊடலில் தோற்றுச் சரணடைந்த சிவனின் தலையில் சக்தி தன் கால் விரல்களை விளையாட்டாக வைத்துத் தட்டும் பொழுது ஏற்படும் கிணுகிணுப்பான வெற்றி ஓசையில் எல்லாம் அடங்கி விடும்' என்ற அழகான சங்கரர் கற்பனையை, வீரைக் கவிராஜர் 'இறையை வென்றனன் விழியை வென்றனன் என முழங்கிய குரல் எனாது அறைச் சிலம்பு எழும் அரவம் என்பதேன் அருண மங்கலக் கமலையே' என்று அருமையான தமிழில் சொல்லியிருக்கிறார். சிவனிடம், "ஐயா நீர் மலையை வளைத்து அம்பெய்தி முப்புர அரக்கரைக் கொல்லும் வலிமை படைத்தவர் என்பதெல்லாம் சரி, ஆனால் எம் தலைவியின் கால் சலங்கையொலி உம்மையும் அடக்கி விடுமே?" என்பது போல் தொனிக்கும் பட்டரின் உட்பொருள் இன்னும் சுவை.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)