2010/07/30

குரம்பை அடுத்து...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 49 ராகம்: நாயகி


குரம்பை யடுத்துக் குடிபுக்க ஆவிவெங் கூற்றுக்கிட்ட
வரம்பை யடுத்து மறுகுமப்போது வளைக்கை யமைத்து
அரம்பை யடுத்த அரிவையர் சூழவந்தஞ் சலென்பாய்
நரம்பை யடுத்த இசைவடிவாய் நின்றநாயகியே.

இசை வடிவான தலைவியே! இந்த உடலெனும் கூட்டில் தங்கியிருக்க வேண்டி காலனிட்ட காலம் முடிந்ததும், என் உயிரை அடுத்தக் கூட்டிற்கு எடுத்து செல்ல சினங்கொண்ட எமன் வரும்பொழுது கலங்கும் என்னை, உன்னை வணங்கிப் போற்றும் தேவமகளிருடன் வந்து உன் வளைக்கரத்தால் அஞ்சாதே என்று தடுத்துக் காத்தருள வேண்டும்.

பிறவாமை வேண்டும் என்ற பட்டரின் கோரிக்கை தொடர்கிறது. உயிர் என்பது குறிப்பிட்ட கால அளவுக்குப் பின் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்குத் தாவுமென்பது இந்துமத அடிப்படைத் தத்துவங்களில் ஒன்று. எமன் அழைத்துச் செல்ல வந்தால் உடலைப் பிரிந்த உயிர் (ஆன்மா) பாவங்களுக்கான தண்டனையைப் பெறும்; அல்லது, செய்த புண்ணியங்களின் அளவுக்கேற்ப சொர்க்கத்தில் சில நாள் இருந்து விட்டு மீண்டும் உடலுக்கே திரும்புமென்று புராணங்கள் சொல்கின்றன. சொர்க்கமோ நரகமோ, எமன் அழைக்க வந்தால் பிறவி தான். விஷ்ணு, சிவன், சக்தி போன்றோரோ சிவகணங்களோ அழைக்க வந்தால் தான் பிறவாமை. அதனால் பட்டர் பார்வதியை வரச் சொல்கிறார். அதுவும் புடை சூழ வரச் சொல்கிறார். சிவனுடன் சண்டை போட்டபடி வரச்சொன்னால் அருள் கிடைக்குமோ கிடைக்காதோ என்பதால், மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய வகையில் வரச் சொல்கிறார் பட்டர். தன்னை வணங்கும் தேவ மகளிருடன் வரும் தலைவி மகிழ்ச்சியான மனநிலையுடன் இருப்பாள் என்பது பட்டரின் தந்திரத் தொலைநோக்கு. சும்மா பாடுவாரா சுப்பிரமணியர்?

வரம்பு என்றால் அளவு. மறுகும் என்றால் கலங்கும். அரம்பை என்றால் தேவ மகளிர், ரம்பை என்று பொருள். அரிவை என்றால் அழகிய பெண். நரம்பு என்றால் யாழ், வீணை என்று பொருளுண்டு.

அபிராமியே இசை வடிவானவள் என்கிறார். கூடு விட்டு ஆவி போனால் கூடவே வரவேண்டும் என்ற பட்டரின் விண்ணப்பத்துக்கும் இசை வடிவான நாயகிக்கும் ஏதாவது உட்பொருள் இணைப்பு உண்டா? குரல் இருக்கிறது. குழல் இருக்கிறது. வீணை இருக்கிறது. மேளம் இருக்கிறது. ஆனால் அவற்றுக்குள் ஒளிந்திருக்கும் விதவிதமான இசையைக் காண முடிவதில்லை. நரம்புகளைத் தட்டினால் எங்கிருந்தோ ஒலிக்கிறது இசை. மேளத்தைத் தட்டினால் எங்கிருந்தோ வருகிறது நாதம். குரலைக் கூட்டினால் எங்கிருந்தோ ஒலிக்கிறது பாடல். இசை என்பது புலனுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது (அலை?). அதை ஒரு கருவியெனும் கூட்டுக்குள்ளே அடைத்ததும் ஒலிக்கிறது. உயிரும் அப்படித்தான். உடலென்னும் கூட்டுக்குள் வந்ததும் வினையெனும் இசையைத் தொடங்குகிறது. ரசிக்க முடிந்த இசை, சகிக்க முடியாத இசை எனும் இசை வகை போலவே வினை வகையும் அமைகின்றன. இசையை ரசிப்போம், வினையைத் தவிர்ப்போம் என்று பட்டர் விரும்பியதால் ஆவி பிரியும் பொழுது அபிராமியை வரச் சொல்கிறார். புலனுக்கப்பாற்பட்ட இசையைப் போல் அபிராமியுடன் கலந்து இனிப் பிறவாதிருக்க விழைகிறார். வினையையும் இசையையும், (வீணை) நரம்பையடுத்த இசை வடிவானவளையும், இந்தப் பாடலில் இணைத்திருப்பது கருத்துக்குப் பொருத்தம் என்று நினைக்கிறேன். ராகம் தன்னை மூடி வைத்த வீணை அபிராமியின் சின்னம் என்று பாடியிருக்கும் பட்டரின் உட்பொருள் ரசிக்கக்கூடிய கற்பனை.

'ரம்பை போன்ற தேவமகளிர் வழிபடும்', 'இசை வடிவானவள் (நாத ரூபிணி)', 'இசைக்கும் நடனத்துக்கும் தலைவி' என்றெல்லாம் லலிதா சஹஸ்ரநாமத்தில் அபிராமி வர்ணிக்கப்படுகிறாள்.

சக்தி இசைவடிவானவள் என்பதை விளக்கும் ஒரு நயமான சுவையான கற்பனை சௌந்தர்யலஹரியில் வருகிறது. சிவனும் சக்தியும் இளைப்பாற சரசுவதி வீணை வாசிக்கிறாளாம். இடையில் சக்தி ஏதோ சொல்ல வர, சரசுவதி அவசரமாக வீணையைத் துணிவீசி மூடிவிடுகிறாளாம். ஏன்? சக்தியின் மொழியைக் கேட்டு வீணையின் நரம்புகள் வெட்கப்பட்டு ஒடிந்துவிடுமே என்று அவள் அஞ்சினாளாம். ஆகா! தமிழாக்கத்தில் சங்கரருக்கு ஒரு படி மேலே போன வீரைக்கவிராயர், '... நாணி இசைத் தொழிலைக் கைவிட்டாள் எழில் வீணை உறையிலிட்டாள் ஏது செய்வாள்' என்று கலைவாணியே அடங்கிப் போனதாக அருந்தமிழில் பாடுகிறார். ஆகா! ஆகா!

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)