2010/07/28

வாழும் படியொன்று...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 47 ராகம்: நாயகி


வாழும் படியொன்று கண்டுகொண்டேன் மனத்தே யொருவர்
வீழும் படியன்று விள்ளும்படியன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டுமெட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

கடலினும் விரிவான, ஏழுலகங்களைக்காட்டிலும் பரந்த, பருத்து உயர்ந்த மலைகளைக் காட்டிலும் எட்ட முடியாத, இவையெல்லாவற்றுக்கும் அப்பால் இரவு பகல் எனாது அண்டமெங்கும் நிறைந்திருக்கும், விரும்பினாலும் விளக்க முடியாத, ஒளியின் ஒளியை (அபிராமியை) மனதில் நிறுத்தியிருப்பதே சிறந்த ஒழுக்கம் என்பதை அறிந்து கொண்டேன்.

'இன்னதென்று விவரிக்க முடியாதபடி அளவில்லாத கடல், உலகம், மலை என்று அண்டங்களைத் தாண்டி இரவுபகலாய் ஒளி வீசும் சூரிய சந்திரர்களின் ஒளிப்பிழம்பாக இருக்கும் அபிராமியை வணங்குவதே வாழ்வதற்கான வழி; அந்த வழி அழிவற்றது என்றறிந்து கொண்டேன்' என்றும் பொருள் கொள்ளலாம். 'கடல்கள், ஏழுலகங்கள், எட்டு மலைகள் எல்லாவற்றையும் கடந்திருப்பவள்' என்றும் பொருள் கொள்ளலாம். (மாயாஜாலத் திரைப்படங்களில் நாயகன் நாயகியை அடைய வேண்டி இவற்றைக் கடக்க நேரிடல் போல்).

வாழும் என்பதற்கு ஒழுகும் என்று பொருள். வாழ்க்கை=ஒழுக்கம். வீழும் என்பதற்கு விரும்பும் என்று பொருளுண்டு. விள்ளுதல் என்றால் சொல்லுதல், பேசுதல், விவரித்தல் என்று பொருளுண்டு. உடைத்தல், பிரித்தல் என்றும் பொருளுண்டு. படி என்றால் விதம், வகை, முறை என்று பொருள். வேலை என்றால் கடல், கரை என்று பொருள். நிலம் என்றால் பூமி, பரந்த என்று பொருள். பரு என்றால் பெருத்த, உயர்ந்த என்று பொருள். வரை என்றால் மலை. எட்டு என்பது இங்கே எண்ணாகவும், 'அடைய முடிகின்ற' என்ற பொருளிலும் வருகிறது.

எண்ணத்தாலும் செயலாலும் அடைய மற்றும் அடக்க முடிகின்ற அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒளியானவள் அபிராமி என்பதே பாடலின் சாரம். 'அத்தகை அழியாச் சுடரான அபிராமி அகத்துள் இருக்கும் பொழுது, அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் விவரம் சொல்லி விழலுக்கிரைத்த நீரானதே வாழ்க்கை' என்று பட்டர் வருந்துவது உட்பொருள்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)