2010/07/17

பொருளே பொருள்முடிக்கும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 36 ராகம்: காம்போதி


பொருளே பொருள்முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும்
மருளே மருளில்வரும் தெருளே என்மனத்து வஞ்சத்து
இருளே துமின்றி ஒளிவெளியாகி இருக்கு முந்தன்
அருளே தறிகின்றிலேன் அம்புயாதனத் தம்பிகையே.

தாமரையை இருப்பிடமாகக் கொண்ட தாயே! (நான்) பொருட்செல்வத்தைத் தேடிய போது பொருளாகவும், அந்தச் செல்வத்திலிருந்து இன்பம் நுகர விழைந்த போது இன்பமாகவும், இன்பம் நுகர்ந்ததால் ஏற்பட்ட பகுத்தறிய இயலாத மயக்கமாகவும், பின் அந்த மயக்கம் தீர்ந்து ஏற்பட்ட தெளிவாகவும் விளங்கியவள் நீயே (என்பதை அறியும் படி) என் மனதின் அறியாமை எனும் இருளை நீக்கியது உன் அருட்செல்வமெனும் ஒளியே என்பதை (எளியவன்) அறியவில்லை.

அந்தாதிக்குள் அந்தாதி பாடுகிறார் அபிராமிப் பித்தர். இது போன்ற பாடல்கள் படிக்க மிகச் சுவையாகவும் சுலபமாகவும் தோன்றினாலும், பிரிக்கவும் பொருள் உரிக்கவும் சவாலாக அமைகின்றன. படிப்பவர் அறிவுக்கும் நம்பிக்கைக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ற பொருளை அளிக்க வல்லன. பட்டரின் பாடல் மண் என்றால் அவர் பாடலின் பொருள், படிப்பவர் செய்யும் பலவித பொம்மைகளாகின்றன.

பொருள் என்பதைச் சாதாரண செல்வம், வீடு, நிலம், பெண் என்ற விதத்தில், அந்தப் பொருளினால் உண்டாகும் இன்பத்தையும், இன்பத்தினால் விளையும் - வாழ்வின் நோக்கமான முக்தியை மறக்கடிக்கும் - மயக்கத்தையும், பிறகு இறையருளால் மயக்கம் நீங்கி வரும் தெளிவையும், பட்டர் விளக்கிச் சொல்வதாகப் பொருள் கொள்ளலாம்.

போகம் யோகம் இரண்டுமே வாழ்க்கை நெறி என்ற கண்ணோட்டத்தில் பொருள், போகம், மருள் (மாயை), தெருள் இவற்றுக்கு விளக்கம் கொள்ளலாம் - அதாவது, மானிடராய்ப் பிறந்தவர் போகம் யோகம் இரண்டையும் சமமாகக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில். இரண்டையும் சமமாகக் கருதாதவர்கள் அறியாமை இருளில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அத்தகைய அறியாமை இருள் அகல அபிராமியை நாட வேண்டும் என்று பட்டர் சொல்வதாகப் பொருள் கொள்ளலாம்

சற்று நுட்பமாகவும் விளக்கம் தேடலாம். பொருள் என்றால் கடவுள். போகம் என்றால் இன்பம். மருள் என்றால் மயக்கம். தெருள் என்றால் தெளிவு. கடவுள் என்ற உண்மையை அறிந்ததும் ஏற்படும் இன்பமும், அந்த அரிய இன்பத்தின் நுகர்ச்சி காரணமாகத் தோன்றும் பிறப்பு/பிறவாமை எனும் நிலைகளின் மயக்கம், அந்த மயக்கத்திலிருந்து ஏற்படும் பிறவாமை நிலை பற்றிய தெளிவு என்றும் பொருள் கொள்ளலாம்.

கடவுள் என்ற உண்மையை உணர்ந்தாலும், கடவுளிடம் எத்தகைய போகம் வேண்டுகிறோம் என்பதைப் பொருத்தது அல்லவா மயக்கம்? தத்தம் நம்பிக்கைகளின் பலனாகக் கடவுளின் அண்மையை உணர்ந்தவர்களுள் பெரும்பாலானோர் வீடு, நிலம், நூற்றாண்டு வாழ்வு, சந்ததிச் செழிப்பு போன்ற இன்ப நிலைகளைத் தானே நாடுகிறார்கள்? அபிராமியின் அண்மை என்ற போகத்தை அனுபவிக்க வாய்ப்புடையவர்கள் இத்தகைய மருளிலிருந்து விடுபட்டு பிறவாமை ஒன்றையே வேண்ட வேண்டும் - அது தான் தெருள் - என்கிறார் பட்டர். பிறவியிலின்பம் தேடுவதைத் தவிர்த்து பிறவாமை எனும் பேரின்பம் நாடும் தெளிவு ஏற்பட, மனதில் அறியாமை எனும் இருள் அகல வேண்டும் என்கிறார்.(பிறவாமலிருந்தால் பிறகு என்ன இன்பம் வேண்டிக்கிடக்கிறது என்று நமக்குத் தோன்றுகிறது)

அபிராமி நம் முன் தோன்றி, "ஒரு வரம் தருகிறேன், என்ன வேண்டும் கேள்" என்றால், நம்மில் எத்தனை பேர் உடனே "தாயே, இனிப் பிறவாமை வேண்டும்" என்று கேட்போம்? இறந்தபின் பிறவாமை கிடைத்தால் நமக்கென்ன தெரியவா போகிறது? பிறந்து விட்டோம்; ஏதோ அபிராமி வரத்தால் பக்கத்து வீட்டுக்காரன், அண்ணன் தம்பி மாமன் மச்சான் இவர்களை விட நாமும் நம் தலைமுறையும் வசதியாக வாழ்ந்தால் போதும் என்றுதான் நம் மனம் உடனே நினைக்கும்; அதைத்தான் வரமாகக் கேட்கும். இன்றைக்கு எப்படியோ தெரியாது, அன்றைக்கு அபிராமி என் தாய் முன் தோன்றி 'ஒரே ஒரு வரம் தருகிறேன், என்ன வேண்டும் சொல் இந்திரா' என்றால், 'பிறவாமை வேண்டும்' என்று கேட்டிருக்க மாட்டார்; 'என் பிள்ளைகளை வாழ வை தாயே' என்றுதான் கேட்டிருப்பார். பந்தபாசங்களின் பிடி அப்படிப்பட்டது. சட்டி சுட்டதடா எனும் மனப்பக்குவம் மிகவும் அரியது. போகத்தில் தவறில்லை. போகம் மனித இயல்பு. நெறி. மருள். அதை உணர்ந்து தெளிவு பெறுவது என்பது சாதாரண முதிர்ச்சியில்லை. இதைத்தான் 'மனத்து வஞ்சத்து இருள்' என்றார் பட்டர்.

'அம்புயாதனத் தம்பிகையே' என்பதற்குக் கூட பல வித விளக்கங்கள் சொல்லலாம். அம்பிகை என்பதற்கு தாய் என்று பொருள். அம்புய+ஆதனத்து+அம்பிகையே எனப் பிரித்து தாமரையை இருக்கையாக (ஆதனம்:ஆசனம்) உடைய தாயே எனலாம். அதே சொற்பிரிவில் தாமரையை யோக நிலையாக (ஆசனம்) உடையவளே எனப் பொருள் கொள்ளலாம். அம்புய+தனத்து+அம்பிகையே எனப் பிரித்து தாமரை போல் பரந்த, மென்மையான அல்லது குவிந்த மார்பை உடைய தாயே எனவும் பொருள் கொள்ளலாம். ('குவிந்த முலையுடைய தாயே' என்கிறார் கண்ணதாசன். அடுத்தப் பாடலின் பொருளை வைத்துப் பார்க்கும் பொழுது கண்ணதாசன் கருத்து மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது)

என் அறிவுக்கு பட்டர் இங்கே யோக நிலையைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி பாடல்களில் தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள் என்று அடிக்கடி வருகிறது. நான்கு இதழ் தாமரையில் இருப்பவளே, ஆறு இதழ் தாமரையில் இருப்பவளே, எட்டு இதழ், பத்து இதழ், பதினாறு இதழ் என்று வரிசையாக ஆயிரம் இதழ் தாமரையில் இருப்பவளே வரை லலிதா சஹஸ்ரநாமத்தில் தொடர்ந்து வணங்கப்படுகிறாள் திரிபுரசுந்தரி (ஆயிரம் நாமத்தில் இப்படியே நூறு நாமம் போல் ஓட்டி விட்டார்கள்). சௌந்தர்யலஹரியில் கொஞ்சம் நுட்பமாகச் சொல்லியிருக்கிறார்கள். அது பட்டர் சொல்லியிருக்கும் போகம், மருள்-தெருளுக்குப் பொருந்துவது போல் தோன்றுகிறது. மூலாதாரம் என்பது ஆயிரம் இதழ் தாமரை வடிவில் முதுகெலும்பின் அடியிலோ மூளையின் அடியிலோ இருப்பதாக நம்பப்படுகிறது. அதில் சிவனும் சக்தியும் இருப்பதாக நம்பப்படுகிறது. மனிதன் யோக நிலையைக் கடைபிடித்து குண்டலினி விடுவிக்கும் நிலையை அடைந்து தன் அக-புற இயக்கங்களை முற்றிலும் கட்டுப்படுத்தியிருக்கும் பொழுது, சிவ-சக்தியை உணர முடியும் எனும் சௌந்தர்யலஹரி பாடலை, "...மென் கமலத்து ஆயிரந் தோட்டு அருண பீடத்து ஆலவிடம் பருகிய தன் மகிழ்நரோடும் ஆனந்தமுறும் பொருளை அறியலாமே" என்று கவிராஜர் அழகான தமிழில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

'தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்...', 'இருள்சேர் இருவினையும் சேரா...', '...செம்பொருள் காண்ப தறிவு' என பொருள்-இருள்-மருள்-தெருள் பற்றி, தடுக்கி விழுந்தால் திருக்குறள் தென்படுகிறது. மெய்யுணர்தல் என்று இதற்கென்றே ஒரு அதிகாரத்தைத் தமிழ் வேதத்தில் காணலாம்.

பொருளில் வரும் போகம் பட்டரின் தமிழ் என்றால், காம்போதி ராகம் அரும்போகம் செய்யும் மருளாகும்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)