2010/07/20

ஆளுகைக்கு உந்தன்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 39 ராகம்: காம்போதி


ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின்கடை உண்டு மேலிவற்றின்
மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்புதொடுத்த வில்லான்பங்கில் வாணுதலே.

மூன்று அசுரர்களின் இருப்பிடங்களை ஒரே அம்பால் அழிக்க முயன்ற போரில் பங்கெடுத்து சிவனுக்கு உதவிய பெண்ணே! உன் அழகிய பாதங்கள் என்னைக் காப்பாற்றி என் மனதை ஆட்சி செய்ய வல்லவை; இருளரசனாம் எமனுடைய பிடியிலிருந்து மீண்டு வர உன் கடைக்கண் பார்வையே போதுமானது. (முப்புர அசுரர்களிடமிருந்து தேவர்களைக் காப்பாற்றியது போல்) என்னைக் காத்தருள உன் திருவடிகளும் கடைக்கண் பார்வையும் இன்னும் சேர்ந்து வராதது என் தவறா, உன் தவறா? (நீயே சொல்).

'என் குறை நின் குறை அன்று' என்ற தொடர், பல விதங்களாகப் பிரித்துப் பொருள் உணரற்பாலது.

என் குறை அன்று, நின் குறை: "எனக்கு அருள் கிடைக்காதது என்னுடைய தவறல்ல, உன்னுடைய தவறு" என்று பட்டர் அபிராமியிடம் முறையிடுவதாகக் கொள்ளலாம். 'அன்றே தடுத்தென்னை ஆண்டு கொண்டாய்' எனத் தன்னைத் தீய வழியில் செல்லாமல் அபிராமியையே எண்ணித் தவமிருக்கச் செய்துவிட்டு இன்னும் காப்பாற்ற வராதது அபிராமியின் குறை தான் என்று அன்புடன் சாடுவதாகப் பொருள்.

என் குறை, நின் குறை அன்று: "எனக்கு அருள் கிடைக்காதது என் தவறே அன்றி உன்னுடைய தவறு அல்ல" என்று பட்டர் தன் தவப்பயனின் குறைவை நொந்து கொள்வதாகப் பொருள். தேவருக்கும் மற்றவருக்கும் அபிராமியின் பாதம், கடைக்கண் பார்வை இவற்றின் பாதுகாப்பு கிடைக்கும் பொழுது தனக்கு இன்னும் கிடைக்காதிருப்பதன் காரணம் தன்னுடைய தவறே, தன் தவப்பயனின் குறையே, தவிர எல்லோருக்கும் அருள் தரும் அபிராமியின் குறை அல்ல என்று பட்டர் தன் வேதனையை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

என் குறை, நின் குறை: "எனக்கு அருள் கிடைக்காதது என் குறையே, இருப்பினும் என்னுடைய செயல்கள் எல்லாவற்றையுமே இயக்கும் சக்தி நீ தான் என்பதால் என்னுடைய குறையும் உன்னுடைய குறை தான்" என்று பட்டர் அபிராமியிடம் சொல்வதாகப் பொருள். (இங்கே அன்று என்ற சொல்லை அடுத்து வரும் முப்புரங்கள் சொல்லுடன் இணைக்க வேண்டும்).

மேற்சொன்னதையொட்டி நான் பொருள் சொல்லியிருக்கிறேன். 'என்னுடைய குறையென்பது உன்னுடைய குறையே' என்று திட்டமாக அபிராமியின் மேல் பழியிடாமல், 'பலன் கிடைக்காதது யாருடைய குறை?' என்று பட்டர் அபிராமியை உரிமையுடன் கேட்பது போல் பொருள் சொல்லியிருக்கிறேன். 'என்னுடைய குறையானால் நான் பொறுப்பேற்கிறேன்; உன்னுடைய குறையானால் இதைத் தீர்த்து விட்டு மறுவேலை பார்' என்ற பட்டரின் உரிமைக் கோரிக்கை, மறைபொருளாகத் தொக்கி நிற்கிறது.

'வில்லான் பங்கில்' என்பதற்கு 'சிவனின் உடலில் பங்கெடுத்துக் கொண்டவளே' என்று அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். சிவனின் இடது பாகத்தில் இருப்பவள் சக்தி என்ற வகையில் அது பொருத்தமே. அரக்கர்களுடன் நடந்த போரில் பங்கெடுத்துக் கொண்டவளாகப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

முப்புர அரக்கர்களைக் கொல்ல உபாயம் தோன்றாமல் தயங்கிய சிவன், திருமாலிடமும் சக்தியிடமும் உதவி கோரிய கதை சுவையானது. சமணமதம் தோன்றிய கதை இதுதான். தேவ-அசுர அரசியல் காரணமாகக் கொல்லப்பட்ட முப்புர அரக்கர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. எந்த நேர்வழியும் தோன்றாமல் மதமாற்றத்தை வைத்து அரக்கர்களை அழித்தது, கடவுளரின் கொள்கைகளைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.

வாணுதல் என்றால் பெண் என்று பொருள். பெயர்க் காரணம் உண்டு. வாணுதல் என்ற சொல்லை வாள்+நுதல் என்று பிரிக்கலாம். வாள் என்ற சொல்லுக்கு ஒளி என்று பொருளுண்டு. நுதல் என்றால் நெற்றி. வாணுதல் எனும் சொல் ஒளி வீசும் நெற்றி என்ற பொருளைத் தருகிறது. மஞ்சளும் குங்குமமும் கலந்த திலகம், பரந்த நெற்றியில் பொன்னும் மாணிக்கமும் போல் ஒளி வீசுவதாக உட்பொருள். வாணுதல் என்று இந்தப் பாடலை முடித்த பட்டர், வரும் பாடலை வாள் நுதல் என்று பிரித்த சொல்/பொருளில் தொடங்குகிறார்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)