2010/07/08

உடைத்தனை வஞ்சப்பிறவியை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:27 | ராகம்:மோகனம்


உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளமுருகும் அன்பு
படைத்தனை பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத் தழுக்கை யெல்லாம்நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே.

பேரழகியே! என் மனதிலிருந்த ஆசை, பற்று, ஆணவம் போன்ற மாசுகளை உன் அருள் வெள்ளத்தால் கழுவித் துடைத்தாய்; மாசு நீங்கிய என் உள்ளத்தில் உன்னையே எண்ணி உருகுமளவுக்கு அன்பைப் படைத்தாய்; அந்த அன்பின் காரணமாக உன் தாமரைப் பாதங்களை காலம் காலமாகப் போற்றி வணங்கும் பணியை அளித்தாய்; அந்தப் பணியின் பயனாக இந்தப் பிறவியெனும் மாயத்தை உடைத்தெறிந்த (என்னை விடுவித்த) உன் கருணையை எப்படி புகழ்ந்து பாடுவேன்? (அளவிட முடியாததாயிற்றே!)

அபிராமி அந்தாதி பாடல்களிலேயே மிகவும் எளிமையான பாடல் இது என்பது என் கருத்து.

புனல் என்பதற்கு ஆறு, ஓடை, நீர் என்று பொருள். மனித மனத்தின் மாசுகளைத் துடைக்க அருளாறு போதாது, அருள் வெள்ளம் தேவைப்படும் என்பதால் இங்கே புனலுக்கு வெள்ளம் என்ற பொருளைப் பொருத்தியிருக்கிறேன்.

மோகன ராகத்தின் இனிமையும் வெள்ளமாகப் பரவுகிறது.

தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 28 | சொல்லும் பொருளும்...