2010/07/12

உமையும் உமையொருபாகனும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி: நூல் 31 ராகம்: சண்முகப்ரியா


உமையும் உமையொரு பாகனும் ஏகவுருவில் வந்திங்கு
எமையும் தமக்கன்பு செய்ய வைத்தார் இனியெண்ணுதற்கு
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயுமில்லை
அமையும் அமையுறுதோளியர் மேல்வைத்த ஆசையுமே.

ஒளி போன்ற உமையவளும், அவளைத் தன்னுடலின் ஒரு பாகமாக ஏற்ற சிவபெருமானும் ஓருருவாக இணைந்து அர்த்தநாரியெனும் வடிவத்தில் என் கண்ணில் தோன்றி உள்ளத்தில் நிறைந்ததுடன், என்னை அவர்கள் மேல் பக்தியுண்டாகும்படி செய்துவிட்டனர்; (அதனால்) இனி இன்னொரு மதத்தையோ கடவுளையோ எண்ணப் போவதில்லை; பிறவாமை நிலையடையப் போவதால் எந்தத் தாயும் என்னை இனிப் பெற்றெடுக்க வேண்டியதில்லை; என் மனதில் இனி நிறையப்போவது அழகான தோளையுடைய அபிராமியின் மேல் நான் வைத்திருக்கும் அன்பு மட்டுமே.

அர்த்தநாரியைத் தொடர்ந்து போற்றுகிறார் பட்டர். அபிராமியின் அருளையே எண்ணித் தவமிருப்பதால் இனி வேறு சிந்தனைகளுக்கு இடமுமில்லை நேரமுமில்லை என்கிறார். 'சமயம்' என்ற சொல், இங்கே எதுகை பொருட்டு 'சமையம்' ஆனது. 'எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை' என்பதற்கு 'வேறு மதங்களோ தெயவங்களோ தேவையில்லை' என்று பட்டர் சொல்வதாக அறிஞர்கள் விளக்கியிருக்கிறார்கள். அப்படி இருக்கலாம். அல்லது காலம் என்ற நேர்பொருளாகக் கொண்டு வேறு சிந்தனைகளுக்கு நேரமில்லை என்றும் பட்டர் சொல்லியிருக்கலாம்.

'அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசை' என்பதற்கு 'மூங்கில் போன்ற தோளையுடைய பெண்கள் மீதான மோகம்' என்று அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். சிலர் 'பெண்' என்பதை 'பெண்-ஆண்' என்பதற்கான பொதுச் சொல்லாக எடுத்துக் கொண்டு 'சிற்றின்ப மோகம்' என்ற பொருளில் கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதாவது 'உடல் பற்று இனி அடங்கியது' என்று பட்டரின் வரிகளுக்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்து மத இறையிலக்கியங்களில் எனக்கு உடன்பாடு இல்லாத பலவற்றுள் தலையாயது இப்படிப் பெண்களைக் காரணமில்லாமல் கேவலப்படுத்துவது தான். பெண்களோடு முடிந்த வரை இன்பம் கொண்டாடி விட்டு திடீரென்று 'சிவனே, குகனே, ராமா, க்ருஷ்ணா போதுமப்பா இந்தப் பெண் பித்து, காயமே பொய்...' என்று பெண்ணைப் பலவாறாகத் தரையில் போட்டு மிதித்து விடும் கருத்துக்கள் என்னை மிகவும் வருந்த வைக்கின்றன. 'ஓட்டையில் பிறந்து ஓட்டையில் இருந்து ஓட்டைக்குள் புகும் கேவலம் ஒழிய' என்று விரக்தியாகப் பாடுவது வேடிக்கையாகக் கூட இருக்கிறது. திடீரென்று பெண்கள் கேவலமாகி விட்டார்களா என்று எண்ணத் தோன்றுகிறது. சில அறிஞர்கள் அதற்கும் விளக்கம் சொல்கிறார்கள். பெண்ணைக் கேவலமாகச் சொல்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, பெண்ணாசை என்பதை சபலம், மாயை, மோகம் என்ற பொருளில் அனைவருக்கும் பொருந்துவதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள் (வியாசர் உள்பட). இந்த விளக்கம் இன்னும் மோசமாகப் படுகிறது. உலகத்தில் இருக்கக் கூடிய அத்தனை தீமைகளுக்கும் பெண்ணாசை என்று பெயரிட்டு விடுவதா? பெண்ணைத் தன் உடலில் பாதியாக ஏற்றுக் கொண்ட ஒரு கடவுளை வழிபட்டுப் போற்றிய சைவப் புலவர்களே பெண்களை மிகவும் கீழ்த்தரமாகச் சித்தரிக்கிறார்கள் என்பதை எண்ணும் பொழுது இந்த இரட்டை நிலையை ஏற்கவே முடியவில்லை. ஆதி சங்கரரிலிருந்து இதே கதை தான்.

பட்டருக்கு வருகிறேன். இந்தக் குறிப்பிட்ட பாடலின் கடைசி வரி 'பெண்ணாசை ஒழிந்தது' என்ற பொருளில் வரவில்லை என்று நினைக்கிறேன். ஆசை என்பதற்கு அன்பு என்று பொருள். அமையும் என்ற சொல்லுக்கு அடங்கும் என்ற பொருள் இருப்பது போல் உண்டாகும், நிறையும் என்றும் பொருளுண்டு. அமை என்பதற்கு அழகான, திடமான, மூங்கில், நாணல் என்றும் பொருளுண்டு. தோளியர் என்பதற்கு தோளை உடையவர் என்று பொருள். திடத்தையும் வலிவையும் எடுத்துக் காட்டுவதற்காக மூங்கில் தோளுடையான் என்று ஆண்களைச் சொல்வது வழக்கம். இங்கே திடமான, அழகான, பளபளப்பான என்ற பொருளில் மூங்கில் தோளுடையவள் என்று பெண்ணைக் குறிப்பிட்டிருக்கலாம்; அல்லது நாணல் போல் வளைந்து கொடுக்கக் கூடிய என்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும் இங்கே 'அமையுறு தோளியர்' என்று பட்டர் சொல்லியிருப்பது அபிராமியைத் தான் என்று நினைக்கிறேன். 'தோளியர்' என்ற சொல்லை இறைக்கண்ணியம் கருதி 'தோளியர்' என்று எடுத்தாண்டிருக்கிறாரே தவிர, பன்மை கருதியல்ல என்று நினைக்கிறேன். அபிராமியின் உடலழகை மிகையாக வர்ணித்து விட்டு, கணவருடன் இணைந்திருக்கும் காட்சிகளைச் சொல்லிவிட்டு, அன்னை என்று பலமுறை உருகி வணங்கி விட்டு, அதே அன்னையிடம் 'உன்னால் பெண்ணாசை அழிந்தது' என்று சொல்வார் என்பதை ஏற்க முடியவில்லை. மேலும், பெண்ணாசை ஒழிந்தது என்று கருத்துக்கே இங்கே அவசியமில்லை என்றும் தோன்றுகிறது. அதனால், 'அழகிய தோளுடைய அபிராமி மேலிருக்கும் அன்பு மட்டுமே இனி மனதில் நிறைந்து நிலைக்கும்' என்று பட்டர் பாடியதாகக் கருதுகிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)