2010/07/07

ஏத்தும் அடியவர்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:26 | ராகம்:மோகனம்


ஏத்தும் அடியவர் ஈரேழுல கினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழலணங்கே மணம் நாறுநின் தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே.

நறுமணம் கமழும் கூந்தலையுடைய அழகிய தெய்வப் பெண்ணே! பதினாலு உலகங்களையும் படைத்து, காத்து, அழித்துப் பணி புரிகின்ற உன் அடியவர்களான முப்பெரும் கடவுளரே கடம்ப மலர்களைத் தூவிப் போற்றி வழிபடும் உன் திருவடிகளில், இன்னும் மலராத மொட்டுகளான என் முதிர்ச்சி பெறாத பாடல்களை அணியாகச் சமர்ப்பிக்கிறேன் (தேவர்களின் மலர்களுக்கு இணையாக ஏற்க வேண்டும் தாயே!).

'மணம் நாறு குழலணங்கே, ஈரேழு உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம் அடியவர் கமழ் பூங்கடம்பு சாத்தும், ஏத்தும், நின் தாள்; இணைக்கு என் நா தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே' எனப்பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

'படைத்தல் காத்தல் அழித்தல் எனும் பணிகளைச் செய்யும் பிரம்மா விஷ்ணு சிவன் போன்ற கடவுள்கள் போற்றிப் பணியும் உன் பாதங்களில் என் அற்பச் சொற்களைப் பாடல்களாக ஏற்பது நகைப்புக்குரியது' என்று என்று பட்டர் பாடுவதாக அறிஞர்கள் இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். பட்டரின் தன்னடக்கத்தையும் தன்னிரக்கத்தையும் சுட்டிக்காட்டுவதாக அறிஞர்கள் கருத்து அமைந்திருக்கிறது. உண்மை தான்.

மற்ற தெய்வங்கள் சாற்றி வழிபட்ட மணங்கமழ்க் கடம்ப மலருக்கு இணையாக, பட்டர் தன் பாடல்களை அபிராமி பாதங்களில் சமர்ப்பித்துச் சொல்வதாக நான் எண்ணுகிறேன்.

'புன்மை' என்ற சொல்லுக்கு இன்னும் வளராத, குறையுடைய, முதிர்ச்சி பெறாத, சிறு என்றெல்லாம் பொருளுண்டு. புன்மொழி இங்கே இன்னும் முதிர்ச்சி பெறாத, குறையுடைய மொழி - சொல், பாடல் - என்ற பொருளில் வருகிறது. புன்னகை என்பதில் அற்பத்தனத்தைக் காணாத பொழுது புன்மொழியில் அற்பத்தனத்தைக் காணுதல் பொருந்தவில்லை. நகை என்ற சொல்லுக்கு இயற்பொருளான அணிகலனைத் தவிர இளப்பம், இகழ்ச்சிப் புகழ் என்றெல்லாம் பொருள் உண்டு. நகை என்ற சொல்லுக்கு மொட்டு என்ற பொருளும் உண்டு. இங்கே 'புன்மொழி நகையுடைத்தே' என்பதை பாடல் மொட்டு - இன்னும் மலராத 'பாடல் மலர்' - எனக் கொள்ளலாம். 'தேவர்கள் தூவிய நறுமணம் மிகுந்த தெய்வ மலரான கடம்ப மலருக்கு இணையாக, அழகும் நயமும் மணமும் கலந்த இன்னும் மலர்கின்ற மொட்டான என் தமிழ்ப் பாடலைச் சமர்ப்பிக்கிறேன்' என்று பட்டர் சொல்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. இதில் தன்னிகழ்ச்சியோ தன்னடக்கமோ தேவையில்லை என்பது என் நகையுடைக் கருத்து. தமிழ்ப் பாடல் என்றைக்கும் நகையுடைத்தாகாது என்ற சிறு ஆணவத்தை இங்கே அனுமதிக்க வேண்டும்.

சௌந்தர்யலஹரி, லலிதா சஹஸ்ரநாமம், மகிஷாசுரமர்த்தனி எல்லாவற்றிலும் கடம்ப மலர் சக்திக்கு மிகவும் பிடித்த மலர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பார்வதியின் அவதாரமான மீனாட்சிக்குப் பிடித்த கடம்ப மலர்கள் நிறைந்திருந்ததால் மதுரை நகருக்கு கடம்பவனம் என்று ஒரு பெயர் உண்டு. சக்தியிடமிருந்து மயிலை எடுத்துக் (பிடுங்கிக்) கொண்டது போல், கடம்ப மரம்/மலரையும் அடம் பிடித்து எடுத்துக் கொண்டதும் முருகனுக்குக் கடம்பன் என்று பெயர் வந்ததும் சுவையான கதை. பிள்ளைகளுக்காகத் தியாகம் செய்பவள் தாய் என்பது கடவுள் வகையிலும் பொருந்தும் போல.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் இனிமையான மோகன ராகத்தில் அமைந்திருக்கின்றன. சலிக்காமல் ரசித்தவை.

தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 27 | உடைத்தனை வஞ்சப்பிறவியை...