2010/07/15

வந்தேசரணம் புகுமடியாருக்கு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 34 ராகம்: சண்முகப்ரியா


வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தே னலங்கல் பருமணி ஆகமும் பாகமும்பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.

உன்னைத் தஞ்சம் புகும் அடியவர்களுக்கு பெரும்பேறான இறையுலகத்தை வழங்கும் நீயே, பிரம்மா விஷ்ணு சிவன் எனும் கடவுளராகவும் (அவர்களின் துணைவியராகவும்)- வேதங்களெனும் நெறிகளாவும் - பொன், கடல், மலர், சூரியன், சந்திரன் (இவை விளங்கும் நிலம், நீர், வளி, தீ, வான் எனவும்) எனும் ஐம்பொறிகளின் உறைவிடமாகவும் - விளங்குகிறாய்.

அந்தாதி பாடுவது எந்த விதத்திலும் சுலபமில்லை. கற்பனை, சொல்லாட்சி, பொருட்செறிவு எதுவும் வற்றாமல் தொடக்கத்தையும் முடிவையும் இணைத்துத் தொடர்ந்து நூறு பாடல்களைப் பாடுவது மிக மிக மிகச் சிலருக்கே சாத்தியம். பட்டருக்கு அந்த விதத்தில் என் மதிப்பையும் வணக்கங்களையும் குறையில்லாது சமர்ப்பிக்கிறேன்.

இருப்பினும், அபிராமி அந்தாதி பாடல்களில் என்னைக் குழப்பியடித்த சில பாடல்களில் இது ஒன்று என்று சொல்லிக்கொள்ள விழைகிறேன். பட்டர் தன் எண்ணங்களைப் பொருத்தமாக இணைக்கவில்லை என்று நினைக்கிறேன். குழப்பம் என்னுடைய அறிவு குறைவினாலும் இருக்கலாம். வந்தே, தந்தே, பைந்தே, செந்தே என நிரடும் எதுகைகள் தொடங்கி (ஐகாரம் இலக்கணப்படி சரியே), இணையாமல் அங்கே இங்கே என்று சுற்றும் கருத்தினால் கொஞ்சம் குழப்புகிறது. பல அரிய தமிழ்ச் சொற்களைப் பயன் படுத்தியிருந்தாலும், அவற்றைப் பொருத்தமுற இணைக்காததால் சுவையும் குறைவாகப் படுகிறது. பட்டர் அரை குறையாக விட்ட பாடலோ என்று தோன்றுகிறது.

இந்தப் பாடலுக்குப் பொருள் சொன்ன அறிஞர்களின் கருத்தை வைத்துப் பார்த்தோமானால் இந்த முரண்பாடு இன்னும் தெளிவாகிறதோ என அஞ்சுகிறேன். முதல் ஒன்றரை வரிகளின் 'தஞ்சம் புகுந்தவர்களுக்கு வானுலகத்தை பரிவோடு அளித்து' என்பது புரிகிறது. முந்தைய பாடலின் 'காலனின் அழைப்பில் நடுங்கி அம்மா என்று கதறும் பொழுது அஞ்சாதே என்று சொல்லி ஓடி வந்து காக்க வேண்டும்' என்ற கருத்தோடு ஒட்டி வருகிறது. இதற்குப் பிறகு 'தான் போயிருக்கும்...திங்களுமே' வரிகளை முதல் ஒன்றரை வரிகளுடன் இணைக்க முடியவில்லை. 'வானுலகத்தைக் கொடுத்து விட்டு நீ பிரம்மனாகவும், விஷ்ணுவாகவும், சிவனின் இடது பாகமாகவும் போய் இருக்கிறாய்' என்று சிலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'சரசுவதி, மகாலட்சுமி, துர்க்கையாக இருக்கிறாய்' என்று கடவுளரின் பெண் துணைகளாகச் சிலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். சதுர்முகம் என்பதற்கு பிரம்மன் என்றும் காயத்ரி என்றும் சிலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். திங்களைக் காரணம் காட்டி சந்திரசேகரனின் துணைவி சந்திரசேகரி என்று சிலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். மலரின் மணமாகவும், தேனின் இனிமையாகவும், சூரிய சந்திரர்களின் வெப்ப, குளிர் கதிராகவும் இருப்பவள் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

மூன்றாம் வரியில் வரும் பைந்தேன், அலங்கல், மணி, ஆகம் என்பவை கடலில் இருக்கும் ஒரு கடவுளைக் குறிப்பது போல் தொனித்தாலும் சொற்களைப் பிரித்தால் 'மாலை அணிந்த' என்ற பொருள் மட்டுமே வருகிறது. பைந்தேன் என்பது பசுமையான தேன், அதாவது, புதிய தேன் என்ற பொருளில் வருகிறது. அலங்கல் என்றால் மாலை. பரு என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள். ஆகம் என்பதற்கு உடல், நெஞ்சு என்று பொருள். பாற்கடலைக் கடைந்த பொழுது தோன்றிய அமுதம் (பைந்தேன்) போல் வாடாத, எழில் வற்றாத, ஒளி கொண்ட மணி, மாலை இவற்றை நெஞ்சில் அணிந்த திருமாலையோ மகாலட்சுமியையோ குறிப்பதென்பது அறிஞர்கள் கருத்து. பைந்தேன் அலங்கல் என்பது என்றைக்கும் வாடாத துளசி மாலை என்ற பொருளில் கொள்ளலாம். அந்த வகையில் இந்த வரி விஷ்ணு அல்லது மகாலட்சுமியைக் குறிக்கிறது எனலாம்.

முந்தைய வரியின் சதுர்முகம் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மன் என்ற பொருளில் வந்தாலும், நான்கு வேதங்களையும் குறிக்கும். நான்கு வேதங்களையும் முகமாகக் கொண்டவள் காயத்ரி எனும் பெண் கடவுள் என்பது, பிரம்மன் காயத்ரியை காரணமில்லாமல் காரியத்துக்காக மணம் புரிந்து கொண்ட புராணக் கதையிலிருந்து தெரிய வருகிறது. இந்த வரியின் ஆகம், ஆகமம் என்பதன் சுருக்கமாகவும் இருக்கலாம். ஆகமம் என்பது வேதம். வேதமும் பருவில், கடலில், தோன்றியதாகச் சொல்கிறது புராணம். அந்த வகையில் முந்தைய வரியும் மூன்றாம் வரியும் கொஞ்சம் ஒட்டுகிறது. சக்தியே மகாலட்சுமி, மகாலட்சுமியே காயத்ரி என்று தலையைச் சுற்றித் தொட்டாலும், ஒட்டுகிறது. 'வானுலகம் வழங்கி விட்டு முக்கடவுளாக இருக்கிறாய்' என்ற பட்டர், அடுத்த வரிகளில் 'செந்தேன் மலர், அலர் கதிர் ஞாயிறு, திங்கள் என்று உப கடவுளராகவும் இருக்கிறாய்' என்றதாகவும் விளக்கியிருக்கிறார்கள். 'எல்லாம் நீயே' என்ற பட்டர் பல முறை சொல்லியிருப்பதால் இதையும் ஏற்றுக் கொள்ளலாம்.

எப்படிப் பார்த்தாலும், 'வானுலகம் தந்தே தான் போயிருக்கும்' என்பது தொக்கியே நிற்கிறது. மற்றப் பாடல்களில் போல் கருத்து நிறைவு பெறவில்லை என்பது என் சில்லறை அறிவின் சிறு பிடுங்கல். பட்டர் சொல்லுக்கும் அறிஞர் பொருளுக்கும் இடையே என் சிற்றறிவைக் கொண்டு வர எனக்கு வீரமில்லை. விவேகமும் குறை. அதனால் பாடல் விளங்காவிட்டாலும், அறிஞர்கள் கருத்தின் பின்னே ஒளிந்து கொண்டு 'கடவுளராகவும், நெறிகளாகவும், ஐம்பொறிகளாகவும் இருக்கும் அபிராமியே தஞ்சம் அடைந்தவருக்கு வானுலகத்தையும் அளிக்க வல்லவள்' என்று பட்டர் பாட்டுக்குப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)