2010/07/22

புண்ணியஞ் செய்தனமே...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 41 ராகம்: தன்யாசி


புண்ணியஞ் செய்தனமே மனமே புதுப்பூங் குவளைக்
கண்ணியுஞ் செய்யக் கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணியிங் கேவந்து தம்மடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநஞ் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே.

அப்போது மலர்ந்த குவளை மலர் போன்ற கண்களை உடையவளான அபிராமியும், அவளுடையக் கணவரான சிறப்புமிக்கச் சிவபெருமானும், இணைந்து வந்து அடியார்களான நம்முடன் (என்னுடன்) நெருங்கி இருக்கவும், நம் (என்) தலையில் அவர்களின் தாமரைப் போன்ற பாதங்களை வைத்து அருள் புரியவும், என்ன புண்ணியம் செய்தாய் மனமே?

'புதுப் பூங்குவளைக் கண்ணியும், செய்யக் கணவரும், நம் காரணத்தால் கூடி, தம்மடியார்கள் நடுவிருக்க இங்கே நண்ணி வந்து, நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே பண்ணி, புண்ணியஞ் செய்தனமே மனமே!' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

செய்ய என்றால் அழகிய, சிவந்த என்று பொருளுண்டு. அந்தப் பொருளில் அழகிய கணவர், சிவந்த நிறத்தையுடைய சிவபெருமான் என்று அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் பொருத்தம் தான். 'பொன்னார் மேனியனே' என்று சிவனைப் பாடியிருக்கிறோமே? இருப்பினும், அபிராமியின் அழகையும் குங்கும நிறத்தையும் வானத்துக்கு வர்ணித்துவிட்டு, இங்கே சிவனை சிவந்தவன் என்றோ அழகன் என்றோ பட்டர் அழைப்பாரென்று நான் எண்ணவில்லை. அபிராமி அந்தாதியின் நாயகி, அபிராமி. அதனால், தான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி என்பார் பட்டர் என்று எனக்குத் தோன்றுகிறது. செய்ய என்ற சொல்லுக்கு சிறந்த என்ற பொருளும் உண்டு. அதனால் சிறப்புமிக்க சிவன் என்ற பொருளைச் சொல்லியிருக்கிறேன். நண்ணி என்றால் நெருங்கி என்று பொருள்.

முன் பாடலில் தன்னை ஆள்வதற்கு அபிராமியின் பாதங்கள் உண்டு என்று பாடிய பட்டர் அந்தக் கருத்திலே தொடர்கிறார். சிவனும் சக்தியும் இணைந்து வந்து அடியார்களுடன் தங்கியிருப்பது போதாதென்று, அவர்களின் தலையில் பாதம் பதித்து அருள் செய்வதாகவும் சொல்கிறார். அந்த அருளைப் பெறும் அடியார்களில் ஒருவனாகத் தன்னையும் எண்ணி, அந்தப் பேறு கிடைப்பதற்காக, தான் முன் செய்த நல்வினைப் பயனை வியந்து பாடுகிறார். உடல் அழியும், மனம் (ஆன்மா) அழியாது என்ற இந்துமதத் தத்துவக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது, பட்டரின் முன்வினை அவருடைய மனதுக்கு மட்டும் தான் தெரியும் அல்லவா? அதனால், 'மனமே, நான் செய்த புண்ணியம் என்ன சொல்?' என்று மனதைக் கேட்கிறார்.

ஒரு எளிய புதிருக்கு நேரமிருக்கிறதா? இத்தனை பாடல்களைப் படித்து வந்தீர்களென்றால் இந்தக் கேள்விக்கு விடை சொல்லுங்கள். இந்தப் பாடலின் முதல் சீர்களைப் புரட்டிப் போட்டு இன்னொரு ணகர எதுகைப் பாடல் அமைத்திருக்கிறார் பட்டர். எந்தப் பாடல் என்று சொல்ல முடியுமா?

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் தன்யாசி ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)