2010/07/04

கொள்ளேன் மனத்தில்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:23 | ராகம்:கானடா


கொள்ளேன் மனத்தில்நின் கோலமல்லா தன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்
குள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்குங்களியே அளியவென் கண்மணியே.

என் கண்ணின் மணி போன்றவளே, உன் திருக்கோலத்தைத் தவிர எந்தக் காட்சியையும் மனதில் காணேன்; உன் அடியார்களின் துணையை பிரியேன்; உன்னை வணங்காத பிற மதங்களை விரும்பேன்; (ஏனெனில்) பரந்து விரிந்த மூன்று உலகத்தின் உள்ளும் அண்டமெனும் வெளியிலும் நிறைந்திருக்கும் நீயே என் மகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியை உண்டாக்கும் காரணமாகவும் இருக்கிறாய்.

முந்தைய பாடல்களின் தொடர்ச்சியாக, அபிராமியே எல்லா நிகழ்வுகளாகவும், நிகழ்வுகளின் காரணமாகவும் இருப்பதாகப் பாடுகிறார் பட்டர். அபிராமியை மனதில் நிறுத்தினால் ஏற்படும் களிப்புக்கு அளவும் எல்லையும் ஈடும் இல்லை என்பதே பாடலின் சாரம். கண்களுக்குக் காட்சி தெரியுமே தவிர கோலம் தெரியாது; கோலத்தைத் தெரிவிப்பது அறிவு. இங்கே அபிராமியே கண்ணின் மணியாக இருக்கும் பொழுது அவளைத் தவிர வேறொரு கோலமும் தன் உள்ளத்தில் இடம் பெற வாய்ப்பே இல்லை என்பதைத் தெரிவிக்கிறார் பட்டர். அப்படிப்பட்ட அபிராமியின் கோலம் உள்ளத்தில் ஏற்படுத்தும் மயக்க வைக்கும் அளவுகடந்த மகிழ்ச்சி, போதையூட்டும் கள்ளைப் போல், மூவுலகத்திலும் அதற்கப்பாற்பட்ட அண்டத்திலும் இல்லை என்று பட்டர் கருதுவதாக உட்பொருளைக் கொள்ளலாம். அபிராமியே எங்கும் நிறைந்திருப்பதால், இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நிலைக்கும் எனவும் பொருள் கொள்ளலாம்.

தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 24 | மணியே மணியின்...