2010/07/10

சித்தியும் சித்திதரும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:29 | ராகம்:மோகனம்


சித்தியும் சித்திதரும் தெய்வமாகித் திகழும் பரா
சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவமுயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே.

என்னைக் காத்தருளும் அழகிய பெண்ணே (அபிராமி)! உன்னை எண்ணித் தவமிருப்பவருக்கு அவ்வாறு தவமிருக்கும் எண்ணத்தையும் தவத்தைத் தொடர வேண்டி அறிவையும் சக்தியையும் அளித்து, பின் வெற்றியையும் உயர்வான முக்தியையும் பேரறிவையும் தந்து, காத்தருளுகிறாய்! (ஏனெனில்) எண்ணம், அறிவு, சக்தி, முக்தி, வெற்றி, பேரறிவு எனும் அனைத்தும் நீயே தான்.

சித்தி, சத்தி, முத்தி, புத்தி என ஓசை நயம் மிகுந்த எதுகைகள். சக்தி, முக்தி இரண்டும் எதுகை தொட்டு அவற்றின் தமிழ் வடிவான சத்தி, முத்தி எனவாயின. சிவம் என்பது இங்கே உயர்வு என்ற பொருளில் வருகிறது. சிவபெருமானைத் தழைக்கச் செய்யும் சக்தி அல்லது சக்தியைத் தழைக்கச் செய்யும் சிவபெருமான் என்றும் அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். சித்தி என்ற சொல்லுக்கு அறிவு, வெற்றி என்று பொருள். சத்தி என்ற சொல்லுக்கு பராசக்தி, திறமை, உபாயம், வலிமை என்று பொருள். முத்தி என்ற சொல்லுக்கு மேன்மை, பேரின்பம், வீடு, பிறவாமை என்று பல பொருளுண்டு. வித்து என்ற சொல்லுக்கு விதை, தூண்டுதல், காரணம் என்று பொருள். புத்தி என்ற சொல்லுக்கு அறிவு (காணறிவு), பேரறிவு (பகுத்தறிவு), வெற்றி என்று பொருள். புரத்தல் என்றால் காத்தல். புரத்தை என்பதை புரக்கும்+தை என்று பிரித்து காக்கும் அழகிய பெண் என்று பொருள் சொல்லியிருக்கிறேன்.

படிப்பதற்கு எளிமையானப் பாடலாகத் தோன்றினாலும் பொருள் சொல்லக் கடினமான பாடலென்று நினைக்கிறேன். சுலபமான வழியில் சென்று சித்தியிலிருந்து புத்தி வரைக்கும் எல்லாமே அபிராமி தான் என்று பொருள் சொல்லலாம். ஒன்றிலிருந்து ஒன்று உருவாகும் என்ற வகையில், பல அறிஞர்கள் சொல்லியிருப்பது போல் இவ்வாறு பொருள் சொல்லலாம்: 'சித்தியும் அந்தச் சித்தியைத் தரும் தெய்வமாகவும், ஆதி சக்தியாகவும், சக்தியினால் தழைக்கும் சிவனாகவும், தவம் புரிபவர்கள் பெற விரும்பும் முக்தியாகவும், அந்த முக்தியின் விதையாகவும், அந்த விதையிலிருந்து எழும் ஞானமாகவும், ஞானத்தைக் கொடுத்து காத்தருளும் கடவுளாகவும் இருக்கிறாய் அபிராமியே!'.

கொஞ்சம் புரட்டி எடுக்கிறது பாடல். முக்தியின் விதையாவது? விதையிலிருந்து எழும் புத்தியாவது? முக்தி கிடைத்தபின் சித்தி எதற்கு? உட்பொருளோடும் தமிழ்ச் சொற்களோடும் கொஞ்சம் விளையாடியிருக்கிறார் பட்டர். என் போன்ற சூனியங்களுக்கு இந்தப் பாடல் ஒரு சவால்.

சித்தி, சத்தி இரண்டையும் பார்ப்போம். இந்துமத இறையிலக்கிய, புராணங்களில் ஐந்து சித்தி, எட்டு சித்தி, ஒன்பது சித்தி, பத்து சித்தி என்று ஆளாளுக்குத் தோன்றியபடி சித்திகளை அடுக்கிக் கொண்டே போயிருக்கிறார்கள். கிருஷ்ணர் சொன்னதாகவும், சிவன் சொன்னதாகவும் குறிப்பிட்டால் எவரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்று அவரவருக்குத் தோன்றியதை அட்டவணை போட்டுச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றை ஆய்ந்து பார்க்கையில் ஐந்து வகை சித்திகள் பொதுவாகக் காணப்படுகின்றன. மற்றவை இந்த ஐந்து வகை சித்திகளைப் புரட்டிப் போட்டு உருவாக்கிய கிளை/உப சித்திகள் போல் தோன்றுகிறது. இந்த ஐந்து வகைப் பொது சித்திகள் பின்வருமாறு: 1) கடந்த, நிகழ், எதிர் என்று முக்காலத்தையும் உணர்தல் (முற்பிறவி, இப்பிறவி, வரும்பிறவி என்றும் கொள்ளலாம்), 2) இன்ப-துன்ப, சுக-துக்க, ஜனன-மரண இருநிலை எதிர்நிலை சமநிலைகளை உணர்தல், 3) பிறரின் எண்ணங்களையும் உந்துதல்களையும் உணர்தல், 4) சுற்றி இருக்கும் வான், தீ, வளி, மண், நீர் எனும் இயற்கை நிலைகளின் ஆதிக்கத்தையும் விளைவையும் உணர்தல், 5) கலக்கவோ கலைக்கவோ முடியாதபடி மனதை ஒரு நிலைப்படுத்தி, மற்ற நான்கு சித்திகளையும் பயன்படுத்தி, நம்மையும் சூழலையும் அடக்கி ஆளுதல். சற்று சிந்தித்தால் இவை கடவுள்/மத வகைகளுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை நெறியாகத் தோன்றுகிறது. இந்த நெறிகளின் உருவம் அபிராமி; இவற்றை நமக்குக் கொடுத்தவளும், இவற்றைக் கடைபிடிக்க வைப்பவளும் அபிராமி என்று பொருள் கொள்ளலாம். அதே போல் சக்தியும் ஆயிரம் வகை இருக்கும் போல் தோன்றுகிறது. அத்தனைக்கும் அடிப்படை திறமை, வலிமை, ஒருமை எனலாம். சித்தி பெற சக்தி வேண்டும்; சக்தியாக இருப்பவளும் சக்தியைக் கொடுப்பவளும் அபிராமி என்று பொருள்.

முக்தி, முக்திக்கு வித்து, புத்தி... இவற்றைப் பார்ப்போம். முக்திக்கு விதையானவள் அபிராமி என்ற அறிஞர்களின் பொருளை ஏற்றுக் கொண்டாலும், பொருளின் பின்னே இருப்பது என்ன என்று கேட்கத் தோன்றுகிறது. சக்தியை முன்னர் மரமென்றது போல் இங்கே முக்தி மரமாக்கி விட்டார்களா? முக்திக்கு எது விதை? விதையிலிருந்து புத்தி எப்படி முளைத்தெழும்? அப்படியென்றால் புத்தி மரமா? பட்டர் இப்படிப் புரட்டி எடுக்கிறாரே? இந்தப் புரட்டலுக்காகவே அபிராமி நிலவை எறிந்திருக்க வேண்டும்.

இறையிலக்கியங்களிலும் புராணங்களிலும் முக்திக்கான பாதை (விதை) விளக்கப்பட்டிருக்கிறது. எப்படி விதையானது படிப்படியாக வளர்ந்து மரமாகிறதோ, அதே போல் முக்திக்கான விதையும் இறைவனின் அருகில் செல்லும் முதல் நிலையிலிருந்து படிப்படியாக வளர்ந்து இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஐந்தாவது நிலையை அடைந்த பிறகே முக்தி எனும் நிலையை அடைகிறது. ஒவ்வொரு நிலையிலும் இறைவனோடு சேரவேண்டிய அறிவும் வளர்கிறது. இந்த அறிவு குறையாமல் வளர முக்திப் பாதையில் செல்வோர் ஒவ்வொரு நிலையிலும் செய்ய வேண்டியவையும் கடைபிடிக்க வேண்டியவையும் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இறைவனுக்கு அண்மையைப் பெறுவதில் முதல் நிலை தொடங்குகிறதே? அப்படியானால் அது இறந்த பின் நிகழ்வதா, இருக்கும் பொழுதே நிகழ்வதா? இதை அவரவர் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன். அப்படி இறந்த பின் நிகழ்வதானால் நிச்சயம் இன்னொருவரின் துணை வேண்டும்; இறந்த பின் என்னவாகும் என்று நமக்குத் தெரியாதே? எப்படி நிகழ்ந்தாலும் இது போன்ற நிலைகளின் எண்ணம் நம் மனதில் உருவாக வேண்டுமே? சாதாரண அறிவுக்கு இந்த எண்ணங்கள் தோன்றுமா? முக்திக்கான எண்ணமே தோன்றவில்லையென்றால் பயணம் சாத்தியமில்லையே? அப்படிப் பட்ட எண்ணமே பேரறிவென்றால், பேரறிவுக்கான எண்ணங்களுக்கு எது தோற்றுவாய்? அதைத்தான் முக்திக்கு வித்து என்றார் பட்டர். அபிராமியே முக்திக்கு வித்தாகவும், முக்தியின் பாதையில் செல்லும் பொழுது தொடர்ந்து வளரும் அறிவாகவும், அறிவு குறையாமல் காப்பவளாகவும் இருப்பதாகச் சொல்கிறார்.

பிறவிச் சுழலில் சிக்கி மனம் கலங்கியிருக்கும் மனிதருக்கு சம நிலை எனும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தி, பிறவா நிலை எனும் முக்தி பெற வேண்டிய முதிர்ந்த எண்ணத்தைத் தோற்றுவித்து, முக்தியின் ஐந்து (பல) நிலைகளைக் கடக்கத் திறமையும் வலிமையும் கொடுத்து, நிலைகளின் இடையே அறிவு பிறழாமல் ஒருமைப்படுத்தி வளர்த்து, முடிவில் உயர்வான முக்தி எனும் வெற்றியைக் கொடுத்துக் காப்பவள் அபிராமி. இது தான் பாடலின் சாரம்.

குடும்பக் கிளைக்கதை: எங்கள் பாட்டியை (அம்மாவின் தாய், கூட்டுக் குடும்பம் காரணமாக) சித்தி என்று தான் எல்லாருமே அழைப்போம். எனக்கு என் சித்தி, என் அம்மாவை விட ஒரு படி மேலே என்பேன். 'சித்தி தரும் தெய்வம்' என்று என் அம்மா பாடும் போதெல்லாம், சித்தியைக் கொடுத்த கடவுள் என்று பாடுவதாகக் கொள்வேன். பொருள் புரியாத அன்றைக்கும் பொருத்தமாகத் தோன்றியது; பொருள் புரிந்த இன்றைக்கும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 30 | அன்றே தடுத்து...