2010/07/26

தொண்டு செய்யாது...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 45 ராகம்: தன்யாசி


தொண்டு செய்யாதுநின் பாதம்தொழாது துணிந்திச்சையே
பண்டு செய்தாருளரோ இலரோ அப்பரிசடியேன்
கண்டு செய்தாலது கைத்தவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றேபின் வெறுக்கையன்றே.

உன்னைப் பணிவதையும் உனக்குத் தொண்டு செய்வதையும் விடத் தன் கடமையைப் பெரிதென நினைப்பவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, அந்தச் செய்கை உன் அருளுக்குப் பாத்திரமான சிறப்புடைய செய்கையோ இல்லையோ, (எப்படியிருந்தாலும்) நான் முன்பு செருக்குடன் அவ்வாறு ஏதாவது செய்திருந்தால் என்னை வெறுக்காமல் என் தவறைப் பொறுக்க வேண்டும்.

சொல்லழகும் உட்கருத்தும் நிறைந்தச் சுவையான பாடல்.

முக்தி எனும் பெரும்பேற்றை அடையப் பல வழிகளுண்டு என்கிறது இந்துமதம். முக்தி எனும் பிறவா நிலையடைய பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம், ஞான யோகம் என்று பலவகைப் பாதைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. பக்தி யோகம் இருப்பதிலேயே சுலபமானது. ஒரு வேலையும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது. ராமா, க்ருஷ்ணா, தேவி, பராசக்தி என்று உருகி உருகி பக்தி செலுத்தினால் போதும், முக்தி உத்தரவாதம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. என் போன்றவருக்கு வசதியான பாதை. கர்ம யோகம் என்பது கடமையை வழுவாமல் செய்வதினால் கிடைக்கும் பேரின்ப நிலைக்கான பாதை. கீதையின் சாரம். கடவுளை வணங்காவிட்டாலும் பரவாயில்லை, கடமையிலிருந்து தவறாதிருத்தலே கடவுளையடைய வழியாகும் எனும் தத்துவம். இந்தப் பாதையில் கொஞ்சம் உடல் வணங்கித் தொழில் செய்ய வேண்டும். என் போன்ற சோம்பேறிகளை இரண்டு மூன்று முறை சிந்திக்க வைக்கும் பாதை. நாத்திகனாக இருந்தாலும் கடமையைச் செய்தால் பிறவாமை கிடைக்கும் (அப்படி ஒன்று இருந்தால்) என்ற கருத்தின் முரண்பாட்டை எண்ணி வியந்திருக்கிறேன். அப்படியல்ல, கடவுளை வெறுப்பவர் கூட கடவுளையே எண்ணியிருப்பதால் அந்த எண்ணமே அவர்களுக்கு நற்பலனைக் கொடுத்து விடுகிறது என்கிறது புராணம். கடவுள், தாய், தந்தை, மக்கள், மனைவி என்ற பந்த பாசங்களுக்கு அடிமையாகாமல், பந்த பாசங்களின் வலிய பிடிக்குக் கட்டுப்படாமல், செய்ய வேண்டிய கடமையைச் செய்வதே கர்மயோக இலக்கணம். கர்மயோகிகள் பக்தி வழியில் செல்ல வேண்டிய அவசியமில்லை. பக்தி வழியில் செல்பவர்களுக்கு எப்படிக் கடவுளைத் தவிர மனதில் வேறெந்த நினைவுமில்லையோ, கர்மயோகிகளுக்குத் தங்கள் கடமையைத் தவிர வேறெதற்கும் மனதில் இடமில்லை. இதே வழியில் ராஜயோகம் (சுவாமி விவேகானந்தர்), ஞானயோகம் (ஆதி சங்கரர்) என்று மற்ற யோகங்களுக்கும் விளக்கமும் உதாரணமும் சொல்லலாம். இருப்பினும், கடவுள் நம்பிக்கையோ பக்தியோ இல்லாதவர்களைக் கர்மயோகிகள் எனலாமா? (கர்மயோகி என்றால் நாத்திகன் என்பது குதர்க்கம் என்கிறார் நண்பர் ராகவன் அன்புடன்).

பட்டர் பாட்டுக்கு வருவோம். "தாயே அபிராமி, உன்னுடைய இன்னொரு பிள்ளை இருக்கிறானே.. அதான் க்ருஷ்ணன்... அவன் கீதையில் 'கடமையே தர்மம், தர்மத்தை செய், பிறவாமை தருகிறேன்' என்று பலவாறாக ஆசை காட்டியிருக்கிறான். அதை நம்பிக் கடமையைச் செய்தவர்களுக்கு உன் அருள் கிடைக்குமா என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால், நீ க்ருஷ்ணனுக்கும் மேலான இறைவியாயிற்றே? க்ருஷ்ணன் கொடுத்தது உறுதிமொழி; நீ சொல்வது தானே இறுதிமொழி? க்ருஷ்ணன் போன்றோரை நம்பி நானும் முற்பிறவியில் அப்படி ஏதாவது செய்திருக்கலாம். அதற்காக என்னை வெறுத்து ஒதுக்கி விடாதே. இதோ, இந்தப் பிறவியில், உனக்குத் தொண்டு செய்வதைத் தவிர, உன்னைப் பணிந்து வணங்குவதைத் தவிர, உன் அழகையும் அருளையும் உருகிப் பாடுவதைத் தவிர... நான் வேறு எதுவும் செய்ய்ய்ய்யவில்லை" என்று அபிராமிக்கு அழுத்தமாக நினைவூட்டுவது போல் அமைந்திருக்கிறது பாடல். அபிராமியுடன் பட்டர் நிகழ்த்தும் இவ்வகைத் தர்க்கங்கள் சுவையானவை. "உன் மேல் பக்தி இருப்பதனால் தானே, என் மனமெல்லாம் நீயே நிறைந்திருப்பதனால் தானே, திதி தெரியாமல் உளறினேன்?" என்று பட்டர் மறைமுகமாகப் புலம்புவதையும் எண்ணிப் பார்த்து ரசிக்க முடிகிறது.

பண்டு என்றால் பழைய, முன்பு என்று பொருள். அப்பரிசு என்றால் 'அந்த வகை' என்று பொருள். மிண்டு என்றால் ஆணவம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)