2010/09/18

குயிலாய் இருக்கும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 99 ராகம்: மத்யமாவதி


குயிலா யிருக்குங் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலா யிருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த
வெயிலா யிருக்கும் விசும்பிற் கமலத்தின் மீதன்னமாம்
கயிலா யருக்கன்று இமவானளித்த கனங்குழையே.

கடம்ப வனமாகிய மதுரையில் குயிலாகவும், அழகிய இமயமலையில் மயிலாகவும், வானில் ஒளி வீசும் ஞாயிறு போலவும் தாமரை மேல் அமர்ந்திருக்கும் அன்னம் போலவும் இருக்கும் (ஒளி வீசும் அபிராமியான), பொற்குண்டலங்கள் அணிந்த உன்னையே அன்று இமயத்தரசன் கைலாச நாதனான சிவனுக்கு மணமகளாக அளித்தான் (என்று அறிந்துகொண்டேன்).

குயிலும் அவளே குரலும் அவளே என்கிறார் பட்டர்.

'என்ன பட்டரே, அபிராமியை வடிவம் கொண்டு அழைப்பது நகைப்புக்குரியதென்று சொல்லி விட்டு இப்பொழுது ஒரு படி மேலே போய், இப்படிக் குயில் மயில் ஞாயிறு அன்னம் என்று தோன்றியபடியெல்லாம் சொல்கிறீரே, எதுவும் பொருத்தமாகவே இல்லையே?' என்று பட்டரைக் கேட்க முடியாது. காரணம், முன் பாடலொன்றில் 'மெய் புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து சுரும்பிற் களித்து மொழி தடுமாறிப் பித்தராவர்' என்றிருக்கிறார். அபிராமியின் அண்மை அவரைப் பித்தனாக்கி விட்டது என்று தொலைநோக்குடன் முன்னெச்சரிக்கை கொடுத்து விட்டார். மொழி தடுமாறியவர் சொல்வதையெல்லாம் இனி நாம் தான் பொருள் மாற்றிக் கொள்ள வேண்டுமா? இதென்ன, புது வம்பு?

என்ன சொல்கிறார் பட்டர்? குயில், மயில், வெயில், அன்னம் இவையெல்லாம் ஆகிவந்தவை என்பதை பட்டர் தமிழை இது வரை படித்தவர்கள் உடனே புரிந்து கொண்டிருப்பார்கள். இன்னும் கொஞ்சம் உரித்துப் பார்ப்போம். கடம்ப அடவி இங்கே மதுரையைக் குறிக்கிறது. கடம்ப அடவிக்குயில் மதுரை மீனாட்சியைக் குறிக்கிறது. இமயாசல மயில் கைலாசப் பார்வதியைக் குறிக்கிறது. விசும்பில் உதித்த வெயில் சிதம்பரச் சிவகாமியைக் குறிக்கிறது. விசும்பு என்றால் வானம். பஞ்சபூதங்களில் சிதம்பரம் வானத்தைக் குறிப்பதை அறிவோம். வானில் உதித்த ஒளி, சிவனுக்குத் தோன்றிய சக்தி என்ற பொருளில் வருகிறது. கமலத்து அன்னம் திருவாரூர் கமலாம்பாளைக் குறிக்கிறது.

[உபரி: திருவாரூர் கோவிலின் பிரம்மாண்டத்தை என் சிறுவயதில் பார்த்து, பயந்து ரசித்திருக்கிறேன். தாமரைக்குளத்தின் பின்னணியில் பார்வதி-விஷ்ணுவின் சச்சரவும் சாபமும் கலந்தப் புராணக்கதை ஒன்று உண்டு. ஹம்சத்வனி ராகத்தின் வரலாற்றுக்கும் தாமரைக்குள அன்னத்திற்கும் தொடர்பு உள்ளதாகச் சொல்லபடுகிறது. திருவாரூர் கோவிலின் பிள்ளையார் 'வாதாபி கணபதி' என்று பொருத்தமாக அழைக்கப்படும் ஒற்றுமையை எண்ணி வியந்திருக்கிறேன்.]

பட்டர் பாட்டுக்குத் திரும்புவோம். குயிலும் மயிலும் வெயிலும் ஒயிலும் முறையே மதுரை, கைலாசம், சிதம்பரம், திருவாரூர் ஆலயங்களின் சக்தி வடிவங்களைக் குறிக்கின்றன. கடவூரில் தோன்றித் தனக்குக் காட்சியளித்தவள் பிற ஆலயங்களில் இருக்கும் சக்தியே என்று தன் பாடல் வழியாகப் பட்டர் உறுதிப்படுத்துவதாக நினைக்கிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)