2010/09/14

நன்றே வரினும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 95 ராகம்: பாகேசுவரி


நன்றே வரினும் தீதே விளைகினும் நானறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கேபரம் எனக்கு உள்ளயெல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன் அழியாதகுணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே.

என்றைக்கும் அழிவில்லாத நிலையுள்ளவளே, அருட்கடலே, இமையவனுக்குப் பிறந்த தாமரையே (அபிராமி), என் உடைமைகள் யாவும் எனதன்று உனதென்று என்றோ துறந்து விட்டேன்; (எனை ஆட்கொண்டதால்) இனி நன்மை தீமை எனப் பகுக்கும் அறிவைத் துறந்து, பற்றற்ற நிலை அடைந்தேன்.

பரம் என்றால் துறப்பது. பற்றற்றவர் என்பதால் பரம்பொருள் கடவுளின் பெயர்க்காரணம் ஆனது. குன்று திடமானது; நிலையானது. அபிராமிக்கு அழிவில்லை என்ற பொருளில் வருகிறது. கடல் ஆழமானது, அகண்டது, கைக்கும் கண்ணுக்கும் எட்டாதது. அபிராமியின் அருள் கைகளாலும் கண்களாலும் அள்ள அள்ள வற்றாத அகண்ட கடல் எனும் பொருளில் வருகிறது. இமவான் மலையரசன். வலியவன். கோமளம் என்றால் தாமரை. மெலியது. வலியவனுக்குப் பிறந்த மெல்லியள் என்பதில் அடங்கியிருக்கும் சுவையான முரண், அடியவரைப் பொறுத்துக் கொடியவரை ஒறுக்கும் தன்மையவள் என்ற பொருளில் வருகிறது.

'எனக்கு உள்ளவெல்லாம்' என்பது ஆழமான எண்ணம். நம் உடைமைகள் என்று கணக்கெடுத்தால் எங்கே தொடங்குவோம்? பணம், வீடு, நிலம், மக்கள் என்று வெளிச் செல்வங்களைத் தான் முதலிக் கணக்கெடுப்போம். 'கொண்டு வந்ததென்ன இங்கே கொண்டுபோக?' என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் உடைமைகளுக்கான விளக்கமே மாறி விடுகிறது. நாம் விடும் மூச்சு தான் நமது. நம் உடல், உயிர் மட்டுமே நமது. இந்தக் கூடும் ஆவியும் நமதென்ற கண்ணோட்டம் வரும்பொழுது சேர்ந்தவை எல்லாம் சோர்ந்தவை எனும் பக்குவம் வந்துவிடுகிறது. பட்டர் 'எனக்கு உள்ளவெல்லாம்' என்றது தன் உடலையும் உயிரையும். அவையும் அபிராமியின் சொந்தம் என்று துறந்துவிட்டால், அவை பொருட்டு அவர் செய்யும் வினைகளும் அபிராமிக்குத் தானே சொந்தம்?

'நன்றே வருகினும் தீதே விளைகினும்' என்பதற்கு 'நன்மை தீமை வந்தாலும்' என்று பொருள் கொள்ளலாம். 'என்னுடையதெல்லாம் உனதென்று வழங்கி விட்டேன் அபிராமி; இனி எனக்கு நன்மை வந்தாலும் தீமை உண்டானாலும் ஒரு பொருட்டும் இல்லை' என்று பொருள் கொள்ளலாம்.

பட்டர் இதற்கு முன் 'அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய்... கரையேற்றுகை நின்திரு உளமே' என்றும் 'இனியான் பிறக்கின் நின்குறை' என்றும் பாடியது நினைவிருக்கும். இந்தப் பாடலைப் பாடும் பொழுது அபிராமியைக் கண்டு பித்தரானதையும் அறிவோம். அந்தக் கட்டத்தில், 'நன்றே வருகினும் தீதே விளைகினும்' என்றது, 'நன்மை தீமை வருவது இருக்கட்டும்; அவை யாதென அறியும் அறிவைக் கூட இழந்து விட்டேன்' என்ற பற்றற்ற நிலையடைந்த பரவசத்தில் பாடுவதாகவே நினைக்கிறேன்.

'அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்
குன்றே அனையாய் எனையாட் கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறெனக் குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே'
            என்ற திருவாசகப் பாடலின் வரிக்கு வரி கருத்துப் பொருத்தம் நினைவுக்கு வருகிறது.

இந்தப் பாடல் தொடங்கி நான்கு பாடல்கள் பாகேசுவரி ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)