2010/09/15

கோமள வல்லியை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 96 ராகம்: பாகேசுவரி


கோமள வல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை ஏத மிலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமள வுந்தொழுவா ரெழுபா ருக்குமா திபரே.

இவ்வாறென விவரிக்க இயலாத அளவில் விளங்கும் பசுமை நிறத்தவள், அனைத்துக் கலைகளும் அறிந்தவள், அழகான மயில் போன்றவள், குறையில்லாத வடிவுடையவள், தாமரைக் கொடி போன்றவள், தாமரையுள் வசிக்கும் யாமளையை (அபிராமியை) தன்னால் இயன்ற அளவுக்கு வணங்கி வழிபடுவோர் ஏழு உலகுக்கும் தலைவராவார்கள்.

ஏதம் என்றால் குறை, பிழை. யாமளை என்றால் பாதுகாப்பு வழங்கும் தலைவி என்று முன்னர் பார்த்தோம். 'சாமள' நிறம் பச்சை அல்லது கருமையைக் குறிக்கும். 'ஆமளவு' என்பது 'ஆகும் அளவு' என்பதன் திரிபு. 'எழுபாருக்கும்' என்பதை ஏழு+பாருக்கும் என்று பிரிக்க வேண்டும்.

அபிராமியை வணங்குவோருக்கு ஏழுலகு ஆளும் பேறு கிடைக்கும் என்கிறார். பற்றற்ற நிலையும் பிறவாமையும் வேண்டுவோர் ஏழு உலகையும் ஆளும் மாட்சியை விரும்புவார்களா? 'எனக்கு உள்ளவெல்லாம் உனதென்று அளித்து விட்டேன்' என்று துறந்தவர்கள் ஆட்சிப் பொறுப்பை விரும்புவார்களா? பட்டர் என்ன சொல்கிறார்? ஏழுலகுக்கும் அதிபராக இருப்பவர்களுக்கு என்ன மதிப்பும் சலுகையும் கிடைக்கும்? சென்ற இடமெல்லாம் சிறப்பும், வணக்கமும், போற்றுதலும் கிடைக்கும். ஏழுலகுக்கும் அதிபரானவர்கள், கடவுளைப் போன்றவர்கள். 'அபிராமியை அடைந்தவர்களை அனைவரும் வணங்குவர்' என்பதே பட்டர் சொன்ன 'எழுபாருக்கும் அதிபர்' என்பதன் உட்பொருள்.

'ஆமளவும் தொழுவார்' என்பதற்கு, தன்னால் இயன்ற வரை தொழுகிறவர் என்று பொருள் கொள்ளலாம். 'ஏதோ என்னால் முடிந்த ஒரு கும்பிடு' என்பது ஒரு வகைத் தொழுகை. 'எண்ணம் மூச்சு எல்லாம் நீ' என்றுக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பித்தராய் வழிபடுவது இன்னொரு வகைத் தொழுகை. இயன்ற அளவு என்பது மாறுதலுக்குட்பட்டது. இன்றைக்கு இயன்ற அளவு நாளைக்கு அதிகமாகித் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகலாம். அபிராமியின் மேல் வைத்த அபிமானத்தைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதே வரிகளின் சாரம். 'தம்மால் ஆமளவு' என்பது இங்கே 'உடல் பொருள் ஆவி என்று துறக்கத்தக்க அனைத்தையும் துறந்து' என்ற பொருளில் வருகிறது. கடவுளின் அண்மை கைகூப்புவதால் வருவதில்லை என்பது பட்டர் சொல்லின் உட்பொருள் என்று நினைக்கிறேன். ஆழ்ந்த நம்பிக்கையே இதன் அடிப்படை. 'பல்லவமல்லது பற்றொன்றிலேன்' என்ற பட்டர் வரிகள் நினைவிருக்கலாம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)