2010/09/08

சிறக்கும் கமலத்திருவே...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 89 ராகம்: ரஞ்சனி


சிறக்கும் கமலத்திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியமற்ற
உறக்கம் தரவந்து உடம்போடு உயிர் உறவற்று அறிவு
மறக்கும் பொழுது என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.

உன் திருவடிகளில் தலை வைத்துப் பணிவோருக்குப் பேருலகம் தந்தருளும், தாமரை போல் உயர்ந்த அழகியே (அபிராமி), என் உடலும் உயிரும் பிரியும் மயக்க நேரத்தில், இனி மயக்கமில்லாத உறக்கத்தை (எனக்கு) வழங்குவதற்காக நீ உன் துணைவருடன் என் முன் தோன்ற வேண்டும் என விரும்புகிறேன்.

'நின் சேவடி சென்னி வைக்கத் துறக்கம் தரும் சிறக்கும் கமலத் திருவே! உடம்போடு உயிர் உறவற்று அறிவு மறக்கும் பொழுது துரியமற்ற உறக்கம் தர வந்து நின் துணைவரும் நீயும் என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

துறக்கம் என்றால் தேவருலகம், வீடு, பேருலகம் என்று பொருள். பட்டருக்குத் தேவருலகம் ஒரு பொருட்டேயில்லை. அபிராமியின் காலடிகளில் தன் தலையை வைத்த அன்றைக்கே தேவருலகம் கிடைத்துவிட்டது என்று நம்பினார். அதனால் 'காலடியில் தலை வைத்தவருக்கெல்லாம் பேருலகம் வழங்கும் பார்வதி' என்றார். பட்டருக்கு வேறு என்ன தேவை? அபிராமியை நேரில் கண்டவுடன் பட்டர் கேட்ட வரம் யாது?

உயிருடன் இருக்கும் பொழுது அபிராமியையே எப்பொழுதும் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார் பட்டர். உயிர் பிரியும் கணத்தில் மயங்கி விட்டால்? அந்தக் கணத்தில் அபிராமியை நினையாதிருந்து விட்டால்? அப்படி ஒரு அச்சம் தோன்றியிருக்கிறது பட்டருக்கு. அதனால், 'தாயே, என் உடலுடன் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கையில் உன்னை நினைக்க வேண்டும் என்று என் அறிவு சொல்கிறது; உன்னை நினைத்து வணங்கச் சொல்வதே என் அறிவுக்கு வேலை, எனினும், உடலும் உயிரும் பிரியும் பொழுது, அறிவு தன் செயலை மறக்கும் அந்த ஒரு கணத்தில் நான் உன்னை நினையாதிருந்து விட்டால் என்னை ஒதுக்கி விடாதே' என்கிறார். உடலும் உயிரும் சேரும் நிலையிருந்தால் தானே இந்த மயக்கம்? அத்தகைய மயக்கமே இல்லாத உறக்கம் உண்டா? தன்னை முழுதும் அறியும் யோக நிலைக்கு துரியம் என்று பெயர். அந்த நிலையும் இல்லாத நிலை எந்த நிலை? பிறவா நிலை. அதைத் தான் கேட்கிறார் பட்டர். துரியமற்ற உறக்கம் பிறவாமையைக் குறிக்கிறது. 'கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன? உன் மேல் நான் கொண்ட பக்தி தான்' என்று பாடுகிறார் பட்டர். உடலைப் பிரியும் அந்தக் கணத்தில், அறிவு அடங்கும் அந்த நேரத்தில், தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற வரத்தைக் கேட்கிறார் பட்டர். அபிராமியையும் அவர் துணைவரையும் (சாட்சி வேண்டாமா?) வருந்தி அழைக்கிறார்.

உடலை விட்டு உயிர் பிரியும் அந்த மயக்க நிலையை எண்ணிப் பார்க்கும் பொழுது சிலிர்க்கிறது. நம்பிக்கையற்றவரையும் கொஞ்சம் சிந்திக்க வைக்கும் பாடல் இது என்று நினைக்கிறேன். கடைசித் தருணத்திலும் பட்டர் அபிராமியை நினைக்க வேண்டும் என்றார். நான் என்ன நினைப்பேன் என்று அடிக்கடி வியந்திருக்கிறேன்.

உருக வைக்கும் பாடல்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)