2010/09/17

தைவந்து நின்னடி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 98 ராகம்: பாகேசுவரி


தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்ததெங்கே
மெய்வந்த நெஞ்சினல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகலறியா மடப்பூங்குயிலே.

அழகும் இளமையும் கொண்ட பூங்குயிலே! (அபிராமி!), உண்மையான அன்பு செலுத்தும் அடியார்கள் மனதை விட்டுப் பொய்யான அன்புடன் உன்னை வணங்கும் பகட்டுத் தந்திரக்காரர்களின் மனதில் ஒரு நாளும் குடிபுகாதவளான உன்னுடைய தாமரைப் பாதங்களில் மலர்மாலை வைத்த சிவனின் கைகளில் அக்கினியைக் காணவில்லை, தலையில் கங்கையுமில்லை; எங்கே ஒளிந்தன?

முன் பாடல்களில் அபிராமியை வணங்கும் அனைத்து தேவர்களைப் பற்றி விவரித்தவர், இந்தப் பாடலில் அபிராமியை வணங்கும் முறையைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

'தை' என்ற சொல்லுக்கு 'தைக்கத்தகுந்த' என்று ஒரு பொருளுண்டு. 'தை வந்து நின்னடி சூடிய' எனும் அடியின் முழுப்பொருளையும் அறிகையில், 'தை வந்து' என்பது இங்கே 'மலர் மாலை' என்ற பொருளில் வருவது தெளிவாகிறது. சங்கரன் இங்கே சிவனைக் குறிக்கிறது. 'கை வந்த தீ', தாருகாவனத்து அக்கினி அசுரனை அடக்கித் தீயைப் பூச்செண்டு போல் கையில் எடுத்துக்கொண்டதைக் குறிக்கிறது. 'தலை வந்த ஆறு', தன் வேகத்தை யாராலுமே தாங்க முடியாது என்ற வீராப்புடனிருந்த ஆகாய கங்கையை அடக்கியதைக் குறிக்கிறது. இரண்டுமே சுவையான புராணக் கதைகள். கரத்தல் என்றால் ஒளித்தல், மறைத்தல். (உபரி: ஒளித்துண்ணும் குணம் கொண்ட 'காகம்' என்ற பெயர், 'கரதம்' என்ற சொல்லின் மருவிய வழக்கு). விரகு என்றால் தந்திரம், சாமர்த்தியம், பகட்டு. மடம் என்றால் அழகு, இளமை என்றும் பொருள்.

உண்மையான அன்புடன் வணங்க வேண்டும் என்று பட்டர் சொல்வது புரிகிறது. அதற்கும், சிவன் கையில் தீ காணாமல் போனதற்கும் என்ன தொடர்பு? பொருத்தமாகத் தோன்றவில்லையே? கொஞ்சம் சிந்தித்தால் புரியும்.

அபிராமியைக் கடவுளர் யாவரும் வரிசையாக வணங்குவதைப் பார்த்து விவரிக்கும் பட்டர் கண்ணோட்டத்தில் தொடர்வோம். முதலில் மூத்த கடவுள்கள், தேவர்கள், முனிவர்கள் என்றவர் அடுத்த பாடலில் கந்தன், கணேசன் என்று பெயர் சொல்லி விவரிக்கிறார். எல்லாக் கடவுளரும் அடக்கதோடு அவளை வணங்குவதைக் கவனிக்கிறார். முதல் தேவர் யாவருக்கும் மூத்தவள் அல்லவா அபிராமி? அவளை வணங்கும் பொழுது எந்த விதப் பகட்டும் இல்லாமல் தமியேனாக வணங்க வேண்டும், ஆடம்பரம் தவிர்த்து அடக்கத்தோடு வணங்க வேண்டும் என்று தெளிகிறார். தன் மனதில் அபிராமி குடிபுகுந்த காரணம் இப்போது அவருக்குப் புரிகிறது. 'மெய்யான அன்புடன் அவளை வணங்கினால் அவளுடைய அண்மை கிடைக்கும்' என்பதை எப்படித் தமிழருக்கு விளக்குவது? இதற்கு என்ன உதாரணம் சொல்வது என்று நினைக்கிறார். சிவனைப் பார்க்கிறார். எந்த வித அலங்காரமும் இல்லாமல் எளியவனாக அபிராமி திருவடிகளில், தைத்த மலர் மாலை அணிவித்து வணங்குவதைப் பார்க்கிறார். 'சரி தான், சிவனுக்கே இந்த நிலையா? தன் உடலின் வலதுபாகத்தைக் கொடுத்து இணையாக ஏற்றுக்கொண்ட சிவனுக்கே இந்த நிலையை உருவாக்கியிருக்கிறாளே அபிராமி?' என்று வியந்து அதையே உதாரணமாகச் சொல்கிறார். கங்கையின் செருக்கையும் அக்கினியின் திமிரையும் அடக்கியவர் என்ற அந்தஸ்தில் அவற்றோடு அபிராமியின் முன்னே தோன்றினால், 'எங்கே தன்னைப் பகட்டுக்காரன், சாமர்த்தியசாலி என்று நினைத்து அபிராமி தன் மனதிலிருந்து விலகி விடுவாளோ' என்று அஞ்சிய சிவன் எல்லாவற்றையும் விலக்கி சாதாரணனாக அபிராமியை வணங்குவதை எடுத்துச் சொல்கிறார்.

சிவனின் கையில் இருக்கும் தீ, மனிதருடைய மூச்சுக்காற்றைக் குறிக்கிறது என்ற பொருளில் வரும் 'முத்தீ கொளுவி முழங்கொலி வேள்வியுள் அத்தியுரியர னாவதறிகிலர்' என்ற திருமந்திரப் பாடலும் நினைவுக்கு வருகிறது. மனிதரின் மூச்சுக்காற்றை (உயிரை) நினைத்த மாத்திரத்தில் அடக்கும் திறன் படைத்த அழிக்குங்கடவுளான சிவனே அபிராமியை அடக்கமாக வணங்கி வழிபடும் பொழுது நமக்கென்ன பகட்டு வேண்டியிருக்கிறது என்று பட்டர் திருமூலர் பாணியில் நினைத்திருக்கலாம்.

சம கடவுளென போற்றப்படும் சிவனே அடக்கமாக இருக்கும் பொழுது, சாதாரணரான நாம் பகட்டும் ஆடம்பரமும் நீக்கி அபிராமியை உண்மையான மனதுடன் வழிபட வேண்டும் என்பதே பட்டர் பாடலின் சாரம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)