2010/09/02

விரவும் புதுமலர்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 83 ராகம்: ஹடானா


விரவும் புதுமலரிட்டு நின்பாத விரைக் கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லாரிமை யோரெவரும்
பரவும் பதமும் அயிரா வதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக்காவும் உடையவரே.

(அபிராமியே) புதிதாக மலர்ந்த தேன் அடங்கியப் பூக்களை உன் தாமரைப் பாதங்களில் இட்டு அல்லும் பகலும் வணங்குவோர், தேவர்களுக்குரித்தான பதவியும், செல்வாக்கும், செழிப்பும், பேரறிவும், வலிமையும், செல்வங்களும் கிடைக்கப் பெறுவர்.

'விரை விரவும் புதுமலர் நின்பாதக் கமலம் இட்டு இரவும் பகலும் இறைஞ்ச வல்லார்...' எனப்பிரித்துத் தொடர வேண்டும். விரை என்றால் தேன். விரவுதல் என்றால் அடங்குதல், கலத்தல், பரவுதல். விரை விரவும்: தேனடங்கிய. பாதக் கமலம் என்பது அபிராமியின் தாமரை போன்ற சிவந்த மென்மையான பாதங்களைக் குறிக்கிறது. இமையோர்: உறக்கம் துறந்த இயல்புடையவராதலால் தேவர்களை இமையோர் என்பர். பரவும் என்றால் போற்றும், புகழும், விரும்பும் என்று பொருள். பதம் என்ற சொல்லுக்கு இருக்கும் எத்தனையோ பொருள்களில் பதவி ஒன்று. அயிராவதம் என்பது தேவலோக யானை. இந்திரனின் வாகனம் என்பார்கள். பகீரதி என்பது தேவலோக நதி. பகீரதியைப் பூமிக்குக் கொண்டு வந்ததால் கங்கையானது. பகீரதியை ஆகாய கங்கை என்றும் சொல்வார்கள். உரவு என்றால் அறிவு, ஞானம். குலிசம் என்றால் வலிமை, மேன்மை, வஜ்ஜிராயுதம் (குலிசன்=இந்திரன்) என்று பொருள். கற்பகக் கா தேவலோகத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் பொற்சோலை.

அபிராமியை புதுமலரிட்டு அல்லும் பகலும் வணங்குவோர் தேவலோகத்தில் இந்திர பதவி, ஐராவத யானை, ஆகாய கங்கை, வலிமையான ஆயுதமான வஜ்ஜிராயுதம், மற்றும் கற்பகச் சோலையைப் பெறுவர் என்றும் பொருள் கொள்ளலாம். எனினும், இவற்றுக்கு அப்படி நேர்பொருள் கொள்வது பொருத்தமாக இல்லை என்று நினைக்கிறேன். அபிராமியின் அருளுடன் தேவலோகம் போகிற பட்டர் என்ன செய்வார் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. கற்பக மரங்களையும், யானையையும், வஜ்ஜிராயுதத்தையும், ஆகாய கங்கை நதியையும் வைத்துக் கொண்டு என்ன செய்வார்? "அம்மா தாயே அபிராமி, பிறவாமை கேட்டு வந்தால் இங்கே இவற்றைச் சுமந்து கொண்டு திரிய வேண்டுமா? அனுபவிக்கக் கூட முடியாதே? நான் நோஞ்சான், என்னிடம் வஜ்ஜிராயுதத்தைக் கொடுத்தால் என்ன செய்வேன்? ஒரு பேச்சுக்கு சொன்னால் அப்படியே எடுத்துக் கொடுத்து விடுவதா? உன் பாதங்களில் பூவைத் தூவிப் பாட்டு பாடும் எளியவனுக்கு இதனால் என்ன பயன்?" என்று நிச்சயம் கேட்பார். தேவலோகப் பதவி மேன்மையைக் குறிக்கிறது. ஐராவத யானை செல்வாக்கைக் குறிக்கிறது. ஆகாய கங்கை செழிப்பைக் குறிக்கிறது. குலிசம் (வஜ்ஜிராயுதம் என்றே வைத்துக் கொண்டாலும்) வலிமையைக் குறிக்கிறது. கற்பகக்கா செல்வங்களைக் குறிக்கிறது. அபிராமியின் அருளும் மாறாத கருணையும் கிடைக்கப் பெறுவதுடன் தேவலோகப் பெருமைகளையும் அடைவர் என்பதே பட்டர் பாடலின் சாரம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)