2010/09/16

ஆதித்தன் அம்புலி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 97 ராகம்: பாகேசுவரி


ஆதித் தன்னம்புலி அங்கி குபேரன் அமரர்தங்கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடைக் கந்தன் கணபதிக் காமன்முதல்
சாதித் தபுண்ணிய ரெண்ணிலர் போற்றுவர் தையலையே.

சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்கள் தலைவனான இந்திரன், தாமரை மேலிருக்கும் பிரமன், புரமெரித்த சிவன், முரனழித்த விஷ்ணு, பொதிகை மலை முனிவனான அகத்தியன், தீயவரைப் போரிட்டழிக்கும் முருகன், வினாயகன், மன்மதன் மற்றும் இவர்களைப் போல் வெற்றியும் அந்தஸ்தும் பெற்ற எண்ணிலடங்கார் (அனைவரும்) அபிராமி எனும் அழகியையே வணங்குகின்றனர்.

அபிராமியை எல்லாத் தேவர்களும் வணங்குகிறார்கள் என்று அடிக்கடி சொன்னவர் மீண்டும் வலியுறுத்துகிறார்.

அங்கி என்றால் தீ. சிவன் புரம் எரித்ததால் புராரி. முரன் எனும் அசுரனைத் திருமால் அழித்தக் கதையைப் பாகவதத்தில் படிக்கலாம். முரனை அழித்ததால் முராரியானார். காதி என்றால் தீமை, பாவம். இங்கே தீயவருக்கு ஆகி வந்தது.

பட்டரின் கண்ணோட்டத்தில் பார்ப்போம். அபிராமியை நேரில் கண்டார். முன் சொன்னது போல், அபிராமியின் பல்வேறு வடிவங்களைக் கண்டார். அதே வரிசையில்,தேவர்கள் தொழுவதாக முன்னர் சொன்னதை வலியுறுத்துகிறார். சொன்னதையே திருப்பிச் சொல்கிறார் என்றாலும், மற்றவர்-நம் போன்றவர்- மகிழ்ச்சிக்காக, வானவரும் தானவரும் முதல்தேவர் மூவரும் யாவரும் அபிராமியைப் போற்றி வணங்குவதைப் பார்த்து விவரிக்கிறார் என்றே பொருள் கொள்ள வேண்டும். நிலவைக் கொடுத்த அபிராமி, நல்ல கதியைக் கொடுக்கத் தயாராயிருக்கிறாள். பட்டரும் 'இதோ வருகிறேன் தாயே, இன்னும் சில பாடல்களில் நான் கண்ட காட்சி காணட்டும் இந்தத் தமிழுலகம்' என்று, தான் முன்னர் பாடியவாறே அபிராமி தோன்றினாள் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். நம்பினார் கெடுவதில்லை என்பதை நினைவூட்டுகிறார்.

அகத்தியனுக்குப் பொதியன் என்று பெயர். பொதியமுனி என்பதற்கு, 'அகத்தியர் போன்ற பெரும் முனிவர்கள்' என்று அகத்தியன் பெயர் ஆகி வந்ததாகவும் பொருள் கொள்ளலாம். தேவர், கடவுளர் என்று பன்மையில் பார்த்த பட்டர், முனிவர்களையும் கண்டிருக்க வேண்டும். அகத்தியனைத் தமிழ்முனிவன் என்று பிற இறையிலக்கியங்களும் போற்றுகின்றன. எனினும், இந்தப் பாடலில் அகத்தியனைத் தனித்துச் சுட்டிக் காட்டியது, ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்குக் காட்டும் ஆதரவு என்று நினைக்கிறேன். ஒரு தமிழன் இன்னொரு தமிழனின் வெற்றியைப் பார்த்து அடையும் பெருமிதம் என்று நினைக்கிறேன். பட்டர் காலத்தில் ஒரு தமிழனை இன்னொரு தமிழன் மதித்துப் போற்றும் வழக்கம் இருந்திருப்பது புரிகிறது.

புராரி என்றால் திரிபுரம் எரித்த சிவனென்று குறிப்பிட்டேன். இதைப்பற்றி முன்பே எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன்; மறந்துவிட்டது. ஒரு வகையில் இந்தப் பாடலுக்கும் அடுத்து வரும் பாடலுக்கும் ஏற்றதாக அமைந்திருப்பதால், இங்கே எழுதுவது பொருத்தமென்று நினைக்கிறேன்.

புரமெரித்த விவரம் திரிபுர அசுரர்களை அழித்தப் புராணக்கதையில் இருக்கிறது. திருமூலர் திரிபுர அழிவு பற்றி ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். படுசுவையானது.
        அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
        முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்
        முப்புர மாவது மும்மல காரியம்
        அப்புரம் எய்தமை யாரறி வாரே

முப்புர அசுரர்களை அழித்தான் என்று சொல்கிறவர்கள் எல்லாரும் மூடர்கள் என்கிறது திருமந்திரம். இங்கே முப்புரம் என்பது மும்மலம் என்கிறார் திருமூலர். மும்மலம் என்பது ஆணவம், வினை, அறியாமை எனும் மூன்று அழுக்குகளையும் குறிக்கிறது. முப்புர அசுரரைத் தேடிப் போகவேண்டாம், கண்ணாடியில் பார்த்தால் போதும் என்கிறார் திருமூலர். சைவ சித்தாந்தமும் அதையே சொல்கிறது. ஆணவமும், தீவினையாற்றலும், அறியாமையும் உடைய மனிதர்கள், மூன்று அசுரர்களுக்கு ஒப்பாவர் என்கிறாரோ? 'அப்புரம் எய்தமை யாரறிவாரே', அதாவது, உண்மையாக இவை அழிந்தது யாருக்குத் தெரியும் என்கிறார். அழித்தவனுக்குத் தான் தெரியும், அதாவது, இந்த அசுரர்களை அழிக்கும் சிவனும் மனிதனுக்குள்ளேயே தான் இருக்கிறான் என்கிறாரோ?

பட்டர் முன் பாடலொன்றில் 'அபிராமிக்குப் பலவகைப் பெயர்களும் வடிவங்களும் கொடுத்து வணங்குவது நகைப்புக்குரியது, உண்மையான அபிராமிக்கு வடிவமெதுதுவும் கிடையாது, அவரவர் மனதில் ஏற்படுத்திக்கொள்வது தான் உண்மையான அபிராமி' என்றார். திருமூலரும் 'அசுரனை அழிக்க வெளியிலிருந்து சிவன் வரத் தேவையில்லை - இவை அசுரர்கள், அதாவது அசுர குணங்கள், என்பதை அறிந்து கொள்வதே இவற்றை அழிப்பதற்கு முதல் படியாகும்' என்கிறார்.

இறையிலக்கியங்களில் 'உள் கிடப்பதால் கடவுள்' என்ற பொருளில், மனிதர் தம்மையறியும் நிலையையே ஞானசாதனமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். பட்டர் பாடலும் அந்த வகையினது. இந்த உட்பொருள் அடுத்த பாடலில் இன்னும் சிறப்பாக அமைந்திருப்பதாக நினைக்கிறேன்.

பொறுமையாகப் படித்தமைக்கு நன்றி.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)