2010/09/12

நகையே இஃதிந்த...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 93 ராகம்: ஆரபி


நகையே இஃதிந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை மானேமுதுகண் முடிவில்லந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும்நாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

இவ்வுலகங்களையெல்லாம் படைத்த தலைவி (அபிராமி) அரும்பும் மலர் போல் குவிந்த முலைகளும், மான் போல் பெரிய கண்ககளும் கொண்டவள் என்பது கேலிக்குரியது; தொடக்கமும் முடிவுமற்றவளான இவளை மலைமகள் என்பதும் வீண்பேச்சு; (அறிவுக்கப்பாற்பட்ட) இவள் தன்மையை நாம் (அறிய) விரும்புவதே மேன்மையானது.

'இந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு முகிழ் முகையே முலை மானே முதுகண் (என்பதும்) நகையே; மலைமகள் என்பதும் வம்பே; இது பிறவியும் முடிவு இல் அந்த வகையே; இவள் தன் தகைமையை நாம் நாடி விரும்புவதே மிகையே' எனப்பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

பிறவி என்பது தொடக்கத்தைக் குறிக்கிறது. முகை என்றால் அரும்பு. முகிழ்முலை என்றால் குவிந்த முலை என்று பொருள். முது என்றால் பெரும் என்று பொருள். முது கண் இங்கே பெரிய கண்கள் என்ற பொருளில் வருகிறது. வம்பு என்றால் வீண் பேச்சு, பொருளற்ற வழக்கு என்று பொருள். மிகை என்றால் மேன்மை. தகைமை என்றால் தன்மை, உண்மை எனலாம்.

அபிராமியைப் பலவாறு வர்ணிப்பது கேலிக்குரியது என்கிறாரே? குங்கும முலை, மெல்லிய நுண்ணிடை, தவளத்திருநகை, கரும்பு வில், கமலப்பாதம் என்று மனம் போனபடி வர்ணித்து விட்டு அவரே இந்தப் பாடலில் அப்படிச் சொல்வது கேலிக்குரியது என்பானேன்? அபிராமி தோன்றவில்லையா? அல்லது தோன்றியவளுக்கு வானந்தமான வடிவு, புதுப்பூங்குவளைக் கண், முருத்தன்ன மூரல், பண்ணளிக்கும் சொல், செப்புரை செய்யும் புணர்முலை, வருந்திய வஞ்சி மருங்குல், விட அரவின் பை, பரிபுரச் சீறடி என பட்டர் பாடியபடி எதுவுமில்லையா? தன் எண்ணப்படியே அபிராமி தோன்றியதாக முன் பாடல்களில் சொல்லியிருக்கிறாரே? இந்தப் பாடலில் ஏன் முரண்படுகிறார்?

அந்தாதிப் பாடல்களிலேயே என்னை அதிகம் சிந்திக்க வைத்த பாடல் இது. நூறு பாடல்களில் இதுவே சிறந்த பாடல் என்பது என் கருத்து. 'பட்டர் பொய் சொன்னார்; அபிராமியும் தோன்றவில்லை, நிலவும் தோன்றவில்லை' என்று ஒரு வகையில் பொருள் கொள்ளலாம். தவறில்லை. எனினும் அதில் சுவையில்லை, சிந்தனைக்கு ஏதுமில்லாத வெளிப்படையாகிறது. 'பட்டர் பொய் சொல்லவில்லை, அபிராமியும் தோன்றி, நிலவும் தோன்றி எல்லாம் நடந்த பின் பட்டர் மனம் மாறி எல்லாம் கேலிக்குரியது என்றார்' எனும் முரண்பாடு சுவையான சிந்தனையாகிறது. எப்படிப் பார்த்தாலும், ஏறக்குறைய நூறு பாடல்கள் வரை அபிராமியின் அழகை வர்ணித்தவர் அது நகைப்புக்குரியது என்று சொல்வதை நினைக்கும் பொழுது ஒன்று புரிகிறது. பட்டருக்கு ஏதோ ஒரு முதிர்ச்சி அல்லது தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

'கடவுளை ஒரு வடிவில் கொண்டு நிறுத்துவது நம் விருப்பத்துக்காக, ஒரு அமைதிக்காக; கடவுளுக்கு வடிவமில்லை என்பதே உண்மை' என்று பட்டர் தெளிந்து சொல்வதாக உணர்கிறேன். கடவுள் தத்துவத்தின் உண்மையை அறிய விரும்புவதே மேன்மையான செயல் எனும்பொழுது, அறிந்து விட்டால் அந்நிலையை எப்படி விவரிப்பது? அறிவுக்கப்பாற்பட்ட அந்நிலையை பட்டர் தொட்டுக் காட்டியிருப்பதாக நினைக்கிறேன்.

'உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை' என்ற தத்துவத்தை நம்முன் காட்டிச் சீண்டியிருக்கிறார். 'முலையழகி, மலையழகி என்று வர்ணித்தாலும் சரி; உருவமில்லாதவள் என்றாலும் சரி; கண்ணுக்குப் புலப்பட்டவள் என்றாலும் சரி; புலப்படாதவள் என்றாலும் சரி; அவரவர் அறிவுக்கேற்றபடி அபிராமியெனும் கடவுளின் தன்மையை அறிந்து கொள்வதே சிறப்பு' என்று பட்டர் சொல்லியிருப்பது நம்பிக்கையுடையோர், நம்பிக்கையில்லாதோர் இரண்டு கட்சிக்கும் பிடித்த கொடி போல் ஒரு கணம் தோன்றுகிறது. பத்தாயிரம் வடிவங்கள், அதற்கு பத்தாயிரம் விழாக்கள் என்று நாம் கடைபிடிக்கும் சடங்குகளைச் சாடுகிறார் என்று நினைக்கிறேன். 'தொடக்கம் முடிவு எதுவுமே எனக்குத் தெரியவில்லை; இதில் முக்கண்ணும் மூரலும் எங்கே தேடுவது? துடியிடையை எங்கே தேடுவது? பொற்பாதம் எங்கே பார்ப்பது? எல்லாமே அறிவின்மை' என்று அவர் முடித்திருப்பது மிகுந்த மனமுதிர்ச்சியைக் காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

இன்னொரு கண்ணோட்டம். அபிராமி எனும் கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட தோற்றம் எதுவும் இல்லை. பிறமதங்களும் ஆதி கடவுளுக்கு எந்தத் தோற்றமும் இல்லை என்றே சொல்கின்றன. தோற்றமில்லாமல் நம்மை எதிர்கொண்டால் குழப்பமும் அச்சமும் அவநம்பிக்கையும் ஏற்படலாம் என்பதால் அவரவருக்கு விருப்பமான தோற்றத்தை நம் மனதுள் ஏற்படுத்திக்கொள்கிறோம் அல்லவா? (ஏற்படுத்துவதும் கடவுள் தான் என்கிறது மதம்) அந்த வகையில், பட்டர் பாடியபடி முதலில் அபிராமி காட்சியளித்து, பின்னர் அவருடைய அச்சத்தை மெள்ளத் திரைவிலக்கி கடவுளின் உண்மை நிலையைக் காட்டியிருக்கலாம். அந்தத் தெளிவில் பட்டர் இப்படிப் பாடியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

வரையறுக்க முடியாத வடிவம் என்று கடவுளைப் பற்றி இந்து மத இலக்கியங்களும், பிற மத இலக்கியங்களும் ஒருமித்தக் கருத்தைச் சொல்கின்றன. ஒளிக்குத் தன்னிலை வடிவம் கிடையாது என்பதால், மத இலக்கியங்கள் ஒளியைக் கடவுளுக்கு அடையாளமாகக் காட்டியிருக்கின்றன. ஒளியில்லாமல் உலகில் எதுவுமே இயங்கச் சாத்தியமில்லை என்பதால் ஒளியைக் கடவுளாகச் சித்தரித்து, அது தொடர்ந்திருக்கலாம். இங்கே ஒளி என்று சொல்லாமல் 'பிறவி முடிவு இல் வகை' என்று பட்டர் சொல்லியிருப்பது சிந்தனைக்குச் சோதனையாக இருக்கிறது. பட்டரை நம்புகிறேன். அவர் கடவுளைக் கண்டதாக நம்பிப் பாடியிருப்பதை நிச்சயம் நம்புகிறேன். 'உருவமும் இல்லை, ஒளியும் இல்லை. அப்படியென்றால் கடவுள் என்பது யார்? என்ன?' என்று சிந்திக்க வைத்த பாடல். 'மேன்மை தேவையென்றால் தகைமையை நாடு' என்ற அறிவுரையை அவரவர் ஏற்புக்கு விட்டுச் சென்றிருப்பதை மிகவும் ரசிக்கிறேன்.

இறையிலக்கியம் தந்தவர்களுள் ஒரு வகையில் பட்டர் தனித்திருக்கிறார் எனலாம். லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி மற்றும் திருவாசகம், பிரபந்த நூல்களில் கூட இறைவனை இந்த உருவில் இந்த வடிவில் இந்த முறையில் தொழுது பிறவாமை அடையலாம் என்றே சொல்லியிருக்கிறார்கள். 'கடவுளை விவரிக்க முயற்சிப்பது பேதமை; அணுகவும் அடையவும் முயற்சிப்பதே மேன்மை' என்ற புதுநிலையை, பொதுநிலையை, எடுத்தது பட்டர் மட்டுமே என்று நினைக்கிறேன். நிலவை எறிந்து தன் முன்னே தோன்றினாள் என்று பட்டர் பாடியதை நம்பவும் நம்பாமலும் இரண்டு வகைக் கூட்டம் இருக்கும் என்ற அறிவும் பட்டருக்கு இருந்திருக்கும் என நினைக்கிறேன். 'காணொணா திருக்கோலம்' கண்ட களிப்பிலும் உலக இயல்பை மறவாமல் உய்ய ஒரு வழியைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். திருநாவுக்கரசர் 'இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொண்ணாதே' என்றார். பட்டர் அதற்கு ஒரு படி மேலே சென்றிருக்கிறார். 'இப்படியள் இந்நிறத்தள் இவ்வண்ணத்தள் என்று சொல்வதும் வம்பு; இவளிறைவி என்பதை அறிய விரும்பும் சிறு முயற்சியும் மேன்மை தரும்' என்று அபிராமி நம்பிக்கை விதைகளை இலவசமாக வழங்கிப் போயிருக்கிறார். 'இந்த நிறம் இந்த வடிவம்' என்று வரையறுப்பதனால் தானே பேதங்கள் வருகின்றன? மதங்களுக்கும் மதகுருக்களுக்கும் இங்கே ஒரு பாடம் புதைந்திருக்கிறதோ?

அருமையான பாடலைத் தந்த பட்டருக்கு ஒரு வணக்கம். அதை இனிமையாகப் பாடியிருக்கும் அம்மாவுக்கு ஒரு வணக்கம். இதுவரைப் பொறுமையாகப் படித்த உங்களுக்கு ஒரு வணக்கம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)