2010/09/10

மெல்லிய நுண்ணிடை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 91 ராகம்: ஆரபி


மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன்னனையாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழுமடியாரைத் தொழுமவர்க்கும்
பல்லிய மார்த்தெழ வெண்பகடூறும் பதந்தருமே.

விரிந்த சடையுடைய சிவபெருமான் தழுவிய பொன்னைப் போல் சிவந்த மென்மையான முலைகளையும், ஒளி வீசி மறையும் மின்னலைப் போல் மிக நுண்ணிய இடை கொண்டவளுமான அபிராமியை வணங்க வேண்டிய முறைப்படித் தொழும் அடியார்களுக்கு மங்கல இசைக்கருவிகள் முழங்க வெண்யானைகள் நடமாடும் தேவலோகத்தில் இடம் கிடைக்கும்.

ஏற்கனவே பலமுறை சொன்ன கருத்தை மீண்டும் சொல்கிறார் பட்டர். சிலருக்கு ஒரு முறை சொன்னால் விளங்கும். சிலருக்கு எத்தனை முறை சொன்னாலும் விளங்காது. விளங்காதவர்களுக்கு எப்படி விளங்க வைப்பது? திரும்பத் திரும்பச் சொல்லுவதால். படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம், அதனால் தினமும் படிக்க வேண்டும் என்று பலமுறை சொல்லலாம். அதே செய்தியை, தினமும் படித்தால் நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து வசதியோடு வாழலாம் என்றும் சொல்லலாம். செய்தி ஒன்று தான். படிக்க வேண்டும் என்பதே. பட்டர் உபயோகிப்பதும் அதே முறையை. அபிராமியை வணங்க வேண்டும் என்பது செய்தி. வணங்கினால் பிறவாமை கிடைக்கும் என்பது பலன். அதையே பட்டும் பொன்னும் புரள, இசைக்கருவிகள் முழங்க, வெள்ளை யானைகள் நடமாடும் சொர்க்கலோகத்தில் வசிக்கலாம் என்றும் சொல்லலாம். பிறவாமையைச் சுலபமாகப் புரிந்து கொள்ளாத அறிவு, சொகுசான தேவலோக வாழ்வைச் சுலபமாகப் புரிந்து கொள்கிறது அல்லவா? அதனால் அபிராமியை வணங்கினால் தேவலோகம் கிடைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறார்.

புல்லிய என்றால் இணைந்த, புணர்ந்த, தழுவிய என்று பொருள். இங்கே சிவன் தழுவிய மார்பை உடையவள் என்ற பொருளில் வருகிறது. சிவனோடு இணைந்த மார்பினை, அதாவது, அர்த்தநாரி வடிவினை உடையவள் என்றும் பொருள் கொள்ளலாம். பல்லியம் என்றால் மங்கள இசை, இசைக்கருவிகள் என்று பொருள். பகடு என்றால் யானை. பதம் என்றால் பதவி, இடம். 'ப' வரிசையில் ஒரே பாடலில் எத்தனை அருஞ்சொல்!

இந்தப் பாடல் தொடங்கி நான்கு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த ஆரபி ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)