2010/09/04

பார்க்குந் திசைதொறும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 85 ராகம்: ஹடானா


பார்க்குந் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலரைந்தும் கரும்பும் என்னல்லல் எல்லாம்
தீர்க்குந் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங் குமமுலையும் முலைமேல் முத்துமாலையுமே.

என்னுடைய துன்பங்களை எல்லாம் தீர்க்கவல்ல திரிபுரசுந்தரி, நான் பார்க்கும் திசையெல்லாம் நிறைந்திருக்கிறாள்; சிறிய இடையும், சிவந்த முலைகளைக் கட்டிய கச்சையும், கச்சை மேல் முத்து மாலையும், (கைகளில்) பாசக்கயிறும் அங்குசமும் வண்டுகள் மொய்க்கும் குளிர்ந்த அழகான ஐந்து வகை மலரம்புகளும், கரும்பு வில்லும் கொண்டிருக்கிறாள்.

இந்தப் பாடலில் அபிராமியின் தோற்றம், தான் முன்பு பாடியதைப் போலவே இருப்பதாகச் சொல்கிறார் பட்டர். பாசம், அங்குசம், கரும்புவில், மலரம்பு, குங்கும முலை, முலைமேல் முத்துமாலை, சிற்றிடை என்று அவர் அபிராமியை எண்ணிப் பாடியது நினைவிருக்கும். தான் எண்ணியதைப் போலவே அபிராமி தோன்றியிருப்பது அவருக்குப் பெரும் நிறைவைத் தந்திருக்கிறது. தான் சொன்னது போலவே அன்றைக்கு நிலவு வந்தது மட்டுமல்ல, அபிராமியும் தான் வர்ணித்தது போலவே தோன்றியிருப்பது அரசன் மற்றும் அவையினர் நடுவே பட்டரின் நிலையை பன்மடங்கு உயர்த்துகிறது அல்லவா? அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவள் அபிராமி என்று பட்டர் பாடியருப்பதும் பொருத்தமாக இருக்கிறது.

அருஞ்சொல் எதுவுமில்லாத எளிய பாடல்.

ஐவகை மலரம்புகள் (முன்பே விவரித்திருந்தால் மன்னிக்கவும்) முறையே சிவப்புத் தாமரை, அசோகம், மாம்பூ, மல்லிகை, நீலத்தாமரை மலர்களால் தொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அரவிந்தம், அசோகம், சூதம், நவமல்லிகா , நீலோத்பலம் என்கிறது சிவபுராணக் கதை. சூதம் என்ற வடமொழிச் சொல் மாம்பூவைக் குறிக்கும். நவமல்லிகா என்பது புது மல்லிகை, அன்றைக்கு மலர்ந்த மல்லிகை என்று நினைக்கிறேன். ஒருவேளை நவமல்லிகா என்று தனிப்பூ இருக்கலாம். நீலோத்பலம் சரியாகத் தெரியவில்லை. நீலத்தாமரை என்கிறார்கள் சிலர். இல்லை என்கிறார்கள் சிலர். ஒரே ஒரு முறை கலிபோர்னியாவில் நீலத்தாமரை மலரைப் பார்த்து அசந்திருக்கிறேன். மல்லிகை அளவுக்கு மணமில்லை என்றாலும், அதிசயமான அழகு என்பேன். தாமரைப்பூ போலவே (அல்லி?) இருக்கிறது. இன்னொரு நீலத்தாமரை, வாழைப்பூ போல் இருக்கிறது - தாய்லந்தில் பார்த்திருக்கிறேன். மயங்க வைக்கும் நறுமணம். ஐந்து வகை மலரம்புகளுக்கும் தனித்தனி வசிய குணங்கள் இருப்பதாகச் சொல்கிறது சிவபுராணம். அது வேறு கதை.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)