2010/09/06

மொழிக்கும் நினைவுக்கும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 87 ராகம்: ரஞ்சனி


மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதநின் திருமூர்த்தி எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படியொரு பாகம் கொண்டாளும் பராபரையே.

நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துத் தன்னுடைய தவ வலிமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய சிவனை அந்த உலகமே நகைக்கும் விதமாக அவருடைய தவத்தைக் கலைத்தது மட்டுமல்லாது அவருடைய உடலிலும் பாதியை எடுத்துக்கொண்ட இறைவியே, சொல்லில் அடங்காத, நினைத்துப் பார்க்கவும் இயலாத உன் அழகு என்னுடைய நல்வினைப்பயனால் என் கண்களுக்கு அரிய காட்சியானது.

'விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதம்' பற்றிச் சிவராத்திரியின் கதை வழியாக முன்னர் பார்த்தோம். சிவனின் தவத்தைக் கலைக்க தேவர்கள் கூட்டு சேர்ந்து தாஜா செய்து அனுப்பிய மன்மதனைச் சிவன் பொசுக்கியதும், பார்வதி மன்மதனின் மலரம்புகளையும் கரும்புவில்லையும் எடுத்துக்கொண்டு தானே சிவனை எதிர் கொண்டதும், பார்வதியின் அழகைக் கண்டதும் தான் செய்த தவமெல்லாம் இவளைக் காணவேயன்றோ என்று சிவன் ஒரேயடியாக நிலைமாறி பார்வதியின் பின்னே போனதும் சுவையான சிருங்காரக் கதை. சிவபுராணத்தில் விவரமாகப் படிக்கலாம். மன்மதனை எரித்து வித்தை காட்டிய சிவனின் வீரம் அபிராமியின் அழகினால் சொத்தையானது என்று பட்டர் சொல்கிறார். சிவனின் தவத்தைக் குலைத்து, தனித் தவமே இனிச் செய்ய இயலாதபடி அவர் உடலில் பாதியை எடுத்துக்கொண்டு ஆளும் அபிராமியின் அழகைச் சொல்லால் விவரிக்க முடியாது, ஏனென்றால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அழகு என்கிறார். நினைத்துப் பார்த்தால் தானே சொல்லில் வடிப்பது? அப்படிப்பட்ட அழகி தன் கண்களுக்குக் காட்சியானது வினைப்பயன் என்கிறார். பராபரை என்றால் கடவுள், இறைவி.

எளிமையான பாடலாக இருந்தாலும், பட்டர் பாடலைச் சரியாக முடிக்காமல் விட்டது போல் தோன்றவில்லை? 'வெளி நின்றதால்' என்று தொக்கி நிற்பது போல் ஒலிக்கிறது பாடல். பட்டர் அறிவுக்கு எட்டாத அபிராமியின் அழகைப் போல், ஒரு வேளை என் அறிவுக்கு எட்டாத பட்டரின் பொருளழகாகவும் இருக்கலாம் என்று நினைத்தபோது விவரம் புரிந்தது. இங்கே நின்றதால் என்பதை 'நின்றது+ஆல்' எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். 'என் விழிக்கும் வினைக்கும் வெளி நின்றது, ஆல்' எனப் பிரியும் பொழுது, தொக்கி நிற்பதும் சொக்க வைக்கும் தமிழ் என்று புரியும். ஆல் என்பதற்கு ஆமாம் என்று பொருள். 'என் விழிக்கும் வினைக்கும் வெளி நின்றது, உண்மை தான்' என்ற பொருளில் பாடியிருக்கிறார் பட்டர்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)