2010/06/16

பொருந்திய முப்புரை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:5 | ராகம்:பூபாளம்


பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயம் மேல்
திருந்திய சுந்தரியந்தரி பாதமென் சென்னியதே.

செம்பினால் செய்யப்பட்டது போன்ற மார்பகங்களின் இணைந்த சுமையைத் தாங்கி வருந்தும் கொடியிடை கொண்டவளே, பேரின்பப் பேரறிவே, வார் போன்ற நீண்ட சடை தரித்த சிவன் அருந்திய நஞ்சைத் தடுத்து அமுதாக்கிய தாயே, தாமரை மேல் அமர்ந்திருக்கும் பேரழகியே, மூன்று தொழிலையும் பொறுப்பேற்று நடத்தும் அண்டமெங்கும் நிறைந்திருப்பவளின் பாதங்களைத் தலை வணங்குகிறேன்.

'செப்புரை புணர்முலையால் வருந்திய மருங்குல் வஞ்சி, மனோன்மணி, வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல் திருந்திய சுந்தரி, பொருந்திய முப்புரை செய்யும் அந்தரி பாதம் என் சென்னியதே' எனப்பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

புரை என்ற தமிழ்ச்சொல் விசித்திரமானது. வீடு, கோவில், மாட்டுத்தொழுவம் என்று பொருள்; உள்ளே, வெளியே என்று பொருள்; குற்றம், நீதி என்று பொருள்; சிறுமை, மேன்மை என்று பொருள்; உயர்வு, தாழ்வு என்று பொருள்; ஆக்கம், அழிவு என்று பொருள்; கடந்தகாலம், எதிர்காலம் என்று பொருள்; இப்படி எதிர்நிலை, எதிர்பொருள் பல கொண்ட ஒரே சொல் புரை தான் என்று நினைக்கிறேன். படைத்தல் காத்தல் அழித்தல் என்று மூன்று தொழில்கள், மூன்று குண நிலைகள், மூன்று கடவுள்கள், மூவுலகங்கள், மூன்று காலங்கள்,... இப்படி 'மூன்று' என்ற எண்ணிக்கை எதிர்பொருள் எதிர்நிலைகளைக் குறிக்கும் வாழ்வியல் மற்றும் வேதாந்த விளக்கங்களில் அடிக்கடி இடம்பெறுவதை அறிவோம். இந்தப் பாடலில் 'முப்புரை' என்பது மூன்று தொழில்கள் அல்லது 'மூன்று' என்ற வாழ்வியல் அடிப்படைகள் என்ற பொருளில், மூன்றையும் பொருப்பேற்று நடத்தும் என்ற பொருளில் வருவதாக நினைக்கிறேன்.

'நஞ்சமுதாக்கிய' என்பதை இங்கே தான் படிக்கிறேன். சிவன் அருந்த முற்பட்ட ஆலகால நஞ்சை, சக்தி அவர் கழுத்தில் தொட்டு நிறுத்தியதாகப் புராணங்கள் சொல்கின்றன - நீலகண்டன் என்ற பெயர்க் காரணத்துக்கு. நஞ்சை அமுதாக்கியவள் என்று கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டிருக்கிறாரோ பட்டர்?

இறையிலக்கியங்களில் பெண் கடவுளரின் உடல் பாகங்களை உவமைகளோடு விவரித்திருப்பதை எண்ணி வியந்திருக்கிறேன். எப்படிச் சாத்தியம்? "பெரிய முலை கொண்டவளே, உன்னை வணங்குகிறேன் தாயே" என்று களங்கமில்லாமல் எப்படிச் சொல்வது? களங்கமில்லாவிட்டாலும் ஒரு கவர்ச்சிக் குறுகுறுப்பாவது தோன்றாதா? பள்ளிக்கூடத் தமிழாசிரியர் மங்கலமன்னன், "முலை என்பது, பெண்ணுக்கு தாய்மையைக் குறிக்கும் உடலுறுப்பு. அதனால் முலை என்பதைத் தாய்மையின் அடையாளமாகவும், பிள்ளைக்குப் பால் கொடுத்து உயிர் கொடுக்கும் தியாகத்தின் வடிவாகவும் பார்க்க வேண்டும்" என்று பொருள் சொல்லி எங்களை அதட்டியது நினைவுக்கு வருகிறது. பின்னாளில் நிறைய நூல்களில் பெண் கடவுளரை வர்ணிக்கும் பொழுது ஒரு வரியில் 'கொங்கை அல்குல் பிட்டம்' என்றால், அடுத்த வரியிலேயே 'தாய் தெய்வம் கருணைக்கடல்' என்று ஏதாவது இடம்பெறுவதைக் கவனித்திருக்கிறேன். இந்தப் பாடலில் வரும் 'அம்பிகை' என்ற சொல்லுக்குத் தாய் என்று பொருள் உண்டு.

சுந்தரி சரி, அந்தரி என்பானேன்? பட்டர் அபிராமியை மனோன்மணி என்பானேன்?

அந்தரி என்ற சொல்லுக்கு ஆகாயத்தில் உள்ளவள் (அண்டத்தை ஆள்பவள்) என்று பொருள். எல்லாவற்றிற்கும் முடிவைக் கொண்டவள் என்று பொருள். எல்லாமே அபிராமியில் தான் முடிகிறது (அதனால் தொடங்குகிறது) என்று நம்பி அந்தரி என்றார் பட்டர். அந்தாதி பாடியது பொருத்தம். சுந்தரி அந்தரி எதுகை இன்னொரு பாடலிலும் வருகிறது.

மனோன்மணி ஒரு அருமையான சொல். மனோன்மணி என்ற சொல்லை, நான் படித்த வரை, வடமொழியிலும் தமிழிலும் பெண் கடவுளைக் குறிப்பிடும் பொழுது பயன்படுத்தியிருக்கிறார்கள். இருப்பினும் மனோன்மணிக்கு பால் வேறுபாடு கிடையாது. அது ஒரு நிலை. மனோன்மணி என்ற சொல்லுக்கு பேரறிவு, ஞானம் என்ற பொருள் உண்டு. புருவங்களுக்கிடையிலான பகுதிக்கு மனோன்மணி என்று பெயர். மனதை நிலைப்படுத்தித் தியானம் செய்து, எந்தவிதமான பற்றும் இல்லாமல் விலகி, 'உன்மணி' நிலையை அடைவது. அகமும் புறமும் இரண்டறக் கலப்பது. மன+உள்+மணி.

சிவனுடைய சக்திக்கு மனோன்மணி என்று பெயர். அண்டத்தின் அத்தனை உயிர்களையும் பெண்மையின் (தாய்மையின்) வடிவாகப் பார்த்து உய்வது தான் பிறவியின் ரகசியம் என்ற சித்தாந்தம், மொழி, இனம், மதம் கடந்து பொதுவாக நம்பப்படுகிறது. முடிவையும் தொடக்கத்தையும் தன்னுள் அடக்கி வைக்கும் பெண்மைதான் உண்மையான தெய்வம் என்று பல மத இலக்கியவாதிகள் நம்புகிறார்கள். பண்டைய கிரேக்க மொழியிலிருந்து, ஆங்கிலம் (primordial mother), தமிழ் (மூலாதார சக்தி) எனப் பல மொழிகளிலும், தாய் என்பவள் கடவுளுக்கும் அப்பாற்பட்டக் கடவுள் என்ற சித்தாந்தத்தை அரவணைத்த இறையிலக்கியங்கள் உள்ளன. 'கடவுளுக்கும் அப்பாற்பட்ட கடவுள்' என்பதே அந்தாதி தான். ஒரு பெண்ணைப் பெண், சகோதரி, தோழி, மனைவி என்ற வடிவங்களில் பார்க்கும் பொழுது முறையாக மதிக்காமல், தாய் என்றதும் மதிக்கிறோம் (சில சமயம்). சக்தி எனும் பெண்மை - பெண்ணாகி, கன்னியாகி, துணையாகி, தாயாகி, கடவுளாகி, கடவுளுக்கும் அப்பாற்பட்டவளாகி, முடிவுகளுக்குத் தொடக்கமாகும் தொடக்கங்களுக்கு முடிவாகும் பரிணாம வளர்ச்சி பற்றிய ஞானத்தை, தத்துவத்தை, மனோன்மணியம் எனலாம். இந்தத் தத்துவம் இந்து (சக்தி), கிறுஸ்தவ (புனித ஆவி), இஸ்லாம் (ரூஹ்) என்று பல மதங்களிலும் நம்பப்படுகிறது. கொஞ்சம் தலை சுற்றினாலும், ஆழமான தத்துவம். (Eschatology எனும் தொடக்க-முடிவு வட்டம் தொட்ட மதத்தத்துவ ஆராய்ச்சிப்பிரிவு இதற்கென்றே இருக்கிறது. Incredibly profound for the believers; intellectually stimulating for the rest of us.)

வாயும் மனமும் கடந்த மனோன்மணி, பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை, ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும் நல் தாரமுமாமே. இது திருமந்திரப் பாடல். சொல்லுக்கும் சிந்தைக்கும் அப்பாற்பட்டவள், பேய்களையும் கணங்களையும் ஆளும் பெண், ஆராய முடியாதவனான சிவனுக்கும் (அப்பாற்பட்டவளாகி) தாய், மகள், தாரம் என விளங்கும் மனோன்மணி என்று சக்தியைப் பாடுகிறார் திருமூலர்.

இந்த வகை ஆழமான தத்துவங்களை விடுங்கள். இன்றைக்குக் கூட அடிபட்டால் 'அம்மா' என்று தான் சொல்கிறேன். வாழ்க்கையில் சறுக்கும் பொழுது, பிடிப்பில்லாமல் போகும் பொழுது, வருத்தப்படும் பொழுது, என் அம்மாவைத் தான் நினைத்துக் கொள்கிறேன். சாதாரண நிகழ்வுகளுக்கே இப்படியென்றால், உண்மையிலேயே 'தலை போகிற' சிக்கலுக்கு பட்டர் தாயைக் கூப்பிடாமல் யாரைக் கூப்பிடப் போகிறார்?

'புணர்முலை வஞ்சி', தன் அன்பரைப் பெரும் ஞானம் அடைய வழி செய்பவள் என்பதால் 'மனோன்மணி' என்றார் பட்டர். எல்லாவற்றிற்கும் முதலும் கடைசியுமாக அபிராமியை நினைத்ததால் - ஆதி அந்தம் கடந்த கடவூர்த் தாய்... என்ற ஞானத்தைப் பெற்றதால் - அபிராமியை மனோன்மணி என்று அழைத்தது, பொருத்தமாகத் தோன்றுகிறது.

பாரதியின் சக்தி பாடல்களைப் படித்தால் புல்லரிக்கும். அவரும் தன் மனைவியை சக்தியின் வடிவாகப் பார்த்ததாகப் படித்திருக்கிறேன்.

இவையெல்லாம் இருந்தும் தெரிந்தும், சமூகத்தில் ஒரு படி குறைவாகத்தான் பெண்களை வைத்திருக்கிறோம், ஏன்?


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 6 | சென்னி அது...