2010/06/19

சுந்தரி எந்தை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:8 | ராகம்:பிலஹரி


சுந்தரி எந்தை துணைவி என்பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாளென் கருத்தனவே

பிரம்மனின் தலையோட்டைக் கையில் வைத்திருக்கும் காளியே! மகிஷ அசுரனின் தலையைக் கொய்த அண்டங்களுக்கெல்லாம் அரசியே! என்றைக்கும் இளமை மாறாத சிவந்த நிறமுடைய பேரழகியே! என் தந்தை சிவபெருமானின் துணைவியே! என்னுடைய (இவ்வுலகப்) பற்றுதல்களை அறுத்து எறிய அருள் புரிய வேண்டும்; உன் மலர் போன்ற பாதங்களை என் மனதில் இருத்தி வேண்டுகிறேன்.

'ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் நீலி, மகிடன் தலைமேல் அந்தரி, அழியாத கன்னிகை சிந்துர வண்ணத்தினாள், சுந்தரி, எந்தை துணைவி, (உன்)மலர்த்தாளென் கருத்தனவே, என் பாசத் தொடரையெல்லாம் வந்தரி' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

இவ்வுலகப் பற்றுதலை ஒழிக்க அபிராமியின் அருளை வேண்டும் பட்டர், பிரம்மனுக்கும் சிவனுக்கும் நடந்த போர், மகிஷாசுரனை வதைத்த காளியின் உக்கிரம், என்று அங்கே இங்கே சுற்றி விஷயத்துக்கு வருகிறார். பற்றுதலை ஒழிக்க வேண்டுபவர் சுற்றி வளைப்பானேன்? அழகி, சிவப்பு நிறத்தவள் என்று குளிர்மொழி சொல்லி நேரே கேட்க வேண்டியது தானே? பிரம்ம-சிவ-மகிஷாசுரப் போர்களின் அடிப்படைக் காரணத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். பற்றுகளினால் உருவாகும் நோய்களில் மோசமானது ஆணவம். ஆணவம் அறிவை மறைக்கும் நோய். பிரம்ம-சிவ-மகிஷாசுரப் போர்களின் காரணம் ஆணவம். பொய்ப்பகட்டின் மேலிருந்த பற்றினால் வந்த ஆணவம் பிரம்மனுக்கு; மெய்ப்பகட்டினால் வந்த ஆணவம், கோபம் சிவனுக்கு; மகிஷாசுரனுக்கோ தன்னை எவராலும் வெல்ல முடியாத அந்தஸ்தினால் வந்த ஆணவம். பிரம்ம-சிவ-மகிஷாசுர போர்க்கதைககளில் தொலைந்து போகாமல், பாடலுக்கு வருகிறேன். இவர்களின் ஆணவத்தையெல்லாம் அறுத்தெறிந்தவள் யார்? அபிராமி. அதனால் தான் பற்றினை ஒழித்தெறிய பார்வதியை வேண்டுகிறார். முந்தைய பாடல்களில் 'பாசாங்குசம்' கொண்டவள் என்று வர்ணித்து விட்டார். பாசத் தொடர்களை வந்து அரி, சுந்தரி என்று இந்தப் பாடலில் வேண்டுகிறார். 'பாசாந்தரி' என்று சௌந்தர்யலஹரியிலும் லலிதா சஹஸ்ரநாமத்திலும் வணங்கப்படுகிறாள் திருபுரசுந்தரி.

கந்தரி என்ற சொல்லை கம்+தரி என்று பிரிக்க வேண்டும். கம் என்றால் தலை என்று பொருள். கம் தரி கைத்தலத்தாள் என்றால் தலையைக் கையில் கொண்டவள் என்று பொருள் கொள்ளலாம். தலை இங்கே தலையோட்டைக் குறிக்கிறது.

ஆரணம் என்றால் வேதம் என்று பொருள். ஆரணத்தோன் என்று பிரம்மனுக்கு ஒரு பெயர் உண்டு. பிரம்மனுடையை தலையோட்டை சிவனிடமிருந்து வாங்கி அவரைக் காப்பாற்றியவள் என்ற பொருளில் ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் என்று பொருள் கொள்ளலாம். பாம்பை மாலையாக அணிந்தவன் என்ற பொருளில், ஆரணத்தோன் என்று சிவனுக்கும் பெயர் உண்டு. பிரம்மனின் தலையோடுகளை மாலையாக அணிந்தவன் என்ற பொருளில் கந்தரி ஆரணத்தோன் என்று சிவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. எப்படிப் பிரித்தாலும் தவறில்லை; பொருட்சுவை தான் கூடுகிறது. தலையோட்டை வாங்கிக் கொண்டு சிவனைக் காப்பாற்றியவள் என்பதே சாரம்.

மகிஷாசுர வதம் என்பது அகந்தையை அழிப்பதன் உருவக வடிவம் என்றும் சில அறிஞர்கள் நம்புகிறார்கள். இவர்கள் கருத்தை ஏற்க முடிகிறது. எருமை மாட்டிற்கு பதவி வந்தால் எப்படி நடந்து கொள்ளும்? நீங்கள் சுற்றியிருப்பவரைப் பார்வையிடுங்கள் - நான் கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறேன் - எல்லாம் புரியும்.

பிலஹரி அருமையான ராகம். எனக்குப் பிடித்த ராகங்களுள் ஒன்று. இனிமையும் கம்பீரமும் இணைந்த ராகம். மோகனத்துக்கும் சங்கராபரணத்துக்கும் பிறந்த ராகம் என்று சொல்வார்கள். பொருத்தம் தான். முதுமையின் சாயல் இப்போது தெரிந்தாலும், இந்தப் பாடலைக் கேட்கும் போது என் அம்மாவின் குரலில் இந்த ராகத்தின் இனிமையும் கம்பீரமும் முப்பது வருடங்களுக்கு முன் என்னைத் தாக்கியது போலவே இன்றைக்கும் உணர்கிறேன்.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 9 | கருத்தன எந்தை...