2010/06/29

வவ்விய பாகத்து...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:18 | ராகம்:ஹம்சாநந்தி


வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியு முங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலனென்மேல் வரும்போது வெளிநிற்கவே.

இறைவனான சிவனும் நீயும் கலந்து மகிழ்ந்திருக்கும் அழகும், உங்கள் திருமணக் காட்சியும், என்னை என்றைக்கும் ஆளும் பொற்பாதங்களுடன் என் மனதிலிருக்கும் அழுக்காறு நீங்கும் விதமாக, சினம் கொண்ட எமன் என்னைக் கொள்ள வரும் நேரத்தில் என் முன் தோன்றியருள வேண்டும்.

மேற்சொன்னது அறிஞர்கள் சொன்ன பொருள்.

எமனுக்கு அஞ்சுவது போல் பட்டர் பாடியிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. இங்கே 'சினங்கொண்ட எமன்' என்று அரசனைச் சொல்கிறார் பட்டர் என்பது என் கருத்து. ஒளியின் ஒளியான அபிராமி தன்னைக் காக்க வேண்டும் என்று விரும்பியதாலும், சக்தியும் சிவனும் இணைந்திருக்கும் காட்சி ஆயிரம் நிலவுகளுக்கப்பாற்பட்ட ஒளியுடன் இருக்கும் என்று பட்டர் நம்பியதாலும், அரசன் அவரைக் காண வரும்பொழுது வெளி நிற்க - காட்சி தர - வேண்டும் என்று பாடியிருக்கிறார் என நினைக்கிறேன். மரணத்தைக் கண்டு அஞ்சுபவராகத் தோன்றவில்லை பட்டர். நிதானமாகப் பாட்டு பாடிக் கொண்டிருப்பதிலேயே தெரியவில்லையா?

இன்னொரு உட்பொருளும் தோன்றுகிறது. பட்டர் இருந்த ஊர் கடவூர். எமனுக்கே மரணம் விளைந்த ஊர் என்று மார்க்கண்டேயக் கதை கூறுகிறது. "அம்மா அபிராமி, என்னைக் காண வரும் எமன் உன் கணவரின் பழைய பகைவன். முன்பே அவனை வென்றிருக்கிறான். அதனால் அவருடைய முகத்தைக் காட்டினால் கூடப் போதும், எமன் ஓடிவிடுவான்" என்பதுபோல் இறையனாருடன் வரச் சொல்லி வேண்டுகிறார்.

மரணத் தறுவாயில் என்ன சொல்கிறோமோ, நினைக்கிறோமோ அதுவே மறுபிறவியில் நடக்கும் என்ற நம்பிக்கையையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம். இறக்கும் நேரத்தில் சிவ-சக்தி கண்முன் தோன்றினால் பட்டர் என்ன நினைப்பார் என்கிறீர்கள்? சிவ-சக்தியை மகிழ்ந்திருக்கும் கோலத்தில் வரச் சொல்கிறார். இறக்குந்தறுவாயில் சிவ-சக்தி ஆவேசத்தைப் பார்க்க விரும்புமா மனம்? பட்டர் மட்டும் விலக்கா என்ன? நிறைவைக் கண்டு நிறைவைப் பெற விழைகிறார் எனலாம்.

இந்தப் பாடலின் அருமையான எதுகைகள் செவிக்கின்பம் தருவன. வவ்வுதல் என்றால் கவர்தல், பற்றுதல் என்று பொருள். செவ்வி என்றால் அழகு. அவ்வியம் என்றால் அழுக்காறு, பற்று, தீய எண்ணம். வெவ்வி என்றால் சினம்.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 19 | வெளிநின்ற நின்...