2010/06/28

அதிசயமான வடிவுடையாள்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:17 | ராகம்:ஹம்சாநந்தி


அதிசய மான வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசய மான தபசயமாக முன் பார்த்தவர்தம்
மதிசய மாகவன்றோ வாமபாகத்தை வவ்வியதே?

உலகத்து அத்தனை தாமரைகளும் பெறத் தவமிருக்கும் முக அழகைக் கொண்டவளும், ரதியின் கணவனான மன்மதனின் வெற்றியைத் தன் நெற்றிக் கண் பார்வையால் தோல்வியாக்கியவரான சிவனின் விருப்பம் வெற்றிகரமாக நிறைவேற அவரின் இடப் பாகத்தை ஏற்று, இன்னும் மேம்பட்ட வடிவைப் பெற்றவளும் (ஆன அபிராமி) அல்லவா எனக்குத் துணையானவள்?

'அரவிந்தம் எல்லாம் துதிசய சுந்தரவல்லி, இரதி பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர் தம் மதி சயமாக வாம பாகத்தை வவ்விய அதிசயமான வடிவுடையாள் அன்றோ துணை ஆனதே?' எனப்பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

உலகத்துத் தாமரைகள் சேர்ந்து வந்தாலும் உன் முக ஒளிக்கு ஈடாகாது எனும் குமார சம்பவ வர்ணனை நினைவுக்கு வருகிறது. ஆயிரம் தாமரை அழகுடையவள் என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருகிறது. அத்தனை அழகும் பொலிவும் உள்ளவள், தலையோட்டு மாலையும் சாம்பலும் பூசி நிற்கும் சிவனின் ஒரு பாதியை விரும்பிப் பெறுவானேன்?

ஆணுக்குப் பெண் நிகர் என்ற நெறியைச் சமூகத்துக்குத் தெரிவிக்கும் ஒரே மதம் என்ற வகையில் அர்த்தநாரி வடிவம் இந்து மதத்துக்குப் பெருமை சேர்ப்பதாக எண்ணுகிறேன். அதுபோக, சிவ-சக்தி கதைகளிலேயே மிகவும் சுவையானது அர்த்தநாரீஸ்வரர் கதை என்று நினைக்கிறேன் (அர்த்தபுருஷீஸ்வரி என்பது சரியாக வரவில்லையோ?). மற்ற நிகழ்வுகளைப் போல இதற்கும் பல வேறு வடிவங்கள் இருந்தாலும் - எனக்குத் தெரிந்து மூன்று விதமான கதைகள் உண்டு, அதற்கு மேலும் இருக்கும் என நம்புகிறேன் - பல விதங்களில் அர்த்தநாரியின் பின்னணி என்னைக் கவர்ந்திருக்கிறது என்பேன். 'சிவனில்லாமல் சக்தியில்லை, சக்தியில்லாமல் சிவனில்லை' என்ற திருவிளையாடல் கதை பொதுவாக எல்லாரும் அறிந்தது. பிருங்கி முனிவர் சிவனை மட்டும் தான் கும்பிடுவேன் என்று அடம் பிடித்ததும் அதைப் பொறுக்காத சக்தியின் விஷமத்தன சதியும் எனக்குப் பிடித்த கதை.

இருக்கட்டும், இங்கே பட்டர் புதுக் கதை சொல்லியிருக்கிறாரா? எல்லாவற்றையும் விடச் சுவையாக இருக்கும் போலிருக்கிறதே?

மதி என்ற சொல்லுக்கு விருப்பம் என்று ஒரு பொருள். முன் பார்த்தவர் தம் மதி சயமாக - நெற்றிக்கண்ணைத் திறந்து பார்த்தவரின் விருப்பம் வெற்றி பெரும் விதமாக, வாம பாகத்தை - இடது பாகத்தை, வவ்வியது - ஏற்றது, ஏன்? இதைப் புரிந்து கொள்ள இதற்கு முந்தைய வரியைப் பார்க்க வேண்டும். இரதி பதி சயமானது - ரதியின் கணவன் மன்மதனின் வெற்றியை, அப சயமாக முன் பார்த்தவர் - நெற்றிக் கண்ணால் பார்த்து தோல்வியடையச் செய்தவர், என்கிறார். யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி இங்கே?

சிவனின் தவத்தைக் கலைக்க மன்மதனைத் தூது அனுப்பிய கதை தெரிந்திருக்கும். முதலில் பயந்து நடுங்கிய மன்மதனை எல்லா தேவர்களும் விஷ்ணு பிரம்ம கடவுள்களும் பலவாறாகப் புகழ்ந்து மமதையடையச் செய்து, சிவனிடம் அனுப்புகிறார்கள். மன்மதனும் தன்னுடைய மோகாஸ்திரம் எனும் அம்பை மறைந்திருந்து சிவன் மேல் வீசுகிறான். சிவன் உடனே நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனைச் சுட்டெறிக்கிறார். ரதி புலம்ப, எல்லாரும் வேண்ட, சமாதானமாகிறது - அது வேறு கதை. மன்மதன் பஸ்பமானால், வெற்றி எங்கிருந்து வந்தது? அது தான் பட்டர் சேர்த்திருக்கும் சுவை.

மன்மதன் அம்பை எறிந்து விடுகிறான். தவம் கலைந்த சிவன், முதலில் பார்த்த பார்வையிலேயே பார்வதியிடம் அத்தனையையும் பறி கொடுத்து விடுகிறார். தறிகெட்ட சிவனின் உள்ளம் பார்வதியை உடனே மடி மேல் அமர்த்திக் கொஞ்சத் துடிப்பதாகச் சொல்கிறது சிவபுராணம். பார்வதி ஒரே ஒரு கணம் தலை குனிந்து சிவனின் பாதங்களைத் தொடவும், அவள் முகம் மறைந்த அந்த நொடியில் சற்று தொலைவில் மன்மதன் மறைந்திருந்ததைப் பார்த்த சிவனுக்கு நினைவு திரும்புகிறது. மிச்ச கதை தான் தெரியுமே. (அம்பெறிந்து தவம் கலைத்ததால் சிவன் காமனை எரிக்கவில்லை; வந்த வேலை முடிந்தும் விலகாமல் மமதையுடன் சிவ-சக்தி தனிமையைக் குலைத்ததால் சிவன் காமனை எரித்தார் என்றும் ஒரு தரப்பு உண்டு.)

இங்கே, மன்மதன் வந்த காரியம் முடிந்து விட்டது. வெற்றி தான். ரதி பதி சயம் என்பது சரிதான். வந்த கடுப்பில் மதனை எரித்து விட்டு அவசரக்குடுக்கை போல் சிவன் நடந்து கொண்டது வெற்றியா தோல்வியா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். சிவன் மன்மதனை எரித்ததற்கு இன்னொரு காரிய காரணம் இருக்கிறது என்கிறது புராணம். அதை புராணத்திலேயே விட்டு, பட்டருக்கு வருவோம். மன்மதன் எரிந்தாலும், அவன் விடுத்த கணையின் வலி சிவனை விடவில்லை. காமத்தீயில் எரிகிறார். சக்தியுடன் ஐக்கியமானால் தான் விடும் போலிருப்பதால் சக்தியுடன் ஒன்றாக எண்ணித் தன் உடலிலேயே இடம் தந்து விடுகிறார். 'இடம்' தந்து விடுகிறார். ஏற்கும் படி பார்வதியைக் கெஞ்சுகிறார். தன்னை நினைந்து உருகும் சிவனுடைய காதலையும் அந்தக் காதலின் தீவிர வெளிப்பாடான சிவனுடைய உடலின் இடது பாதியையும் பார்வதி விரும்பி ஏற்கிறார். (இதயம் இருப்பது எந்தப் பாகத்தில் என்று ஒருகணம் சிந்தியுங்கள்). அதனால் தான் மன்மதனின் செயலை வெற்றி என்றார் பட்டர். அர்த்தநாரியின் சூட்சுமத்தை விளக்கும் அறிஞர்கள், அது ஆண் பாதி பெண் பாதி அல்ல, ஆண் வடிவம் பெண் வடிவம் இரண்டும் கலந்த உரு என்கிறார்கள். பட்டரின் கருத்துடன் ஒத்துப் போகிறது.

பட்டர் அர்த்தநாரியை அபிராமியாகப் பார்க்கிறார் என்பது சுவை. இடது புறம் சக்தியைக் கொண்ட சிவனைப் பார்க்கவில்லை அவர். வலது புறம் சாம்பல் பூசி, பாம்பு மற்றும் தலையோட்டு மாலை அணிந்தபடி காட்சி தரும் அபிராமியைப் பார்க்கிறார். அந்த வடிவம் எப்படி இருக்கிறதாம் அவருக்கு? அதிசயம் என்பதற்கு மேன்மையான என்று ஒரு பொருள் உண்டு. அதிசயமான - மேம்பட்ட, வடிவுடையவளாக இருக்கிறாளாம் அபிராமி. அப்படிப் பட்டவளே தனக்குத் துணையென்கிறார். (சக்தி உபாசகர் என்று ஒரு கூட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். சக்தியை மையமாக வைத்து வழிபடும் கூட்டம். பட்டர் சக்தி உபாசகராக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது)

வலது புறம் சக்தியைக் கொண்ட அர்த்தநாரியைப் பார்த்திருக்கிறீர்களோ? பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் தீட்டப்பட்ட அரிய சித்திரத்தின் பத்து ரூபாய் வரவேற்பரைப் படப் பிரதியின் மின் வடிவம்:(உரிமையில்லாமல் பதிவில் சேர்த்திருக்கிறேன். இந்தியாவின் ஏதோ ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பதாகக் கேள்வி. 'image search' செய்யத் தெரிந்தவர்கள் இதன் உரிமை விவரங்களைத் தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்)


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 18 | வவ்விய பாகத்து...