2010/06/22

ஆனந்தமாய் என்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:11 | ராகம்:சாவேரி


ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடி வுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணார விந்தம் தவள நிறக்
கானந்தமாட ரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே.

சுடலைக் காட்டில் ஆடும் வெண் நீறு பூசிய சிவன் தன் தலைமேல் வைத்திருப்பதும், வேதங்கள் நான்கிற்கும் எல்லையான மாணிக்கம் போன்றதுமான பாதங்களையுடைய, அண்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பேரழகியே (அபிராமியே) எனக்கு அறிவாகவும் ஆனந்தமாகவும் பெரும்பேறாகவும் விளங்குகிறாள்.

'தவள நிறக் கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணிய, மறை நான்கினுக்கும் தான் அந்தமான அரவிந்த சரண், வான் அந்தமான வடிவு, உடையாள் - என் அறிவாய் ஆனந்தமாய் அறிவாய் நிறைந்ததே' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

இதுவரை அருளிய பாடல்களில் அரும்பொருள் பல கொண்ட தமிழ்ச் சொற்கள், இந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கின்றன. பிரிக்கப் பிரிக்க தமிழ்ச்சுளை. பருகப் பருகத் தமிழ்த்தேன். இந்தப் பாடலில் தமிழுடன் விளையாடிப் பார்த்திருக்கிறார் பட்டர் என்று தோன்றுகிறது. நாமும் கொஞ்சம் கலந்து கொள்வோமா?

அடிகளின் முதல் சீர்களில் வரும் சொற்களை அந்தம், அனந்தம் எனப் பிரிக்கலாம். அந்தம் என்பதற்கு அழகு என்று ஒரு பொருள்; முடிவு என்று ஒரு பொருள்; எல்லை என்று பிரிதொரு பொருள். எல்லை என்பது முடிவா, தொடக்கமா? அனந்தம் என்பதற்கு அளவில்லாத என்று பொருள்; பொன் என்று ஒரு பொருள். உடன் சேரும் ஆ, வா, தா, கா - அல்லது ஆன், வான், தான் - என்ற சொற்களுடன் முறையே சேரும் பொழுது ஒவ்வொன்றும் சுவையான பொருளாகின்றது. ஆன்+அந்தம் என்று பிரித்து உயிரின் எல்லை எனப் பொருள் கொள்ளலாம். ஆனந்தம் என்ற சொல்லின் நேரடிப் பொருளாகவும் கொள்ளலாம். வான்+அந்தம் எனப் பிரித்து 'வான், வளி, நீர், தீ, காற்று என எல்லாவற்றையும் கடந்த' எனப் பொருள் கொள்ளலாம். 'வா+அனந்தம்' எனப் பிரித்து 'அனந்தமான வடிவுடையாள் வா' எனப் பொருள் கொள்ளலாம். ஒரு வரியில் அனந்தம் என்றும் இன்னொரு வரியில் அந்தம் என்றும் பொருள் பிரித்துப் பார்த்தாலும் பொருத்தம். 'மறை நான்கினுக்கும் தான் அந்தம்' எனப் பிரித்து, வேதங்களின் எல்லை எனப் பொருள் கொள்ளலாம். கா+அனந்தம் எனப் பிரித்து அளவில்லாத காட்டில் எனப் பொருள் கொள்ளலாம். ஒரே சொல்லைப் பல விதமாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் ஒரு உவமையைக் காணலாம். மூன்றாம் வரியில் சரண்+அரவிந்தம் என்று பிரித்தால் தாமரை பாதங்கள் எனப் பொருள் கொள்ளலாம். சரண ஆர விந்தம் எனப் பிரித்தால், விந்தம்: மாணிக்கம். ஆர: மிகுந்த, மிகச்சிவப்பான நிறத்திற்கு உவமையாகக் கொள்ளலாம். கண்ணியதே என்பதை கருதப்பட்டது என நேரடியாகப் பொருள் கொள்ளலாம். முடி+கண்ணியதே எனப் பிரித்து நெற்றிக் கண்ணானது எனப் பிரிக்கலாம் (அபிராமியின் பாதங்களே சிவனின் நெற்றிக்கண் எனப் பொருள் வரும்). 'தவள நிறக் கானந்தமே எம்பிரான் ஆடரங்காம்' எனப் பிரித்தால் வெண்ணிறம் தூக்கும் (தலையோடு, எரிந்த சாம்பல், நீறு) சுடுகாட்டை நடன அரங்காகக் கொண்டவன் எனப் பொருள் கொள்ளலாம். அல்லது, திருவெண்காட்டு எம்பிரான் என நேரடிப் பொருளும் கொள்ளலாம் (கடவூரின் அருகிலேயே திருவெண்காடு என்ற சிவன் கோவில் இருக்கிறது). தவள நிறம்: வெள்ளை நிறம்.

'வானந்தமான வடிவுடையாள்', 'எம்பிரான் கானந்தமாடரங்கம்' என்று சக்தி-சிவன் நிலைகளை இங்கே வர்ணித்திருப்பதற்கு இன்னொரு உட்கருத்தும் இருப்பதாக உணர்கிறேன். ஆதி அந்தம் இல்லாதவள், அண்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவள் என்று சக்தியைப் போற்றிவிட்டு, சுடுகாட்டு நடனக்காரன் என்று சிவனைச் சாதாரணமாகச் சொல்வது பொருந்துமா? பட்டர் சாதாரண ஆளில்லை. சிவன் சுடலை நடனமாடும் பின்னணிக் கதை தெரிந்தவர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள். சிவன் 'அனந்த கா'வில் நடனமாடும் நேரத்தில், சிவனும் சக்தியுமே மட்டுமே மிஞ்சி இருப்பதாகவும், மற்ற எல்லாமே - தேவர்கள், கடவுள்கள் உள்பட - அழிந்து விடுவதாகவும், முடிவின் தொடக்கமாகவும் தொடக்கத்தின் முடிவாகவும் விளங்கும் நடனமென்றும், சக்தியின் தாளத்துக்கு சிவன் ஆடுவதாகவும் புராணக்கதை சொல்கிறது. (சக்தியின் தாளத்துக்குத் தான் சிவனும் ஆடுகிறாரா? பலே!) அண்டத்திற்கப்பாற்பட்டவள் என்று சக்தியை வைத்த அதே தட்டில் சிவனையும் வைத்திருக்கிறார் பட்டர்.

நான் மிகவும் ரசிக்கும் அபிராமி அந்தாதி பாடல்களில் இது ஒன்று.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 12 | கண்ணியது உன்...