2010/06/27

கிளியே கிளைஞர்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:16 | ராகம்:ஹம்சாநந்தி


கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணிலொன்றும் இல்லா
வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

கிளி போன்றவளே! உன்னைத் தியானம் செய்து வழிபடும் அடியார்களின் மனதுள் புதைந்திருக்கும் ஒளியாக விளங்குகிறாய்; அந்த ஒளிக்கு இணையாக வான், வளி, தீ, நீர், நிலம் எனப் பரவி உலகெங்கும் பிரகாசிக்கும் ஒளிகளின் இருப்பிடமாகவும் தோற்றுவாயாகவும் விளங்குகிறாய்; எண்ணிப் பார்க்கையில், ஒளியே இல்லாத வெளியாக அண்டமெல்லாம் விரிந்து நிற்கிறாய்; என் எளிய அறிவிற்கு இவையெல்லாம் விளங்க வைத்த அதிசயத்தை என்னவென்பேன் தாயே!.

தன்னுள்ளேயும் வெளியேயும் அபிராமியை ஒளிவடிவாகப் பார்த்ததால் அரசனின் கேள்விக்குத் தவறான பதில் சொன்ன கதையை அறிவோம். தான் தவறாகச் சொன்னதன் காரணம், எங்கும் நிறைந்திருக்கு அபிராமியின் ஒளி வடிவமே என்பதை இந்தப் பாடலில் அறிவிக்கிறார் பட்டர்.

'பிரபா ரூபம்' (ஒளியின் வடிவம்), 'பரஸ்மை ஜ்யோதிஷம்' (மூலாதார ஒளி) என்று லக்ஷ்மி சஹஸ்ரநாமத்திலும். 'சுமனோகர காந்தி' என்று மகிஷாசுரமர்த்தனி வழிபாட்டிலும் இதே கருத்து கையாளப்பட்டிருக்கிறது.

இலக்கியம் பக்கம் அடி வைப்போமா?

பெண்களைக் கிளிகளுக்கு ஒப்பிடுவது ஏன் தெரியுமோ? எனக்கும் தெரியாது.

முதல் முறையாக இதைப் பற்றிய விளக்கத்தைக் கேட்க நேர்ந்தது பள்ளி நாட்களில், சம்ஸ்கிருத வகுப்பில், என்று நினைக்கிறேன். தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமே என்ற அச்சத்தில் ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்த 'குமாரசம்பவம்' பாடல்களை அரைகுறையாக மனதில் வாங்கிக் கொண்டு, மறு நாள் தமிழ் வகுப்பில் இன்னொரு செய்யுளில் அதே விவரம் தோன்ற, முதல் நாள் நினைவிலிருந்து கொஞ்சம் எடுத்து விட்டு மார்தட்டியதும் நினைவுக்கு வருகிறது. சம்ஸ்க்ருதத் தேர்வுகளில் என்ன கேள்வி கேட்பார்கள், என்ன பதில் எழுத வேண்டும் என்பதை முன்பே சொல்லிவிடுவார்கள் (பத்தில் ஆறு கேள்விகளுக்காவது இப்படி முன்பே சொல்லிக் கொடுத்து விடுவார்கள்; அதனால் சம்ஸ்க்ருதத்தில் எப்பொழுதுமே எண்பது தொண்ணூறு மதிப்பெண் சுலபமாக வாங்க முடியும். அப்படி இருந்தும் வடமொழியில் எங்களுக்கு ஆர்வம் இல்லாமல் போனது ஏனென்று தெரியவில்லை).

கிளி என்பது கண்ணைக் கவரும் அழகிய பல வண்ணப் பறவை. பெண்களும் கண்ணைக் கவரும் வகையினர். சில கிளிகள் சொன்னதைத் திருப்பச் சொல்லும் திறனுடையன, ரசிக்கக் கூடிய குரல் வளம் கொண்டவை - பெண்களைப் போலவே. (சும்மா 'நைநை'னு அதையே சொல்லிட்டிருக்கியே என்று சுற்றத்துப் பெண்களைக் கேட்கும் பொழுது நினைவில் வையுங்கள்). கிளிகளின் பளபளப்பைப் பெண்களின் உடலழகுக்கு ஒப்பிடலாம். கிளிகளின் படபடப்பும் பெண்களுக்கு இணைதான். கிளிகள் நிலையில்லாதவை போலத் தோன்றும்; கள்ளக் குறும்புத்தனம் கொண்டவை. பெண்களைப் போலவே. Mischievous and Flirtatious என்ற பொருளில் நம் இலக்கியங்களில் மட்டுமல்ல, ஷேக்ஸ்பியர் வரிகளில் கூட கிளியும் பெண்ணும் அடிக்கடி ஒப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். இவை எல்லாவற்றையும் விட ஒரு தனிக்குணம் கிளியிடம் உண்டு என்கிறார்கள். கிளிகள் குடும்பப் பறவைகள். துணையுடன் இருப்பவை. தனக்கு ஒரு துணையைப் பிடித்து விட்டால், பெண் கிளி அந்தத் துணை கிடைக்கும் வரை விடாதாம். துணைக் கிளிக்காகத் தியாகமும் தவமும் செய்யுமாம். சிவனுக்காகத் தவம் கிடக்கப் போகும் பார்வதியைத் தடுத்து நிறுத்தும் அவளுடைய தாய், அவளுடைய அழகிலிருந்து, பளபளப்பிலிருந்து, குறும்பிலிருந்து, படபடப்பிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி "கிளி போன்றவளே" என்று அழைத்து விட்டு, "(கிளி போல்) தவம் கிடக்க உன் உடலிலும் மனதிலும் வலு இல்லை, நீ கிளியினும் மென்மையானவள், தவம் வேண்டாமே?" என்று வேண்டுவதாகக் காளிதாசன் குமாரசம்பவத்தில் சொல்கிறார்.

இன்னொரு விளக்கம்/விவாதமும் உண்டு. வடமொழியில் 'சுக' என்றால் கிளி. வடமொழியில் 'சுக' என்றால் 'மரம்' என்றும் ஒரு பொருள். வடமொழிக் காவியங்களில் பெண்ணை மரத்துக்கு ஒப்பிட்டு (மரமாட்டம் நிக்கறியே என்ற பொருளில் அல்ல, மரம் போல் தழைப்பதால் என்ற பொருளில்) எழுதப்பட்டிருக்கிறது. வேதத்தை மரத்துக்கு ஒப்பிட்டு, அபிராமியைக் கூட 'வேத மரம்' என்ற உருவக வடிவில் பார்த்திருக்கிறார் பட்டர். சில குறும்புக்கார வடமொழிப் பேர்வழிகள் சொன்னது: "தமிழிலும் தொன்மையானது எங்கள் ஆரிய மொழி. நாங்கள் மரத்தைப் பற்றிச் சொன்னால், தமிழர்கள் கிளிகள் என்று புரிந்து கொண்டு பெண்களைக் கிளிகள் என்று பாடத் தொடங்கி விட்டார்கள்". இந்தக் கருத்தை, குடுமி வைத்த என் சம்ஸ்க்ருத ஆசிரியரும் சொல்லியிருக்கிறார். தமிழனுக்குக் கற்பனை குறைவென்பது போன்ற இந்த வாதத்தை என்னால் அந்த நாளிலும் ஏற்கமுடியவில்லை. குடுமி வாத்தியாருக்குத் தமிழும் அருமையாக வரும். அதனால் அவரைக் குறை சொல்ல முடியாது. சிந்தித்துப் பார்த்தால் சங்க இலக்கியங்களில் பெண்களை வர்ணித்த விதம் வடமொழி இலக்கியங்களிலிருந்து மாறுபட்டிருக்கிறது. அங்கே நாரீஷூ ரம்பா என்றால், நம்ம ஊரில் மேனகை (சேர நாடு). புஷ்பேஷூ கமலம் அங்கே; மல்லிகை தான் மலர்களின் ராணி இங்கே - அதனால் பெண்ணை மல்லிகை மலருக்கு ஒப்பிடுகிறோம்; அங்கே பெண்ணைக் கிளி என்றால் (?) இங்கே பெண்ணைப் பொதுவாகப் புறாவுக்கு ஒப்பிட்டிருக்கிறோம். வெண்மை தூய்மைக்கு அடையாளம் என்பதால் பெண்ணைப் புறா என்றோம். புறா அளவுக்குக் கிளி தமிழிலக்கியங்களில் பெண்ணைக் குறிக்கும் உவமையாக இடம் பெற்றிருக்கிறதா? எனக்கு அறிவு போதாது.

சௌந்தர்யலஹரியிலிருந்தும் லலிதா சஹஸ்ரநாமத்திலிருந்தும் இத்தனை எடுத்தாண்டிருக்கிறாரே (அல்லது கருத்து ஒற்றுமை இருக்கிறதே) என்பதால், 'கிளி' என்று பொருளில் எத்தனை முறை திரிபுரசுந்தரியை அந்த நூல்களில் வர்ணித்திருக்கிறார்கள் பார்ப்போமே என்று விளையாட்டாகத் தேடினேன். அதை ஏன் கேட்கிறீர்கள்! 'மரம்' என்ற பொருளில் சௌந்தரியலஹரியில் எட்டு முறையும், லலிதா சஹஸ்ரநாமத்தில் ஐந்து முறையும் காண முடிந்தது. ஒரு வேளை எனக்குத் தேடத் தெரியவில்லையோ?

இங்கே பட்டர் அபிராமியைக் கிளியென்றதன் காரணம் என்னவாக இருந்தாலும், அவர் சொன்ன 'எண்ணிலொன்றும் இல்லா வெளியே' என்பதே இந்தப் பாடலில் என்னை மிகவும் கவர்ந்த கருத்து. ஒளியின் தோற்றம் அணு. அணுவின் தொடக்கம் முதல் அது விரிந்து பரவி எல்லாவற்றையும் வசீகரிக்கும் அளவு வரை, எல்லா வடிவிலும் அபிராமியைப் பார்க்கிறார். இது கொஞ்சம் ஆழமான சிந்தனை. ஒளி ஒரு சிறிய அணுவிலிருந்து உருவாவதையும் பிறகு அது அண்டத்தை அழிக்கும் அளவுக்கு பரவி ஒடுங்குவதையும் இன்றைக்கு அறிவியல் வழியாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். ஒளியின் தோற்ற முடிவைப் பற்றி இந்திய இறையிலக்கியங்களில் உள்ள அளவுக்கு வேறு எந்த நாட்டு இறையிலக்கியத்திலும், நான் படித்தவரை, காணப்படவில்லை. பட்டருக்கு முறையான விண்ணியல் பயிற்சி உண்டா தெரியாது; விண்வெளியில் பெரும்பாலும் இருள் தான் (ஒளியில்லா வெளி) என்பதும், அண்டம் விரிந்து கொண்டே இருக்கிறது என்பதும், பட்டருக்குப் பிற்காலக் கண்டுபிடிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. அளியேன் என்பதற்கு எளியவன் என்று பொருள். அரிய தத்துவத்தைச் சொல்லிவிட்டு அளியேன் என்ற தன்னடக்கமும் குறிப்பிடத்தக்கது.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)>>> நூல் 17 | அதிசயமான வடிவுடையாள்...