skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/07/06
பின்னே திரிந்து...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
நூல்:25 | ராகம்:கானடா
பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்றேத்துவனே.
முதலான மூன்று கடவுளருக்கும் அன்னையே! என்றைக்கு நிலையான அழகும் அருளும் கொண்டு உலகத் துன்பங்களையெல்லாம் போக்கவல்ல அரிய மருந்தானவளே! பிறவா நிலை அடைய எத்தனையோ பிறவிகளாக உன்னை நினைந்தும் உன் அடியவர்களுக்குப் பணி செய்தும் வர எனக்கு அருள் செய்த என் தாயே! இனி என்றைக்குமே உன்னை நான் மறவாமல் என் நெஞ்சில் நிறுத்திப் போற்றுவேன்.
'முதல் மூவருக்கும் அன்னே, உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே, உன் அடியாரைப் பின்னே திரிந்து பேணி, பிறப்பறுக்க தவங்கள் முன்னே முயன்று கொண்டேன் (என்னே), இனி உன்னை யான் மறவாமல் நின்றேத்துவனே' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.
அபிராமியை விடச் சிறந்த தெய்வமில்லை என்ற முந்தைய பாடல்களின் கருத்து இந்தப் பாடலிலும் தொடர்கிறது. 'தலையாய மூன்று தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருக்கும் அன்னையே' என்று தொடங்கியதில் ஆதி சக்தி என்ற கருத்தை மீண்டும் எடுத்துரைக்கிறார். அபிராமியின் அருளைப் பெற எத்தனையோ முன் பிறவிகளில் அவளை நினைந்தும் அவள் அன்பர்களுக்குத் தொண்டு செய்தும் வந்ததாகச் சொல்கிறார். தொடர்ந்து என்றைக்கும் நின்றேத்துவேன் - மறவாமல் போற்றி வணங்குவேன் - என்கிறார். எதற்கு? மூன்றாவது வரியில் சொல்லியிருக்கிறார் - அருமருந்து - அதற்குத்தான்.
அபிராமி என்றால் என்ன பொருள்? அபிராமி உலகுக்கு அருமருந்து என்பானேன்?
அபிராமி என்ற வடமொழிச் சொல்லை அபி+ராமி என்று பிரிக்கலாம். அபி என்ற சொல்லுக்குத் தனிப்பட்ட பொருள் எதுவுமில்லை, நானறிந்தவரை. அபி என்பது இடைச்சொல் (?), ஆங்கில preposition. அடுத்து வருவதை மேம்படுத்த/மிகைப்படுத்தப் பயனாகும் இடைச்சொல். 'அபி ராமி' என்றால் என்றைக்குமே நிலைத்திருக்கும் அழகானவள், என்றைக்குமே நிலைத்திருக்கும் அருளானவள் என்று பொருள். 'நிலைத்திருக்கும்' என்ற பொதுவான பொருளை விலக்கி என்றைக்குமே அழகானவள், என்றைக்குமே அருளானவள் என்றும் பொருள் கொள்ளலாம்.
('லோகாபி ராமம் ஸ்ரீராமம்' எனவரும் பிரபல கீதை வரி நினைவுக்கு வரலாம். லோக அபி ராமம் எனப்பிரியும். ராமி என்பது ராமம் என்பதன் பெண்பால் வடிவம் எனலாம். ராமியிலிருந்தும் ராமம் வந்திருக்கலாம். ராமம் என்பதற்கு நிலையான அழகு, அருள், கருணை, அன்பு, பொலிவு என்றெல்லாம் பொருள்.)
என்றைக்குமே அழகானவள், அருளானவள் எனப்படும் அபிராமி எப்படி மருந்தாகிறாள்? முந்தைய பாடலில் பிணி, பிணிக்கு மருந்தே என்று பாடினார். இங்கே அதை மறுபடியும் வலியுறுத்துகிறார். உலகத்தில் பிறப்பதே துன்பம்; பிறந்தபின் வாழ்ந்து முடியும் வரை இன்னும் எத்தனையோ துன்பங்கள்; இடையில் முற்பிறவியின் தவமாகச் சொல்லப்படும் அபிராமியின் நினைவும் அவள் அடியார் அண்மையும் மறந்து போனால் இன்னும் பெருந்துன்பம். இத்தகைய சுழலில் சிக்கியவர் மீள சாதாரண மருந்து போதாது. அருமருந்து தேவை. பிறவா நிலை, பெரும்பேறு என்பதையே இங்கே அருமருந்தாகக் குறிப்பிடுகிறார் பட்டர். அருமருந்தைத் தர சாதாரண வைத்தியரால் முடியுமா? என்றைக்குமே நிலையான மருத்துவரிடம் அல்லவா பெறவேண்டும். இங்கே என்றைக்குமே நிலையான அழகுடைய, அருளுடைய, அபிராமியே அத்தகைய அருமருந்தின் காப்பிடம் என்பதைத்தான் 'உலகுக்கு அருமருந்து அபிராமி' என்று பட்டர் உளமுருகிப் பாடினார்.
அம்மாவும் இந்தப் பாடலை உருகி உருகிப் பாடுவார். அபிராமியின் அருமருந்து அவருக்கும் கிடைக்கட்டும் என்று இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் தோன்றும்.
தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
>>>
நூல் 26 | ஏத்தும் அடியவர்...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
▼
ஜூலை
(31)
உறைகின்ற நின்...
மங்கலை செங்கலச...
கொடியே இளவஞ்சி...
கொள்ளேன் மனத்தில்...
மணியே மணியின்...
பின்னே திரிந்து...
ஏத்தும் அடியவர்...
உடைத்தனை வஞ்சப்பிறவியை...
சொல்லும் பொருளும்...
சித்தியும் சித்திதரும்...
அன்றே தடுத்தென்னை...
உமையும் உமையொருபாகனும்...
ஆசைக்கடலில் அகப்பட்டு...
இழைக்கும் வினைவழியே...
வந்தேசரணம் புகுமடியாருக்கு...
திங்கட் பகவின்...
பொருளே பொருள்முடிக்கும்...
கைக்கே அணிவது...
பவளக் கொடியில்...
ஆளுகைக்கு உந்தன்...
வாணுதற் கண்ணியை...
புண்ணியஞ் செய்தனமே...
இடங்கொண்டு விம்மி...
பரிபுரச் சீறடி...
தவளே இவளெங்கள்...
தொண்டு செய்யாது...
வெறுக்கும் தகைமைகள்...
வாழும் படியொன்று...
சுடருங் கலைமதி...
குரம்பை அடுத்து...
நாயகி நான்முகி...
►
ஆகஸ்ட்
(31)
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை