skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/07/03
கொடியே இளவஞ்சி...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
நூல்:22 | ராகம்:கானடா
கொடியே இளவஞ்சிக்கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனிமால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்திங்கினிப் பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.
பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் மும்மூர்த்திகளையும் பெற்ற என் அன்னையே! வேதங்களின் சாரமாக விளங்குபவளே! இளங்கொடியாகவும் இருக்கின்றாய், கொடி வளறும் பற்றுக்கோலாகவும் இருக்கிறாய். ஆசை, அச்சம் எனும் மயக்கமாகவும், அவை விலகப் பற்ற வேண்டிய உயர்ந்த உறுதியின் சின்னமாகவும் இருக்கிறாய். என்னைப் பிறக்க வைத்த நீயே நான் இறந்தபின் மீண்டும் பிறவாமலிருக்க வழி செய்ய வேண்டும்.
'பிரம்மன் முதலிய தேவர்களைப் பெற்ற அன்னையே, இளங்கொடி போன்றவளே, கொடி படரும் கொம்பே, வேதங்களின் நறுமணமே, பிரம்மன் முதலிய தேவர்களின் தாயே, இமவானுக்குப் பிறந்த பெண் யானை போன்றவளே, தகுதியில்லாத எனக்கு அருள் தந்து இறந்த பின் இனிப் பிறவாமல் இருக்க என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்ற கருத்தில் அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.
பிறவா வரம் வேண்டும் கருத்தில் ஒற்றுமை இருந்தாலும் விளக்கத்தில் சற்றே மாறுபட்டிருக்கிறேன். பட்டர் அபிராமியைக் காரியமாகவும் காரணமாகவும் பார்க்கிறார் என்பதே இந்தப் பாடலின் மையக் கருத்து என்று நினைக்கிறேன். கொடியும் அவள் தான். கொடி வளரப் பந்தலைப் படைத்ததும், பந்தலாவதும் அவள் தான். நம்மைப் படைத்தவள் அவள்; நம்மைக் காக்கும் கடவுளரைப் படைத்தவளும், எல்லாருக்கும் கடவுளும் அவளே. நம் மோகங்களின் காரணமும் அவளே; அவற்றிலிருந்து விடுபட்டு நற்கதி பெறக் காரியமாக இருப்பவளும் அவளே என்ற கருத்தில் பட்டர் கொடி, கொம்பு, பனி, பிடி என்று பாடியிருப்பதாக நினைக்கிறேன். அந்தக் கருத்தோட்டத்தில் தொடரும் போது, 'பிறவியின் காரணமும் அவளே; பிறவாமலிருக்கக் காரியமாகக் கூடியவளும் அவளே' என்ற கருத்தும் பொருந்துகிறது என நினைக்கிறேன்.
காரணம், காரியம் அறிந்து தெளிவது எளிதல்ல; சாதாரணமான நுட்பம் அல்ல. அதற்கு பெரும் முதிர்ச்சி தேவை; அதைத் தான் பட்டர் 'பழுத்தபடியே எனக்கு வம்பே' என்கிறார். தகுதியில்லாதவராக, எதையும் அறியும் ஆற்றலில்லாதவராகத் தன்னைச் சொல்லிக் கொள்கிறார். "அம்மா அபிராமி, இப்படி எல்லாவற்றிற்கும் காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறாயே; என் பிறவித் தொல்லையைக் கொஞ்சம் கவனியம்மா. தேவர்களுக்கு மட்டும் தான் தாயா, நீ எனக்கும் அன்னையில்லையா?' என்கிறார். இங்கே இன்னொரு உட்பொருள்: தேவர்களுக்குப் மரணம் கிடையாது; அதனால் மறுபிறவி கிடையாது. அப்படிப்பட்ட தேவர்களுக்கும் நீ தானே தாயானாய் அபிராமி; எனக்கு மட்டும் ஏன் மரணத்தையும் மறுபிறவியையும் கொடுக்கிறாய்? பிறவாமலிருக்கும் வழி உனக்கு மட்டும் தான் தெரியும்; அதனால் தேவர்களைப் போல் என்னையும் இனிப் பிறவாமல் தடுத்தாள வேண்டும்" என்று நேரடியாகவும் ஜாடையாகவும் கேட்கிறார் பட்டர்.
'பிரம்மன் முதலாய' என்பதற்கு பிரம்மன் முதலிய தேவர்களைப் பெற்றவள் என்று பொருள் கொள்ளலாம்; முப்பெருங்கடவுளரில் முதலாவதாக அழைக்கப் பெறும் பிரம்மன் என்பதால் இங்கே பிரம்ம, விஷ்ணு, சிவன் எனும் மும்மூர்த்திகளைப் பெற்ற தாய் என்றும் பொருள் கொள்ளலாம். 'இளங்கொடியே' என்று முதல் வரியில் சொல்லிவிட்டு, திடீரென்று அடுத்த வரியிலேயே அபிராமியை 'மலை யானையே' என்பாரா பட்டர்? சரியாகப் படவில்லை. பனி என்பதற்கு ஆசை, அச்சம் என்றும் பொருள் உண்டு. மால் என்பதற்கு மயக்கம் என்று பொருள் உண்டு. இமயம் என்பதற்கு உயர்ந்த சிறந்த என்று உவமைப் பொருள் உண்டு. பிடி என்பதற்கு பெண் யானையைத் தவிர உறுதி என்றும் பொருள் உண்டு. என் குருட்டுப் பொருளாக்கமும் இங்கே பொருந்தும் என நினைக்கிறேன்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் பிறவிச் சுழலுக்கு காரணமானவள், பிறவிச் சுழலை நீக்குபவள் என்று இரண்டு பொருளிலும் சொல்லப் பட்டிருக்கிறாள் சக்தி. இந்தப் பாடலின் கருத்துக்குப் பொருந்துவதாக நினைக்கிறேன்.
'என் தாயே, இந்த எளியவன் இனிப் பிறவாமலிருக்க அருள் தந்து ஏற்றுக் கொள்ளம்மா' என்ற பட்டரின் கழிவிரக்க ஏக்கத்தைப் பொருத்தமான ராகத்துடன் பாடி வெளிப்படுத்துவதாக நினைக்கிறேன். ஆசிரியரும் மாணவியும் பட்டரின் பாடலுக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
>>>
நூல் 23 | கொள்ளேன் மனத்தில்...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
▼
ஜூலை
(31)
உறைகின்ற நின்...
மங்கலை செங்கலச...
கொடியே இளவஞ்சி...
கொள்ளேன் மனத்தில்...
மணியே மணியின்...
பின்னே திரிந்து...
ஏத்தும் அடியவர்...
உடைத்தனை வஞ்சப்பிறவியை...
சொல்லும் பொருளும்...
சித்தியும் சித்திதரும்...
அன்றே தடுத்தென்னை...
உமையும் உமையொருபாகனும்...
ஆசைக்கடலில் அகப்பட்டு...
இழைக்கும் வினைவழியே...
வந்தேசரணம் புகுமடியாருக்கு...
திங்கட் பகவின்...
பொருளே பொருள்முடிக்கும்...
கைக்கே அணிவது...
பவளக் கொடியில்...
ஆளுகைக்கு உந்தன்...
வாணுதற் கண்ணியை...
புண்ணியஞ் செய்தனமே...
இடங்கொண்டு விம்மி...
பரிபுரச் சீறடி...
தவளே இவளெங்கள்...
தொண்டு செய்யாது...
வெறுக்கும் தகைமைகள்...
வாழும் படியொன்று...
சுடருங் கலைமதி...
குரம்பை அடுத்து...
நாயகி நான்முகி...
►
ஆகஸ்ட்
(31)
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை